தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சம்பந்தர் தலைமையிலான தூதுக்குழு டில்லிக்கு
சென்று 13,வது திருத்த சட்டமூலம் பற்றிய தமது நம்பிக்கையான
பேச்சுவார்த்தையை பாரத பிரதமர் மன்மோகனுடன் முடித்துக்கொண்டு சுதந்திரமாக
திரும்பிய கையுடன்,
04 -07 -2013 அன்று இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் பஷில் ராஜபக்ஷ,
டில்லிக்கு சென்று இந்திய மத்திய அரச அதே தரப்பினருடன், அதே 13-வது
திருத்தம் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பினார்.
இந்திய
வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஜித், மற்றும் இந்திய அரசின் உயர்மட்ட
அதிகாரிகள் 13 ,வது திருத்தச்சட்டமூலத்தை வடக்கு மாகாண சபை தேர்தலுடன்
நடைமுறைக்கு கொண்டுவரவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும். அவைகளை கவனமாக
கேட்டுக்கொண்ட பஷில், இலங்கைக்குள் 13,வது திருத்த சட்டமூலம்
நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சங்கடங்களை இந்திய அரசுக்கு
தெரியப்படுத்தியதாகவும், அதுபற்றி இந்தியா நன்கு புரிந்துகொள்ளும்
என்றும், இந்திய அரசின் நிலைப்பாட்டையும் நன்கு புரிந்து கொண்டு பஷில்
நாடு திரும்பியதாகவும் இலங்கை தரப்பில் சொல்லப்பட்டது.
இரண்டு
நாட்கள் கழிந்த நிலையில், பஷில் ராஜபக்ஷ, மற்றும் இந்திய வெளியுறவு
அமைச்சர் சல்மான் குர்ஜித், ஆகியோர் நடத்திய பேச்சு சம்பந்தமாக முற்று
முழுதாக முன்னுக்குப்பின் முரணான செய்திகள் வந்துகொண்டிருந்தன.
மதுபோதையில்
பேச்சுவார்த்தை நடத்தினரோ, அல்லது மொழி தெரியாத காரணமாக புரிந்து
கொள்லாமல் போய்விட்டதோ, என்ற சந்தேகங்கள் மக்கள் முன் பரவியிருந்தாலும்
அது வழமையான இந்திய இலங்கை அரசியலின் நடைமுறைதானென்று எவரும்
பெரிதுபடுத்திக்கொள்ளவில்லை. இருந்தும் பல சர்வதேச நாடுகள் உற்று நோக்கி
கவனித்துக்கொண்டிருக்கும் இரண்டு நாடுகளுக்கான ராஜதந்திர சந்திப்பு
பேச்சுவார்த்தை நடந்து முடிந்து இரண்டு நாள் கழிந்த நிலையில் இரு தரப்பும்
ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருப்பது. மிக கீழான
குழந்தைத்தனமானது என்றே கணிக்க தோன்றுகிறது.
கருப்பொருள்
தமிழர்களின் வாழ்க்கை பிரச்சினை என்பதால் கொழும்பு சிங்களவனும், டில்லி
ஹிந்திக்காரனும் வேறு மனநிலையிலிருந்து அளவழாவி இருந்திருக்கலாம்.
காங்கிரஸுக்கு வக்காளத்து வாங்கி குரல் கொடுக்கும் சுதர்சன நாச்சியப்பன்,
மந்திரியாகி இப்போ டில்லியில் இருப்பவர் இவர்கள் இடையில் மொழி பெயர்ப்பை
செய்திருக்கலாம் அல்லது இருவர்களுடைய பேச்சையாவது பதிவு செய்திருக்கலாம்.
எதுவும் நடக்கவில்லை.
இரண்டு நாடுகளுக்கிடையிலான ஒரு ராஜதந்திர
சந்திப்பில் எவ்வளவு ஒரு உதாசீனம், அந்த பிணக்கை தீர்ப்பதற்கு இன்னும் ஒரு
மட்ட பேச்சுவார்த்தை தேவைப்படலாம்.
இலங்கையில் நடத்தி
முடிக்கப்பட்ட படுகொலைகளை தவிர்த்தாலும், மீதமிருக்கும் மக்களுக்கான
நீண்டகால இனப்பிரச்சினையில் நியாயமான தீர்வுகாணவேண்டுமென்ற உண்மையான
அக்கறையுடன் இந்தியாவுக்கு இருந்திருந்தால், குறைந்த பட்ச மனிதாபிமானம்
இந்தியத்தரப்புக்கு இருந்திருந்தால், இந்தியாவை மலையென நம்பி பின்தொடரும்
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாட்டையும் இலங்கை தமிழர்களின் மீது
தமக்கு அளவுகடந்த அக்கறை இருப்பதாக தொடர்ந்து கூறிவரும் தமது தரப்பு
நிலைப்பாட்டையும் பரஸ்பரம் ஶ்ரீலங்கா தரப்பினருக்கும் தமிழர்
தரப்புக்கும் எடுத்துச்சொல்லி நடுநிலையான ஒரு தீர்மானத்துக்கு
வந்திருக்கவேண்டும். அல்லது தமது கையாலாகாத நிலையை ஒப்புக்கொண்டு
விடயத்திலிருந்து கௌரவமாக வெளியேறியிருக்கவேண்டும்.
எதுவுமில்லாமல்
இரு தரப்பிலிருந்தும் கூட்டாக என்ன பேசினோம் எதைப்பற்றி பேசினோம்,
எப்படிப்பட்ட முடிவுக்கு வந்தோம் என்ற எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சல்மான்
குர்ஜித், ஒரு கருத்தையும், பஷில் இன்னுமொரு விதமான கருத்தையும்
தெரிவித்து தாமும் முட்டாளாகி வெளியில் இருப்பவர்களையும் படு
முட்டாளாக்கிக்கொண்டிருக்கின்றனர்.
இதைத்தான் இந்திய இலங்கை இராசதந்திரம் என்று கொள்வதா?
இலங்கை
திரும்பிய பஷில் 13 ,வது சட்டமூலத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றும்
அச் சட்ட மூலத்தை உள்நாட்டு அரசியல் கள நிலமையை கருத்தில் கொண்டு
நிச்சியமாக இல்லாது ஒழித்து திருத்தம் செய்யப்போவதாகவும், 13 வது
திருத்தத்தில் கூறப்பட்ட காணி, மற்றும் பொலிஸ் அதிகாரங்களை எக்காரணம்
கொண்டும் மாகாண சபைக்கு வழங்க முடியாது என்று திட்டவட்டமாக அறிக்கை மூலம்
தெரிவித்திருந்தார். மேலும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் கணவன் மனைவிக்கு
இடையிலான அன்னியோன்ய உறவு(?) இருப்பதாகவும் அவைகளை பகிரங்கமாக
வெளிப்படுத்த முடியாது என்றும், இரு தரப்பு உள்ளடி ராஜதந்திர விடயங்களின்
உண்மை நிலவரத்தின் தன்மையை பீடிகையாக தெரிவித்திருந்தார்.
அடுத்து
07, 07, 2013 அன்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்
இலங்கை சென்று ஜனாதிபதி உட்பட பல மட்ட அரசியல் கட்சிகள், அரசியற் தலைவர்களை
சந்தித்து பேசியதாகவும். இன்னும் சந்திக்க இருப்பதாகவும்
தெரிவிக்கப்பட்டது. மறுபுறம் ஶ்ரீலங்கா அரச தரப்பிலிருந்து 13,வது
திருத்தம் செயற்படுத்த முடியாத சங்கடங்கள் இருப்பதாகவும், 13, வது
திருத்தம் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இம் மாதம் 19ம் திகதி
விவாதிக்கப்பட இருப்பதாகவும் முடிவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு இரத
கட்சிகளுக்கு மதிப்பளித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இணைந்து
கொள்ளவேண்டும் என்று கேட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரியப்படுத்துகின்றன.
இருந்தும்
நீதி வழுவாத இந்திய காங்கிரஸ் அரசின் ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் 13 ,வது
திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என ராஜபக்ஷவுக்கு
வலியுறுத்தியதாகவும்(!) சொல்லப்படுகிறது.
இடம்பெற்ற பரஸ்பர இலங்கை
இந்திய பயணங்கள், சந்திப்புக்கள் பேச்சுவார்த்தைகள் ஒரு விடயத்தை
தெளிவுபடுத்துகின்றன. ஒன்று, இலங்கை தரப்பாக ராஜபக்ஷ தரப்பினரும், ஈழ
தமிழர்கள் தரப்பாக டில்லி காங்கிரஸ் கட்சியும், ஒரு உடன்பாட்டுக்கு வர
இருப்பதாகவே புல்லரிப்புடன் புரியப்படுகிறது. நடக்கவிருக்கும் வடக்கு
மாகாண சபை தேர்தல் அவர்களுடைய இலாபம் கருதி ஏதோ காரணங்களுக்காக
குறிப்பிட்டபடி இந்த வருடம் நடத்தப்படவேண்டும் என்பதில் இரு தரப்பிடமும்
மாற்றுக்கருத்து இருப்பதாக தெரியவில்லை.
மாகாணசபை தேர்தல்
நடத்தப்படாமல் பின்போடப்பட்டால் அடுத்த வருடம் ஐநா அரங்கில்
சந்தேகத்துக்கிடமான கேள்விகழுக்கு இரு நாடுகளும் ஆளாகவேண்டி வரலாம், அதை
விடவும் இந்தியாவுக்கு வரவிருக்கும் தேர்தலுக்கான பரப்புரைக்கும் இந்திய
உள்நாட்டு அமைதி நிலைக்கும் வடக்கு மாகாணத்துக்கான தேர்தலை நடத்தவேண்டிய
பெரிய தேவை சோனியா அரசுக்கு இருக்கிறது. அவற்றை நிவர்த்தி செய்யும்
நோக்கில் பெருத்த அரசியல் தந்தரம் ஒன்று இருதரப்பாரும் இணைந்து மிகுந்த
கரிசினைகாட்டுவதுபோல் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு ஒரு சதி
அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
குறிப்பிட்டபடி தேர்தல்
நடத்தப்பட்டாலும் அங்கு வாழும் மக்களுக்கு அதிகாரங்கள் எதுவும் மாகாண சபை
ஊடாக வழங்கிவிடக்கூடாது என்பதில் ராஜபக்ஷ குறியாக இருக்கிறார் என்பது பல
மாதங்களாக இலங்கைக்குள் நடந்துவரும் சம்பவங்கள் தெரியப்படுத்துகின்றன.
இந்த இடத்தில் இந்தியாவின் சந்தற்பவாத அரசியலுக்காக ஒப்புதல் வாக்குறுதியை
கொடுக்க ராஜபக்ஷ தயாராக இருந்தாலும் ராஜபக்சவின் கூட்டாளிகள் தயாராக
இல்லை என்பதுபோல ராஜபக்ஷவால் காட்டப்படுகிறது.
ஆனால் இந்தியாவை
பொறுத்தவரை 13, வது திருத்த சட்டமூலத்தால் ஈழத்தமிழ் மக்களுக்கு நன்மை
கிடைக்கிறதோ இல்லையோ, சட்டமூலம் அமுல் படுத்தப்படுகிறதோ இல்லையோ அதுபற்றி
கவலையில்லை ஆனால் பேப்பர் வடிவத்தில் 13, வது திருத்த சட்டமூலம் தொடர்ந்து
இருந்தாகவேண்டும்.
சர்வதேச மட்டத்தில் உள்ள இன்னும் ஒரு தரப்பு
இன்னொருமுறை ஈழப்பிரச்சினையில் தலையிட்டு உள் நுழைவதை தடுக்கும் முகமாக
இந்திய இலங்கை இராஜதந்திரிகளின் பயணங்கள் சந்திப்புக்கள் பேரம் பேசல்கள்
13, வது திருத்தத்தை பூதாகரப்படுத்தி போட்டி போட்டு அரசியல்
நடத்தப்படுகின்றன என்பது எவரும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
ஶ்ரீலங்கா
அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய ஆட்சியாளர்களின் என்னதான் உற்ற நண்பனாக
இருந்தாலும் 13 வது திருத்த சட்டமூலத்தை இல்லாமல் ரத்துச்செய்ய
முயல்வது, இந்திய ஆட்சியாளர்களை பொறுத்த வரையில் இந்தியாவின் இயலாமையை
வெட்ட வெளியில் போட்டு பகிரங்கமாக உடைத்த நிலையை ஏற்படுத்தி பெருத்த
அவமானத்தை உண்டுபண்ணும். அத்துடன் இந்திய அரசியலரங்கில் பெருத்த
வீழ்ச்சியை காங்கிரஸ் கட்சிக்கு இட்டுச்செல்வதுடன் தமிழ் நாட்டில்
காங்கிரஸுன் கதை முற்று முழுதாக முடிவுக்கு வந்துவிடும். இப்போதே பெருத்த
நெருக்கடியை சந்தித்துவரும் காங்கிரஸ் 13, வது திருத்த சட்ட மூலத்து
விமர்சனங்களுடன் வெளியுலக மட்டத்தில் வாய் திறக்க முடியாத பிராணியின்
நிலையை சந்திக்கவேண்டிய சங்கடங்களும் தவிர்க்கமுடியாமல் போகும். இந்த
வீழ்ச்சியை தவிர்க்கும்பொருட்டு ஏதாவது தலைச்சுற்றலுடன் வடக்கு மாகாண
தேர்தல் உடன்பாட்டுக்கு வரக்கூடும்.
இலங்கை ஆட்சியாளர்களை பொறுத்த
வரையில் இலங்கை இந்திய ஒப்பந்தம் மற்றும், 13 ,திருத்த சட்டமூலம்
எழுத்துருவில் தொடர்ந்து இருப்பதாக காணப்பட்டாலும், அது ஒரு
செல்லாக்காசாகவே உதாசீனமாக மதிக்கப்பட்டு வருகிறது. இந்தியா நரித்தனமாக
இலங்கை விடயத்தில் தலையிட்டு நந்திபோல் நிற்பதால், ஐநா உட்பட உலக
நாடுகளால்க்கூட ஶ்ரீலங்கா அரசை ஒன்றும் செய்துவிட முடியவில்லை. ( இது
சிங்களத்தரப்பின் ராஜதந்திரம் என்பது தவிர வேறு எதுவும்
சொல்லுவதற்கில்லை)
இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டுமல்லாது,
அமெரிக்க ஜெனீவா தீர்மானம், மற்றும் ஜனாதிபதியின் கற்றுக்கொண்ட பாடங்கள்
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தீர்மானம், ஆகிய அனைத்தும், ஒரு
ஏமாற்று உத்திக்காக தமிழர் இல்லாத சபைகளில் அரசியல் பேச்சுக்காக
பயன்படுத்தப்படுகிறதே தவிர உளப்பூர்வமாக எந்த ஒரு தாக்கத்தையும் தமிழ்
மக்களுக்காக அந்த மண்ணில் சிறு மாற்றத்தையேனும் ஏற்படுத்தியதுமில்லை,
ஈட்டித்தரப்போவதில்லை. இதை உணர்ந்து தமிழர்தரப்பு வியூகம் வகுக்காதவரை
13,வது திருத்தம் இன்னும் ஒரு கால் நூற்றாண்டை முழுங்கி தானாக
காலாவதியாகும்.
நிலமை அப்படியிருந்தபோதும் எக்காரணம் கொண்டும்
ஆவண ரீதியாக தமிழினத்துக்கு ஆதார சுருதியை சேர்க்கும் எந்த ஒரு ஓலைச்
சுவடும் ஶ்ரீலங்காவில் இருக்கக்கூடாது என்பதிலேயே ஜனாதிபதி ராஜபக்ஷ
மட்டுமல்ல அனைத்து சிங்களவர்களும் மிகக்கவனமாக இருக்கின்றனர்.
இந்த
உண்மையை 2009 க்குப்பின் தமிழர்களுக்காக அரசியல் செய்து வருவதாக
குறிப்பிடும் பல்வேறுபட்ட அரசியல் தலைமைகள் அவற்றை இன்னும் சரியாக
உணரவில்லை, அல்லது அவர்களால் அதை துணிவுடன் எதிர்கொள்ள முடியவில்லை என்றே
கடந்த கால நகர்வுகளும் அரசியற் தலைவர்களின் பேச்சுக்களும், பயண
சம்பவங்களும் உணர்த்துகின்றன.
சமீபத்தில் பொறுமையிழந்த செல்வம்
அடைக்கலநாதன் எம்பி, மற்றும் தமிழ் தரப்பு அரசியல் வட்டாரத்தில் சிலரிடம்
சில மாற்றங்களை உணர முடிகிறது.
உரிமைக்காக போராடவேண்டியவர்கள்
நாங்களே தவிர சிங்களவர்களோ, இந்திய காங்கிரஸ் அரசு அல்ல என்பதில் தெளிவாக
இருக்காதவரை இது தொடர்கதையாகவே தொடரும்.
இந்திய மத்திய
காங்கிரஸின் ஆட்சிக்காலம் முடிய இன்னும் அண்ணளவாக 10 மாதங்கள் இருக்கின்றன.
2014 மே இந்திய பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தியாவில்
அடுத்த ஆட்சியை காங்கிரஸ் அமைக்கிறதோ இல்லையோ அடுத்த தேர்தலுக்கான
பரப்புரைக்காகவும் அரசியல் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கவும் காங்கிரஸ் அரசு
தன்னாலான வஞ்சகங்களை இன்னும் அதிகப்படுத்தி தேர்தலை நோக்கி நகர முற்படும்
என்பது சொல்லி புரியவேண்டிய ஒன்றல்ல. அடுத்து வரும் 2014,ல் அதிர்ஷ்ட
வசமாக இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்றால் ராஜபக்ஷவுக்கு
வேலையில்லாமல் இந்தியாவே முன்னின்று தனது அரசியலுக்கு இடஞ்சலான 13 ,வது
திருத்தச்சட்டமூலத்துக்கு அந்தியட்டி செய்து முடிவுரை எழுதும் என்பதை
கண்குளிர காணலாம்.
இறைமையுள்ள நாடு என்ற வகையில் 13,வது திருத்த
சட்டமூலத்தை இல்லாமல் செய்வதற்கான அனைத்து அதிகாரங்களும் தம்மிடம்
இருப்பதாக ஶ்ரீலங்கா தரப்பில் ஜனாதிபதி முதற்கொண்டு அனைத்து தரப்பினரும்
தினமும் அறிக்கைமூலமும், நேர்காணல்களிலும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால் இந்தியத்தரப்பில் 26 வருடங்களாக செயற்படாமல் கிடந்தாலும் 13,வது
சட்டமூலம் கடதாசி வடிவத்தில் இருந்து கொண்டிருக்கவேண்டும் என்று விருப்பம்
தெரிவிக்கின்றனரே தவிர சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த ஒரு
வேலைத்திட்டத்தையும் முன்னெடுப்பதற்கு உளப்பூர்வமாக யாரும்
முன்வைக்கவில்லை.
தமிழ் தேசியக்கூட்டமைப்பும் கடல் ஒருநாள்
வற்றும் பயணத்தை தொடரலாம் என்று இந்தியா என்ற கடலை நம்புவதாக தமிழர்களுக்கு
கதை சொல்லி காலம் கடத்துகின்றனர். இந்தியாவை தமிழர் தேசியக்கூட்டமைப்பு
எதிர்க்குமாக இருந்தால் அவர்கள் இந்தியாவில் தொடர்ந்து குடும்பத்துடன்
அமைதியாக வாழமுடியாது. குடும்பத்துடன் அவர்கள் நாடு கடத்தப்படுவதை ஈழ
அரசியலுக்காக அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன.
அன்னை பார்வதி
அம்மா அவர்கள் மருத்துவம் பெற்றுக்கொள்ளுவதற்காக தமிழகம் சென்றபோது
மனிதாபிமானம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டார். அதை எதிர்த்து
குரல்கொடுத்த சிவாஜிலிங்கம் அவர்கள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு
தடைவிதிக்கப்பட்டது. இந்த தடைகூட ஒருவிதத்தில் தேசிய கூட்டமைப்பு
அரசியல்வாதிகளுக்கான முன் எச்சரிக்கையாகவே காட்டப்படுகிறது.
தமிழ்
அரசியல்வாதிகளை தாண்டி தமிழீழ ஆதரவு அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின்
கருத்தை பார்ப்போமானால். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை என்றைக்கும் எவரும்
உணர்வுபூர்வமாக வரவேற்றதுமில்லை மானசீகமாக மகிழ்ச்சியடைந்ததுமில்லை.
ஜெனீவா ஐநா மன்றத்தில் கொண்டுவரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தின் மீது மக்கள்
தகுதியும், அதே கணக்கில்த்தான் உணரப்பட்டது. இருந்தும் தமிழர்களின்
அடிப்படை விருப்பை ஈடு செய்யாவிட்டாலும் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் என்ற
ஒரு வழித்தடத்தில் விரும்பியோ விரும்பாமலோ குறுக்கிட்டுக்கொண்ட அந்த
ஒப்பந்தங்கள் அடுத்த நிலையை எடுத்துசெல்ல ஆதாரமாக உதவும் ஒரு காரணி
என்பதாலேயே 13,வது திருத்த சட்டமூலம் இரத்துச்செய்யப்படக்கூடாது என்ற எதிர்
நிலையில் ஈழ ஆதரவு அமைப்புக்களும் மக்களும் குரல்கொடுத்து வருகின்றனர்.
இந்தியாவில்
எந்த அரசியற் கட்சி ஆட்சியை கைப்பற்றினாலும் எப்பேற்பட்ட பேச்சுவார்த்தை
அரங்கேறினாலும் ஒரு பொழுதும் சிங்களவனை எதிர்த்து நேர்மையாக நின்று
தமிழர்களுக்கான அரசியலில் மத்தியஸ்தம் செய்ய இந்தியாவால் ஒருபோதும்
முடியாது.
ஈழ தமிழர்களுக்கு இந்தியாவால் சாதகமாக எந்த ஒரு அரசியல்
ஆதரவும் ஒருபோதும் கிடைத்துவிடப்போவதுமில்லை. சர்வதேச நிலைகளை சமாளித்து
தற்காத்துக்கொள்ளும் பொருட்டு வெளியுறவு கொள்கையை திட்டமிடவே இந்தியா
என்றைக்கும் முனைப்பு காட்ட முயற்சிக்கும். இந்தியாவின் தகுதியும் அந்தளவை
தாண்டி செல்லக்கூடியதுமல்ல, சூழல் சார்ந்து தப்பித்தலுக்கான அரசியல்
செய்யும் தந்திரத்தை கைவிட்டாலொழிய இந்தியாவை நம்புவதால் யாதொரு
பலனுமில்லை.
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பொருளாதாரம்,
ஸ்திரமான வெளியுறவுக்கொள்கை, இராணுவ வல்லமை போன்ற பின்னணியில் வெளியுறவு
கொள்கைகளை கையாண்டு வருகின்றன அதற்கான வல்லமை அந்த நாடுகளிடம்
இருக்கின்றது. இந்தியாவிடம் அது ஏதாவது இருப்பதாக எவரேனும் நினைத்தால்
அவர் குறைந்த பட்சம் இந்தியனாக இருக்கவேண்டும்.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.
No comments:
Post a Comment