Saturday, May 17, 2014

நடந்து முடிந்த தேர்தல் மூலம் ஈழத்தை பிடித்திருந்த பீடைகள் காவுகொள்ளப்பட்டிருக்கின்றன.

இந்திய பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் முடிவுகள் கிட்டத்தட்ட வெளியாகிவிட்டன. நாடு முழுவதும் 543 லோக்சபா தொகுதிகளில் இன்று 16ம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டன.  பாரதிய ஜனதா கட்சி தனியாக 283, இடங்களைக் கைப்பற்றியுள்ளது.  கூட்டு கட்சிகளுடன் சேர்ந்து 340 ஆசனங்களை பாரதிய ஜனதா கட்சி பெற்று வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கிறது.
படுதோல்வியை தழுவிய காங்கிரஸ் கூட்டணிக்கு 58 ஆசனங்கள் கிடைத்திருக்கிறன. இப்போதைக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சிக்கான தகுது உடையதுபோல் காணப்பட்டாலும் இரத கட்சிகளின் ஒன்றிணைவால் மாற்றங்கள் நிகழ்வதற்கான சூழல்களும் இருக்கின்றன.
ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களைவிட மிக அதிகமாக எண்ணிக்கையில் பாஜக வென்றுள்ளதால் அக்கட்சி தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும்.
இந்தியாவை பீடித்திருந்த பீடைகள் (காங்கிரஸ் திமுக)  மக்கள் மன்றத்தில் இனங்காணப்பட்டு விரட்டப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றன. தமிழர்கள் மத்தியில் காங்கிரஸ் திமுக கட்சிகளின் படு தோல்வி ஒரு விழாக்கால மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது.
60 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்திய காங்கிரஸ் புதைகுழியில் புதையும் நிலையில் உள்ளது.
தமிழகத்தை பொறுத்தளவில் நல்ல தீர்ப்பு வழங்கப்பட்டு ஆளும் கட்சியான ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக வுக்கு 37 ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. கருணாநிதியின் திமுக வுக்கும் காங்கிரஸுக்கும் எதிர்பார்த்ததை விடவும் பலமான மரண அடியை வாக்காளர்கள் மிகத்தெளிவாக வழங்கி இரு கட்சிகளுக்கும் தலா ஒவ்வொரு முட்டை பரிசாக கொடுத்திருக்கின்றனர்.
தேர்தல் கள நிலவரங்களை வெளியிட்ட ஊடகங்கள் திமுகவுக்கு முட்டை கிடைத்திருக்கிறது என்று சிலாகித்து எழுதி மகிழ்ந்திருக்கின்றன.
2011 சட்டசபை தேர்தலில் படுதோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்த்தையும் இழந்த திமுக,  நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில்க்கூட கரைசேர முடியவில்லை.
விஜயகாந்த தலைமையிலான தேமுதிக என்றொரு கட்சி இருந்ததற்கான அடையாளம் தெரியவில்லை.
21ம் திகதி பாரதிய ஜனதா கட்சியில் பிரதம மந்திரிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்க இருக்கிறார்.

பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சியின் படிப்பினையை கருத்தில்க்கொண்டு கடந்தகால வெளியுறவு கொள்கையிலிருந்து சற்று மாறுபாடான நடைமுறையை பாஜக எடுக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு தீர்வு காண பாரதிய ஜனதாவின் ஆட்சியாளர்கள் முயற்சி செய்தால் வரலாற்றில் அக்கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும்.
இருந்தும் மோடி என்ற அரசனும், மகிந்த என்ற அரசனும் சமரசம் செய்ய முயற்சித்தால் பழைய கதை மீண்டும் தொடர்ந்து செல்ல வாய்ப்பிருக்கிறது. அதிகார ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இடத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா இருப்பதால் கிடைத்திருக்கும் பெரும்பான்மை பலத்தை பாவித்து    ஈழத்தமிழர்கள் சார்பாக பாராளுமன்றத்தில் நிச்சியம் ஈழத்து விவகாரம் மறு பரிசீலனை செய்யப்படும் என்று நம்பலாம்.
நாடக மணி கருணாநிதியின் திமுகவிலிருந்து டில்லிக்கு எவரும் செல்லாததையீட்டியும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கை ஓங்கி பலப்பட்டிருப்பதையீட்டியும் சற்று ஆறுதல் கொள்ள முடியும்.
மற்றும்படி ஆர்வக்கோளாறு காரணமாக இப்போதைக்கு எதையும் சொல்லிவிட முடியாது, பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
காங்கிரஸையும் திமுகவையும் கை கழுவுவதற்காவது இந்த தேர்தல் உதவியிருக்கிறது என்பது பெரு மகிழ்வே.
ஈழதேசம் செய்திக்காக
ஊர்க்குருவி.

No comments: