Sunday, March 30, 2014

ஈழத் துரோகம் ஒன்றும் வெளியிலிருந்து தன்னிச்சையாக புகுந்துகொள்ளவில்லை, காலாகாலமாக உள்ளுக்குளிருந்தே கருவறுத்து வருகிறது.‏

இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதிகள் இனவழிப்பைத் தந்தரமாக தொடர்ந்து நகர்த்தி செல்வதற்கான கால அவகாசத்தை ராஜபக்‌ஷவுக்கு வழங்கிக்கொண்டு,  அதே நேரத்தில் ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வழிசெய்வதுபோல் வெளிக்காட்டப்படும் தீர்மானம் இந்தியாவின் திட்டமிட்ட ஊடுருவலுடன் அமெரிக்காவால்  27-03-2014 அன்று ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஐநா சபையின் மனித உரிமைப் பேரவையின் 25ஆவது அமர்வுகளின்போது இலங்கை தொடர்பாக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 11 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இது பழைய செய்திதான்.,  ஆனாலும் நெருடல்களும் சூழ்ச்சிகளும் சிலவற்றை கிளறிப்பார்க்க தூண்டுகின்றது.

சர்வ வல்லமை பொருந்திய சர்வதேச தலையாரியான அமெரிக்காவினால்,  ஐநா அரங்கத்தின் மனித உரிமைகள் பற்றி தீர்மானிக்கப்படும் அரங்கத்தில்,  மிகப்பெரிய மனித படுகொலைகள்,  மற்றும் நாகரீகமற்ற மனித உரிமை மீறலுடன் கூடிய ஒரு சமூக அழிப்பு சம்பந்தமாக பல்வேறு சாட்சி ஆவண உறுதிப்பாட்டுடன் மிக நுணுக்கமாக விவாதித்து ஆராய்ந்து பிரகடனப்படுத்தப்பட்ட மூன்றாவது சர்வதேச தீர்மானம் இது என்பதை முதலில் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும்.

பிரேரணையில் சர்வதேச விசாரணை என்ற பதம் பாவிக்கப்பட்டிருக்கின்றதே தவிர அதற்கான கால அளவீடு,  விசாரணைக்கான மாதிரி எதுவும் வரையறுக்கப்படவில்லை.

வெட்டை வெளியான பாலைவன சூனியப்பிரதேசத்தில் தோட்டமும் துலாக்கிணறும் நிறுவப்படும் என்று தீர்மானம் சொல்லுகிறது.
பிரேரணைக்கு ஆதரவாக 23 வல்லமை பொருந்திய நாடுகளும்,  எதிராக 12 நாடுகளும் வாக்களித்தன. வாக்கெடுப்பில் 12 நாடுகள் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ரஜபக்‌ஷ தீர்மானத்தை நிராகரித்து புறக்கணித்துவிட்டதாகவும் அதுபற்றி தாம் கவலைப்படப் போவதில்லை என்றும் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்

பிரேரணைக்கு எதிராக வாக்களித்த நாடுகளான சீனா, ரஷ்யா, வெனிசுவேலா, வியட்நாம், கியூபா, ஆகிய நாடுகள் அமெரிக்காவின் தீரா பகையாளிகள் என்பதும்,  பாகிஸ்தான், சவூதி அரேபியா ,கென்யா,  கொங்கோ, அல்ஜீரியா, மாலைதீவுகள், ஐக்கிய அரபு இராச்சியம்,  ஆகிய நாடுகள் அமெரிக்காவை நேரடியாக எதிரியாக காட்டிக்கொள்ளாமல் புதிய பொருளாதாரக் கொள்கையில் சீன (ரஷ்ய)  நட்பு வட்டத்தில் சரிந்து உள்ளவை என்பதும்,  அரசியற் காரணிகளே தீர்மானத்தில் ஆளுமை செலுத்தியிருக்கின்றன என்பதையும் கவனத்தில் கொண்டாகவேண்டும்.

சுயாதீனமான சர்வதேச  தீர்ப்பாயம் ஒன்றே இப்பிரச்சினைக்கு தீர்வுகாண வல்லது.  அந்த தீர்வே அந்த மக்களின் எதிர்காலத்தையும் வரையறுக்க உதவும் ஆரம்பம் என்பதையும் தூர நோக்கோடு கணிப்பிட்டுக்கொள்ள முடியும்.

சக இனப்படுகொலை கூட்டாளியான இந்தியா தீர்மானத்தின் வீரியத்தை பலவீனப்படுத்தும் அனைத்து வேலைகளையும் திரை மறைவில் இருந்து நிகழ்த்திவிட்டு தந்தரமாக வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததன் மூலம் மறைமுகமாக தீர்மானத்தின் நிலைப்பாட்டில் இந்தியா எதிர் நிலை எடுத்திருப்பது தெளிவாகியிருக்கிறது.   இந்தியா தரப்பில் பேசிய பிரதிநிதி இந்த தீர்மனத்தை எதிர்ப்பதாகவும் இந்த தீர்மானம் நிறைவேறினால் இலங்கை மேற்கொண்டுவரும் பணிகள் பாதிக்கப்படும் என்றும் பேசினார் மேலும் 13 வது திருத்தச் சட்டத்தை இலங்கை அமூல்ப்படுத்தவேண்டும் அண்டை நாடென்ற முறையில் இலங்கையில் வளர்ச்சி பணிகளை இந்தியா மேற்கொள்ளுகிறது  என்று குறிப்பிட்டார்.

இன்னொரு ஒற்றுமை ஒன்றையும் இங்கே கூர்ந்து கவனிக்கவேண்டும்.
இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பிரதானிகள் ஜெனீவாவுக்கு செல்லவில்லை.
இந்தியாவின் திரை மறைவு ராஜதந்திர மன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது பங்களிப்பை சில ராஜதந்திர நகர்வுகளூடாக நிறைவு செய்திருந்தது.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைகள்,  மற்றும் மோசமான மனித உரிமை மீறல்களில் இந்தியாவுக்கும் நேரடியான பெரிய பங்கு இருப்பது உலகம் அறிந்த விடயம்.

அதை மறுத்துவரும் இந்தியா சர்வதேசம் தலையீடு செய்யும் ஒரு குற்றவியல் விடயத்தில் முடிந்தளவு குறுக்கீடு செய்து திருத்தங்களை செய்தபின் சுற்றவாளியாக இருந்திருப்பின் ஏன் வாக்களிக்காமல் பின்வாங்கியது.

அரசியல் பொருளாதாரம் கலாச்சாரம் ஆகியவற்றில் ஒட்டுறவில்லாத எதிர்நிலையிலிருத்தல்,  வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் நடுநிலை வகிப்பதற்கு நியாயமாக கொள்ள முடியும்,

அண்டை நாடென்ற முறையில் இலங்கையில் வளர்ச்சி பணிகளை இந்தியா மேற்கொள்ளுகிறது  என்ற வாதம் நியாயமானது என்று எடுத்துக்கொண்டாலும் அந்த நாட்டிலுள்ள சிறுபான்மை தேசிய இனம் ஒன்று அழிக்கப்பட்டிருக்கிறது அழிப்பு இன்னும் தொடர்கிறது  அதுபற்றி இந்தியா ஏன் சிந்திக்கவில்லை.

கொலைக்காரரை காப்பாற்றுவதற்காக சர்வதேச அரங்கில் விதண்டாவாதம் புரிந்து மனிதப்பண்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கோரமான  இனப்படுகொலையை செய்துவிட்டு தப்பிக்க நினைக்கும் ஒரு பாஸிஷ இனப்படுகொலையாளியை  சர்வதேச விசாரணைக்கு கொண்டுசெல்வது என்றைக்கும் இந்தியாவுக்கு நெருடலாக இருந்து வருகிறது.

ஐநா மன்றத்தில் இந்தியா சார்பாக தொடர்ச்சியாக விவாதித்தவர்களின் மனநிலை அமெரிக்க தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் நோக்கத்தையே கொண்டிருந்தது,  வரவிருக்கும் இந்திய பாராளுமன்ற தேர்தல்,  தமிழ்நாட்டு அரசியல் மற்றும் மக்களின் எதிர்ப்பு,     விமர்சனங்களுக்கு கருத்து கூறாமல் தப்பித்தல், அரசியல் ஆதாயம் ஆகிய சூழ்நிலை,  ஶ்ரீலங்காவை கைவிட முடியாத நெருக்கடி ஆகிய அம்சம்கள் இந்திய அரசை தீர்மானத்திலிருந்து வெளிநடப்பு செய்ய வைத்திருக்கிறது.

இருந்தும்,  இந்தியா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தாலும் ஆதரவாக வாக்களித்தாலும் தமிழர்களின்  நரக வாழ்க்கை முடிவுக்கு வந்து விடப்போவதில்லை.  ஈழத்து தமிழர்களின் வாழ்வை  என்றைக்காவது ஒருநாள் சர்வதேசம் தீர்மானிக்கும்வரை அங்கு தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியாத சூழலை ஶ்ரீலங்காவுடன் இணைந்து இந்தியா தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். இப்பேற்ப்பட்ட அடக்குமுறை மீண்டுமொரு ஆயுத கிளர்ச்சியை அங்கு தோற்றுவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அமெரிக்கா மூன்றாவது முறையாக கொண்டுவந்த இந்த தீர்மானம் இனப்படுகொலையாளிகளை உடனடியாக  தண்டிப்பதற்கோ அன்றி நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படுவதற்கோ இப்போதைக்கு எந்தச் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திக்கொடுக்காது என்பது உண்மை,  அந்தளவுக்கு  திரும்பத் திரும்ப தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஒப்புதலுடன் இந்திய தலையீட்டால் தீர்மான வரைவு திருத்தப்பட்டிருக்கிறது என்பதை அமெரிக்க பேச்சாளர்கள் அவ்வப்போது வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

தீர்மானத்தின் பிரகாரம் பிரச்சினைக்குரிய இரண்டு தரப்பையும் வேறு திசை நோக்கி நகரவிடாமல் ஒரு கட்டுக்குள் வைத்திருக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் சம்பிரதாயமாகவே அமெரிக்க தீர்மானத்தை கருத முடியும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மான வாக்களிப்பை இந்தியா தவிர்த்துக் கொண்டமை ஏமாற்றமளிப்பதாக  அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பிரதி பேச்சாளர் மேரி ஹார்ப் தெரிவித்துள்ளார்.    ஐ.நாவில் இந்திய அதிகாரிகள் பேசிய விதம் தொடர்பில் தாம் பெரும் ஏமாற்றம் அடைந்து விட்டதாகவும் இலங்கைக்கு எதிராக குறித்த தீர்மானத்தின் உரையில் சில பகுதிகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற அடிப்படையில் இந்தியா வாக்களிப்பில் இருந்து விலகியமைக்கு காரணம் தெரிவித்துள்ளது. என்றும் மேரி ஹார்ப் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை புறக்கணிக்காததுபோல் ஒருபுறம் காட்டிக்கொண்டு இனப்படுகொலை சிங்கள அரசை காப்பாற்ற பல சக்திகளால் திரை மறைவில் நிறைய காரியம் சாதிக்கப்பட்டிருக்கின்றது என்பதை களத்திலிருக்கும் அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

முதற்கண் அமெரிக்க தீர்மானத்தை வலுவுள்ளதாக்கி வாக்கெடுப்புக்கு கொண்டுவரவேண்டிய  பாரிய பொறுப்பு தமிழர் தேசியக் கூட்டமைப்புக்கு இருப்பதாக உலகத் தமிழர்களால் நம்பப்பட்டது,   அதற்கான களப்பணிகளை தமிழர் தேசியக்கூட்டமைப்பு திட்டமிட்டு செய்திருக்க வேண்டும். 

இப்பேற்பட்ட சந்தற்பத்தில்  மிக நிதானமாக உந்து சக்தியாக இருக்கவேண்டிய தமிழர் தேசியக் கூட்டமைப்பையே சோரம்போகும் விதமாக இலங்கை இந்திய இராசதந்திர காய் நகர்த்தல்கள் ஈடேறியிருக்கின்றன.

தரவுகளை முன்னிறுத்தி நடைபெற்ற அனீதிகளின் வீரியத்தை விவரணப்படுத்தி விவாத மன்றத்தில் சபையின் விவாதத்துக்கு உயிர் கொடுத்து  விவாதித்திருக்கவேண்டியவர்கள் அமெரிக்கர்களும் பிரித்தானியர்களுமல்ல,

முதற்கண் விவாதத்துக்கு சமூகமளித்திருக்கவேண்டியவர்கள்  1) தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்  2) விவாதத்தில் கலந்து தனது சட்ட அறிவின் மூலம் நடப்புக்கால விடயங்கள் பலவற்றை விவாதித்து நியாயப்படுத்தக்கூடிய அடுத்த நிலையில் இருப்பவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன்.  அந்த இருவரும் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும்வரை ஜெனீவா பக்கம் தலை வைத்துக்கூட படுக்கவில்லை.

இந்தியா தீர்மானத்தில் இருந்து வாக்களிக்காமல் வெளியேறியதுபோல  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு கறுப்பு ஆடுகளும்  திட்டமிட்டு ஜெனீவாவுக்கு போகாமல் சதி செய்து தீர்மானம் நீர்த்துப்போக வழி செய்திருக்கின்றன.

சம்பந்தன், மற்றும் விக்கினேஸ்வரன் ஆகியோரின் பிரதிநிதியாக ஜெனீவா சென்ற நியமன எம்பி சுமந்திரன் முடிந்தளவு  சக உறுப்பினர்களை குளப்பி குளறுபடிகளை செய்து திரும்பியதாக கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்துக்கு பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் செய்தபோது,  மக்கள் டேவிட் கமரூனை சந்தித்துவிடக்கூடாது என்று கண்ணுக்குள் எண்ணை விட்டு டேவிட் கமரூன் திரும்பும்வரை கண்மூடாமல் ராஜபக்‌ஷவுக்காக வேலை செய்த சம்பந்தனும் விக்கினெஸ்வரனும் ஏன் ஜெனீவாவுக்கு செல்லவில்லை?

ரணில் விக்கிரம சிங்காவுடன் கை கோர்த்து சிங்கக்கொடியை தங்கக்கொடியாக தூக்கிப்பிடித்த சம்பந்தன் இந்தியாவுக்கும்,  கனடாவுக்கும், அமெரிக்காவுக்கும்,  இங்கிலாந்துக்கும் அரசியல் பயணத்துக்கு  துள்ளிக்குதித்து முன் நின்றவர் ஜெனீவா விவாதம் என்றவுடன் பம்மிய திருகு தாளம் என்ன?

2009 ல் சோனியா அரசில் முக்கிய பொறுப்பிலிருந்த பசி என்ற சிதம்பரம்,  மாதம் இருமுறை கோவாலபுரம் சென்று இனப்படுகொலை விபரங்களை கருணாநிதியுடன் பகிர்ந்து திருப்திப்பட்டவர் இன்றைக்கு தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிட முடியாத ஒரு சூழலில் அரசியல் அனாதையான சந்தற்பத்தில் இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது தவறு என்று பேட்டியளிக்கிறார்.

அன்றைக்கு மத்திய சோனியா அரசுடன் ஒன்றிக்கலந்து,  தியாகத் திருவிளக்கு சொக்கத்தங்கம் என்று வாயார புகழ்ந்து அனைத்து நிகழ்வுகளிலும் அங்கம் வகித்து இனப்படுகொலை முடியும்வரை ஆயிரத்து எட்டு நாடகங்கள் நடத்தி கண் முழித்து கருமாதி அனைத்தையும் முடித்த கருணாநிதி இன்றைக்கு ஆட்சி அதிகாரம் கைவிட்டு போனபின்,  இரு பக்கமும் கடவாய் வழிய சோனியா அரசை தூற்றிக்கொண்டிருக்கின்றார்.

வெளிப்பார்வைக்கு  பார்க்கும்போது வல்லரசான அமெரிக்காதான் தீர்மானத்தை இழுத்தடித்து காலதாமதப் படுத்துகிறதோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுவது தவிர்க்க முடியாதது. ஆனால் நுணுக்கமாக கூர்ந்து நோக்கும்போது  சில்லறை பயல்களான சம்பந்தன், விக்கினேஸ்வரன், சுமந்திரன் ஆகியோரின் சோரம்போதலும்,  கயமை நிறைந்த கருணாநிதி, பசி ஆகியோரின் காட்டிக்கொடுத்தலும் முதற் புள்ளியாகி சாக்கடை ஆறாக மாறி வஞ்சக அரசியல் இந்திய அரசால் பெரு வெள்ளமாக இன அழிப்பாக மாற்றப்படுகிறது.

ராஜபக்‌ஷவை நோவதை விடவும் தமிழர்கள் மத்தியில் இருக்கும் கறுப்பாடுகளை காட்டுக்கு விரட்டினாலே  தமிழர்களுக்கு எதிராக வட இந்தியாவால் பெரிதாக ஒன்றையும் செய்துவிட முடியாது.  கட்டபொம்மனை வீழ்த்த காலடியிலிருந்த எட்டப்பனைத்தான் வெள்ளையன் அணுகினான்,  பண்டார வன்னியனை தீர்த்துக்கட்ட இங்கிலாந்துக்காரன் காக்கை வன்னியனை அணுகினான்,   ஈழ போராட்ட வீழ்ச்சியின் முதற் பொறியாக கருணா என்ற கயவனை ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்தினான்.   
 
ராஜபக்‌ஷவை காப்பாற்ற  இந்தியா சம்பந்தன் , விக்னேஸ்வரன் ஆகியோரை அணுகியிருக்கிறது.   இவைகளை பகுத்துணர்ந்து காய் நகர்த்தினாலே அடுத்த தீர்மானம் சர்வதேசத்தின் தீர்ப்பாயத்தை சென்றடைந்துவிடும்.

அழுக்கின் ஊற்று மையம் எங்கள் கடப்படியில் இருந்து தொடங்குவதை தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் கவனித்ததுபோல் இன்றைய சந்தடி சத்தத்தில் எவரும் கடப்படியை கவனிக்கவில்லை என்பதே குளறுபடிகளுக்கு காரணம்.

மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய ஐநா மன்றத்தில் தனி நீதிமன்றம் அமைக்கலாம் என்ற ஆலோசனையும் சிலரால் எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது,

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம்,  இங்கிலாந்து பிரதமரின் வாக்குறுதி,   கனடாவின் கருத்து அனைத்தையும் திரட்டி கறுப்பாடுகளை மட்டும் காவோலை கொண்டு ஓட ஓட விரட்டினால் அனைத்தும் சாத்தியமே.

ஈழதேசம் செய்திகளுக்காக,     
கனகதரன்.

No comments: