Sunday, September 2, 2012

அஹிம்சையின் மரணம்.

283617_128153527329238_1419357596_n
நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்ததால்,
ஈழ அகதியான "செந்தூரன்"
குற்றவாளி என்கிறது தமிழக அரசு!.
உண்ணாவிரதம்
தற்கொலைக்குற்றம் என்கிறது தமிழக பொலிஸ்!!?.

மகாத்மா காந்தி'யும் தன்னை வருத்தி
உண்ணாவிரதம் இருந்தார்.
உள்ளடக்கம் இல்லாமல்,
உரிமைக்காக
உணர்வோடு உணவொறுத்தார்.
அதிகாரம் பணிந்தது,
அகிம்சை தலை குனிந்தது.
சத்தியத்தின் பிதாவாக
உலகம் காந்தியை ஏற்றுக்கொண்டது.
அது ஒரு இனிய கனாக்காலம்.

கண்டத்தையும் தாண்டி
காந்தியின் அகிம்சையில்
உலகம் மண்டியிட்டது.
அகிம்சையின் வீரியத்தை அறிந்த
வெள்ளைக்காரன்,
விக்கித்து வெளியேறினான்.
இந்தியா சுதந்திரம் அடைய
உண்ணாவிரதம் வழி திறந்தது.
அது ஒரு பொற்காலம்.

மார்ச் 09, 2009 ல் ஜெயலலிதா,
"ஈழத்தமிழர்களுக்காக"  உண்ண நோன்பிருந்தார்.
கடல் கடந்தும்,
காற்றின் வெளியூடேயும்
படை அனுப்பி காத்தருள்வேன்
என்றும் கர்ஜித்தார்.
தமிழகம் தலை வணங்கியது.
அகிம்சை திகைத்தபோது,
மக்கள் கோட்டை வாசலை திறந்து விட்டனர்.,
அம்மா முதலமைச்சரானார்.
இன்று
அதே நம்பிக்கையுடன்
ஈழ அகதி செந்தூரன் அம்மாவை நோக்கி
உண்ணா விரதம் இருந்தபோது
அது
தற்கொலை குற்றமாகியிருக்கிறது.!
அதுவும் ஒரு விசித்திர வினாக்காலம்

கால கிறுக்கலில் கருணாநிதியின் கதவு
காற்றுவாக்கில் மூடிவிட,
இன்று தொடர் கதையாக
வறுமையற்ற வாக்குறுதியுடன்,
கருணாவின் நித்த புலம்பல்
நீலிக்கண்ணீருடன் நித்தமொரு தத்துவம்
இதுவும் விதைத்த பயன்
அறுவடையின் நிகழ்காலம்.

தமிழீன தலைவன் கருணாநிதி
"ஈழத்தமிழர் உயிர் காக்க"
ஏப்ரல் 27 2009 ல்
உயிர் துறந்தேன் பார் என்று
அதிகாலையில் உறக்கம் கலைந்து,
அகிம்சையின் கோவணத்தை உருவி
தோளில் போட்டுக்கொண்டு,
அண்ணாவின் சமாதி அருகில்
அருங்காட்சியகமாக
அம்மணிகள் புடைசூழ
1/2 நாள் உண்ணாவிரதம் இருந்தார்.
அது ஒரு புதுக்கோலம்,..

அன்று,
ஈழத்து படுகொலை செய்தியை விட
தாத்தாவின் தாண்டவம் பெரும் புதினமானது.
மீடியாக்கள் கண்சிமிட்டி படபடத்தன
நெத்தியடியாக அழகிரிக்கு மந்திரி பதவியும்,
கனிமொழிக்கு எம்பி பதவியும் தந்து.
மத்திய அரசு மண்டியிட்டதது.
தமிழகம் அடங்கி அமைதியான போது
அகிம்சை
கோவணத்தை தேடி அலைந்தது.
அதுவும் ஒரு வினோத காலம்.

அகிம்சையை அரவாணியாக்கி
'உண்ணா விரதம் இருந்து வென்றவர்'
வாயால் வில் பூட்டி வானத்துக்கு எய்தவர்
நா விலங்கு கருணாநிதி,
நம்பி ஏமாந்த ஈழத்து ஏமாளிகள்
ரத்த சகதியில் சிதறி செத்து தீயில் மாண்டனர்.
அகிம்சை அரசியலுடன் சங்கமமாகிவிட
சுடுகாட்டு கரி மட்டும் மிஞ்சியது.
அது மயான காவியத்தின் வினைக்காலம்.

"ஈழமக்களுக்காக"
தெரு முனையில் சாவேனே தவிர
வெட்டியாக வீடு திரும்பேன்.
சத்தியம் இதுவென்று
விடுதலை சிறுத்தையின் வீரத்திருமகன்.
திருமாவளவன்,..
சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.
முற்றியது மூன்று நாள்
பற்றியது ஒரு கரம்
தி.முக தலைவர் பற்றினார் தம்பியை
மெல்ல கலந்து காங்கிரஸுடன்
திருமாவை மத்தியில் எம்பி ஆக்கினார்.
வென்றனர் விரும்பியதை
அதுவும் ஒரு ரம்யமான
வஞ்சகத்தின் வர்ண ஜாலம்!

ஏன் எதற்கு
அவர்கள் உண்ணாவிரதம் இருந்தனரோ
அதற்காக இவர்களும் ஏமாளிகளாக
உண்ணாவிரதம் இருந்தனர்.
நளினி, முருகன்,
சிறைக்குள் விரதம் பூண்டனர்.
பிணைப்பாக
ஜனாதிபதிக்கு கருணை மனுவும்....
அனைத்தும் கனவாகி
கால் நூற்றாண்டு காத்திருந்தனர்.
அகிம்சை எவரையும் தட்டி எழுப்பவில்லை.
தண்டனை மட்டும் இறுகியது.
இணைப்பாக
செங்கொடி என்ற மனிதாபிமானம்
ஏமாந்து தீயில் எரிந்து கருகியது.
அது ஒரு ஏமாந்த காலம்.

இருந்தபோதும்
மீண்டும் நம்பிக்கையுடன்,
செங்கல்ப்பட்டு பூந்தமல்லி தடை முகாமில்
ஈழத்தமிழர்கள் உண்ணாமல் இருந்தனர்.
மத்திய, மானில ஆட்சிகள் ஆத்திரத்துடன்.
சூத்திரத்தை மறந்து சன்னதம் கொண்டன.

செந்தூரன் உறுதியானபோது
சிறுநீரகம் செயலிழந்து வயிறு புண்ணாகி
மலவாசல் வழியாக இரத்தம் கசிந்தது,.
மரண வாயிலில்.
அகிம்சை செந்தூரனை கொன்றுவிடும்
என்று அறிந்தபோது
அதிகாரம் அரக்கனாகியது.
அது ஒரு வினைக்காலம்.

செந்தூரன்
தற்கொலைக்கு முயற்சித்தான்,
ஆணவத்தால் அடங்க மறுத்தான்,
புதிய கண்டுபிடிப்புடன்  காலங்கடந்து
பொலீஸ் படை பாய்ந்து
அகிம்சை போராளியை கைது செய்திருக்கிறது.
இது ஒரு புதிர்காலம்.

கருணாநிதிக்கு,.............
ஜெயலலிதாவுக்கு,...............
திருமாவுக்கு,...................
ஈழத்தமிழன் பெயரால் அரசியல் செய்யவும்
பதவியை,....... வாழ்க்கையை........... வழங்கிய
உண்ணா விரதம்!!
ஈழத்தமிழனுக்கு தொண்டைக்குள்
கடப்பாரையாக சொருவப்பட்டது,
அகிம்சை மூச்சையர்த்து சேடமிழுத்து
தூரத்தே ஈனசுரத்தில்
அழும் குரல் மட்டும் கேட்கிறது!
இது எந்தக்காலம்?

ஊர்க்குருவி.
நன்றி சவுக்கு இணையம்.

No comments: