Saturday, October 13, 2012

மாவீரர் காலத்தை மிரட்டும் இளையராஜாவின் போட்டி இன்னிசை இசைக்கச்சேரி,



ஈழத்தமிழர்கள்   வாழும்   புலம்பெயர்   தேசங்களில்   வருடாவருடம்   அனுஸ்டிக்கப்பட்டுவரும் மாவீரர் நிகழ்வுகளுக்கான ஆயுத்தங்கள் அனைத்தும் வழமைபோல முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதே வீச்சுடன் மாவீரர் கால நிகழ்வுகளை குளப்புவதற்கான வேலைத்திட்டமும் சதிகாரர்களால் வழமைபோல தொடங்விட்டது, ஈழத்தமிழர்கள் செறிவாக வாழும் கனடா நாட்டை குறி வைத்து இந்த வருடத்துக்கான குளப்பல் நிகழ்வை திரைப்பட இசை இயக்குனர் இசைஞானி இளையராஜாவை முன்னிலைப்படுத்தி ஏவப்பட்டிருக்கிறது.  இருந்தும் தர்மம் வெல்லும் என்று ஈழத்தமிழர்கள் நம்புகின்றனர்.

2009, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின்   காலம்வரை எந்த இடையூறும் இல்லாமல் நிகழ்ந்து வந்த மாவீரர் நினைவு வணக்க காலம்,   2009 க்குப்பின் ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு தரப்பால் திட்டமிட்டு குளப்புபி சிதைக்கும் நடவடிக்கை தொடர்வதை கசப்புடன் புலம்பெயர் தமிழ் தேசிய உணர்வாளர்கள் சந்தித்து வருகின்றனர்.  சிங்கள இனவாதிகள் உள்ளூர் கைக்கூலிகளை வைத்து நடத்திவந்த குளப்படி விரிவுபடுத்தப்பட்டு,  பெருத்த பொருட்செலவுடன் உளவியல்ரீதியாக மக்களையும் உலகத்தையும் திசை திருப்பும் நடவடிக்கையில் முனைப்புடன் இந்த வருடம் (2012)  இளையராஜா இசை உருவில் களம் இறக்கப்பட்டிருக்கிறது. 

ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் என்றும் மறக்கமுடியாத மிகவும் உணர்வுபூர்வமான துக்க காலங்களாக இரண்டு மாதக் காலங்கள் உண்டு.  ஒன்று தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உணர்வுபூர்வமாக தொடங்கப்பட்டு தாய் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை கெளரவித்து ஈகைச்சுடர் ஏற்றி வணங்கும் உளப்பூர்வமான மாதம்,   நவம்பர் மாதம்.   இது பல ஆண்டுகளாக ஈழத்தமிழினம் அனுஷ்டித்துவரும் பேரெழுச்சியான  மாவீரர்களின் துக்கம்(எழுச்சி) நிறைந்த நினைவுக்காலம்.

அடுத்த ஒன்று,   நவ நாகரீக உலகு என்று சொல்லிக்கொள்ளும் பூமிப்பந்தில் மனிதாபிமானம் நிர்வாணமாக்கப்பட்டு துடிக்கத்துடிக்க மனுதர்மம் கழுத்தறுக்கப்பட்ட அந்த  இருண்ட நாட்கள். முள்ளிவாய்க்கால முட்டுக்குள் ஊண்,  உறக்கம் பறிக்கப்பட்டு மிருகங்களைவிட கேவலமான அவலத்திலிருந்த மனித குலத்தின்மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இனப்படுகொலை காலமான மே,  மாதம்.  இவை இரண்டு மாதக்காலங்களும் ஈழத்தமிழினத்தின் வாழ்வுத்தடத்தில் கரும் புள்ளியாக தொடரும் நினைவழியாத துக்க(எழுச்சி) காலங்கள்.

மாவீரர்களின் நினைவின் இன்னொரு இலக்கண விதியாக மாவீரர்களின் மாற்று அடையாளமாக தமிழ் ஈழதேசத்தின் தேசிய மலராக கார்த்திகைப்பூ தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது. கார்த்திகை மலரின் மகத்துவத்தை அறிந்தவர்கள் மாவீரர்களின் மகத்துவம் பற்றி இன்னும் நன்கு அறிந்தவராவர்.

வல்லாதிக்கங்களின் அப்பட்டமான சதிகள்,   இரத்தம் தோய்ந்த கோரமான கரங்கள் இவ்விரண்டு நினைவுக்காலங்களுக்குள் மறைந்து கிடந்தாலும் இந்த நினைவுக்காலங்களில் உயிர்ப்பான மனுதர்ம நியாயம் நிறைந்து கிடப்பதால் வல்லாதிக்கங்கள்கூட இந்த நினைவுக்காலங்களை பகிரங்கமாக எதிர்க்காமல் ஒத்துப்போவது போன்ற தன்மையை வெளிக்காட்டிவருகின்றன.  ஆனால் காட்டுமிராண்டித்தனமான குணங்கொண்ட ஸ்ரீலங்கா,  இந்திய அரசுகளின் இயலாமையும் மலினமான உத்தியும் மாவீரர் காலத்தை குளப்புவதிலும் இனப்படுகொலை நினைவை அறவே மக்கள் மனதிலிருந்து அப்புறப்படுத்துவதற்கான தந்திரங்களை பல்வேறு உத்திகளை கட்டவிழ்த்துவிட்டு திசை திருப்புவதில் குறியாகவே இருந்துவருகின்றன.  

மாவீரர் காலம் என்பது ஒரு சிறிய புள்ளிக்குள் அடக்கப்பட்டு புளக்கத்தில் உள்ள கேளிக்கை கொண்டாட்டக்காலமும் அல்ல,   விரிந்து பரந்த அனைத்து உலகிலும் துக்கமும் எழுச்சியும் நிறைந்த இந்த காலங்கள் முறையாக அறிமுகமாகியும் இருக்கின்றன.  அந்த நாட்களுக்கான தனித்தன்மையும் உலக மக்கள் நன்கு புரிந்தும் உள்ளனர்,   அதற்கான மதிப்பும் மரியாதையும் இம்மியளவும் குறையின்றி இன, மத, நிற, பேதம் இல்லாமல் அனைத்துலக மக்களும் ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர்.  இதுபற்றி தெரியாதவன் அல்லது மறந்தவன் ஒருபோதும் தமிழனாக அல்லது மனிதனாகவும் இருக்கமுடியாது.   மாவீரர் நினைவுகளை அனுஷ்டிக்க முடியாத நாடுகளாக பூமிப்பந்தில் உள்ள நாடுகள் என்றால் ஒன்று ஸ்ரீலங்கா, அடுத்த நாடு இந்தியா என்பதே கசப்பான உண்மையும்கூட.

இந்த வருடம் (2012) மாவீரர் மாதத்திற்கு அண்ணளவாக இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கின்றன.   தாயகத்தில் நினைவு நிகழ்வுகளை நிகழ்த்தமுடியாத அடக்குமுறைச் சூழலில்,   புலம்பெயர் தேசங்களில் அனுஷ்டிக்கப்படும் வணக்க நிகழ்வுகளை பல ஆயிரம் மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் தங்களது பிள்ளைச் செல்வங்களின் புனிதமான வீரம் செறிந்த கெளரவத்தை ஏற்று ஆறுதல்பெறும்  நினைவு வணக்கத்துக்காக காத்துக்கிடக்கும் நெகிழ்ச்சியான காலம் இது,

பல ஆயிரம் மாவீரர்கள் களத்தில் பலியான செய்தி மட்டுமே அறிந்து உடலங்களை தரிசிக்கும் பாக்கியம் இல்லாத பெற்றவர்களும் இந்த மாவீரர் காலத்தில்த்தான் தங்கள் செல்வங்களுக்கு உலகம் கொடுக்கும் மரியாதையை தரிசித்து மனதை தேற்றும் காலம்.   இப்படியான மென் உணர்வுகளுக்கு மருந்திடும் காலமான  இந்த மாவீரர் காலத்தின் எழுச்சியை மழுங்கடித்துவிட வேண்டும்,  விடுதலைப்புலிகளாய்  படையணிகட்டி  களங்கண்ட வீரத்தமிழனின் நாட்டுப்பற்றும் வீரமும் மண்ணை நேசித்த மாண்பும்,   இளமைக்காலத்தின் இனிய நினைவுகளை புறந்தள்ளிய மாவீரர்களின் ஈகை தியாகங்களும் வெளி உலகுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதில் ராஜபக்க்ஷ சிங்கள அரசு கண் கொத்திப்பாம்பாக செயற்பட்டு வருகிறது.   இந்த எழுச்சியை நேரடியாக களம் இறங்கி சிதைக்கமுடியாத சிங்கள இனவாதிகள் எடுத்து கையாளும் தந்திரங்கள் ஜீரணிக்க முடியாத வெப்பம் ஒவ்வொரு உண்மை தமிழனுக்கும் உண்டு.  அந்த அரக்கத்தனமான செயற்பாடுகள் சிரசை கடப்பாரை கொண்டு பிளக்கும் கொடூரமாக இருந்து வருகிறது.

இப்படியான வஞ்சக திட்டங்களை சமாளிப்பதற்கு தமிழன் முடிந்தளவு மாற்று அரசியல் தந்திரங்களையும்,  பல்வேறு உபாயங்களையும் மிகச்சரியாக பிரயோகித்தபோதும்,  மலைபோல் நம்பிக்கை வைத்துக்கொண்டிருந்த தளங்களின் இருந்து திடீரென தோன்றும் சில சதிகளை கையாள முடியாத சிக்கலும் தமிழினத்தின் முன் முகத்தில் அறைந்து நிற்பது மறுப்பதற்கு இல்லை.

அந்த வகையில் நவம்பர் 03 திகதி தமிழகத்தின் தன்னிகரில்லாத சினிமா இசை அமைப்பாளரான,  இசைஞானி இளையராஜா அவர்களின் தலைமையில் கிட்டத்தட்ட நூறுபேர் கொண்ட குழு ஒன்று மிக பிரமாண்டமான இசைக்கச்சேரியை கனடாவிலும் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் நடத்தி மாவீரர் காலத்தின் மாண்பை மழுங்கடித்து மண்ணை போடுவதற்கான முஸ்தீபுகள் சிங்கள தரப்பால் ஆயுத்தம் செய்து இறக்கி விடப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.  இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டின் பின்னணியில் இலங்கை அரசும், இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்களின் ஆலோசனையும் நிதி உதவியும் இருப்பதாகவும், மற்றும் தமிழக வர்த்தக சங்கம், தென்னிந்திய வர்த்தக சங்கம்,  மற்றும் இதை ஏற்பாடு செய்த "ட்ரினிட்டி ஈவன்ட்ஸ்" என்ற நிறுவனமும் மிகுந்த முனைப்புக்காட்டி தயாராக களத்தில் இருப்பதாக தெரிகிறது.

அவை அனைத்தும் இட்டுக்கட்டிய வதந்திகள் என்ற எண்ணமும் ஆரம்பத்தில் இருந்தாலும் திரைப்பட இயக்குனரும் உணர்வுள்ள தமிழ் பற்றாளருமாகிய ஆர் கே செல்வமணி அவர்கள் வெளியிட்டிருந்த கண்டன அறிக்கையும்.  கனடா செல்லவிருக்கும் இளையாராஜாவின் குழுவில் தான் இடம்பெறப்போவதில்லை என்ற மூத்த இயக்குனர் பாரதிராஜா அவர்களின் அறிவித்தலும் அது வதந்தியல்ல நிதர்சனம் என்பதையும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அத்துடன் இளையராஜா அவர்கள் கனடா சென்று நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடுகளை முனைப்புடன் பார்வையிட்டதாகவும் தெரியக்கிடைக்கிறது.  எனவே மாவீரர் காலமான இந்த காலகட்டத்தில் இப்படியொரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் உள்நோக்கம் கொண்டு செய்கிறார்கள் என்பதை தமிழ் மண்ணில் பிறந்தவரான இளையராஜா அறிந்தாரா அறியாதவர்போல்  காட்டிக்கொள்ளுகிறாரோ என்பது இதுவரையில் தெரியவில்லை.

இளையராஜா அவர்கள் தெரியாமல் இந்தச்சதிக்குள் விழுந்திருந்தால் அது தவறு  என்பதை அவர் இனியாவது புரிந்துகொள்ளவேண்டியவராக இருக்கிறார்.  மாறாக தெரிந்து இலங்கை,  இந்திய அரசுகளின் திட்டத்துக்கு உதவும் நோக்கோடு செயற்படுபவராக இருந்தால் அது தப்பு என்பதை அவர் உணர்ந்துகொண்டு மனிதாபிமான நோக்கோடு மருணித்துப்போன அவரது பிள்ளைகள் வயதையொத்த இளம் மாவீரர்காளின் தியாகங்களை மனதில்க்கொண்டு விலகிவிடுவார் என்பதே அனைத்து தமிழர்களின் அவாவாகவும் பணிவான வேண்டுகோளாகவும் இருக்கிறது.  இளையராஜா அவர்கள் தமிழ் உலகத்தை தாண்டி பொதுவில் பெரு மதிப்புக்குள்ளான ஒரு மாபெரும் இசை கலைஞர்.  கிராமாத்திலிருந்து வந்த அவருக்கு அடிப்படை பாமர மக்களின் உள்ளக்கிடக்கை புரியாமலிருக்க முடியாது.  ஈழத்து மக்களின் உணர்வுகளை,   இழப்புக்களை அவர் நன்கு அறிந்தே இருப்பார் என்பதும் மறுப்பதற்கில்லை.

அரசியல் சாயத்தை இதுவரை எந்த இடத்திலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்துவந்த காங்கிரஸ் அனுதாபியான இளையராஜா நேரடியாக அரசியலில் இறங்கிவிட்டாரோ என்ற ஐயம் பழுத்த தமிழகத்து மூத்த அரசியல்வாதிகளுக்கும் அதிர்ச்சியை உண்டுபண்ணியிருக்கிறது.    அதே சந்தேகம் ஈழத்தமிழர்களுக்கும் முகத்திலடித்தாற்போல் முதல்முறையாக இந்த மாவீரர் காலத்தில் வெளிப்பட்டிருக்கிறது.  இது தவறான ஊகமாகக்கூட இருக்க முடியும் இருந்தும் இளையராஜா அவர்கள் மட்டுமே இந்தச்சந்தேகத்துக்கு பதிலளிக்கவேண்டியவராக இருக்கிறார். 

தனிப்பட்ட முறையில் இளையராஜா அவர்கள்மீது களங்கம் கற்பிக்கவேண்டிய எண்ணம் நிச்சியம் இல்லை.   இளையராஜாவுக்கு  போட்டியாக இசைத் துறையிலும் இங்கு எவரும் இல்லை,     இளையராஜா அவர்களின் இசையை புறக்கணிக்கும் நிலை வந்துவிடக்கூடாது என்பதில் ஈழ மக்களிடம் மாற்றுக்கருத்தும் காணமுடியாது.   உதாரணத்துக்கு  தமிழகத்தில் இரண்டு நிறுவனங்கள் முன்னணி நடிகர்களை வைத்து சினிமா படம் எடுத்தாலே ஒரே காலப்பக்குதியில் போட்டிபோட்டு படத்தை வெளியிடுவதில்லை,  ஒருவரின் படத்தால் மற்ற நடிகர், தயாரிப்பாளர் பாதித்துவிடக்கூடாது என்ற நோக்கோடு விட்டுக்கொடுத்து கால இடைவெளியில் படத்தை திரையிடுகின்றனர். அந்த விதியைத்தான் இன்று தமிழீழ மக்கள் இளையராஜாவிடம் எதிர்பார்க்கின்றனர்.  நமது குழந்தைகளின் சாவீட்டுக்காக வரையறுக்கப்பட்ட துக்கம் நிறைந்த நினைவுக்காலங்களில் கேளிக்கை கொண்டாட்டங்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை மனிதாபிமானத்துடன் சிந்திப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

2009 முள்ளிவாய்க்கால் படுகொலை முடிந்து ஒருவருடம் முடிந்த கையோடு 2010 ஜூனில் படுகொலையில் வெற்றிவிழா நிகழ்ச்சி போன்ற ஒருநிகழ்ச்சியை கோவையில் செம்மொழி மாநாடு என்று கருணாநிதி நடத்தி தமிழினத்தின் வெறுப்பை கொள்வனவு செய்ததுஎவரும் மறந்திருக்க முடியாது.

இளையராஜாவை வெறுப்பதற்கு ஈழத்தமிழர்களுக்கு இதுவரை ஒரு காரணமும் இருக்கவில்லை. இனி ஒரு வேளை வெறுத்தாலும் இளையராஜாவின் இசையை  பல சந்தர்ப்பதில் எவராலும் புறக்கணிக்க முடியாது. மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு அடுத்து மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருப்பவர் இசைஞானி இளையராஜா என்றால் அது மிகைப்படுத்திய ஒன்றல்ல .  இந்த கட்டுரையை நான் எழுதிம்போதுகூட இளையராஜாவின் தேர்வு செய்யப்பட்ட பாடல்களை கேட்டுக்கொண்டே எழுத நேர்ந்தது.  

இசைஞானி அவர்கள் இப்படியான ஒரு நெருக்கடியான சூழலில் வாழ்வாதாரத்தை வளம் படுத்துவதற்காகவோ,  தொழில் வாய்ப்புக்காகவோ இந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டிய தேவையில்லை.  அவரது பின்புலம் பொருளாதாரத் தேவைக்கு அப்பாற்பட்டு இருப்பதை அனைவரும் அறிவோம். இளையராஜாவுடன்,  யுவன்சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா,  ஜேசுதாஸ், ஹரிஹரன், மனோ, விஜய் யேசுதாஸ், கார்த்திக், சித்ரா, பவதாரணி, சாதனா சர்கம் சிரிப்பு நடிகர் விவேக்,  சினேகா, பிரசன்னா  நீயா நானா கோபிநாத், கௌதம் வாசுதேவ் மேனன்,  பார்த்திபன் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட  தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்ற இருப்பதாகத்தெரிகிறது.

அன்றுதொட்டு இன்றுவரை புரட்சி போராட்டங்கள் பற்றிய எழுச்சியான கருத்துக்களை மக்கள்முன் பரப்புவதற்கு தெருக்கூத்தும் பாட்டும் ஓரங்க நாடகங்களும் உதவியது.    அவ்வளவு ஆளுமை பாட்டுக்கும் நடிப்புக்கும் உண்டு அதையே ஆயுதமாக்கி பெருத்த நட்சகத்திர பட்டாளத்தை வைத்து கேளிக்கை நிகழ்ச்சி நடத்தி ஒரு போராட்ட வறலாற்றின் அடிநாதத்தை நிறுவிய மாவீரர்களின் நினைவுநாளை நிர்மூலம் செய்ய நினைப்பது ஒருபோதும் தர்மமாக இருக்காது.

இளையராஜா அவர்களின் தம் புகழ் உலகம் முழுவதும் ஏற்கெனவே பரவிவிட்டதால்  இப்போ ஏற்படப்போகும் விமர்சனம்  அவருக்கு பெரிய பாதிப்பை உண்டுபண்ணப்போவதில்லை காலக்கிரமத்தில் மறக்கப்பட்டுவிடும் என்று அவர் நினைக்கக்கூடும்.   எந்த அழுத்தங்களும் தன்னை பாதிக்கப்போவதில்லை என்று அவர் நினைப்பதால் அவர் இதுசம்பந்தமாக எவரையும் சந்தித்து கருத்து சொல்லவும் விரும்பவில்லை,  ஊடகங்கள் மூலமாக எந்த சுயமான தன்னிலை விளக்க அறிவித்தலையும் அவர் இன்னும் வெளியிடவுமில்லை. பிறப்பிலேயெ இளையராஜா மிகவும் பிடிவாதக்காரர் என்றும் யாரும் திருத்தம் சொல்வதோ அபிப்பிராயம் குறுவதையோ ஆரோக்கியமான மாற்றுக்கருத்து பிறந்தாலும் இளையராஜா ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாதவர் என்றும்  அவரை வளர்த்துவிட்ட பாரதிராஜா ஒரு மேடையில் குறைப்பட்டுக்கொண்டதும் உண்டு.  அது ஞானச்செருக்காகவும் இருக்கலாம், வித்தக காய்ச்சலாகவும் இருக்கலாம் உள்ளடக்கம் இளையராஜாவுக்கு ஏதாவது ஒரு சந்தற்பத்தில் புரிந்திருக்கலாம்.  அல்லது இனிமேல் புரியப்படலாம்.

என்ன இருந்தாலும் இளையராஜாவின் இசையை எவ்வளவு மறக்கமுடியாதோ அதைவிடவும் அதிகமாக ஈழ மண் மீட்பு போரில் ஆகுதியாகிப்போன மாவீரர்களையும்,    ஈழப்படுகொலையையும் மறக்கமுடியாது. என்பதே ஈழத்தமிழர்களின் நிலைப்பாடாக இருக்கிறது.  எனவே ஒரு இனம் தனது விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இக்கட்டான தருணத்தில் போராட்டத்தையும் எதிர்கால அரசியலையும் பாதிக்கக்கூடிய ஒரு சதிக்கு இளையராஜா துணை போகலாமா என்ற மனச்சாட்சியான கேள்வியொன்றை மட்டும் அவர் முன்னிலையில் வைக்கமுடியும். 

அவர் ஒப்புக்கொண்ட நிகழ்ச்சியை ஒரு மாதகாலம் தள்ளி நடத்திக்கொள்வதால் அவரது பூகழுக்கும்,   பெயருக்கும்,   வருவாய்க்கும் எந்தக்குறையும் நேர்ந்துவிடப்போவதில்லை,   அப்படி ஒன்று நடக்கும் பட்ஷத்தில் இளையராஜாவுக்கு இன்னும் அதிக மதிப்பும் மரியாதையும் உண்டாகுமே தவிர ஊறு விளையப்போவதில்லை.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.

No comments: