Thursday, May 29, 2014

“ஈழத்” தமிழர் பிரச்சினையில் மோடி அரசும் சோனியா அரசும் இரட்டை குழந்தைகள். கனகதரன்.‏


ராஜீவ் ஜெயவர்தன, என்ற இரண்டு சர்வாதிகார அரசியற் தலைமைகளின் ஒப்புதலுக்கமைய வரையப்பட்டு ஈழத் தமிழர்களால் (அப்பொழுதும் அதன்பின் வந்தகாலங்களிலும் தொடர்ந்தும்)  நிராகரிக்கப்பட்டு புறந்தள்ளப்பட்டு கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே சவக்குழிக்குப் போய்விட்ட  13,வது திருத்த சட்டமூலம் ஈழத்தமிழர்களுக்கு அரசியல் மற்றும் பொரளாதார, இனமுரண்பாடு காரணமாக எழுந்த பகை மற்றும் படுகொலைகளுக்கு, ஈடுகட்டிவிடும் நல்லதீர்வாக அமையும் என்று இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை கொண்டிருப்பதாக அவரது ஆரம்ப பேச்சு ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் பெருத்த அச்சத்தையும் வெறுப்பையும் எரிச்சலையும், தோற்றுவித்துள்ளது..
ஈழத்தமிழர்களுக்கான ஒரு அரசியற் தீர்வுத் திட்டத்தை கொண்டுவருவதற்கு முன்னர், அங்கு நடைபெற்ற இன அழிப்பு நடவடிக்கை பற்றி ஒரு தெளிவான  முடிவுக்கு அயல் நாடான இந்தியா வரவேண்டும் என்பதே ஈழத்தமிழர்களின் முதற்தரமான வேலைத்திட்டமாக இருந்து வருகிறது. அதே கொள்கையை நீண்டகாலமாக தமிழ்நாட்டு மக்களும் கொண்டிருக்கின்றனர்.
அதற்கான போராட்டங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா மூலமாக சட்டசபைக்குள்ளும், நீங்கலாக ஒன்றிரண்டு தவிர்ந்த அனைத்து அரசியற் கட்சிகளும், பல்வேறு பொது அமைப்புக்களும் விலாவாரியான விளக்கங்களுடன் களத்தில் நிற்கின்றன,  இனப்படுகொலை குறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் தமிழர் தாயகப்பகுதியில் சுதந்திரமாக வாழ்வதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

ஈழத்தமிழர்கள்பால் உள்ளூர முழுமையான எதிர்ப்பு நிலையை கொண்டிருந்தாலும் திமுக கட்சியின் தலைவர் கருணாநிதிகூட சில இடங்களில் ஒன்றிப்போவதுபோலவே  தப்பித்தலுக்காகவாவது அரசியல் செய்து வருகிறார்.
எட்டுக்கோடி தமிழர்களை தன்னகத்தே கொண்ட தமிழ்நாடு அரசு, ஶ்ரீலங்கா அரசுத் தலைவர் ராஜபக்‌ஷவுக்கு எதிராக ஒன்றுக்கு பலமுறை அதற்கான தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறது.
நிலமைகளை புரிந்துகொண்டு பின் விளைவுகளை சிந்தித்து பேசுவதை விடுத்து புதிய இந்திய பிரதம மந்திரி மோடி, முன்னைய காங்கிரஸ் அரசின் கொள்கைகளை விஞ்சி அதற்கும் மேலான தமிழின எதிர்ப்பு தொனியில் ராஜபக்‌ஷவை அருகிருத்தி 13,வது சட்டமூலத்துக்குட்பட்ட தீர்வை ஶ்ரீலங்காவிலிருந்து  எதிர்பார்ப்பதாக சிலாகித்திருக்கின்றார்,
தேர்தலில் அதிக பெரும்பான்மை கிடைத்த தலைக்கனம் மோடியை அந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது.
அறுபதுக்கு அதிகமான ஆண்டுகள் அனர்த்தங்களை சந்தித்து சிங்களவனுடன் இணைந்து வாழமுடியாது என்ற முடிவுடன் ஆயுதப்போராட்டம் முப்பத்து ஐந்து ஆண்டுகள் இலங்கையில் தொடர்ந்து நடந்து வந்தது.
ஈழத்தில் தமிழர்கள் வேண்டாம் ஒத்துவராது என்று புறம்தள்ளிய ஒன்றை திணிப்பதற்கு சிங்கள ஏகாதிபத்தியவாதிகளையும்விட வட இந்தியாவே தொடர்ந்து மல்லுக்கட்டி வருகிறது.
ராஜபக்‌ஷ செய்துகொண்டிருக்கும் இன அழிப்பிற்கும், படுகொலை மற்றும் இராணுவ அட்டூழியங்களுக்கும், ஊக்கம் அளிக்கும் செயற்பாட்டை இந்தியா நிறுத்தப்போவதில்லை என்ற மோடியின் கயமையான செய்தியின் வெளிப்பாடே, ராஜபக்‌ஷவை முடிசூட்டுவிழாவுக்கு அழைத்தமை, மற்றும் ராஜபக்‌ஷவின் மிக நெருங்கிய நண்பரான சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆக்கப்பட்டிருக்கின்றமை என்பது நாளைய நடைமுறையை பார்த்து தீர்மானிக்க வேண்டிய ஒன்று அல்ல..

சர்வதேச மயமாக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இந்தியாவின் தலையீட்டினால் ஈழத்தமிழர்களுக்கான ஒரு தீர்வை சர்வதேசத்தால் எட்டிவிட முடியவில்லை. சர்வதேசம் ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு தீர்மானத்தை எட்டி இறுதிசெய்ய முயலும்போது அனைத்திற்கும் இடையூறாக இருந்து தமிழர்களுக்கான ஒரு தீர்வை பெற்றுவிட முடியாமல் இந்தியா சதி செய்தே வந்திருக்கிறது.
ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு தேடுவது என்ற பாவனையுடன், தமிழர்களுக்கான நியாயத்தை மண்போட்டு மூடி பழைய காங்கிரஸின் கொள்கைவழி தட்டிக்கழித்து ஶ்ரீலங்காவுக்கு அடிபணிந்து உக்கி இறந்து எவரும் கவனத்தில்க்கொள்ள விரும்பாத ஒரு விடயமான “13வது சட்டமூலத்தை பின்பற்றி தீர்வு காணப்படும் என்ற சுலோகம் மோடியால் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தொலைநோக்கு பார்வையுடன் கூடிய ஸ்திரமான வெளியுறவு கொள்கையை பின்பற்ற முடியாத இந்தியாவின் இயலாமை, ராஜபக்‌ஷவை சமரசம் செய்வதற்காக செயற்திறனில்லாத 13,வது சட்டமூலத்தை தூக்கி வைத்து உள்ளிருந்து காலம் கடத்தும் கருவியாக்கப்பட்டிருக்கிறது.
சற்று வித்தியாசமாக எதிர்பார்க்கப்பட்ட மோடியின் புதிய அரசாங்கமும் ஈழத் தமிழரின் பிரச்சனைக்கு கௌவைக்கு உதவாது என்று கழித்து புறக்கணிக்கப்பட்ட  13 வது திருத்த சட்டமூலத்தை தீர்வாக முன்வைக்க முனைந்திருப்பது மிகவும் மோசமான அணுகுமுறை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திர மோடி இலங்கை அதிபர் ராஜபக்ஷவுடன் 26ம் திகதி பிரதமராக பதவியேற்ற பின் சில நிமிடங்கள்  பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.  அந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த புதிய வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங், ஒன்றுபட்ட இலங்கைக்குள் 13,வது திருத்த சட்டமுல அறிவுறுத்தலின் பிரகாரம் தமிழர்கள் சம உரிமையுடனும் கண்ணியத்துடனும் வாழ வகை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதே வாய்ப்பாட்டைத்தான் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது  இந்திய கொள்கை வகுப்பாளர்களும் வெளியுறவுத்துறை அதிகாரிகளும் கோரஸ்ஸாக பாடியதை அனைவரும் கேட்டு வெறுத்துப்போனதுண்டு.
அது நடக்க முடியாத ஒன்று என்பது தெரிந்தும் ராஜபக்‌ஷவை சினப்படுத்தாமல் களிப்பூட்டுவதற்காக மோடி சிறுபிள்ளைத்தனமாக பேசியிருப்பதாகவே எடுத்துக்கொள்ள முடியும்.
13,வது திருத்த சட்டப் பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தியதாக சுஜாதா சிங் கூறியிருக்கிறார். அதாவது இலங்கையில் வாழும் ஈழத் தமிழரின் பிரச்சனைக்கு அது ஒன்றே ஒற்றை தீர்வாக அமையும் என்று நம்புவதாக கூறியிருக்கிறார்.
ராஜிவ் உயிருடன் இருந்த காலத்தில் இருந்து இத்தனை ஆண்டுகாலமும் அசைவாக்கம் இன்றி அப்படி ஒன்று இருப்பதே புரியப்படாமல்க் கிடந்த இலங்கை இந்திய ஒப்பந்த சரத்தான 13,வது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பல்லவியைத்தான் ஈழப்பிரச்சினையில் தெளிவில்லாத புதிய மோடி அரசும் முன்வைத்திருக்கிறது.

இந்திய புதிய அரசின் இந்த அறிவிப்பானது ஈழத்தமிழர்களின் அனர்த்தத்திலிருந்து இந்தியா விட்டு விலகாது என்றும்,  தரித்திரம் தொடரும் என்றும் மோடியின் புதிய அரசு பதவியேற்பின் அன்றே பிரகடனம் செய்திருக்கிறது.
13,வது அரசியல் சாசன திருத்தத்துக்கு காரணகர்த்தாவாக இருந்த ராஜீவ் உயிரோடு இருந்த போதே அது ஒன்றும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக இருக்காது என்று தமிழீழ விடுதலைப் புலிகளும்,  தமிழ் அரசியல் கட்சிகளும் தெள்ளத் தெளிவாக கூறிவிட்ட பின்னரும் இலங்கையிடம் மேலாதிக்கம் செலுத்துகிறோம் என்ற பொய்யான தோற்றத்தை உருவாக்க இந்திய ஆட்சியாளர்கள் காலந்தோறும் சொல்லி வரும் புரட்டைத்தான் மோடியின் மோட்டுத்தனமான ஆளுமையும் முன்வைக்கத் தொடங்கியிருக்கிறது.
இருபத்து ஏழு ஆண்டுகள், கால் நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய அரசுகள் ஒவ்வொரு சந்தற்பத்திலும் புலம்பி வரும் 13வது திருத்தம் என்பது இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒன்று. 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவும் இலங்கை அதிபராக இருந்த ஜெயவர்த்தனவும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக கூறிக்கொண்டு தமிழர் தரப்பின் அனுகூலம் இல்லாமல் ஒருதலைப்பட்ஷமாக செய்துகொண்ட ஒப்பந்தம், ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தம்  அதைத்தான் வரலாறு இந்திய- இலங்கை ஒப்பந்தம் என்கிறது.
1988ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது வடகிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் வரதராஜ பெருமாள் இந்தியாவின் பொம்மை முதலமைச்சராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்,  இவை எதனையும் மக்களும் விரும்பவில்லை விடுதலைப் புலிகள் இயக்கமும் ஏற்கவில்லை.
இந்திய அமைதிப்படை இலங்கையை விட்டு வெளியேறிய போதே வடகிழக்கு மாகாண முதல்வராக இருந்த வரதராஜ பெருமாள் இந்தியா உருவாக்கிய தீர்வுத்திட்டம் சரியான தீர்வு அல்ல என்று கூறி இலங்கையை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார். கிட்டத்தட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தமும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது அரசியல் சாசன திருத்தமும் அப்போதே சவக்குழிக்குப் போனது வரலாறாகிவிட்டது.  ராஜிவ் சவக்குழிக்குள் போவதற்கு முன்னரே 13,வது திருத்த சட்டமும் புதைகுழிக்குப் போய்விட்டது என்பதுதான் நிதர்சனம்.
1991-ல் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டபின்.   நரசிம்மராவ் அரசு அமைந்தது. அதன்பின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கிற இடத்தை இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணன், சிவ்சங்கர் மேனன் போன்ற அதிகாரிகள் ராஜிவின் மனைவி சோனியாவின் விருப்பத்திற்கேற்ப  கொள்கை களை வகுத்து தமது இஷ்டத்துக்கு மாற்றியமைத்துக்கொண்டனர்.
இந்த அதிகாரிகளின் குழப்பமான வெளியுறவுக் கொள்கைதான் இலங்கையில் சீனாவும் பாகிஸ்தானும் ஊடுருவி இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக நிலைத்து நிற்க காரணமாக இருந்தது.
ராஜீவ் கொல்லப்படதற்கு புலிகள்தான் காரணம் என்று சுப்பிரமணியன் சுவாமி மற்றும் நாராயணன் போன்றோர் மந்திராலோசனை செய்தனர், சிபிஐயும் அதன் இயக்குனர் கார்த்திகேயனும் இஷ்ட்டத்துக்கு புனைந்து சிலரை குற்றவாளியாக்கி சோடித்து வழக்கை முடித்தனர்,
அதனால் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிப்பது ஒன்றை மட்டுமே இலக்காக கொண்டு அதற்காக மட்டுமே இந்தியா இலங்கையைப் பயன்படுத்திக் கொண்டது. இலங்கை அரசு புலிகளை அழிப்பதை விரும்பினாலும் இந்தியா அகலக் கால் வைத்து  இலங்கைக்குள் நிலைகொள்ளுவதை இலங்கை ஆட்சியாளர்கள்  விரும்பவில்லை, மாற்று ஏற்பாடாக வீரியம் மிக்க வில்லங்கம் இல்லாத சீனாவை இலங்கை தனது ஆயுட்கால நண்பனாக உள்வாங்கிக்கொண்டது, தொடர்ந்து பாகிஸ்தானும் ஶ்ரீலங்காவின் நண்பனானது,
2007/ 2008/ 2009ஆம் ஆண்டுகளில் விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உதவியுடன் ஶ்ரீலங்கா முயன்றபோது இந்தியா அரசியல்ரீதியாக தலையை நுழைத்து முன்னணியில் நின்று ஶ்ரீலங்காவுக்கு முழு உதவியையும் வழங்கியது,  கைச்செலவுக்கு ஆயிரம் கோடி பண உதவியும் செய்தது.
குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என்று ஒன்றரை லட்சம் தமிழர் படுகொலைக்குள்ளாக்கப்பட்ட போதும் இந்தியாவின் வன்மம் குறையவில்லை.
போர் முடிவுக்கு வந்ததும் போர்க்குற்றங்களிலிருந்து தப்புவதற்காக ஶ்ரீலங்காவின் அனைத்து குற்றச்செயலகளுக்கும் இந்தியா பங்காளியாக இருந்து வந்தது.  காங்கிரஸ் வடக்கத்திய அரசியற் கட்சியாக இருந்தபடியால் சந்தேகத்தை போக்கி இனப்படுகொலைகளை மறைப்பதற்காக கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தை தன்னுடன் நண்பனாக காங்கிரஸ் அரசு இணைத்து படுகொலைகளை நடத்தி முடித்தது.
2014 ல் நரேந்திர மோடு புதிய பிரதமர் ஆவது உறுதி என்று ஊடகங்கள் தெரிவித்து உறுதிப்படுத்தப்பட்டபோது காங்கிரஸ் செய்த தவறுகளை மோடியின் அரசு செய்யாது என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நடைமுறை யதார்த்தம், இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளால் மூடி மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை குறித்து போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட்ட வேண்டும்; தமிழர் தாயகப்பகுதியில் சுதந்திரமாக வாழ்வதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சனை எல்லை கடந்து போய்க் கொண்டிருக்க   13வது திருத்தத்தம் ஈழத்தமிழர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் என்று மோடி அரசு சொல்லுகிறது.
ஈழத் தமிழர் பிரச்சனையில் மரண அடிவாங்கிய காங்கிரஸ், திமுக இருந்த இடம் தெரியாமல் மாண்டுபோய்விட்டது. மோடிக்கு பிரதமராகும் வாய்ப்பை காங்கிரஸின் தோல்வி உறுதிப்படுத்தியது. மோடி அரசும் அதே காங்கிரஸின் அடிச்சுவட்டை பின்பற்றுமாக இருந்தால் காலம் பதில் சொல்லாமல் விடப்போவதில்லை
ஈழதேசம் செய்திகளுக்காக, 
கனகதரன்.



No comments: