இந்த
ஆண்டு 2013 செப்ரெம்பர் மாத இறுதிக்குள் வடக்கு மாகாணத்துக்கான தேர்தல்
நடைபெறும் என்று அரசாங்க தரப்பிலிருந்து ஒரு செய்தி வெளியாகி இருந்தது.
அது சர்வதேச நாடுகளை குறிப்பாக ஜெனிவாவை திருப்திப்படுத்தும் வழமையான
பௌத்த சுலோகமாகக்கூட இருந்தாலும் உலக நெருக்குதல் காரணமாக
சப்பிரதாயத்துக்கேனும் வடக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்தியாகவேண்டிய
அரசியற் சூழ்நிலை ராஜபக்ஷ அரசுக்கு உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது
ஏற்றுக்கொள்ளக்கூடியது.
எது எப்படியிருப்பினும் வடக்கு
மாகாணத்துக்கான தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்திவிடவேண்டும் என்பதன்
உள்நோக்கம் சர்வதேச நன்மதிப்பை பெற்று தப்பித்தல் என்பது ஒருபுறம்
இருந்தாலும். சிறிலங்காவின் பங்காளியான இந்தியாவின் அவசர உநாட்டு அரசியல்
தேவையாகவும் இருந்துவருகிறது.
இன்றைய நிலையில் இந்திய காங்கிரஸ்
அரசு தப்பிக்க முடியாத மிக மோசமான அரசியல் சிக்கல்களை சந்தித்து தூர்ந்து
தரைமட்டமாகிப் போகும் பொறிபந்தல் நிலைக்கு தள்ளப்படிருக்கிறது.
சமீபத்தில்
கருணாநிதியின் திமுக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதன் பின்
தமிழ்நாட்டைப்பொறுத்தவரை அடுத்து வரவிருக்கும் தேர்தலில் காங்கிரஸ்
தனித்து நிற்க நேருமாயின் நிச்சியமாக கட்டுப்பணத்தை இழக்கும் அவல நிலை
உருவாகும். அந்த அவமானகரமான வீழ்ச்சி வெளியில் தெரிந்துவிடக்கூடாது
என்பதில் தமிழகத்தில் இருக்கும் லோக்கல் காங்கிரஸ்காரர்களை விடவும் டில்லி
காங்கிரஸின் தேசியத் தலைமைக்கும் இன்றைய பிரதமர் மன்மோகன் மற்றும்
குடியரசு தலைவராக இருக்கும் பிரணாப் முகர்ஜி நிதி மந்திரி ப.சிதம்பரம்
ஆகியோருக்கு மிகுந்த பயமும் கவனமும் இருக்கிறது அவற்றை தாண்டியும்
இன்னும் வேறு சில சென்சிற்றிவ்வான விடயங்களும் உள்ளூர பொதிந்து
கிடக்கின்றன.
அடுத்த ஆண்டு இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்
நடைபெற இருப்பதால் தமிழ்நாட்டு மக்களையும் தமிழக அரசியல்கட்சிகளின்
அழுத்தங்களையும் கட்டுக்குள் கொண்டுவந்து குளிர்வித்து வாக்குப்பெறும்
நோக்குடன் வடக்கு மாகாணத்தில் ஒரு தேர்தலை நடத்திவிடவேண்டும் என்பதில்
இந்திய மத்திய காங்கிரஸ் அரசு விடாப்பிடியாக இருக்கும் என்பது சாதாரணமாகவே
புரியக்கூடிய ஒன்று.
இருந்தாலும் ராஜபக்ஷ மனதில் இருக்கும் திட்டம் பொறுத்தே இந்தியாவின் நெருக்கடி கையாளப்படும் என்பதும் சகலரும் அறிந்த விடயம்.
இந்திய
பாராளுமன்றத்துக்கான தேர்தலை கருத்தில்க்கொண்டு இலங்கையின் வடக்கு
பகுதியில் தேர்தல் ஒன்றை நடத்திவிடவேண்டும் என்ற கபடத்திட்டம்
காங்கிரஸுக்கு இருந்தாலும் அடுத்த ஆண்டு வரவுள்ள இந்திய பாராளுமன்ற
தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்பதே இந்திய நாட்டின்
அரசியல் நிலவரங்கள் மிக தெளிவாக தெரிவிக்கின்றன.
பிரதமர்
மன்மோகன் முதற்கொண்டு அனைத்து துறை சார்ந்த அமைச்சர்கள் வரையிலானா
கட்டுப்படுத்தமுடியாத வரைமுறையற்ற ஊழல்க் குற்றச்சாட்டுக்கள்
கட்சித்தலைமைமீதான மக்களின் நம்பிக்கையீனம் சத்தீஸ்கர் மாநிலத்தில்
மாவோயிஸ்டுக்கள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூடு பாகிஸ்தானை சமாளிக்கமுடியாத
பலவீனம் பகிரங்கமாக ஊடுருவி நிலங்களை கையகப்படுத்தும் சீனாவை
கட்டுப்படுத்தமுடியாத இந்திய ஆட்சியாளரின் கையறுநிலை. தமிழக மீனவர்களை
சிறிலங்கா அரசிடமிருந்து காப்பாற்றமுடியாத வெட்கக்கேடான வெளியுறவு
சினேகிதம் தேசிய நீர்ப்பங்கீட்டு இயலாமை கிறிக்கற் சூதாட்டம் இவைகளை
கொண்டு கணிக்குமிடத்தில் வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மொத்த 552
இடங்களில் காங்கிரஸ் கூட்டணி ஐந்தில் ஒரு பங்கை பெறுவதே கடினம் என்று
சொல்லப்படுகிறது. இந்தக்கணிப்பை சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ஷ தரப்பு
புரிந்திருக்காமல் இருந்திருக்க முடியாது.
எந்த எதிர்ப்பு
வந்தாலும் சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் எந்த இடத்திலும் பயிற்சி
அளிப்பதிலிருந்து பின் வாங்கமாட்டோம் என்று திமிருடன் கூறிவந்த மத்திய
காங்கிரஸ் அரசு இன்றைக்கு சுருதியை மென்நிலைக்கு மாற்றி மத்திய இராணுவ
அமைச்சர் அந்தோனி தமிழகம் தஞ்சைக்கு வந்து இலங்கை இராணுவ வீரர்கள்
எவருக்கும் தமிழ்நாட்டில் பயிற்சி அளிக்கப்படமாட்டாது என்று தேவையற்ற ஒரு
சந்தற்பத்தில் பகிரங்கமான ஸ்ரேற்மென்ற் ஒன்றையும் கொடுத்திருக்கிறார்.
அதேபோல கூடங்குளம் இடிந்தகரை குடியிருப்பாளர்களின் உரிமைப்போராட்டத்தை
உதாசீனம் செய்து அடாவடித்தனமாக பதினைந்து நாட்களில் கூடங்குளம் மின்நிலையம்
மின் உற்பத்தியை தொடங்குமென்றுஇ பதினைந்து நாட்களுக்கொருமுறை முழங்கிவந்த
மத்திய அமைச்சர் நாராயணசாமி இப்போது சத்தத்தை குறைத்துக்
கொண்டிருக்கிறார். தேர்தல் நெருங்க நெருங்க அவரது அசைவிலும் மாற்றம்
நிகழ்ந்தாலும் ஆச்சர்யப்படுவதகில்லை. தமிழக மக்களை இன்னும் குளிரவைத்து
ஏமாற்றி வாக்கு சேகரிக்கும் அடுத்த நகர்வாக வடக்குமாகாணத்துக்கான தேர்தல்
நடத்தவேண்டிய கட்டாயதேவை காங்கிரஸின் அரசியலுக்கு மிகவும் தேவையான ஒன்றாக
காணப்படுகிறது.
ஜெனீவா தீர்மான அசைவுகளின்பின் இலங்கைக்குள்
தமிழர்களுக்கான ஜனநாயக அரசியற்தீர்வின் ஆரம்பமாக தேர்தல் ஒன்றை நடத்தி ஒரு
சாதாரண நிலையை தோற்றுவித்துவிட்டதாக காட்டாவிட்டால் சர்வதேச நெருக்கடி
தன்னை தொடர்ச்சியாக தாக்கும் என்பதையும் தமிழ்நாட்டில் தன்னிச்சையாக
உருவெடுத்த மாணவர் கிளர்ச்சி இந்தியாவில் ஒரு ஸ்திரமற்ற தன்மையை உண்டாக்கி
அதன்மூலம் இந்திய மத்திய அரசு சர்வதேசத்துடன் இணைந்து தன்னை
கால்வாரிவிடும் என்பதையும் ராஜபக்ஷ உணராமலுமில்லை.
இந்தியா
அமெரிக்கா உட்பட சர்வதேச அழுத்தங்களை குறைக்கும் முகமாக உள்நாட்டில்
இனங்களுக்கிடையே சுமூகமான நிலையொன்றை தோற்றுவித்துவிட்டது போல்
காட்டிக்கொள்ளுவதற்கும் தமிழர் தேசியக்கூட்டமைப்பை கட்டிப்போடுவதற்கும்
வடக்கு மாகணத்துக்கான தேர்தலை நடத்தவேண்டும் என்பதும் ஒரு தேவையாக இலங்கை
அரசுக்கு இருந்துவருகிறது.
வடமாகாணத்துக்கான தேர்தல் நடத்துவதில்
இயல்பாக சிங்கள அரசுக்கு உள் மட்டத்தில் பல சிக்கல்கள் உருவாகும் என்பதும்
இப்போது புரியப்பட்டிருக்கிறது. சிறிலங்கா அரசுக்குள் கூட்டணியிலிருக்கும்
தமிழ்க்கட்சிகள் ராஜபக்ஷவின் தாளத்துக்கு தலையசைத்து எதற்கும்
உடன்பட்டாலும் துவேஷ நிலைகொண்ட கடும்போக்கு சிங்கள கட்சிகளுக்கு வடக்கு
மாகாணத்துக்கான தேர்தல் நடத்துவதில் எள்ளளவும் ஈடுபாடு இல்லை என்பதுபோல்
வெளி உலகத்துக்கு காட்டிக்கொள்ளப்படுகிறது.
இயல்பாகவே சிறிலங்கா
ஆட்சியாளர்கள் எந்த கட்சியை சார்ந்தவர்களாக இருந்தாலும் வாக்குறுதி
வழங்குவதில் சளைத்தவர்கள் அல்ல என்பதும் தமிழினத்துக்கு சாதகமாக இருக்கும்
வாக்குறுதிகளை என்றைக்கும் காப்பாற்ற மாட்டார்கள் என்பதும் உள்ளூர்
மக்களான தமிழர்களும் சிங்களவர்களும் நன்கு அறிந்த ஒன்று.
எனவே
இந்தியாவின் அழுத்தத்துக்கு பணிந்து ராஜபக்ஷ வடக்கு மாகாணத்துக்கான
தேர்தலை உடனடியாக நடத்திடுவார் என்று நம்புவதற்கில்லை. இலங்கை இந்திய
ஒப்பந்தத்தின்போது இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பில்
இருந்துகொண்டிருக்கும் 13 வது திருத்த சட்டத்தை சுத்தமாக் துடைத்து கழுவி
சுத்தம் செய்தபின்னர் தனி அதிகாரமற்ற வடக்குமாகாணத்தில் பெயரளவில் ஒரு
தேர்தலை நடத்தவேண்டும் என்பதிலேயே சிங்களவர்கள் அனைவரும் குறியாக
இருக்கின்றனர்.
ராஜபக்ஷ அரசின் கூட்டாளிகளான ஜாதிக ஹெல உறுமய
கட்சியின் தலைவர் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தேசிய சுதந்திர முன்னணி
கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் விடாப்பிடியாக 13வது திருத்த சட்டமூலத்தை
தேர்தலுக்கு முன் ரத்துச்செய்யவேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றனர்.
இந்தவிடயத்தில் ராஜபக்ஷ தான் சம்பந்தப்படாதவர் போலவும் உள்ளூர் அரசியல்
நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய சங்கடத்தினால் அல்லோலப்படுபவர்
போலவும் அப்பாவி போலவும் காட்டி காரியத்தை கச்சிதமாக நிறைவு
செய்யவுள்ளார்.
ஜனாதிபதி ராஜபக்ஷ குறிப்பிட்ட விடயத்தை உள்ளூர
மனமார முன்மொழிவராக இருந்தாலும் சர்வதேசத்தை மனதில்க்கொண்டு அதை வெளியில்
காட்டிக்கொள்ளாமல் கூட்டணி கட்சிகளை தூண்டிவிட்டு காய் நகர்த்துகிறார்
என்பதை சகலரும் புரிந்துகொள்ளமுடியும்.
13வது திருத்த சட்டத்தையும்
மாகாண சபை முறைமையையும் முற்றாக இல்லாதொழிக்கும் தனி நபர் பிரேரணையொன்றை
இந்த வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர்
சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பொதுநலவாய
மாநாட்டை இலக்கு வைத்து இந்த வட மாகாண சபை தேர்தலை நடத்தினால் இதனை தமிழ்
அமைப்புக்கள் சர்வசன வாக்கெடுப்பாக சர்வதேசத்துக்கு எடுத்து கூற
முயற்சிக்கும்.
அதில் ஈழம் இருக்குதா இல்லை இராணுத்தால் அப்பாவி
மக்கள் கொல்லப்பட்டார்களா? இல்லையா? என்பது தொடர்பிலும் விவாதம்
நடத்தப்படும் என்றும் அவர் வியாக்கியானமும் கூறியுள்ளார்.
எனவே
2013 செப்ரம்பரில் வடக்கு மாகாண தேர்தல் நடைபெறும் என்று சொல்லுவதற்கு
முகாந்திரங்கள் எதுவும் இல்லை. ஏதாவது காரணத்தை காட்டி தேர்தல்
தள்ளிவைக்கப்படலாம். அல்லது சீரற்ற நிலையை வடக்கு மாகாணத்தில்
தோற்றுவித்து இராணுவ அடக்குமுறைக்குள் தமக்கு சாதகமான ஒருதரப்பை தேர்தலில்
வெற்றிபெற்றதாக அறிவிக்கலாம் என்பதே முடிந்த முடிவாக காட்டப்படும்
என்பதையும் புறந்தள்ளுவதற்கில்லை.
உள்ளீடாகப்பார்த்தால் தேர்தல்
ஒன்றை வடக்கு மாகாணத்தில் நடத்திவிடுவதால் தமிழ் மக்களின் நிலமை
சீராகிவிடும் என்பதெல்லாம் இந்திய மற்றும் சர்வதேச அரசியலுக்கு சமாதானமாக
இருக்கலாம் தமிழர்களின் பிரச்சினை கடுகளவும் மாறிப்போய்விடப்போவதில்லை. இது
ராஜபக்ஷ மற்றும் இந்தியாவுக்கும் புரியாத புதினமும் அல்ல.
ஒரு
விடயத்தை இங்கு கவனத்தில் கொள்ளமுடியும். போராட்டம் இல்லாமல்
பேச்சுவார்த்தை மூலம் தமிழர்களுக்கு தீர்வு இல்லை என்பது முடிந்த முடிவவும்
ஈழத்தமிழர்களின் நீண்டகால வரலாற்று படிப்பினையாகவும் உள்ளது. பல
வருடங்களாக பல இடங்களில் அது தமிழர்களின் பல்வேறு தரப்புக்களால் மிக
தெளிவாக புரியப்பட்டுமுள்ளது. போராட்டம் என்பது ஆயுதப்போராட்டம் மட்டும்
என்று பொருள் கொள்ளலாகாது.
இன்றைய சூழலில் ஈழ அரசியல் சம்பந்தமாக
மூன்றாம் நிலையிலுள்ள வசதி வாய்ப்புள்ள அரசியல்வாதிகள் தன்னிச்சையாக தமது
நலன் சார்ந்து பல வியாக்கியானங்களை கருத்துக்களாக முன் வைக்கின்றனர்.
வெவ்வேறு விதமான போராட்ட உத்திகளையும் திறந்துவிடுகின்றனர். தமிழக
முதலமைச்சர் ஜே ஜெயலலிதா ஒருவிதமாகவும் திமுக தலைவர் மு கருணாநிதி
வெவ்வேறு விதமாகவும் கருத்துக்களை வழங்கிவருகின்றனர். வைகோ நெடுமாறன்
சீமான் போன்றவர்கள் இன்னொருவிதமாகவும் தத்தமது கொள்கையின் அடிப்படையில்
தமது கருத்துக்களை முன்வைத்தும் வருவது அனைவரும் அறிந்திருக்கின்றோம்.
அவர்களது
ஒவ்வொருவரது கருத்தும் வெவ்வேறு வெளிகளையும் பாதைகளையும் சுட்டிக்காட்டி
நிற்கின்றன. எதை பின்பற்றுவது என்ற திரிசங்கு நிலை அங்கு
தோற்றுவிக்கப்படுகிறது ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களது கருத்தும்
கருணாநிதியின் கருத்துக்களும் கடைசிவரை ஒரே கொள்கை கொண்டதாக திடமாக
நிற்கும் தன்மை கொண்டதல்ல என்பது இங்கு கவனிக்கத்தக்கது. நாளை அரசியல்
மாற்றம் ஒன்று ஏற்படும்போது கருணாநிதியின் குரல் போராட்டம் அனைத்தும்
உடனடியாக தலைகீழாக மாறக்கூடியது. எனவே தமிழக அரசியல்வாதிகளான ஜெ
ஜெயலலிதாவின் கருத்தும் இன்னும் வேறுவிதமாக சந்தற்பவாதம் பேசிவரும்
கருணாநிதியின் கருத்தும் வெவ்வேறு தன்மை கொண்டதாக காணமுடிகிறது.
தமிழர்
தேசியக்கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் அவர்கள் வேறு ஒரு படிமானத்தை
பின்பற்றி இந்தியாவையும் ராஜபக்ஷவையும் மலைபோல் நம்பி அரசியல் செய்து
வருகிறார். பேச்சுவார்த்தைமூலம் தமிழர்களுக்கான அரசியல் உரிமைகளை
வென்றெடுக்கலாம் என்று அவர் அதிக இடங்களில் பேசியும் வருகிறார். அவரது
நிலைப்பாட்டை ஒத்ததாகவே இந்திய மத்திய காங்கிரஸ் அரசின் கருத்தும்
இருந்துவருவதாக காணமுடிகிறது.
தமிழீழ தேசியத்தலைவர் வே பிரபாகரன்
அவர்களின் கருத்தையொத்த கருத்துக்கொண்டவர்களாக வைகோ அவர்களும் ஐயா
நெடுமாறன் அவர்களும் சீமான் அவர்களின் கருத்தையும் ஒப்பிடும் பட்ஷத்தில்
தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொள்கை ஒத்துப்போகும்
தன்மை கொண்டதாக இல்லை. சில சிக்கலான தருணங்களில் அனுசரித்துப்போவதென்பது
ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருப்பினும் அடிப்படை கொள்கையில் உறுதியான
விட்டுக்கொடுப்பற்ற பகிரங்கமான நிலைப்பாட்டை எதிர்த்தரப்புக்கு
தெரியப்படுத்தவேண்டிய பொறுப்பு தலைவர் சம்பந்தருக்கு இருக்கிறது.
போர்
முடிவுக்கு வந்தபோது ராஜபக்ஷ தரப்பும் சரி இந்திய அரசுதரப்பும் சரி தமிழக
முதல்வராக இருந்த கருணாநிதியும் சரி ஒரே கருத்துக்கொண்டவர்களாக
இருந்தனர். 2010 ஜனவரிக்குள் ஈழத்து மக்கள் அனைவரும் தத்தமது வீடுகளில்
குடியமர்த்தப்படுவர் என்று வாக்குறுதியும் இவர்களால் அளிக்கப்பட்டது.
அடுத்து இந்தியாவின் முன்னிலையில் ஜனாதிபதி ராஜபக்ஷ திரு சம்பந்தன்
அவர்களுக்கு 13 வது திருத்தத்துக்கு மேலேயும் சென்று அதிகாரப்பகிர்வு
வழங்கப்படும் என்று வாக்குறுதி செய்யப்பட்டது. அத்துடன் இராணுவம் முற்று
முழுதாக வாபஸ் வாங்கப்படும் என்று அனைவரும் கூட்டாக அறிவித்தனர். எதுவும்
நடைபெறவில்லை.
நடந்ததெல்லாம் முல்லைத்தீவு முள்ளியவளை மணலாறு
கொக்குளாய் கொக்குத்தொடுவாய் புல்மோட்டை தென்னைமரவடி நாயாறு முறிகண்டி
கொக்காவில் பனிக்கங்குளம் கனகராயன்குளம் புளியங்குளம் கிளிநொச்சி கைதடி
வடமராட்சி யாழ்ப்பணம் மடு மன்னார் என்று அனைத்து இடங்களிலும் சிங்கள
குடியேற்றங்களை நிறுவி புத்தர் சிலைகளை நாட்டி சிங்கள பெயர்ப்பலகை
பூட்டியிருக்கின்றனர். யாழ்நகரத்தில் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம்
படையினர் குடிகொண்டிருக்கின்றனர் எழுபதினாயிரத்துக்கும் அதிகமான
படையினரின் குடும்பங்கள் வடக்கு மண்ணில் குடியிருக்கின்றன. இவைகள் கிழக்கு
மாகாணத்தை தவிர்ந்த அண்ணளவான கணக்குக்கள்.
போர் நிறுத்தப்பட்டு
நான்கு ஆண்டுகள் முடிந்துவிட்டது தமிழர்களை தமது இருப்பிடத்தில் இருக்க
வைப்பதற்கு பதிலாக ராஜபக்ஷ சிங்கள குடியேற்றங்களையும் இராணுவ
அடர்த்தியையும் அதிகரிப்பதிலேயே முனைப்பு காட்டி வருவதோடு தமிழர்
தேசியக்கூட்டமைப்பை சமாதானம் பேச்சுவார்த்தை என்ற மாயைக்குள் வீழ்த்தி கால
நீட்டிப்பை தொடர்ந்து நீடித்து ஏமாற்றி வருவது கண்கூடாக தெரிகிறது.
சம்பந்தன் கட்சியான தமிழர் தேசிய கூட்டமைப்பும் என்றைக்காவது கடல் வற்றும்
பயணத்தை தொடரலாம் என்று தெரிந்தோ தெரியாமலோ சோரம்
போய்க்கொண்டேயிருக்கின்றனர். இப்படியே தொடருமாயின் இன்னும் ஐந்து
வருடங்களில் சிங்கள நாடு ஒன்றுக்குள் இருப்பிடம் தேடும் சில தமிழர்களை
மட்டுமே காணமுடியும்.
காசி ஆனந்தன் ஐயா அவர்கள் ஒரு நிகழ்வின்போது
தெரிவித்த கருத்து. இன்னும் பத்துவருடங்கள் நாங்கள் மவுனம்காப்போமாக
இருந்தால் சிங்கள நாட்டுக்குள் தமிழன் இருப்பிடம் தேடி அலைய நேரிடும் என்று
கூறியிருந்தார். அவரது கருத்திலிருந்து நான் மாறுபடுவதற்கு வருந்துகிறேன்
ஏனெனில் நான்குவருடங்களில் சர்வதேச நெருக்கடிக்குள்ளும் ராஜபக்ஷவால்
இவ்வளவு சிங்கள குடியேற்றங்களை விஸ்தரிக்க முடிந்திருக்கிறது. இருந்த கொஞ்ச
நஞ்ச உரிமைகளையும் இல்லாதொழிக்க முடிந்திருக்கிறதென்றால் இனி வரும்
ஒவ்வொரு வருடமும் மும்மடங்கு சிங்களவனால் தனது கள்ளத்திட்டத்தை விஸ்தரிக்க
முடியும். எனவே இன்னும் ஐந்துவருடங்களுக்குள் எமது சுய நிர்ணய உரிமையை
பற்றிப்பிடிக்க தவறுவோமேயானால் வேதனைக்குரிய நிகழ்வுகளே முடிவுகளாக
அமையலாம்.
இன்றைய நிலையில் தமிழர்கள் சர்வதேசத்தின் பார்வையை
திருப்பி எமக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தவிர சாதகமான உபாயம்
வேறெதுவுமில்லை. அதற்கான பாதையும் போடப்பட்டிருக்கிறது. இருந்தும்
சர்வதேசத்தின் பார்வை தமிழர்கள் மீது பட்டுவிடாமல் தடுக்கும் சக்தியாக
இருந்துகொண்டிருப்பது இந்தியா என்ற ஒரு சக்தி தவிர வேறெதையும் குறிப்பாக
அடையாளம் காட்டவும் முடியாது. ஒரு பேச்சுக்கு சீனா ரஷ்யா பாகிஸ்தான் என
இலங்கையின் நட்புச்சக்திகளை அடையளமிட்டு காட்டினாலும் அவை அனைத்தும்
அமெரிக்காவுக்கு ஐரோப்பாவுக்கு எதிரான அணிகளாகவே இருக்கின்றன. இந்தியா
என்கிற நாசகார சக்தி ஒன்றுதான் மீனுக்கு வாலையும் பாம்புக்கு தலையையும்
காட்டும் வேடதாரியாக சர்வதேசத்தை ஏமாற்றும் தரகராக இருந்து வருகிறது.
இந்திய மக்களுக்கு தெரிந்தவரை தமக்கு எதிரான நாடுகளாக சீனா பாகிஸ்தானை
இனம்காட்டும் இந்தியா இலங்கை விடயத்தில் பாக்கிஸ்தானையும் சீனாவையும் தனது
கூடுச்சக்தியாக வைத்துக்கொண்டிருக்கிறது.
ஒன்று இந்தியவை
தமிழர்பக்கம் திருப்பவேண்டும் அல்லது இந்தியாவை எதிர்க்கக்கூடிய ஆற்றலுள்ள
அணிகளுடன் இணைந்து கொள்ளவேண்டும். இந்த இரண்டு விடயங்கள் தவிர வேறு எந்த
உபாயமும் பலனளிக்கப்பொவதில்லை. இந்தியாவை தமிழர்கள் பக்கம்
நட்புச்சக்தியாக திருப்ப முடியாது என்பது நிச்சியமான ஒன்று அப்படியானால்
இந்திய அரசை அசைக்கக்கூடிய வல்லமைகொண்ட போராட்ட அமைப்புக்களுடன் அணி
சேர்ந்து அவர்களின் போராட்டத்தை ஊக்குவித்து இந்திய அரசை மண்டியிடவைக்க
முயற்சிக்கலாம்.
அதற்கான களங்கள் நிறையவே தமிழ்நாட்டில்
திறக்கப்பட்டு இயங்கிவருகின்றன அந்த சக்திகளில் அசைவுகள் இந்திய பேராதிக்க
அரசை கட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சக்தி இருப்பதாகவே பல அமைப்புக்களால்
உணரப்பட்டும் உள்ளன. சமீபத்தில் தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்த மாணவர்களின்
போராட்ட வீச்சை சர்வதேசம்வரை உணர்ந்துகொண்டிருக்கிறது. மாணவர்
போராட்டத்தின்போது இந்திய மத்திய மானில அரசுகள் மௌனம் காப்பதுபோல்
காட்டிக்கொண்டாலும் உள்ளூர அச்சப்பட்டநிலையில் அடியெடுத்து வைத்தது
புரியப்பட்டது.
மாணவர் போராட்டம் மத்திய அரசை எந்த வகையில்
பாதிப்புக்குள்ளாக்கியது என்றால் திமுக என்ற கூட்டுச்சதிகாரனை
காங்கிரஸுலிருந்து வெளியேற்ற வழி வகுத்திருந்தது மானில ஆட்சியாளர்களான
அதிமுக அரசை மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை சட்டசபையில்
இயற்றுவதற்கு எடுகோலாக இருந்திருக்கிறது. தொடர்ச்சியாக தமிழகத்தின் ஈழ
ஆதரவு அமைப்புக்கள் முள்ளிவாய்க்கால் 4இம் ஆண்டு நினைவு எழுச்சியை பல
தளங்களிலும் நடாத்தி ஒரு ஒற்றுமையை இந்திய ஆட்சியாளர்களுக்கு
காட்டியிருக்கிறது. பின்னணியில் நின்று தமது போராட்டத்திற்கு ஆதரவு
கொடுக்கும் ஈழ ஆதரவு கட்சிகளை இன்னும் நம்பிக்கையுடன் வேகப்படுத்தி மக்களை
திரட்டி கூட்டங்கள் போட்டு பேச வைத்திருக்கிறது. ஜனநாயகக்
கோட்பாடுகளுக்கு உட்பட்ட இப்படியான புரட்சி ஒன்றுதான் இந்திய ஆதிக்க
வர்க்கத்தை கட்டுக்குள் கொண்டுவர உதவும் உபாயமாக கொள்ளமுடியும். ஈழ தேசிய
கொள்கை அடிப்படையில் எது சாதகமாக தென்படுகிறதோ அவற்றை பின்பற்றுவதிலும்
ஊக்குவிப்பதிலும் எந்தத்தவறும் இல்லையென்றே நம்பலாம். இப்படியான போராட்ட
உத்தி ஒன்றே இந்திய ஆட்சியாளர்களை நெருக்கடிக்கொள்ளாக்கும். அடுத்து
இந்தியாவில் ஆட்சி அமைக்கப்போகும் தரப்பினருக்கும் இது ஒரு நல்ல ஆரம்ப
அனுபவமாக ஒரு செய்தியை சொல்லி வைக்கும் என்பதில் ஐயமில்லை.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.
No comments:
Post a Comment