ஐநா சபையில் அமெரிக்கா முன்மொழிந்து கொண்டுவந்த தீர்மானத்தின் ஒரு வருடக்கெடுவை மனதில்க்கொண்டு,  அனைத்தையும் சரிக்கட்டி சர்வதேசத்திற்கு கணக்கு காட்டுவதற்காக ஸ்ரீலங்கா,
இந்திய அரசாங்கங்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டுக்களில் கிழக்கு மாகாணத்துக்கான மாகாணசபைத் தேர்தலும் ஒன்று.

இப்படியாக ஒரு பொறிக்கிடங்கு ஸ்ரீலங்கா, இந்திய அரசுகளால் திட்டமிட்டு வெட்டப்பட்டிருக்கிறது அதற்குள் தமிழ் அரசியற்சக்திகள் எவரும் விழுந்துவிடாது கவனித்து செயற்படுங்கள் என்று தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் பல முனைகளிலிருந்தும் வழி வழியே எடுத்துக்கூறியும், அனைத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு,   குறிக்கோள் திட்டமிடல் எதுவுமில்லாமல்,  போலியான ஒரு மாயை தேர்தலில் தலையாரியான தமிழர் தேசியக்கூட்டமைப்பு பங்குபற்றி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கைகளை ஆதரவாக தாங்கிக்கொடுத்துவிட்டு இந்திய அரசாங்கத்தை திருப்திப்படுத்திய மகிழ்ச்சியுடன் அனைத்து தாள வாத்தியங்களையும் சல்லரிகளையும் கட்டிக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக  தனது பரிவாரங்களுடன் கொழும்புக்கு திரும்பிவிட்டது.

கொழும்பு வந்த கையுடன் விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டும் முகமாக தவறுகளையும் வெறுப்பையும் முஸ்லீம் காங்கிரஸ் பக்கம் திருப்பி விட்டு திருப்திப்பட்டுக்கொண்டதுடன்.  மாற்றுக்காக கிளிநொச்சியில் ஒரு மக்கள் பேரணியையும் நடத்தி தமது ஆளுமை மற்றும் புலமையை ஆகாச அறிக்கைகள் மூலமும் நேர்காணல்களாகவும் வெளிப்படுத்தி கூட்டமைப்பு தனது தரப்பை நியாயப்படுத்த முயற்சி செய்துகொண்டிருக்கிறது.  கூட்டமைப்பின் இந்த நியாயப்படுத்தல்கள் மூலம் அவர்களுக்கு ஏதோ ஒன்று புலப்பட்டிருக்கிறது என்பது மட்டும் கிளிநொச்சி பேரணி மூலம் உணரக்கூடியதாக இருக்கிறது.

தமிழர் தேசியக்கூட்டமைப்புக்கு எப்படிப்பட்ட கொள்கை கோட்பாட்டு சித்தாந்தம் நட்பு வட்டம் இருக்கிறதோ அதேபோல முஸ்லீம் காங்கிரஸுக்கும் சில அரசியல்த்தந்திரங்கள் கொள்கைச்சித்தாந்தங்கள் நட்பு வட்டம் இருக்கக்கூடும்.  அது தவிர்க்க முடியாததும் மாற்றமுடியாததுமாகும். அது அவர்களை பிரதிநிதுத்துவப்படுத்தும் மக்களின் மனநிலை, கொள்கை சார்ந்தது.   அவரவர் தமக்கு ஏற்ற புறச்சூழல் சார்ந்து அரசியலில் பயணிப்பதே மிகச்சரியான இராசதந்திரமாகவும் அரசியல் ஞானமாகவும் இருக்கும்.

தமிழர் தேசியக்கூட்டமைப்பு எப்படி இந்தியாவை சார்ந்து நம்பிக்கையுடன் அரசியல் செய்ய முடிகிறதோ அதேபோல முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் தலைமைகள் என்றைக்கும் தமிழர்களின் அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்களுடன் சார்வதை விடவும் பெரும்பான்மை சமூகத்துடன் சார்ந்து அரசியல் நடத்துவதையே கொள்கையாக கொண்டவர்கள் முஸ்லீம்களின் அரசியற் சூழலும் முஸ்லீம்களின் தலைமைகளின் போக்கும் அப்படிப்பட்டதாகவே இருந்துவருகிறது.  அதுவே அவர்களின் சூழ்நிலைக்கு ஏற்றதாகவும் காணப்படுகிறது.  சிங்களத்தலைமைகள் இப்பேற்பட்ட பலவீனங்களை நன்கே உணர்ந்து சாதுரியமாக காய் நகர்த்தி அரசியல் செய்து வருகின்றன.  இது இன்று நேற்று இலங்கை அரசியலில் நிகழ்ந்துவரும் அதிசயமுமல்ல. இந்த யதார்த்தத்தை உணராதவரைக்கும் எவரும் இலங்கையில் அரசியல்வாதிகளாக இருக்கவும் முடியாது.

நாட்டில் அரசியல் தீர்வு ஒன்றை எட்டுவதற்கு ஏற்புடையாத (ஓரளவேனும்) அமெரிக்க தீர்மானம் சுட்டிக்காட்டும் பரிந்துரைகளில் சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மிக முக்கியமான விடயங்களான இடம்பெயர்ந்த மக்களுக்கான சொந்த இடத்தில் மீழ்குடியேற்றம். சந்தேகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் பொது மக்களுக்கான முறைப்படுத்தப்பட்ட நீதி விசாரணை, காணாமல் போனவர்கள் சம்பந்தமான முறைப்பாடுகளுக்கு சரியான நிவாரணம்,  இறந்துபோனவர்களுக்கான இறப்புச்சான்று அவற்றிற்க்கான முறைப்படுத்தப்பட்ட அறிக்கை.  இராணுவ நிலைகள் திரும்பப்பெறுதல் பற்றிய ஒழுங்கமைப்பு, இவை அனைத்தும்  தேர்தலுக்கு முன் நிறைவு பெற்றிருக்கவேண்டும்.  இவைகள்தான்  தேர்தல் ஒன்றுக்கு தயாராவதற்கு முன் செய்ய வேண்டிய களப்பணிகள்,.  ஆனால் எதுவுமே எவாராலும் தொட்டும் பார்க்கப்படவில்லை. அறிக்கைகளும் பயணங்களும் மட்டுமே தொடர்ந்து ஈழ தீர்வு திட்டமாக முன்னெடுத்து கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.  இறுதியாக கிழக்கு மாகாணத்துக்கான தேர்தலும் நடந்து முடிவடைந்துவிட்டது.

அதிகாரமற்ற, குறிக்கோளில்லாத மாகாணசபைக்கான மந்திரி சபை நேற்றய முந்தினம் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராஜபக்க்ஷ முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டு பொறுப்பு இல்லாத பதவிகள் வழங்கப்பட்டு சர்வ தேசத்தை ஏமாற்றுவதற்கான முதற்கட்ட செயற்பாடுகள்  அனைத்து இனிதே நிறைவு பெற்றுவிட்டன.

ஸ்ரீலங்கா அரசும் அந்நாட்டின் அரசியலும் ஏற்கெனவே செல்லும் பாதை மிகவும் பிழையானது என்று தெரிந்தும் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தேர்தலில் களம் இறங்கியது சம்பந்தர் குழு, ஆனால் குளத்தை கலக்கி பிராந்துக்கு இரை குடுத்த கதையாக நிகழ்வுகள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. நடந்தவற்றை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு சரி பிழைகளை சிந்தித்து அடுத்து என்னெ செய்யலாம் எங்கு தவறு நடந்தது என்பதைப்பற்றி யோசித்து காரியத்தில் இறங்குவதை விட்டுவிட்டு அடுத்த நடவடிக்கைக்கு நாள்க்குறிக்க தலைமைச்செயலகம் டில்லிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதான் இன்றைக்கு ஈழத்தமிழனுக்கு வயிற்றை கலக்கும் விடயமாக மாறியிருக்கிறது.

மலையோ மடுவோ, உக்கலோ வத்தலோ  அனைத்தையும் சீதூக்கி பார்த்து வியூகம் வகுப்பதே தேர்ந்த அரசியலுக்கு அழகு, தொலைநோக்கு பார்வை அல்லது மதிநுட்பம் என்று அதைத்தான் சொல்லிக்கொள்ள முடியும்.  அடுத்து தன்னுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை வரையறுத்து உணர்ந்து கொள்ளவேண்டும். அவற்றை உணராமல் அடுத்த வீட்டுக்காரன் முண்டுகொடுப்பான் தாங்கிப்பிடித்து கரை சேரலாம் என்பதெல்லாம் விவேகமுமல்ல தமிழர்களின் இன்றைய பொறிநிலை அரசியற் சூழ்நிலைக்கு அது ஏற்றதுமல்ல. கடந்தகால பாடங்கள் அனைத்தும் அதையே தொடர்ச்சியாக படம்பிடித்துக்காட்டுகின்றன.

எவற்றையும் சீர்தூக்கிப்பார்த்து, மதி நுட்பத்துடன் அரசியல் ஆற்றை கடக்கும் சித்தம் + விவேகம்  உள்ளவர்கள்தான் ஈழ அரசியல் போன்ற சிக்கல் நிறைந்த சிரமமான அரசியலில் ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் போன்றோரை வென்று சாதிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.

தேசியத்தலைவரின் கட்டுப்பாட்டில் ஈழத்தாய் நாட்டின் அரசியல் இருந்த கால் நூற்றாண்டுக்கு மேலான காலங்களில் அந்த ஆளுமை நிறைந்த மதிநுட்பம்தான் சர்வ தேச உலகத்தை இவ்வளவு தூரம் ஈழ அரசியலுடன் இணைத்து இந்த இடத்துக்கு நகர்த்தி வந்திருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.  அந்த அரசியல் பாடத்தை மேலோட்டமாக ஒருமுறை நோக்கினாலே நல்லது எது தீது எது என்பது புரியவரும். இன்றைய நிலையில் ஈழ அரசியலில் இட்டு நிரவமுடியாத ஒரு வெற்றிடம் காணப்படுகிறது.  இருந்தும் தேசியத் தலைவரால் இனங்காட்டப்பட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பையே   ஈழத்தமிழ் மக்களும்,   ஈழத்தமிழர்களின் உருப்படியான அரசியல் சக்தியாக சர்வதேசமும் அங்கீகரித்திருக்கிறது.  அந்த வகையில் மாய தரகர்களின் வலைக்குள் சிக்கி சீரழிந்துபோகாமல் தமிழர்களுக்கான தேசிய அரசியலை சரியாக நகர்த்தி செல்லவேண்டிய மிகப்பெரிய பொறுப்பு சம்பந்தர் தலைமையிலான தமிழர் தேசியக்கூட்டமைப்பு ஒன்றுக்குத்தான் இருப்பதாக இப்போதைக்கு வரையறுக்கப்பட்டிருக்கிறது.  இவைகளை அறிந்துகொள்ளாத மூத்த அரசியல்த்தலைவரான சம்பந்தன் அடுத்த நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறார் என்பது தமிழர்களின் பில்லியன் டொலர் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

அடுத்து வடக்கு மாகாணத்துக்கான தேர்தலை 2013 பெப் மாதமளவில் நடத்தவேண்டுமென்றும்,  ராஜபக்க்ஷவின் அரசாங்கம் பென்னம் பெரிதாக தீர்வுத்திட்டம் ஒன்றை ஒளித்து வைத்திருப்பதாகவும் அனைத்திலங்கை ஒட்டுக்குழுக்களின் தலைவர் டக்கிளஸ் தேவானந்தர் உலகத்தை குளப்பும்விதமாக தன்பாட்டுக்கு அறிவித்திருக்கிறார். அந்த தேர்தலில் தான் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அதுவும் நடக்கக்கூடிய ஒன்று என்பதே சாதாரணமாக அரசியால் தெரிந்தவர்களின் காருத்துமாகும். சூழலும் அதை நோக்கித்தான் பயணிப்பதாகவும் தெரிகிறது தேசியக்கூட்டமைப்பு சரியான நிலை எடுக்கத்தவறின் நிலமை கைமீறி போகவும் வாய்ப்புண்டு

இதற்கிடையே  சென்றவாரம் இந்திய மத்திய பிரதேசத்தில் புத்தமத பல்கலைகழகம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு  சென்றிருந்த இலங்கை ஜனாதிபதி ராஜபக்க்ஷவிடம்  இலங்கையில் உள்ள தமிழர்கள் மதிப்புடனும்!?, மரியாதையுடனும்!? வாழ அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அளிக்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டதாகவும் இந்திய இலங்கை கடற்பரப்பில் தமிழகத்து மீனவர்கள் கடல் எல்லையைக் கடக்கையில் அவர்களைத் தாக்குவதையும், கைது செய்வதையும் தயவுசெய்து விட்டுவிட்டு மனிதாபிமான முறையில் இலங்கை ராணுவத்தினர் நடந்துகொள்ள வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொண்டதாகவும், தமிழகத்து மீனவர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் தாக்கப்படுவது குறித்து இரு தரப்பு மீனவர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்துவதே சிறந்தது என்று இருநாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர் அதன்படி செயற்படுவதே நல்லது என்று ராஜபக்க்ஷ கூறியதாகவும் இந்தியாவிலிருந்து வெளிவரும் ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை இந்திய பிரச்சினை சம்பந்தமாக இந்தளவுதான் மன்மோகன் சிங் அவர்களின் வல்லமைக்குட்பட்டு ராஜபக்க்ஷவுடன் பேச முடிந்திருக்கிறது. இதேவேளை மன்மோகன் சிங் அவர்கள் தமிழர்களுக்கான உரிமை அனைத்தையும் பெற்றுத்தருவார் என்று தமிழர் தேசியக்கூட்டமைப்பு மூர்க்கத்தனமாக நம்புகிறது.. தமிழ்நாட்டின் கபட அரசியல்வாதி கருணாநிதியின் கொள்கைப்போக்கும் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் கொள்கைப்போக்கும் வெவ்வேறு தளங்களில் இருந்து புறப்பட்டாலும் இரு பக்கத்தின் நோக்கமும் சென்று சேரும் மையப்புள்ளியும் ஒரு இடமாக இருப்ப்பதால் ஈழத்தமிழன் இதை ஒருபோதும் நம்பத்தயாராக இல்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்து மன்மோஹனுடன் விருந்துண்டு திரும்பிய சில நாட்கள் கழிந்துள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை ஒக்டோபர் 10 ஆம் திகதி புதுடில்லி வருமாறு இந்திய வெளிவிவகார அமைச்சசர் எஸ் எம் கிருஷ்ணா அழைத்துள்ளதாகவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடானான சில சுற்று பேச்சுக்களில் பங்குபற்றுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு புதுடில்லி செல்ல இருப்பதாகவும் தெரிய வருகிறது.

பல்லாயிரம் இலட்சம் கோடி ஊழல் முறைகேடுகள், கூட்டணி கட்சிகளின் வெளியேற்றம்,  பொருளாதார வீழ்ச்சி,  மின்சார உற்பத்திக்கான வழி தெரியாத வக்கற்ற நிலை, விலைவாசி உயர்வு, வயோதிப அரசியல்வாதிகளின் விவேகமற்ற வழிநடத்தல், இன்ன பிற காரணங்களால்   இந்தியப்பிரதமர் மன்மோகனும் அவரது கட்சியான காங்கிரஸும் ஆட்சியை கலைத்துவிட்டு வீட்டுக்கு அல்லது சிறைக்கு போகும் நிலை இந்தியாவில் தோன்றியிருக்கிறது,  இருந்தும் மன்மோகன் அரசு இலங்கை பிரச்சினையை தீர்க்காமல் ஓயப்போவதில்லை என்பதில் மிகுந்த அக்கறையாக இருப்பதாக கருணாநிதி மற்றும் சம்பந்தன் ஐயா அவர்கள் மூலமும் பறை சாற்றிகொள்ளப்படுகிறது.

இலங்கை பிரச்சினையை தீராமல்  வைத்திருப்பதன்மூலம்  இந்திய    அரசுக்கு, காங்கிரஸ் கட்சிக்கு,     திராவிட கட்சிகளுக்கு ஏதோ    தொடர் நன்மை     ஒன்று இருக்கிறது என்பது மட்டும்      உணரக்கூடியதாக இருக்கிறது. அதை சம்பந்தன் ஐயா அவர்கள் உணரவேண்டும்                   என்பதே ஈழத்தமிழர்களின் விருப்பம்.

ஈழத்தமிழர்களின் விடுதலை நோக்கிய அரசியல்ப்போராட்டம் இன்று சர்வதேச மயமாக மாற்றம் கண்டுவிட்டது. தமிழர் தேசியக்கூட்டமைப்பு இந்திய உதவியுடன் தேர்தல் மூலம் தீர்வை தொட்டுவிடலாம் என பழைய இடத்துக்கு வந்திருக்கிறது புலம்பெயர்தேசங்களில் உள்ள மக்கள் தினமும் ஒரு ஜனநாயக வெகுஜன போராட்டம் என்ற அளவில்  அரசியற் தீர்வை முன்வைத்து   தொடற்சியாக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றய தினம் பொங்குதமிழ் எழுச்சிக்கான போராட்டம் ஜெனீவாவை நோக்கி நகர்ந்திருக்கிறது.  இந்த இடத்தில்த்தான் ஒரு பெருத்த கேள்விக்குறி உருவாகியிருக்கிறது.  சர்வதேச அழுத்தத்தின்மூலம் தீர்வை பெற முடியுமா அல்லது ராஜபக்க்ஷவுடனும் மன்மோகனுடனும் கதைத்து தீர்வை எட்டிவிட மூடியுமா என்ற வினா தவிர்க்க முடியாமல் எழுந்து நிற்கிறது. இதை சம்பந்தன் ஐயா அவர்களின்  தலைமையிலுள்ள தமிழர்களின் கட்சியான தேசியக்கூட்டமைப்பு கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்றே நம்பலாம்.

ஈழதேசம் இணையத்துக்காக

கனகதரன்.