Monday, March 24, 2014

இனப்படுகொலை, தடுப்புமுகாம், இராணுவ பயிற்சி சித்திரவதை வல்லுறவு, சிங்கள விஸ்தரிப்பு, படைமுகாம்கள் பரவலாக்கம், இவைகளை தடுக்க வழியில்லை 2014 புதிய ஜெனீவாவில் தீர்மானம்?‏


dcp5155832 
 
இம்முறையும், (2014, மார்ச்) ஜெனீவா அமர்வு தன்னிசைவுக்கு ஒத்தாற்போல் போர்க்குற்ற விசாரணையை திசைதிருப்பும் அனைத்து முயற்சியிலும் ஶ்ரீலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றுவிட்டதாகவே கிட்டத்தட்ட  நடந்து முடிந்த நிகழ்வுகள் கோடி காட்டியிருக்கின்றன. 

ஜெனீவா அமர்வின் மூலம் ஏற்படவிருக்கும் சர்வதேச விசாரணை என்ற அச்சுறுத்தலுக்கு ஶ்ரீலங்கா அரசாங்கம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை என்றும் ஜெனீவா அமர்விலிருந்து வெற்றியுடன் வெளிவருவோம் என்றும் அதற்கு தயாரான நிலையில் தாம் இருப்பதாக ஏற்கெனவே ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ, மற்றும் ஜி எல் பீரிஸ் ஆகியோர் கூறியிருந்தனர்.

ராஜபக்‌ஷ கூறியதன் உள் அர்த்தம் என்ன என்பது அப்போது புரியாத புதிராக தென்பட்டாலும், தமிழர் தரப்பிலிருந்துதான் இனப்படுகொலையாளியை பிணையெடுப்பதற்கான காய் நகர்த்தல்கள் இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் கசிந்து அதிர்ச்சியூட்டக்கூடிய சில தகவல்கள் இப்போ வெளிவந்து கொண்டிருக்கிறன.

அனைத்து வாத பிரதிவாதங்களும் இறுதி செய்யப்பட்டு இன்னும் சில நாட்களில் ஜெனீவா விவாத அரங்கு வழமைபோல இறுதி வாக்கெடுப்பு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவடைய இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்ததுபோல போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணை  என்ற பதம் தள்ளி வைக்கப்பட்டுவிட்டதாகவே கணிப்பீடுகள் வெளிவருகின்றன.
இதுவரை சம்பிரதாய பூர்வமாக அனைத்து தரப்பினதும் வாதப்பிரதிவாதங்கள் உள்வாங்கப்பட்டு பரிசீலனை முடிவெடுத்தல் என்ற கட்டத்தில் நிலுவையில் இருந்துகொண்டிருக்கிறது.

இதுரை நடந்து முடிந்த தமிழ் அரசியற் தலைமைலின் அரசியற் சதித்திட்டங்கள் அனைத்தும் பல ஆய்வுகளில் எழுதப்பட்டுவிட்டதால் அவைகள் இங்கு சுட்டிக்காட்டப்படவில்லை.

இங்கு முக்கியமாக கவனிக்கக்கூடியது  ஶ்ரீலங்கா அரச தரப்பின் நிலைப்பாடு, மற்றும் தமிழர்தரப்பு எடுத்துவைக்கும் வாத பிரதி வாதங்கள், அத்துடன் சர்வதேச மனித உரிமை ஆணயாளரின் பகுப்பாய்வு அறிக்கை மற்றும் மனித உரிமை மீறல், போர்க்குற்றத்துக்கான ஆதாரங்கள் ஆவணங்கள், அடுத்து சர்வதேச நாடுகளின் விவாத அழுத்தங்களும் சார்பு வாக்கெடுப்பு நிகழ்வும் இடம்பெறும்.

2012, ம் ஆண்டு ஜெனீவா அமர்வு தமிழர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை அப்போது தோற்றுவித்திருந்தது. இருந்தும் தமிழ் அரசியற் தலைவர்களின் கபடம் மற்றும் இந்தியாவின் சூழ்ச்சி ஆகியவை மேலோங்கி தீர்மானம் அடிபட்டு போயிருந்தது. தொடர்ச்சியாக வந்த 2013 தீர்மானமும் உள்ளுடன் அனைத்தும் வஞ்சகமாக உறிஞ்சப்பட்டு  வெற்றுக் கூடு ஒன்று மட்டும் உருப்படி என்ற கணக்கில் தீர்மானம் என்ற பெயரில் வெளியிடப்பட்டு காலம் கடத்தப்பட்டு ஏமாற்றப்பட்டு விட்டது.

நடப்பிலிருக்கும் ஜெனிவா அமர்வு இனப்படுகொலை குறித்து சர்வதேச தலையீட்டுடன் சர்வதேச தீர்ப்பாயத்தை நோக்கிய காத்திரமான ஒரு நிலைப்பாட்டை வெளிக்கொண்டுவரும் என்று முள்ளிவாய்க்கால் முற்றுகைக்குள் கொல்லப்பட்ட மற்றும் காணாமல்ப்போன குடும்ப உறுப்பினர்களும் அரசியல்வாதிகள் தவிர்ந்த மனிதாபிமானிகளும், எதிர்பார்த்து காத்திருந்தனர்,

தடுப்பு முகாம்களில் இருப்பவர்களும்,  இராணுவப்பயிற்சி என்றபெயரில் வலுக்கட்டாயமாக கொண்டுசெல்லப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு பாலியல் வன் கொடுமைகளை அனுபவித்துவரும் பெண் பிள்ளைகளின் பெற்றோரும் ஜெனீவா மன்றம் தீர்மானிக்க இருக்கும் முடிவையொத்து தங்களுக்கான நீதி கிடைக்குமென்று வானளாவ எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அவைதான் ஈழத் தமிழ் மக்களின் மனவோட்டம் என்பது திரும்பவும் இங்கு சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல.  ஜெர்மன் நாட்டின்  பிரேமன் நகரில் கூடிய மக்கள் தீர்ப்பாயமும் 2013 டிசம்பர் 10 ஆம் தேதி அன்று ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.   அரசியற் தீர்வு அதிகாரப் பகிர்வு என்பது ஒருபுறமிருக்க,  நடந்து முடிந்த மனித படுகொலைக்கான  சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே  மனித குலத்தில் மனிதாபிமானத்துடன் இருக்கும் அனைத்து தரப்பினரின் அறுதி விருப்பாக காணப்பட்டது.

ஆனால் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் திருவாளர் சம்பந்தன் சர்வதேச விசாரணை என்ற விடயத்தை புறந்தள்ளிவிட்டு இந்தியா ஶ்ரீலங்காவின் சப்பாணியாகி 13 வது திருத்த சட்டத்துக்குட்பட்ட தீர்வுத்திட்டத்தை முன்மொழிந்து ராஜபக்‌ஷ்வை காப்பாற்றுவதே குறியாகி அதையே ஜெனீவாவில் முன்னிலைப்படுத்துவதில் குறியாக நின்று தமிழர்களுக்கு துரோகமிழைத்து வருகிறார்.

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் திரு சிவாஜிலிங்கம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய தமிழ்ச் சமூகத்தின் சமூக அரசியற்போராளிகள் பல களங்களிலும் ஜெனீவாவின் விவாத அரங்கங்களிலும் பாதிப்புக்குள்ளான அனைத்து தமிழர்களின் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக  போர்க்குற்ற விசாரணை முன்னிலைப்படுத்தி நகரவேண்டும் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருந்தும் ஈழத் தமிழர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் போராளிகளாக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  வீச்சு மிக்க அரசியற்போராளிகளான சிவாஜிலிங்கம், மற்றும் அனந்தி சசிதரன் அவர்களை மட்டந்தட்டும் விதமாக தேசியக் கூட்டமைப்பின் நியமன உறுப்பினர் சுமந்திரன் அவர்களை முதன்மைப்படுத்தி ஜெனீவாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தார்,

ஜெனீவாவின் பல்வேறு அமர்வுகளின்போது சக அரசியற் போராளியான அனந்தி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சுமந்திரன் இடையூறாக இருந்தார் என்று அனந்தி குற்றம் சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 17-03 2014 ஞாயறு அன்று தேசியக்கூட்டமைப்பின் நியமன எம்பி சுமந்திரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பா உ ஶ்ரீதரனை அழைத்துக்கொண்டு ஜெனீவாவிலுள்ள ஶ்ரீலங்காவின் வதிவிடப்பிரதிநிதிகளின் அலுவலகத்துக்குச் சென்று அங்கு நடைபெற்ற விருந்து ஒன்றில் கலந்து பின் முக்கியமான கலந்துரையாடலில் பங்குபற்றி திரும்பியிருக்கிறார். 

அந்த கலந்துரையாடலின் போது ராஜபக்‌ஷ்வின் பிரதிநிதிகள் ஜனாதிபதி சார்பாக அரசியற் தீர்வுபற்றி  சுமந்திரனுடன் பேசியதாகவும் 13, வது திருத்த சட்டத்திற்கமைய அதிகாரங்களை வழங்குவதற்க்கு ஜனாதிபதி முன்வந்திருப்பதாகவும் இனப்படுகொலை பற்றிய சர்வதேச விசாரணையை விடுத்து உள்ளூர் விசாரணைக்கு சமரசப்பட்டுக்கொண்டதாகவும் உள்ளூர் விசாரணையை ஒரு கால் வரையறையை நியமித்து விசாரித்துக்கொள்ள உடன்பட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது.

அதன் பின்னணியில்
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில் இன்னும் ஒரு மாற்றம் செய்யப்படலாம் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி ஒன்றை பிரசுரித்துள்ளது. 

இறுதிப்போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஒரு காலவரையறை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த மாற்றமாக இருக்கும் என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாடுகளும், சர்வதேச தொண்டர் அமைப்புக்களும், சர்வதேச மனித உரிமை ஆணையமும் ராஜபக்‌ஷ்வுக்கு எதிராக மனித குலத்துக்கு எதிரான குற்றவாளியாக பிரகடனப்படுத்திய பின்னரும் காலம் தாண்டிய உள்ளூர் விசாரணைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு உடன்பட்டிருக்கிறது என்றால் தமிழ் தேசியக்கூட்டமைப்பும் மனித குலத்துக்கு எதிரான தீய சக்தியே.

உடனடியாக தமிழர்களுக்கான அரசியற் செயற்பாட்டில் நேரெதிரான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றய உறுப்பினர்கள் அனைவருக்கும் உண்டு.


ஈழதேசம் செய்திகளுக்காக   
கனகதரன்.

Friday, March 7, 2014

ஜெனீவாவில் இனப்படுகொலையாளி ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்படும் தொடர் வாய்தாவுக்கு எதிராக ஏன் அதிகார மையங்களின் முன் போராட்டம் நடத்தக்கூடாது?‏

dcp5258
கூடக்குறைய 1980, களிலிருந்து 2009,  மே மாதம் வரை ஈழத்தமிழினத்தின் வாழ்வியல்,   மற்றும் கலாச்சாரம் மொழி, பாதுகாப்பு அரசியல்,   உள்ளிட்ட  எல்லாமாக “தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்”  என்ற கோட்பாட்டுடன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மக்களோடு மக்களாக தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் தலைமையில் முப்பது வருடங்களுக்கு மேலாக அனைத்து வகையிலும் போராடி வந்தது.
ஐநா,  முதற்கொண்டு (சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்), மற்றும் சர்வதேச நாடுகள்,  பல்வேறு நாடுகளின் தூதுவர்கள் அனைவரும் இன்றுபோலவே அன்றைக்கும் ஈழதேச அரசியல், மற்றும் பாதுகாப்பு,   பொருளாதாரம் இன்னபிற அனைத்தையும் உறுதிப்படுத்துவதற்கான  வாக்குறுதிகளையும் வரைவுகளையும் ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கி வந்தனர்.
(நேரடி குளப்பவாதிகளாக அள்ளி வைப்பவர்களாக இந்தியாவும்,  இந்திய தமிழகத்து அரசியல்வாதிகளும் தொடர்ந்து இருந்து வந்தனர், இருந்தும் வருகின்றனர்.)
ஆலோசனைகள் திட்டங்கள் அனைத்தும் அன்றைக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்பட்டதும்,  ஏற்றுக்கொள்ளப்படாததும் எவ்வகையில் உணரப்பட்டதோ அதே மனநிலையில்த்தான்  ஈழதாயகம்,   மற்றும் புலம்பெயர் மக்கள்,  மற்றும் தமிழகத்து தமிழ் மக்கள் ஆகியோரின் மனநிலை இன்றைக்கும் இருந்து வருகிறது,
வித்தியாசம் என்னவென்றால் அன்றைக்கு உறுதியுடன் பேச்சுவார்த்தகளில் பங்குபற்றியவர்கள் என்று பார்த்தால்,  நோக்கத்துடன் இன விடுதலைக்காக திடமாக செயற்பட்ட  விடுதலைப்புலிகள் நம்பிக்கையுடன் இருந்து வந்தனர்,  இன்றைக்கு பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுபவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் சந்தற்பவாத  அரசியல் செய்யும் சம்பந்தர்,  சம்பந்தரின் வாரிசுகளாக களம் இறக்கப்பட்டவர்களான நியமன எம்பி சுமந்திரன், வடக்கு மாகண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஆகியோர் இருந்து வருகின்றனர்,
குறிப்பிட்ட இந்த மூவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தால் அங்குரார்ப்பணம் செய்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு விரும்பத்தகாத செயலாக்கத்தை செயற்படுத்தி வருவதாக மக்கள் வருத்தத்துடன் வெறுப்பை தெரிவித்து வருகின்றனர்.
மக்களின் மனநிலை எப்படியோ,   அப்படியே அமைப்பு ரீதியாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி,  தமிழ் தேசியக்கூடமைப்பின்  (ரெலோ)  அங்கத்தவரான சிவாஜிலிங்கம். வடக்கு மாகாணசபையில் விருப்பு வாக்குக்களை அதிகம் பெற்ற உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் சம்பந்தர், சுமந்திரன், விக்கினேஸ்வரன் ஆகியோரின் நடவடிக்கைகளை மிக வன்மையாக கண்டித்து நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்தும் வருகின்றனர்.
இருந்தும் சம்பந்தன் இந்தியாவின் கைப்பொம்மையாக இருந்து வருவதால் அவரே ஈழத்தின் அரசியலில் முன்னிலைப்படுத்தப்பட்டவராக இந்தியாவால் உருவகப்படுத்தப்பட்டிருக்கிறார், ஒருவகையில் ஶ்ரீலங்கா ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவும் தமிழர் தரப்பு அரசியற் தலைமைத்துவம் சம்பந்தராகவே இருக்க அனைத்து நகர்வுகளையும் செயற்படுத்தி வருகின்றனர்.
வழமைபோல வருடா வருடம் வருடாந்த திருவிழாபோல் நடைபெற்று வரும் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 25 வது கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது.
அரசியல் காரணங்களுக்காக பிரித்தானியப்பிரதமர் உணர்ச்சி வசப்பட்டு  பாராளுமன்றத்தில் கூறியவை அனைத்தும் அடிபட்டுப்போய்,  எதிர்பார்த்தபடியே ஈழப்பிரச்சினை  தொடர்ச்சியான அடுத்த வாய்தாவுக்கான அனைத்து ஆரம்பவேலைகளும் ஜெனீவா அரங்கத்தில் கிறிஸ் தடவி பூட்டுவதற்கு தயார்ப்படுத்தப்பட்டுவிட்டன.dcp8858
பயந்தவர்போல (செயற்கையாக) பதுங்குவதுபோல ராஜபக்‌ஷ தரப்பும்,  நரித்தனமான நாடகங்களுடன் இந்தியத் தரப்பும். கடுமையான நடவடிக்கைக்கு தயாரனவர்கள்போல அமெரிக்க இங்கிலாந்து தரப்பும் அதன் பின்னால் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவும்  ராஜபக்‌ஷவுக்கான அடுத்த வாய்தாவுக்கான அனைத்து திட்டமிடல்களையும் முடித்த நிலையில் வாய்தாவுக்கான கட்டளையை பிறப்பிக்க  காத்துக்கொண்டிருக்கின்றனர்.
சம்பந்தர் அனுப்பி வைத்த சுமந்திரன் கோட் சூட் அணிந்து அனைத்து காட்சிகளையும் அங்கீகரித்த நிலையில் தனது கபடத் திட்டத்தை நிறைவு செய்திருக்கிறார்.
மக்கள் எழுச்சி ஒன்று மட்டுமே எதையும் மாற்றி எழுதும் வல்லமை கொண்டது.
2009 ல் போரை நிறுத்தும்படியும்,  உரிமைக்கான  நீதி கேட்டும் சர்வதேச அனைத்து நகரங்களிலும் மக்கள் போராட்டங்கள் கடலலையென திரண்டது.  உறை பனிக் குளிரையும் பொருட்படுத்தாது உண்ணாவிரதங்கள் சர்வதேசத்தை திரும்பிப்பார்க்க வைத்தது, தமிழ்நாடு குமுறி கொந்தளித்து போராடியது,  ஈற்றில் பல உயிர்கள் தீக்குளித்து தமது ஆற்றாமையை வெளிப்படுத்தியது.dcp253
சென்ற ஆண்டுகூட  இந்திய அராஜக ஆட்சியாளர்களையும் கூட்டாளிகளையும்  தமிழகத்து மாணவர்களின் உறுதியான போராட்டங்கள்  அடிபணிய வைத்து ஆட்டங்காணச் செய்தன.
ஜெனீவாவில் எதிர்பார்த்திருந்த தமிழர்களுக்கான நீதி படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக போராடுவதற்கான அடிப்படை அனுகூல உரிமைகள் தமிழர்களான எமக்கு நிறையவே இருக்கின்றன,
இரண்டு விடயங்களை மட்டும் எடுத்துக்கொண்டாலே அனைத்து அதிகார மையங்களையும் அசைக்கக்கூடிய வகையில் வீதியில் இறங்கி போராடுவதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கின்றன.
சென்ற ஆண்டு பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் பொதுநலவாய அமைப்புக்களின் கூட்டத்தில் பங்குபற்றவேண்டாம் என கோரிக்கை வைத்து பிரித்தானிய தமிழ் அமைப்புக்கள் போராட்டம் நடத்தின,  அந்த போராட்டத்தை மதித்து டேவிட் கமரூன் சில வாக்குறுதிகளை தமிழ் அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தார்.
தான் மாநாட்டுக்கு சென்று ஈழ தமிழர்களின் வேதனை செறிந்த கோரிக்கைகளை ராஜபக்‌ஷ்விடம் கேள்வியாக எழுப்புவேன் என்றும் நடந்து முடிந்த மனித படுகொலைகளுக்கான நியாயத்தை உறுதி செய்வேன் என்றும் வாக்குறுதி அளித்து இலங்கைக்கு பயணம் செய்தார்,
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் அவர்களின் இலங்கை பயணத்தின் பலன் ஈழமக்களுக்கு இனிப்பான செய்தியாக  மூன்று மாத கெடு என்ற வாக்கியம்  ஒன்று மட்டும் இன்றைக்கும் பசுமையாக இருக்கிறது.
அனால் டேவிட் கமரூம் விதித்த கெடு எதுவும் ஐநா அரங்கத்தில் செயற்படுத்தப்படவில்லை,  மாறாக ஶ்ரீலங்காவின் அதே பழைய பல்லவியை டேவிட் கமரூன் வழிமொழிந்திருப்பது போலவே நடவடிக்கைகள் திசை மாற்றப்பட்டிருக்கின்றன.
dcp24165மனித உரிமை ஆணையாளர் நவிப்பிள்ளை அம்மையார் பெருத்த எதிர்பார்ப்பை நிறைவு செய்வதுபோன்ற பிரசங்கங்களுடன் இலங்கை பயணம் எதிர்பார்க்கப்பட்டது,  இன்றைக்கு இலங்கை /இந்தியா நினைத்தவாறே அனைத்தும் திசைமாற்றப்பட்டிருப்பதாக அஞ்சுமளவுக்கு ஐநா கூட்டத்தொடர் திருப்பப்பட்டிருக்கிறது.
ஏன் வருடா வருடம் தீர்மானம் என்ற பெயரில் பெருத்த இனப்படுகொலையாளிக்கு  வாய்தா வழங்கப்படுகிறது?
நிறைவேற்ற முடியாவிட்டால் ஏன் தீர்மானத்தை இந்தப்பெரிய வல்லரசுகள் வரைவாக வெளிவிடுகின்றன?
அபிவிருத்தி என்ற பெயரில் இன்னும் ஒன்றை மறைத்து ஏன் முட்டாக்கு போடவேண்டும்?
அபிவிருத்திக்காக கற்பழிப்புக்களையும் படுகொலைகளையும் சமன்செய்து கழித்துவிட முடியுமா,?
அபிவிருத்தியை அபிவிருத்தியாகவும் படுகொலைகளை படுகொலைகளாகவும் பிரித்துப்பார்க்க ஏன் முடியவில்லை?
கண்முன்னே நடைபெற்ற முற்று முழுதான மனித உரிமை மீறல்,  நெறிமுறை மீறிய விஷ ஆயுதப்பாவனை,  போர்க்குற்றம்,  சரணடைந்த பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் பலாத்காரம் வல்லுறவு அதன்பின்னரான படுகொலைகள்,  சரணடைந்த போராளிகள் மீது நடத்தப்பட்ட மனித நேயமற்ற படுகொலைகள்,  இவை அனைத்தும் சாட்சி ஆவணங்களாக குவிக்கப்பட்டிருக்கிறது.  “காணாமல்ப் போனவர்கள் போக”,  கொல்லப்பட்டவர்களின் உறவினர்களின் முறைப்பாடுகள் உள் நாட்டிலும் வெளி நாடுகளிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது,
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும், மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் அவர்களும் சென்ற வருடம் இலங்கைக்கு நேரிடையாக சென்று பார்வையிட்டு ஈழ மக்களுக்கு நீதி வேண்டும் என்ற கருத்துப்பட தத்தமது எதிர்ப்புக்களை அறிக்கைகளாகவும் கண்டனங்களாகவும் பதிவு செய்திருக்கின்றனர்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஜெனீவா மன்றத்தில் திட்டமிட்டு ஒரு கொடுங்கோலனுக்கு அனுசரணை அளித்து வாய்தா வழங்குவதற்கு எதிராக நாம் போராட தள்ளப்பட்டிருக்கிறோம்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்கள் காலதாமதமின்றி இந்த போராட்டத்தை தொடக்கி வைப்பார்களாயின் 2009 ம் ஆண்டு நிலையை சர்வதேசத்து அனைத்து நகரங்களில் இருக்கும் தூதரகங்களுக்கு முன் கொண்டுவர முடியும்.dcp28585
வாய்தாவுக்கு வழி விடாதே என்று அமெரிக்காவிடமும், வாக்குறுதி என்னவாச்சு என்று இங்கிலாந்திடமும்,  மனித உரிமை என்னாச்சு என்று ஐநா மனித உரிமை ஆணையாளரிடமும்  கேள்வி கேட்க அனைத்து தகுதியும் நமக்குண்டு
தமிழகத்து மாணவர்களும் போராட்டத்திற்கான ஆயுத்தங்களில் இருப்பதாக மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன அனைத்தும் ஒன்று திரளும் பட்சத்தில் இனப்படுகொலையாளி ராஜபக்‌ஷவுக்கான வாய்தா மறு பரிசீலனை செய்யப்படலாம்.
நாங்கள் போராடாமல் நல்லவர்களானாலும் வேறு நாடுகள் எமக்காக போராடா,
ஈழதேசம் செய்திகளுக்காக
கனகதரன்.