
“தமிழீழ விடுதலைப்புலிகள்” இயக்கம் உட்பட ஈழத்தமிழர்கள் அங்கம் வகிக்கும் 16, ஜனநாயக
தமிழ் அமைப்புக்களை பயங்கரவாத அமைப்புக்கள் என்று முத்திரை குத்தி
ஶ்ரீலங்கா அரசாங்கம் தடை செய்து விஷேட அரச வர்த்தமானி பத்திரிகை மூலம்
சட்டபூர்வமானதாக பிரகடனப்படுத்தியிருக்கிறது.
இந்த தடையின் மூலம் இனி வெளிநாடுகளிலிருக்கும் புலம்பெயர் தமிழர்கள்
இலங்கைக்குள் வரமுடியாத நெருக்கடியும், வெளிநாடுகளிலிருக்கும்
தமிழர்களுடன் தாயகத்தில் வாழும் தமிழர்கள் தொடர்பு கொள்ளமுடியாத அளவுக்கு
அச்சுறுத்தலும் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னம் உள்ள காலங்களை தவிர்த்தாலும். 2009 ம் ஆண்டிலிருந்து ஏதாவது
ஒரு போராட்டத்தின் நிமித்தம் புலம்பெயர் தமிழர்கள் தெருவுக்கு வந்து
போராட்டங்களில் கலந்திருக்கின்றனர் அந்த போராட்டங்களின் ஒளிப்பதிவுகள்
ஶ்ரீலங்கா புலனாய்வு பிரிவினராலும், புலம்பெயர் நாடுகளில் வாழும்
ஶ்ரீலங்காவின் துணைப்படை ஒற்றர்களாலும் அவ்வப்போது பதிவுசெய்யப்பட்டு
களஞ்சியப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது.
2001 செப்டம்பர் அமெரிக்காவில் இடம்பெற்ற இரட்டைக் கோபுரத் தாக்குதலின்
பின் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாதத் தடை ஐ.நா. பாதுகாப்பு
சபை தீர்மானம் 1373 பயன்படுத்தி பயங்கரவாத அமைப்புகள் என இனம் காணப்படும்
அமைப்புகளை அமெரிக்காவின் புலனாய்வு அறிக்கையின் சரத்தின்படி வெளிநாடுகளில்
பயங்கர வாதச் செயலில் ஈடுபடுபவை என்று தடை செய்யப்படுடிருக்கின்றன.
2001 செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று நியூயார்க் இரட்டை கோபுரங்கள் மீது
தாக்குதல் நிகழ்வின் பின், அதே ஆண்டு செப்டம்பர் 28 ல் இருந்து
இந்நடைமுறைகள் அமுலில் உள்ளன,
அதன் அடிப்படையில் ஶ்ரீலங்கா சிங்கள அரசு தமிழர்கள் சார்பாக ஜனநாயக
ரீதியில் செயல்ப்படும் அமைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கி மனித உரிமைச்
சபையின் ஐ.நா.தீர்மானம் 1373 மேற்கோள் காட்டி வெளிநாட்டுகளில் பயங்கர
வாதத்தை ஊக்குவிக்கும் அமைப்பாக பிரகடனப் படுத்த முயலுகின்றது
விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்ய அப்போது இந்தியா மும்முரமாக
முயன்றுகொண்டு இருந்து. தமிழர்களின் போராட்ட நடவடிக்கையை துடைத்தழிக்க
இலங்கை- இந்தியா திட்டமிடப்பட்டபொழுது அமெரிக்கா இச்சட்டத்தை
கொண்டுவருவதற்கு பாதுகாப்புச்சபையை கூட்டி விவாதித்தது. இச்சந்தற்பத்தை
சரியாக பயன்படுத்தி இந்தியா அப்போது வெற்றியும் பெற்றது.
உடனடியாக இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டது.
தொடர்ச்சியாக அமெரிக்கா, ஐரோப்பா என்று தடை உத்தரவு தொடர்ந்ததால்
விடுதலைப்புலிகள் இயக்கம் பெருத்த நெருக்கடியைச் சந்தித்தது, அதுவே
தமிழரின் போராட்ட வீழ்ச்சியின் ஆரம்பம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இப்போ அண்ணளவாக 13, ஆண்டுகளின் பின் ஐக்கிய நாடுகள் சபையின்
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குழுவின் புதிய தலைவராக இந்தியாவின்
தூதர் ஹர்தீப் சிங் பூரி, தேர்வு செய்யப்பட்டு்ள்ளார்.
இத் தெரிவில்க்கூட இந்தியாவின் அரசியல் ஊடுருவல் இருப்பதாக
சொல்லப்படுகிறது, ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் இதற்கு பச்சைக்கொடி
காட்டியிருப்பதாகவே சந்தேகங்கள் உண்டு.
பயங்கரவாத தாக்குதல்களை தடுப்பது, அப்படிப்பட்ட அமைப்புகளை ஒடுக்குவது
தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்பு பேரவை 2001, ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானம் எண் 1373, 2005ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 1624
ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும். இக்குழுவின் தலைவராக இரண்டு
ஆண்டுகளுக்கு ஹர்தீப் சிங் பூரி இருப்பார்.
தனது பதவியை பயன்படுத்தி சர்வதேச அளவில் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கு
எடுக்க வேண்டிய சட்ட திட்டங்களை வகுக்க முடியும் என்று குழுவின் தலைவராக
பொறுப்பேற்ற பிறகு ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருக்கிறார்.
பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு அனைத்து நாடுகளின் ஒத்துழைப்பும் அவசியம்.
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் அனைத்துமே ஒருமித்த குரலில் எவ்வித
மாற்று கருத்துமின்றி பயங்கரவாதத்தை எதிர்க்கின்றன என்றும் அவர்
குறிப்பிட்டார்.
இதனால் பயங்கரவாத செயல்களைக் கடுமையான சட்டங்கள் மூலம் தடுக்க முடியும்.
அதற்கான நடவடிக்கைகளை இந்தியா முனைப்புடன் மேற்கொள்ளும் என்றும் அவர்
தெரிவித்தார்.
அனைத்து உறுப்பு நாடுகளும் மாநாட்டுத் தீர்மானம் 1373-ஐ உறுதியுடன்
கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தந்த நாட்டு
சட்டங்களுக்கு உள்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அதில்
கூறப்பட்டள்ளது.
பயங்கரவாத குழுக்களுக்கு நிதி அளிப்பதை தடுக்க வேண்டும், இத்தகைய
குழுக்களின் வங்கிக் கணக்குகளை உடனடியாக எவ்வித தாமதமும் இன்றி முடக்க
வேண்டும், பயங்கரவாத குழுக்களுக்கு எத்தகைய உதவியும் செய்யக் கூடாது,
பயங்கரவாதிகளின் புகலிடமாக எந்த நாடும் இருந்துவிடக்கூடாது, பயங்கரவாத
குழுக்கள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள
வேண்டும். பயங்கரவாத குழுக்களின் சதித் திட்டம் குறித்த தகவல்களைப்
பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பன இந்த தீர்மானத்தின் முக்கிய அம்சங்களாகும்.
அனைத்து நாடுகளும் அந்தந்த நாடுகளின் புலனாய்வு அமைப்புகள், காவல்துறை
உள்ளிட்ட பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.
பயங்கரவாதிகளை கைது செய்வது, உரிய நாட்டிடம் ஒப்படைப்பது, இது தொடர்பான
தகவல்களை அளிப்பது உள்ளிட்டனவும் தீர்மானத்தில் அடங்கும்.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் அமெரிக்கா கொண்டு வந்த பிரேணை
வெற்றிபெற்ற நிலையில், அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
அதுவும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல்
கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு
மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
ஐநாவின் பயங்கரவாத தடைச்சட்டம் எண் 1373 பின்பற்றி ஶ்ரீலங்கா தமிழர்
அமைப்புக்களை தடை செய்திருக்கிறது. பின்னணியில் பெரிய சக்தியாக இந்தியா
இருப்பதனால் ஶ்ரீலங்கா இத்திட்டத்தின்மூலம் கணிசமான வெற்றியை காணும்
என்பதில் சந்தேகமில்லை.
தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலிருந்து செயற்படும் ஈழத்தமிழர் ஆதரவு அரசியற்
கட்சிகள், புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பாடலை தடுக்கும் வேலைத்திட்டமும்
ஈடேற வாய்ப்பிருக்கிறது.
தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக அறிவிக்கப்பட்ட
1.தமிழீழ விடுதலை புலிகள்
2.தமிழ் புனர்வாழ்வு அமைப்பு
3.தமிழ் ஒருங்கிணைப்பு குழு
4.பிரித்தானிய தமிழர் பேரவை
5.உலக தமிழ் இயக்கம்
6.கனேடிய தழிழ் காங்கிரஸ்
7.அவுஸ்திரேலிய தழிழ் காங்கிரஸ்
8.உலக தமிழர் பேரவை
9.கனேடிய தழிழர்களுக்கான தேசிய பேரவை
10. தேசிய தழிழ் பேரவை
11.தமிழ் இளைஞர் அமைப்பு
12.உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு
13.தழிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14.தழிழீழ மக்கள் பேரவை
15.உலக தழிழ் நிவாரண நிதியம்
16.தலைமை காரியாலய குழு
ஆகியவற்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தவிர, மற்ற அமைப்புக்கள்
அனைத்தும் இயங்கும் குறிப்பிட்ட நாடுகளின் சட்டதிட்டங்களுக்கமைய அவ்வவ்
நாடுகளின் ஜனநாயக முறைமைகளை பேணி உரிமைப்போராட்டங்களை முன்னெடுத்து
வருகின்றன.
முக்கியமான சந்திப்புக்களை அவ்வமைப்புக்கள் அவ்வவ் நாட்டு அரசுகளுடனும்
அதிகாரிகளுடனும் ஆலோசனைகள் செய்து பின்னரே தமது போராட்ட நடவடிக்கைகளை
செய்து வருகின்றன, பிரித்தானிய பேரவை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன்
அவர்களுடன் பல வேலைத்திட்டங்கள் பற்றிய கலந்துரையாடலை நடத்தி இருக்கின்றன,
தமிழ் ஒருங்கிணைப்பு குழு,. பிரான்ஸ் முகவரி, பிரித்தானிய தமிழர்,.
பேரவை லண்டன் முகவரி. உலக தமிழர் பேரவை,. கனடா முகவரி, நாடு கடந்த அரசு
அமெரிக்கா முகவரி ஆகிய இடங்களில் இருந்தே சட்டபூர்வமாக இயங்கி வருகின்றன,
தலைமறைவாக எந்த அமைப்பும் நிழல் நிர்வாகம் செய்வதாக தகவலில்லை.
அமெரிக்கா மூன்றாவது முறையாக ஜெனீவா மனித உரிமை பேரவையில் கொண்டுவந்த
தீர்மானம் இந்தியாவால் முடிந்தளவு சாரம் குறைக்கப்பட்டு பெயரளவுக்கு
தீர்மானமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அத் தீர்மானத்தை வைத்துக்கொண்டு
ஶ்ரீலங்கா அரசை எதுவும் செய்ய முடியாது என்பது இந்தியா- ஶ்ரீலங்கா மற்றும்
தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு தெரியும்.
ஆனால் புலம்பெயர் அமைப்புக்கள் சுயாதீன விசாரணை நடத்தப்படவேண்டும்
என்றும் சர்வதேச நீதிமன்றத்துக்கு ராஜபக்ஷவை கொண்டு நிறுத்த
வேண்டுமென்றும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்,
சர்வதேச தீர்ப்பாயத்துக்கு இனப்படுகொலையாளியை எடுத்துச்செல்ல சில
சம்பிரதாய சட்டச்சிக்கல் இருக்குமென்றால் மனித உரிமை ஆணையாளர் திருமதி
நவநீதம்பிள்ளை அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் ஐநாவில் சிறப்பு நீதிமன்றத்தை
அமைத்து இனப்படுகொலைக் குற்றவாளிகள் விசாரிக்கப்படவேண்டும் என்பதில்
குறிப்பிட்ட அமைப்புக்கள் உறுதியாக இருக்கின்றன.
இனப்படுகொலை விசாரணையை துரிதமாக்கும் தீவிரம் தமிழ் தேசிய கூட்டமைப்பு
தவிர்ந்து இலங்கைக்குள் இருந்து எழமுடியாது என்று ராஜபக்ஷ நம்புகிறார்.
இந்தியாவின் பெட்டிப்பாம்பாகி ஶ்ரீலங்கா ஜனாதிபதியின் மகுடிக்கு வளைந்து
நெளிந்து ஆடிக்கொண்டிருக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ராஜபக்ஷவின்
நாதத்துக்கு கட்டுப்பட்டு மவுனமாகி இருந்தாலும் புலம்பெயர் அமைப்புக்கள்
பிரச்சினையை உறக்கநிலையில் வைத்திருக்க விடமாட்டாது என்பதும்,
புலம்பெயர்
அமைப்புக்களின் மனநிலையை கொண்ட வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான
அரசியற் போராளிகள் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், தமிழ் தேசிய மக்கள்
விடுதலை முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரின் வீரியத்தை
வெளிவராமல் வெட்டுவதே குறிப்பிட்ட அமைப்புக்கள் பயங்கரவாத அமைப்புக்கள்
என்று தடை செய்திருப்பதற்கான மூல காரணமாகும்.
ஒன்று அடைக்கப்பட்டால் இன்னொன்று திறக்கப்படுவதுதான் விதி. புலம்பெயர்
அமைப்புக்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பாதையை அமைத்து இதுவரை
போராடிக்கொண்டிருந்தன இந்த தடையின் மூலம் குறிப்பிட்ட அமைப்புக்கள்
ஒருமித்து பயணிப்பதற்கான சந்தற்பத்தையும், புதிதாக இன்னும் சில
அமைப்புக்கள் பிறப்பதற்கும் மகிந்தவின் தடை உத்தரவு வழி
கோலிக்கொடுத்திருக்கிறது.
காலம்தான் மாற்றங்களை தீர்மானித்துக்கொண்டிருக்கிறது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.
No comments:
Post a Comment