Sunday, May 18, 2014

இனப்படுகொலை சூத்திரதாரி இந்தியா என்பதை என்றைக்கும் மறக்க முடியாது.( ஈழ இனப்படுகொலை, ஐந்தாம் ஆண்டு நினைவு நாள் கவிதை)

மே பதினெட்டு.

ஐந்து ஆண்டுகள் கடந்தும்
நெஞ்சை விட்டு அகலாமல்
அடி மனதில்
ஆற்றமுடியாத ரணமாக
கனன்ற வெப்ப சுருதி
உள்ளத்தில் பெரு வடுவாக
ஒரு சுனாமியின் தயார் நிலையில்
உறைந்து கிடக்கிறது,

2009 மே மாத(மு)ம்
முள்ளிவாய்க்கால் பரப்பில்
நிகழ்த்தப்பட்ட
நவீன நரபலியான இனப் படுகொலை,
விசாரணை வளயத்துள்
கொண்டு வர தடைகள் பல இருந்தாலும்
உலகம் முழுவதும் வாழும்
பள்ளிக் குழந்தைகளுக்கு
சரித்திர பாடமாக
ஈழத்து இனப்படுகொலை
ஆவணப்படுத்தப்பட்டு விட்டது.

ஈழ இனப்படுகொலையின் சூத்திரதாரி
இந்தியா.
இதுதான் பள்ளிக் குழந்தைகளுக்கான
பாலபோதினியின்
முதலாவது பாடம்.

ஈழத் தமிழ் இனத்தின் ஒரு பகுதி
சவக் காடாக
இரத்தச் சகதிக்குள்
இரண்டறக் கலந்திருந்த காட்சிகளும்,
இந்தியாவின் தலையீட்டினால்
சிங்களவன் அகலக் கால் வைத்து
முள்ளிவாய்க்கால் செருக்களமானதும்
நாதியற்று ஈனசுரத்தில்
கூவி குளறிய ஓலங்களும்
நிழற் படமாக அல்லாமல்
நிதர்சனமாக
கண்முன் நிழலாடுகின்றன,

மந்தம் தலைக்கேறி
மறந்து போனவர்களுக்கான
மறு வாசிப்பே இந்த பதிவு.

அடி மனதில்
ஆத்திரம் கொப்பளித்தாலும்
அரசியல் ஆத்மாக்களின்
காட்டிக் கொடுப்புக்களாலும்
கள்ளத் தொடர்புகளாலும்
ஆற்றாமையும்
தேற்றமுடியாத வெறுமையும் மட்டுமே
தொடர்ந்து பயணித்துக்கொண்டிருக்கிறது.

கண்ணுக்கு முன்னே
வெடித்து கருகிப்போன சந்ததியை,
தாயை,  தகப்பனை,
கழுத்தறுக்கப்பட்ட தம்பியை
கற்பழித்து கொல்லப்பட்ட தங்கையை
குடல் பிதுங்கி கண்மூடிய
குழந்தையை மட்டுமல்லாமல்
நர மாமிஷ மிருகங்களின்
நிந்தனைகளையும்
எவராலும் மறக்க முடியவில்லை.

சிங்களவன் பொது எதிரி
அவன் சண்டைக்கு வந்தது வியப்பல்ல,
அவனுடன் தலைவன் சமர் புரிந்ததும்
அதிசயமல்ல.

நேபாளத்தில் அவதரித்த புத்தனின்
பெயரை சொல்லிக் கொண்டு
மேற்கு வங்காளம் ஒரிசாவிலிருந்து
நாடு கடத்தப்பட்ட  ஒரு கூட்டம்
ஈழத்தை மேச்சல்க் காடாக்கி
மிடறு முறித்து
இன்னும் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது.

புத்தன், காந்தி பிறந்த மண்ணென்று
போலி பெருமை கூறிக்கொண்டாலும்,
நரகாசுரனும் தாடகையும் சகுனியும்
எட்டப்பனும்
பிறப்பெடுத்த வழித்தடத்தில்
வந்தவர்கள் என்பதால்
கருணாநிதி,  சிதம்பரம்,  பிரணாப்
சிவ்சங்கர் மேனன், மன்மோகன்
ஆகிய புல்லுருவிகள்
இனப்படுகொலையின் பின்
காட்டுமிராண்டிப் பட்டியலின்
கடைசி பதிவில் இடம்பிடித்துக்கொண்டனர்.

காட்டெருமை கரடி கருங்குரங்கு
நூட்டிமையில் நிறம் மாறும் பச்சோந்தி
மூஞ்சூறு
ஆற்று முதலை,  அண்டங்காகம்
அவை காட்டு மிராண்டிகளை விடவும்
மேலான பண்பு கொண்டவை.

இந்திய அரசியல் சாக்கடைக்கு வெளியே
ஐந்தறிவு, நான்கறிவு விலங்குகள்
உயர்ந்து நிற்கின்றன.

அமெரிக்காவையும் ஐநாவையும்
வளைத்துப்போடக்கூடிய  சூனியம்
இந்திய அரசியலுக்கு தெரிந்திருக்கிறது.
பரம வைரிகளாக இருந்தாலும்
பாகிஸ்தானையும் சீனாவையும்
ஈழத்து இனப்படுகொலைக்குள்
இழுத்து போடக்கூடிய சூட்சுமம்
சிவ்சங்கர் மேனனுக்கும்
சிதம்பரம் கருணாநிதிக்கு புரிந்திருக்கிறது.

வறுமையையும் ஊழலையும்
மூலதனமாக வைத்துக்கொண்டு
மின்சாரம்,  தண்ணீர் இல்லாமல்
அரசியல் வித்தை செய்து
வல்லரசு என்று வயிறு வளர்க்கும்
இந்தியாவை “வேட்டைவாளி”
என்று சொல்வதில்
யாருக்கும் எந்த தயக்கமும் இருக்காது.

இந்தியாவின் வழிபாட்டு அரசியலும்
ஈழத்து சுதந்திர வேட்கையும்
தொடர்வுபடுத்த முடியாதவைதான்
ஏணி வைத்தாலும் எட்டாதது.

ஒன்றுக்கும் ஒன்பதுக்கும் உள்ள இடைவெளி
இந்தியாவுக்கும் ஈழத்துக்கும் உண்டு
இந்தியனுக்கு தேவை
ஈழத்தின் பெயரால்
இழவெடுத்த அரசியல்.
இனப்படுகொலை செய்த பின்னும் கூட
இன்றுவரை இந்திய அரசியல்
நாற்றத்தை விட்டு
நாகரீக உலகத்துக்கு வரவில்லை.

ஈழத்திலும் பச்சோந்திகள் உண்டு
அவைக்கு ஆயுட்காலம் அதிகமில்லை
அந்த பச்சோந்திகள்
அதிக பட்ஷம் இந்தியாவை தொங்கலாம்
அல்லது
ராஜபக்‌ஷவை துதிபாடலாம்.

ஈழ கோட்பாட்டின் இலக்கை
தமிழீழ தாகத்தை
குப்பிக்குள் அடைத்து வைத்து
குடை பிடித்து காவல் காக்க முடியாது.
ஈழத்து மக்களின் சுதந்திர தாகம்
முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிடும் என்றால்
இன்றைக்கு ஈழத்து முற்றத்தில்
இராணுவத்துக்கு வேலை இருந்திருக்காது.

சுதந்திரமும் விடுதலைக்கான பயணமும்
ஈழத்தமிழனுக்கு
செத்துப்போவதில்த்தான் முடியுமென்றால்
அது விதியாக இருக்கலாம்.

இன்று
இனப்படுகொலை நிகழ்வின்
ஐந்தாம் ஆண்டு கறுப்பு நாள்
நடந்து முடிந்த ஈழப்போராட்டத்தின்
எச்சங்கள்
நடமாட தொடங்கிய
வழித்தடத்தின் ஒரு சந்திப்பு.
ஊர்க்குருவி-

No comments: