Thursday, May 22, 2014

பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) லண்டனில் புலிக்கொடி பாவிப்பதற்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.‏

மே 18 என்றால் நினைவுக்குவருவது முள்ளிவாய்க்கால் இராணுவ அட்டூழியம்,  ரசாயின ஆயுதங்களால் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் பொது மக்களின் கருகிய உடல்க் குவியல்கள்,  போராளிகள் மற்றும் பொதுமக்கள் இராணுவத்திடம் சரணடைந்த பின் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள், இசைப்பிரியா உட்பட பல பெண்களின் கற்பழிப்புடன் நடத்தப்பட்ட சித்திரவதைப் படுகொலைகள்  குழந்தைகளை காவுகொடுத்த தாய்மாரின் ஓலங்கள். பாலச்சந்திரனின் பலி.
படுகொலை காட்சிகள்,  மக்களின் விபரிக்க முடியாத அன்றைய அவலம்.  இன்னும் ஆயிரமாயிரம் பிரச்சினைகள் உள்ளே மண்டிக்கிடந்தாலும் சர்வதேசமோ ஐநா அவையோ நடைபெற்ற அனர்த்தத்தின் நியாய அனியாயங்களை வெளிப்படையாக விசாரித்து தீர்ப்பளிக்கவோ விவரணப்படுத்தவோ விரும்பவில்லை.
அது ஏன் என்ற கேள்வி தொடர்ந்து தமிழர்தரப்பில் எழுப்பப்பட்டே வருகிறது.  அந்த கேள்வியிலிருந்து பிறப்பெடுத்தவைதான்  விடுதலைப்போராட்டத்துக்கான ஈழத்தமிழர் ஆதரவுச் சங்கங்கள்.
சர்வதேசத்தின் சக்திவாய்ந்த ஒரு துரோக அரசியற் சதிவலை ஒன்று மறைந்து இருந்து செயற்பட்டு இடையூறு விளைவிப்பதே சர்வதேச உதாசினத்துக்கான உட் காரணம் என்பது அனைவருக்கும் புரிந்திருந்தாலும்,  புரியாததுபோல பாவனை செய்து, நீண்டகாலம் இழுபறியாக இருந்துவரும் சிக்கல் நிறைந்த ஒரு இனத்தின் விடுதலைப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் திடமான கொள்கை வேலைத்திட்டத்திலிருந்து மாறுபட்டு பரபரப்புக்கான வழிவகைச் செயற்பாடுகளில் தமிழ் அமைப்புக்கள் விழாவெடுத்து அவ்வப்போது ஏதேதோ செய்துவருகின்றன.
அந்த வகையில் விடுதலை போராட்டத்தை நேர்வுபடுத்துகின்றோம் என்று பல வழிகளில் மக்கள் மன்றத்தில் போராடிய  (BTF)  பிரித்தானிய பேரவை என்ற அமைப்பு கடந்த  மே 18 2014 அன்று லண்டனில் புலிக்கொடி பாவிப்பதற்குதடை விதித்து மக்களுடன் முரண் பட்டிருக்கிறது.,
1985ல் தமிழ்நாடு இந்தியாவில் திமுக தலைவர் கருணாநிதியால் மதுரையில் அங்குரார்ப்பணம் செய்து தொடக்கப்பட்ட TESO, என்ற அமைப்பும் ஆரம்பத்தில் தமிழீழத்துக்கான விடுதலை ஆதரவு அமைப்பு, என்று தொடங்கி 2011 தேர்தலின்போது “இலங்கை தமிழர்களுக்கான மருந்து தடவும் அமைப்பு”  என்று மாற்றியமைத்தார் என்பது ஞாபகத்துக்கு வருகிறது..
இயல்பான யதார்த்தத்துடன் சொல்லப்போனால் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களையும். விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், மாவிரர்களையும் புறந்தள்ளிவிட்டு செய்யப்படும் ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைக்கான சமரசமான செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றியளிக்கப் போவதில்லை.  ஏனென்றால் அவைதான் நாங்கள் நீண்ட நெடுங் காலங்களாக பட்டறிந்த அனுபவமாக எம் முன் குவியலாக கிடக்கிறது.
ஒருவேளை ஒரு தீர்வை நோக்கி செயற்பாடுகள் நகர்த்தப்பட்டாலும் அது ஈழத்தின்  வரலாற்று அடி நாதத்தை தழுவிய நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்ப்பாக இல்லாமல் ஒரு தற்காலிக பொம்மைத்தனமான தீர்வாகவே இருக்கும்.  ஏனென்றால் நடைமுறைகளும் செயற்பாடுகளும் நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் அப்படியான அபத்தமான செய்திகளையே தினம் தினம் சொல்லுகின்றன.
விடுதலைப்புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாக இருந்துவிட்டுப்போகட்டும்.  அதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய  கொள்கைகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று எவரும் தடைசெய்யவில்லை,  தடை செய்யவும் முடியாது.
ஆயுதம் தரிப்பது,  வன்முறைகளை கையாளுவது முரண்பட்டதாக சர்வதேசம் கூறக்கூடும்.  அந்த நடைமுறை மவுனிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்கமே அறிவித்து ஆண்டுகள் ஐந்து முடிவடைந்துவிட்டன.
அவை விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரத்துக்குட்பட்ட அரசியல், அதுவேறு இது வேறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் தெளிவுபெற வேண்டும்.
இன்றைக்கு அப்பேற்ப்பட்ட செயற்பாடுகளை முனைப்பு பெறவேண்டுமென்று எவரும் முனைப்புக்கொள்ளவுமில்லை.
மாறாக சனநாயக மரபுகளுக்கு உட்பட்டு தமிழ் ஈழத்துக்கான நீதியான நியாயமான ஒரு தீர்வை சர்வதேசத்தின்முன் வேண்டிநிற்பதற்கான போராட்டங்களே தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சர்வதேசத்தின் பலபாகங்களிலும் ஜெனீவா முன்றலிலும் தேசியத்தலைவரின் உருவப்படங்களும் புலிக்கொடிகளும் பேரணிகளின்போதும் பொதுக்கூட்டங்களின்போதும் பயன்படுத்தப்பட்டே வருகிறது.
2009ன் பின் ஈழமண்ணின் மீட்சிக்கும்,  ஈழத்தமிழ் இனத்தின் விடுதலைக்காகவும் குரல் கொடுப்பதற்காக என்று சத்தியம்செய்து கூறிக்கொண்டு பலநூறு அமைப்புக்கள் புற்றீசல்போல் புறப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன, ஆனால் அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொள்கை சாராததாக இருந்தால் எவரும் திரும்பிப்பார்க்கத் தயாராக இல்லை என்பதே யதார்த்தம்,
லண்டனில்(மே 18)   முள்ளிவாய்க்கால் நினைவு தினம் நடைபெற்றபோது BTF பிரித்தானிய தமிழர் பேரவை அமைப்பினர் புலிக் கொடி ஏற்ற முடியாது என்றும், அது பிரித்தானிய அரசியல்வாதிகள் மத்தியில் அதிருப்த்தியை ஏற்படுத்தும் என்று  கூறி புலிக்கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அந்த நடைமுறை பெருத்த அதிர்ச்சியையும் பிரித்தானிய பேரவையின்மீது பெருத்த நம்பிக்கையீனத்தையும் ஒருபுறம் அச்சப்படும்படியான சந்தேகங்களையும் கிளப்பிவிட்டிருக்கிறது.
பண்டைய காலத்திலிருந்தே தமிழினத்தின் அடையாளம் புலிக்கொடி என கொண்டாடப்பட்டு வருகிறது,
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பாவனையில் வைத்திருந்த புலிக்கொடிக்கும் சனநாயக போராட்டங்களின்போது பயன்படுத்தப்படும் புலிக்கொடியின் “இலச்சினை”க்கும் நிறைய வேறுபாடு உண்டு என்பதை அமைப்பில் அங்கம் வகிக்கும் கற்றுணர்ந்தவர்கள் முதலில் கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஒரு இனத்தின் கலாச்சாரம் அவ்வினத்தின் கொள்கை சார்ந்த அக நிறம்,  பண்பு,  வெவ்வெறு அடையாளங்கள் இருட்டடிப்பு செய்ய முற்பட்டால் அவ்வினத்தை அழிப்பதற்கான வேலைத்திட்டமாகவே அதை கருத முடியும்.
இன்று நீண்டு நெடிந்த ஒரு போராட்டத்தின் ஒரு திருப்பத்தில் ஈழத்தமிழ் இனம் பயணித்துக்கொண்டிருக்கிறது.  ஈழத்தமிழ் இனத்தின் விடுதலையை வென்றெடுத்துவிட வேண்டுமென்ற இராசதந்திரம் அவசியமான ஒறுதான்,  அதற்காக மூலவேரை கறையான் அரிக்க விட்டுவிட்டு இலைக்கு மருந்துபோடுதல் விவேகமற்றதாகவே பார்க்கப்படுகின்றது.
பிரித்தானியாவில் புலிக்கொடி பாவிப்பதற்க்கு சட்டப்படி அங்கீகாரம் நீதி மன்றத்தால் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒருசில அரசியல்வாதிகளை திருப்த்திப்படுத்துவதற்காகவும் வேறு காரணங்களுக்காகவும்  BTF பிரித்தானிய தமிழர் பேரவை ஈழத்தமிழர்களின் உயிரோட்டமான புலிக்கொடிக்கு தடைவித்தித்ததானது கடும் கண்டனத்துக்குரியது என்பதை பணிவுடன் இந்தப் பதிவு தெரிவித்துக்கொள்ளுகின்றது.
இந்த விடயத்தை இத்துடன் விட்டுவிட முடியாது,  இப்படியான குளறுபடியான செயற்பாடுகள் தொடரும்பட்ஷத்தில் புலம்பெயர் தேசங்களில் முனைப்பு பெற்று நிற்கும் அரசியல் எழுச்சி மந்தப்படுத்தப்படும் அபாயம் தடுக்கமுடியாமல் போய்விடும்.  மக்கள் சோர்வடைந்து முடங்கிவிடும் அபாயத்தில் இப்பேர்ப்பட்ட செயற்பாடுகளே முன்னிலை வகிக்கின்றன.
விடுதலைக்கான போராட்டத்தில் மக்களின் பங்களிப்பு குறைந்தபின் அமைப்புக்கள் ஒன்றும் செய்துவிடமுடியாது.  அப்பேர்ப்பட்ட சீரழிவை தோற்றுவிக்கும் அபாயம் இருப்பதால் பிரித்தானிய பேரவை புலிக்கொடி பாவிக்க வேண்டாம் என்று தடுத்ததற்கான நியாயமான விளக்கத்தை தாமதமின்றி பகிரங்கமாக வெளியிடவேண்டும். அல்லது மக்களின் மன எழுச்சியை மதித்து விலகி வழிவிடுதல் கூட நாகரீகமானதாக கருதப்படுகிறது.
இனிவரும்காலங்களில்  இப்படி தாந்தோன்றித்தனமான மக்களின் மனவெழுச்சியை உடைக்கும் செயற்பாடுகளை சிந்தித்து மக்களின் கலந்துரையாடல்களின் பின் நடைமுறைக்கு கொண்டுவருவதே உகந்ததாகும்.
தேசியத்தலைவரையும்,  விடுதலைப்புலிகளையும்,  விடுதலை போராட்டத்தையும்,  மாவிரர்களையும்,  மடிந்த மக்களின் சவக்குவியலையும்,  காட்டி அமைப்புக்களை உருவாக்கிவிட்டு அமைப்பு நடத்துவதற்கான தற்காலிக அங்கீகாரம் அவ்வவ் நாடுகளில் கிடைத்தபின் முன் சொல்லப்பட்ட அனைத்தையும் இருட்டடிப்பு செய்து மக்கள் மனவோட்டத்துக்கு எதிராக அரசியல் செய்வதென்றால் அந்த அரசியலுக்கும் ராஜபக்‌ஷவின் அரசியலுக்கும் வேறுபாடு இருக்க முடியாது.
ஈழதேசம் செய்திகளுக்காக.
கனகதரன்.

No comments: