Monday, June 24, 2013

ராஜிவ் - ஜெயவர்தன ஒப்பந்த 13-வது திருத்த சட்டமூலமும், ராஜபக்‌ஷ மன்மோகன் ஜிங்கும்.


இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காதென இந்திய பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக பல பத்திரிகை ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. 
அந்தச்செய்தியை உறுதிப்படுத்தும் வகையில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களும் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் அந்த வாக்குறுதியை தமக்குநேரடியாக 18.06.2013 அன்று உளப்பூர்வமாக டில்லியில் வைத்து வழங்கியதாக உத்தியோக பூர்வமாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த வாக்குறுதி திறந்த மனதோடு உள்நோக்கமில்லாமல் உளப்பூர்வமாக மன்மோகன்சிங் சம்பந்தருக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருப்பின் இலங்கையில் 40, 50 வருடங்களாக தமிழர்கள் தொடர்ந்து அனுபவித்துவரும் துன்ப துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நியாயமான அரசியல் தீர்வொறை இலகுவாக அங்கு அறிமுகப்படுத்திய பெருமை இந்தியாவுக்கு சேரும்.  இந்தியாவுக்கு  அந்தளவு தகுதி இருப்பதாகவே இன்னும் பல நாடுகளும்,  அமைப்புக்களும் நம்பிக்கொண்டிருக்கின்றன.

மன்மோகன்சிங் அவர்களின் வாக்குறுதி உண்மை தன்மை கொண்டதாக இருந்து  ஈழத்தமிழர்கள் அனுபவித்து வரும் அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமானால்  ஈழத்தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாது சர்வதேச மட்டத்திலும் இந்தியாவுக்கு பெருத்த கௌரவம் கிடைக்கும் என்பதில் எந்த வேறுபட்ட கருத்தும் இருக்கமுடியாது.
 
ஆனால் கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு,   குறிப்பாக 1987,   2009 காலப்பகுதிகளில் மிக இக்கட்டான தருணங்களில் கொடுத்துவரும் வாக்குறுதிகளும் அலரசியற் பேச்சுவார்த்தை பயணங்களும் நம்பகத்தன்மை கொண்டதாக என்றைக்கும் இருந்ததில்லை.   அனைத்தும்  ஏமாற்று அரசியல் நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டு பல இடங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. உறுதியான அரசியல் பின்னணியில்லாத  வலுவற்ற ஈழ தமிழினத்தை சிங்களவன் எப்படி தொடர்ந்து ஏமாற்றி வருகிறானோ சற்றும் குறைவின்றி இந்தியாவும் திரை மறைவில் சிங்களவனுடன் இணைந்து பெருத்த வஞ்சகங்க வேலைகளையே தன்நலனுக்காக கூச்சமின்றி செய்துவருகிறது என்பது ஈழப்போரின் இறுதிக்காலமான 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் அப்பட்டமாக அறியப்பட்டுமிருந்தது.. 

இந்தியா போன்ற ஒரு பெரிய தேசத்தின் கயமையினால் இதுவரை எண்ணிலடங்கா ஈழத்தமிழர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதுடன் கட்டுக்கடங்கா மனித உரிமை மீறலுக்கும் காரணியாக இருந்து வருகிறது.  இந்தியாவின் இப்படியான கீழ்த்தரம் மிக்க செயற்பாடுகள் தமழினத்தின் வீழ்ச்சிக்கு பாலமாக பயன்பட்டு வருகின்றது என்பதை எண்ணும்போது இனம் புரியாத அச்சமும்,   சங்கடங்களும்,   இட்டு நிரப்ப முடியாத பகைமை உணர்வு மட்டுமே ஈழத்தமிழர்கள் மத்தியில் மேலெழுந்து நிற்கிறது. 

சமீபத்தில் வடக்கு மாகாண சபை தேர்தல் சம்பந்தமாக இலங்கையில் எழுந்த அரசியற் குளறுபடியை முறையிடுவதற்கு வேறு வழி தெரியாமல் இந்தியா சென்றிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு தலைவர் சம்பந்தனுக்கு,   இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தலையில் அடித்து இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காதென சத்தியம் செய்து வாக்குறுதி வழங்கியிருப்பதாக சம்பந்தன் அவர்கள் புளகாங்கிதமாக தெரிவித்துள்ளார். 

அதை நம்புவோர் நம்பலாம் நம்ப மறுப்பவர்கள் நம்பாமல் விடலாம் அவ்வளவே!  ஏனெனில் கடந்த கால அனுபவங்கள் அப்படித்தான் போதித்து நிற்கின்றன.   அத்துடன் 2014 ன் இந்திய பாராளுமன்றத்துக்கான தேர்தல் முன்னோட்டக்காலத்தில் குறுகிய நலன் சார்ந்து இந்திய பிரதமர் கொடுத்த வாக்குறுதியின் பதிவாகவும் அந்த செய்தியை ஆவணப்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொருமுறையும் அரசியல் பயணம் மேற்கொள்ளும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு,   இந்தியா,   கனடா,   இங்கிலாந்து,   அமெரிக்கா,   என்று சுற்றுப்பயணம் மேற்கொள்வது ஈழமக்கள் அறிந்ததே.  அரசியல் சுற்றுப்பயணத்தின் பயன் என்ன என்பதைவிடவும் சம்பந்தன் அவர்கள் வழங்கும் செய்தி முக்கியத்துவம் பெறுவதுண்டு.  அந்தவகையில் இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது என்ற  உணர்வுமயமான இந்தியப் பயணத்தின் செய்தியை சம்பந்தர் சுமந்து வந்திருக்கிறார் என்பதை எடுத்துக்கொள்ளலாம்,  அதே நேரம் இதுபோன்ற ஆயிரம் வாக்குறுதிகளை 1980 களின் தொடக்கம் முதல் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு வழங்கிவருவதும் அவை காற்றில் கரைந்து போவதும் பின் சில காலம் கழித்து அதே வாக்குறுதிகளை திரும்ப வழங்குவதும்,   அனைவரும் கண்டுகளித்த புதினம் தவிர வேறு முக்கியத்துவம் எதுவும் இருப்பதாக  இதுவரைக்கும்  புலப்படவில்லை. இருந்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உணர்ச்சி மயப்பட்டு  இந்தியாவை மலைபோல நம்பிக்கொண்டிருக்கிறது.

இருந்தும் பல பழுத்த அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் இந்தியாவின் ராஜதந்திரம் சம்பந்தமாக ஞானப்பார்வை கொண்டு பல விளக்கங்களையும் வியாக்கியானங்களையும்  விபரிக்கக்கூடும் ஆனால் சாதாரணமாக துன்பச்சூழலில் தொடர்ந்து சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழர்கள் எவராக இருப்பினும்,   இதுவரை கற்றுக்கொண்ட அனுபவ பாடத்தின் அடிப்படையிலும்,   இந்தியா தொடர்ச்சியாக எதிர்நோக்கியுள்ள வெளியுறவு சிக்கல்களையும் ஒப்புநோக்குமிடத்தில்,   உறுதியான நிலைப்பாடு ஒன்றை வரையறுத்துக்கொள்ளாத இந்திய மத்திய அரசின் தலையீடு இலங்கைக்குள் இருக்கும்வரை,  ஈழத்தமிழர்களுக்கு சிக்கல் தொடருமே தவிர,   விமோசனம் எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதே புரியக்கூடியதாக உள்ளது.  அதை நிரூபிக்கும் விதமாகவே தமிழ்நாடு அரசின் சமீபத்திய கொள்கைகளும் அதையொட்டி சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானமும்,  ஈழ ஆதரவு கட்சிகளின் கொள்கை நிலைப்பாடுகளும் உறுதிப்படுத்துகின்றன.

இந்திய மத்திய அரசின் தலையீடு இருக்கும்வரை ஈழத்தமிழினத்துக்கு விமோசனமில்லை என்று எழுந்தமானத்தில் எழுதிவிட்டதாக சிலர் கோபப்படவும்கூடும்.   ஆனால் யதார்த்தம் அப்படித்தான் இருந்துவருகிறது.  மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைத்தாலும், மாறாக பாரதிய ஜனதா ஆட்சியை வைத்துக்கொண்டாலும்,   தமிழக கட்சிகளான திமுக கூட்டுச்சேர்ந்திருந்தாலும்,, மாறாக அண்ணா திமுக அங்கம் வகித்தாலும்  இந்திய வெளியுறவு கொள்கையில்,   வெளியுறவு கொள்கைவகுப்பாளர்களில்,   கொள்கை ரீதியாக தலைகீழான  மாற்றம் ஒன்று நிகழாதவரை,   இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன,  தமிழர்களுக்கான அரசியலில் எந்த முன்னேற்றத்தையும் கண்டுவிட முடியாது என்பதே நிதர்சனமாக இருக்கும்.

இந்தியா தனது வல்லமை பொறுத்து பூகோள அரசியல் நலனுக்காக அனைத்து தமிழினத்தையும் பலியிடவும் தயாராக இருக்கும் என்பதுதான் கடந்தகால யதார்த்தமான அடிச்சுவடாக இருந்துவருகிறது.   இந்த இடத்தில் ஈழப்படுகொலைகளையும் தாண்டி தமிழக மீனவர்களின்,   560 படுகொலைகளையும் உள்நாட்டு தேசிய வழங்கள் பங்கீடுகள் பற்றியும் இணைத்துப்பார்த்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் அனைவருக்கும் இருக்கிறது.  அவற்றை தாண்டி மத்திய அரசுக்கு ஆதரவு வழங்கிவந்த திமுக கட்சிகூட காங்கிரஸிலிருந்து வெளியேறியதற்கு சொல்லப்படும் காரணம் ஈழ மக்களின்பால் மத்திய அரசு கொண்டுள்ள அலட்சியப்போக்கு என்றே காரணம் சொல்லப்படுகிறது.

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு  தலையில் அடித்து சத்தியம் செய்து மன்மோகன்சிங் வாக்குறுதி அளித்த அதே நேரம் அதே வாக்குறுதியை காங்கிரஸுடன் கூட்டுமுன்னணியிலிருந்து விடுப்பு பெற்றுக்கொண்ட  திமுக தலைவர் கருணாநிதிக்கும் பிரதமர் மன்மோகன்சிங் கடிதமூலம் வாக்குறுதியை வழங்கியதாகவும்  பத்திரிகைகளில் முதல்ப்பக்க செய்தியாக வந்திருந்தது. ஆனால் தமிழகத்தை பெரும்பான்மை பலத்துடன் ஆண்டுகொண்டிருக்கும் அதிமுக அரசின் கோரிக்கைகளான இலங்கை அரசுக்கான பொருளாதாரத்தடை,  தமிழ் தேசியத்துக்கான பொதுவாக்கெடுப்பு,   ராஜபக்‌ஷவை போர்க்குற்றவாளியாக அறிவிப்பது,  தமிழக மீனவர்களின் பாதுகாப்பு போன்ற முக்கிய கேள்விகள் எவற்றிற்கும் சரியான மறுமொழியை மத்திய அரசாங்கம் இதுவரை வழங்கியிருக்கவில்லை.  இதிலிருந்து மத்திய காங்கிரஸ் அரசு இரட்டை வேடமிட்டு என்னவோ ஒன்றிற்காக ஏமாற்றி தப்பிக்க நினைக்கிறது,  அல்லது பொய் வாக்குறுதிகளை வழங்கி மதில்மேல் பூனையாக நின்று ஏமாற்றி அரசியல் செய்கிறது என்ற முடிவு தவிர வேறு எதற்கும் எவரும் வரமுடியாது.

வழமையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு இந்தியாவுக்கு போவதும் மன்மோகன்சிங்கை சந்திப்பது,  மற்றும் வெளிவிவகார மந்திரி,  தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் போன்றோரை சந்திப்பது,,   தீர்வுத்திட்டத்தின் ஒருபகுதியை இந்தியாவிடமிருந்து பெற்றுவிட்டது போல் அறிவிப்பதும் வழமையாக நடந்துவரும்  எரிச்சலூட்டி அலுப்புத்தட்டும் செயலாகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறது.  இந்தியாவின் இரட்டை வேடத்தை வளர்த்து வந்த அரசியல் சக்திகள் என்றால் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு,   அடுத்தது கருணாநிதியின் திமுக.  இந்த இரண்டுகட்சிகளும் மத்திய அரசின் முரண்பட்ட கொள்கை எடுப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒத்துப்போகாமல் இருந்திருந்தாலே இந்திய மத்திய அரசால் ஒருகட்டத்துக்கு மேல் ஈழப்பிரச்சினையில் சந்தற்பவாத அரசியல் செய்ய முடிந்திருக்காது.

சர்வதேசம் ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்தி அவைகளை நடைமுறைக்கு கொண்டுவரும் நகர்வுகளை மேற்க்கொண்டாலும் இந்தியா சில கூட்டாளிகளை சேர்த்துக்கொண்டு கால்வாரி ஶ்ரீலங்காவை காப்பாற்றும் செயற்பாடுகளையே தொடற்சியாக செய்துவருவதை பல தருணங்களில் பார்த்தாகிவிட்டது. அந்த இடங்களிலும் மத்திய அரசுக்கு முண்டுகொடுத்த பெருமை த தே கூட்டமைப்புக்கும்,   திமுக  போன்ற கட்சிகளுக்கே உண்டு.

இப்போ பலராலும் அரசியலில் பூதாகரப்படுத்தப்படும் விடயம் இலங்கை இந்திய ராஜீவ் ஜெயவர்த்தன காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமும்,   ஒப்பந்தத்தில் உள்ளடக்கிய 13-வது திருத்த சட்டமூலம் பற்றியதுமாக காணப்படுகிறது.  இந்த 13-வது திருத்தசட்டமூலம் இந்தியா தனது நலன்கருதி இலங்கைக்குள் தலையீடு செய்வதற்காக இயற்றிய ஒரு தன்நலன் காக்கும் பிரயோசனம் அற்ற திட்டமாகும்.   அதுபற்றி இந்தியாவை விடவும் ஶ்ரீலங்கா ஆட்சியாளர்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர்.  அது நடைமுறைக்குவருவது,  வராமலிருப்பது என்பதை தாண்டி அந்த சட்டமூலத்தை இரத்துச்செய்யக்கூடாது என்பதே இந்தியாவின் நோக்கமாக இருந்துவருகிறது.  இந்தியா தொடர்ந்து இலங்கைக்குள் இருந்து அரசியல் செய்யவேண்டுமானால் ஏதாவது ஒரு பிடிமானம் இருக்கவேண்டும்.   அந்த இருப்புக்காக செயற்படுத்தப்படாமல் கிடப்பிலிருக்கும்  ஒப்பந்தத்தையும்,  ஒப்பந்தத்துடன் கூடிப்பிறந்த 13- திருத்த சட்டம் என்ற உழுத்துப்போன கொம்பை புதுடில்லி தொடர்ந்து பிடித்துக்கொண்டிருக்கிறது.

இந்த 13-வது திருத்த சட்டமூலம் என்ன சொல்லுகிறது என்று மேலும் கீழுமாக தேடிப்பார்த்தால் அந்த திட்டத்தால் தமிழர்களுக்கு ஒன்றும் இல்லை பூய்ச்சியம் அல்லது மாயை என்பதே புரியக்கிடைக்கிறது.

1) மாகாண சபைக்கான  நிறைவேற்று அதிகாரங்கள் அனைத்தும் , ஜனாதிபதியின் விசுவாசமான சேவகன் என்ற வகையில் மாகாணத்துக்கான கவர்னரின் தனிப்பட்ட முடிவாக மட்டுமே இருக்கும்.  

2) மாகாணங்களுக்கான கவர்னரை மத்திய அரசின் பிதாமகனான ஜனாதிபதியே நியமிப்பார்.

3) மாகாண சபை மந்திரிகளின் தீர்மானத்துக்கு கவர்னர் கட்டுப்பட்டவரா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

4) 13-ஆம் திருத்த சட்டம் மிக விசித்திரமான வார்த்தைகளுடன் விளக்கம் தருகின்றது.

5) கவர்னர் தனது கடமைகளை ஜனாதிபதியின் கட்டளைக்கமைய நிறைவேற்றும் பொழுது அவரது ஆலோசனைகளுக்கு அமைய மாகாண சபை உறுப்பினர்கள் நடந்து கொள்ளலாம்,  இதில் விதி விலக்கு  என்ன வென்றால் , சிறீலங்கா அரசியல் அமைப்புக்கு முரணாகாத வகையில் மட்டுமே அதனைச் செய்யலாம்.

6)  வலது கையால் கொடுத்து இடது கையால் வாங்கி கொள்ளும் இந்த வழக்கமான விடயம் 13-ஆம் திருத்த சட்ட முழுவதும் புரையோடிக் கொண்டிருக்கின்றது.

7)  ஒரு புறம் மாகாண மந்திரிகளின் ஆலோசனைக்கு அமைய செயல்பட வழி இருப்பது போல் தோன்றினாலும் மறு புறம் எல்லாமே சிறீலங்கா அரசியல் அமைப்பு சட்டம் தான் எல்லாவற்றையும்  கட்டுப்படுத்துகின்றது.

அப்படியாயின் அரசியல் அமைப்பு எதனைக் கட்டுப்படுத்துகின்றது என்பதனை நாம் அறியவேண்டும் .

8) சிறீலங்கா அரசின் அரசியல் அமைப்பு என்ன சொல்கின்றது என்றால்  ஜனாதிபதியின் கொள்கைக்கு முரண்படாத வகையில் செயல்பட்டால் மட்டுமே கவர்னர் பதவியில் இருப்பார் .

9)  அரசியல் அமைப்பின்படி மாகாணசபை மந்திரிகளுக்கு அதிகாரம் வழங்க முடியாது.  ஏனெனில் அவர்கள் ஜனாதிபதியால் நியமிக்கபடாதவர்கள் . மாகாண மந்திரிகள் எந்தவித நிறைவேற்று அதிகாரமும் அற்றவர்கள் . 

10) நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் மட்டுமே உண்டு . அவருக்கு விசுவாசமான சேவைகளுக்கு மட்டுமே நிறைவேற்று அதிகாரம் உண்டு .

11)  முடிவு என்னவென்றால் , மாகாணசபை நிறைவேற்று அதிகாரங்கள் என்பன , ஜனாதிபதியின் விசுவாசமான சேவகன் என்ற வகையில் கவர்னரின் தனிப்பட்ட முடிவாக இருக்கும் .

12)  எனவே இந்த முக்கியமான விடயத்தில் , மாகாண மந்திரிகள் கவர்னருக்கு ஆலோசனை வழங்கலாம் ,  ஆனால் கவர்னர் அவற்றை செய்யவேண்டும் என்பதில்லை .

13) மாகாண சபைகளை  நினைத்த நேரத்தில் கலைத்து விடும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உண்டு .
 
இப்படியாக பதின்மூன்றாம் திருத்த சட்டம் அற்புதமாக  மாகாணசபை மக்களுக்கு அதிகாரத்தை வழங்குகின்றது .

இங்கு மிதப்பாக இந்தியத்தரப்பினரால் மிகைப்படுத்தி காட்டி விளம்பரப்படுத்தபடும் ஒரு விடயம் என்னவென்றால் காணி பங்கீடு, கல்வி, மாகாணத்துக்கான காவல்த்துறை அதிகாரம் என்பன பெரும் சொத்தாக பூதாகரப்படுத்தி காட்டப்படுகின்றன,  ஆனால் அவைகள் எதுவும் மாகாணசபைகளுக்கு கொடுக்க முடியாது என்று ஶ்ரீலங்காவின் அரசியற்கட்சிகள் தொடர்ந்து கொடிபிடித்து வருகின்றன. 1987ல் அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தின் பிரகாரம் இன்றுவரை எந்த ஒரு அதிகாரமும் அந்தச்சட்டத்தின் வாயிலால் வெளியே தலையைக்கூட காட்டியிருக்கவில்லை.

1987 ராஜீவ் ஜெயவர்தன ஒப்பந்தம் சொல்லுவது என்னவென்றால்.

1. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காக்க விரும்பி,

2. இலங்கை சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகியோரைக் கொண்ட பல்லின, பன்மொழி சமூகங்கள் வாழும் நாடு என்பதை உணர்ந்து,

3. மிகக் கவனமாகப் பேணிக் காப்பாற்ற வேண்டிய தனித்தனிக் கலாசாரம்,மொழி அடையாளங்களை ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளதென்பதையும்,

4. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லாக் காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வசிப்பிடங்கள் என்பதையும் அங்கீகரித்து,

5. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சகல பிரஜைகளும் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் சுபீட்சத்துடன் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றி வாழும் பல இன, பல மொழி பேசும் பல மதங்களைக் கடைப்பிடிக்கும் தன்மையைப் பேணி,

பின்வரும் உடன்பாட்டிற்குவருகிறோம்:

1. இலங்கை அரசாங்கம் அருகருகேயுள்ள மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாகச் சேர்த்துக் கொள்ளக்கருதும் கீழ் விவரிக்கப்பட்டவாறு வடக்கு, கிழக்கு என்று அவற்றைப் பிரிக்கும் பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது என்றும்,

2. மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் திகதியில் இருந்து 3இல் தெரிவிக்கப்பட்டவாறு சர்வஜன வாக்குரிமை நடத்துவது திகதி வரையான காலப்பகுதி இடைக்காலப்பகுதியென்று கருதப்படும். வாசகத்திற்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தற்போதுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாண சபையை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகாக இருக்கும். இத்தகைய அலகில் ஓர் ஆளுநர், ஒரு முத்லமைச்சர், ஓர் அமைச்சரவை ஆகியன செயற்படும்.

என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு ஒருமித்த மாகாணமாக இருக்கவேண்டும்,   ஒரு கட்டத்தில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி வடக்கு கிழக்கு இணைந்திருக்கவேண்டுமா பிரிந்து போகவேண்டுமா என்பதை வடக்கு கிழக்கு மாகாண மக்கள் தீர்மானிக்க வேண்டும்.   ஆனால் அதற்கு சட்டவிரோதமாக சிங்கள அரசு நீதிமன்றம் ஒன்றின்மூலம் சாவு மணி அடிக்கப்பட்டுவிட்டது.

இப்போ இருப்பது இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற சொற்பதம் ஒன்று மட்டுமே. அந்த சொற்பதத்தை வைத்து இன்னும் நூறு இருநூறு வருடங்களுக்கு இந்தியா இலங்கை அரசியல் செய்யும் என்பதாகவே போக்குக்கள் தென்படுகின்றன.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் 13- வது திருத்த சட்டம் எதை வரையறுக்கிறது என்பதை மேலே பார்த்தோம்.  இப்போ வடக்கு கிழக்கு தனித்தனியாக பிரிக்கப்பட்டுவிட்டன,   நுகர்வு அதிகாரங்களான  காணி, கல்வி, காவல்த்துறை அவைகளும் சிங்கள காடை அரசியல்வாதுகளாலும் இந்திய ஒற்றர்களாலும் களையப்படுவிட்டன,  வன்னி,   மன்னார்,  கிளிநொச்சி,   தமிழர் வாழும் அனைத்துப் பகுதிகளிலும் சிங்கள குடியிருப்புக்கள் நிரப்பப்பட்டுவிட்டது.  யாழ் குடாநாட்டு குடியிருப்புக்கள் கணிசமான அளவு நிலங்கள் இராணுவ முகாமுக்கு தேவையென மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டுவிட்டன எஞ்சியிருப்பது இந்திய தலையீட்டுக்கான இலங்கை இந்திய ஒப்பந்தம் என்கின்ற சொற்பதமும் 13வது திருத்த சட்டம் என்கின்ற கோசமும் மட்டுமே.   உள்ளுடன் அனைத்தும் பாவனைக்கு உதவாத விதத்தில் கெட்டுப்போய் கிடக்கிறது அல்லது மாற்றப்பட்டுவிட்டது.

தமிழர்களின் தீர்வுக்கான பரிமாணம் நாளுக்கு நாள் மாற்றப்பட்டு பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற திக்குத்தெரியாத காட்டுக்கு பெயர்ப்பலகை அமைத்து அம்புக்குறி வைக்கப்பட்டிருக்கிறது.  நாளை அதுவும் வேறு ஒரு திசை நோக்கி நகர்த்தப்படலாம். ஆனால் இன்றைய நிலையில் தமிழர் தேசியக்கூட்டமைப்பை பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் இழுத்து இன்னும் காலநீடிப்பை உண்டுபண்ணும் முன்னோட்டமே 13- வது சட்டமூலம் பற்றிய கலவரம்.

இல்லாத ஒன்றிற்க்காக பலதரப்புக்கள் இங்கு யுத்தம் செய்கின்றன.  இல்லாத 13-வது திருத்தத்தை இல்லாது ஒழிக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய, விமல் வீரவங்சவின் தேசிய சுதந்திர முன்னணி,  ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு பிரிவு கோத்தபாய ஆகியோர் தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றனர்.  இல்லாத திட்டத்தை தொடரவேண்டும் என்று த தே கூட்டமைப்பும்  பாரத பிரதமரும்   அவரது கொள்கைவகுப்பாளர்களும்  மார்தட்டுகின்றனர்,  வடக்கு மாகாணத்தேர்தல் திருவிழாவுடன் அனைத்துன் மீண்டும் புஷ்வாணமாகி காற்றிடையே கலந்துவிடும்.

தமிழர் தரப்பு அரசியல் விற்பன்னர்கள் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து காய் நகர்த்துவதாக கூறுகின்றனர்.  மன்மோகன்சிங் தமிழர்களுக்கு அநீதி நிகழ்ந்தால் இந்தியா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று அறைகூவல் விடுத்திருக்கிறார்.  ராஜபக்‌ஷ தரப்பு பாராளுமன்ற தெரிவுக்குழு தீர்க்கமான முடிவை தோற்றுவிக்கும் என்கின்றார்  ஒன்றும் புரியவில்லை.

இருந்தும் 

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின்மேல் ஏறி அதில் தொங்கும் உடலை கீழே வீழ்த்தினான் பின் கீழே இறங்கிய  அவன் அதை மீண்டும் சுமந்துகொண்டு மயானத்தை நோக்கி செல்லுகையில்  அதனுள்ளிருந்த வேதாளம்  எள்ளி நகைத்து   மன்னனே உன்னுடைய முயற்றி பாராட்டுக்குரியது தனது இலட்சியத்தை நிறைவேற்றுவதற்காக  உயிரையும் பொருட்படுத்தாத உன்னைப்போல் சிலரே இருப்பர் ஆனால் உன்னுடைய இலட்சியம் நிறைவேறுமா என்று எனக்கு தெரியவில்லை  இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பும் இருந்தும் நீ அதை தவற விட்டு விட்டாய் என சந்தேகம் ஏற்ப்படுகிறது என்று கூறியது.  அந்த வேதாளக்கதைதான் இன்றைய ஈழ அரசியலுக்கு மிக பொருத்தமானதாக காணப்படுகிறது.


ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

No comments: