தமிழ்ச்சமூகம் பெரும் பதட்டநிலையில் எதிர்பார்த்த முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரின், அனீதியான தூக்கு தண்டனையை, இரத்து செய்யும்படி,

தமிழக மற்றும் உலக தமிழ் மக்களின் மனிதாபிமான கோரிக்கை தமிழ்நாடு அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

முதல்வர் ஜெயலலிதா அவர்களின் அரசியல் வரலாற்றில் இது ஒரு உணர்வுபூர்வமான வரலாற்று சிறப்புமிக்க சம்பவமாக கருதலாம்.

2008 ம் ஆண்டிலிருந்து 2009 மே வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் மடிந்துபோவதற்கு (ஈழப்படுகொலை) நாடகமாடிய பச்சோந்தி கருணாநிதியின் செயற்பாட்டையும், இன்றய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எடுத்திருக்கும் திடமான மனிதத்தன்மையான நிலைப்பாட்டையும் தமிழ் உலகம் ஒருபோதும் மறக்கமுடியாது.

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் உணர்வுபூர்வமான அந்த முயற்சிக்கு முதற்கண் தமிழ் சமுதாயம் சிரந்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறது.

முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்று தெரிவித்தார்.

இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர். வேறு வழியின்றி திமுக வும் சுயநலன் கருதி தீர்மானத்தில் இணைந்து கொண்டிருக்கிறது.

குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டால், 3 பேரின் தூக்குத் தண்டனையும் இரத்தாகும் வாய்ப்புள்ளது.

முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இதேநேரம் ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது.

தண்டனைக்கைதிகளின் கருணைமனு, இந்தியாவின் முதல் பிரஜையான ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு, தண்டனை உறுதிப்படுத்தப்பட்டு தூக்குத்தண்டனைக்கான நாள் குறிக்கப்பட்டிருந்தும், சென்னை ஹைக்கோர்ட் குற்றஞ்சாட்டப்பட்ட மரணதண்டனை கைதிகளை 8 வாரங்கள் காலதாமதப்படுத்தி உத்தரவிட்டதிலிருந்து, ஜனாதிபதியின் கட்டளை மீள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக்கூடியது ஒன்று என்பதை சென்னை நீதிமன்றத்தின் செயல் உணர்த்துகிறது.

இந்த நேரத்தில் பலர் பலவிதமான வியாக்கிஞானங்களை பேசினாலும் தமிழக சட்டமன்றத்தின் தீர்மானம் ஒரு பாதிப்பை நிச்சியம் இந்திய மத்திய அரசுக்கு உண்டுபண்ணும் என்பதில் சந்தேகமில்லை. முயற்சி திருவினையாக்கும் என்பது தவிர வேறு ஒன்றும் நமது கையில் கிடையாது.

இந்தியாவின் முதல்த்தரமான் கிரிமினல் வழக்கறிஞர், ராம் ஜெத்மலானி,யின் வாதப்படி முன்பு ஒரு வழக்கில் இரண்டு ஆண்டுகள் தாமதித்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதால், தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.என்று குறிப்பிட்டு வாதாடியிருக்கிறார். சட்டம் அப்படி இருக்கும் என்றால் இந்த வழக்குக்கும் அவை பொருத்தமானது என்றே கொள்ளலாம்.

அரசியல்க்காரணங்களுக்காகவும் காங்கிரஸ் தலைமையின் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் தந்தரத்தோடும் தூக்குத்தண்டனை தூசுதட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் ஒரு காரணமாக தமிழர்கள் என்ற இளக்காரமும் டில்லிக்கு ஒரு மைனஸ்ஸாக இருந்தே வந்திருக்கிறது. இந்த இழக்காரத்தை உண்டுபண்ணியவர்கள் கருணாநிதிபோன்ற முதுகெலும்பற்ற அரசியல் வாதிகள் என்பது வருத்தத்திற்குரியது,

ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியை தாங்கியே திராவிடக்கட்சிகள் ஆட்சியமைக்கும் நிலை இருந்தும் வந்திருக்கிறது. இதன்காரணமாக காங்கிரஸின் பிம்பம் தமிழ்நாட்டில் தொடர வழிவகுத்திருக்கிறது.

ஈழப்பிரச்சினையின்பின் செந்தமிழன் சீமானின் வரவால் காங்கிரஸ் காணாமல் போயிருந்தாலும், கருணாநிதி போன்ற கபோதிகள் காங்கிரஸுக்கு கால் கழுவிவிடுவதை நிறுத்தவில்லை.

திமுக தான் போக வழியைக்காணவில்லை ,மூஞ்சூறு விளக்குமாத்தை காவியகணக்காக காங்கிரஸுக்கு இன்னும் தமிழ்நாட்டில் ஆதரவு இருப்பதாக காட்டி தான் தப்பிக்க தந்தர நாடகம் ஆடுவதை வரப்போகும் உள்ளூராட்சி தேர்தலில் உணரப்படுவார்கள்.

செந்தமிழன் சீமான் அவர்களின் சீற்றமும் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

காலப்போக்கில் தமிழர் நலன்கள் புறந்தள்ளப்பட்டு திராவிடக்கட்சிகள் எழுந்தமானத்தில் நடந்துகொண்டால் தவிர்க்கமுடியாமல் ஆட்சிப்பொறுப்பு சீமானிடம் செல்வதற்கான அனைத்து தகுதிகளும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு இருக்கிறது. இது உணர்சிவசமான கருத்து அல்ல.போகப்போக தமிழ்நாடு நன்கு உணர்ந்துகொள்ளும்.

எது நடந்திருந்தாலும் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் தனது திடமான ஒரு முடிவை துணிச்சலுடன் எடுத்திருக்கிரார் என்பது தமிழர்களிடையே அதிமுக அரசுக்கு இன்னும் அதிக வலுச்சேர்ந்திருக்கிறது.

இந்த முடிவை இரண்டுதினங்களுக்குமுன் முதல்வர் அவர்கள் எடுத்திருப்பாராக இருந்தால், செந்தமிழ்ச்செல்வி வீரமங்கை செங்கொடியின், இழப்பை தவிர்த்திருக்க முடியும் என்ற நெருடல் மிகுந்த வேதனையை அளிக்கிறது. வாழவேண்டிய அந்த துளிர் வீணாக தீயில் கருகிவிட்டது. இனிமேலும் எவரும் இப்படி உணர்ச்சி வசப்பட்டு நடந்துகொள்ளக்கூடாது என்பதே எல்லோரினதும் அவாவாகும்.

ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழக முதல்வர் ஈழத்தமிழர்கள் நலனில் துணிச்சலுடன் காட்டும் அக்கறை தமிழினத்திற்கு நம்பிக்கையூட்டும்வண்ணம் இருக்கிறது. நெருக்கடியான பல சந்தற்பங்களிலும் ஈழமக்கள் பட்ட துன்பத்தை துடைக்க துணிவுடன் போராடும் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா அவர்களுக்கு மீண்டும் தமிழர்கள் சார்பாக நன்றிகள்.

கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.