Wednesday, August 31, 2011

>கூத்தாடி குசும்பன்< அங் 6.

லோக்பால் மசோதா- குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலிடம் பிரதமர் விளக்கம்


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு குடியரசுத்தலைவரால் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டபின். பேரறிவாளன்,
முருகன் மற்றும் சாந்தன் ஆகியோரை எட்டு வாரங்களுக்குத் தூக்கிலிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.


முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், தூக்குத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டிருக்கின்றனர்.

"விசாரணையை எடுத்துக்கொண்ட நீதிபதிகள் கருணை மனு தாமதமானதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டனர்".

அடுத்த நடவடிக்கையாக ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின்
தண்டனையை குறைக்க தமிழக சட்டசபையில் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை குறைக்கக்கோரும் தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா அவர்களும் சட்டசபையில் கொண்டுவந்தார்.

தூக்கு தண்டனை தமிழக மக்களை வருத்தப்பட வைப்பதாக உள்ளதாகவும், எனவேதமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இத்தீர்மானம் சட்டசபையில் ஏகமனதாக நிறைவேறியது. இத்தீர்மானம்
ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது..

மாநில அரசு அரசியல் அமைப்புச் சட்ட ஷரத்து 161ல் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, நிச்சயம் இந்த தண்டனையை மாற்றுவதற்கு வாய்ப்பு
உள்ளது. என்று சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த இரு நிகழ்வுகளும் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 21 வருடமாக சிறையில் கிட்டத்தட்ட ஆயுள் தண்டனையை அனுபவித்தவர்களுக்கு தூக்குத் தண்டனை என்பது இரண்டு தண்டனை கொடுப்பதற்குச் சமம். இது நியாயமற்றது என்று பொதுமக்கள் சட்டவல்லுனர்கள் கருத்து தெரிவித்தனர்.

சிறைக்கைதிகள் தமது கூற்றில் 26.4.2000-ல் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினோம். எனினும், எங்கள் மனு மீது பல ஆண்டுகளாக எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக முடிவெடுக்கும்படி நினைவுபடுத்தி அடுத்தடுத்து கடிதம் எழுதினோம். எனினும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. என்று தங்கள் சக்திக்குட்பட்ட முயற்சி கண்டுகொள்ளப்படவில்லை என்பதை தெரிவித்தனர்.

இந்நிலையில் 11 ஆண்டுகளுக்குப் பின் இம்மாதம் 12-ம் தேதி எங்கள் கருணை மனுக்களை நிராகரித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வரும் செப்டம்பர் 9-ம் தேதி நாங்கள் தூக்கிலிடப்பட உள்ளதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஏற்கெனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். இது ஆயுள் தண்டனை காலத்தைவிட அதிகமாகும்.
மேலும், இந்த தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, வாடி வருகிறோம்.

இவ்வளவு நீண்ட காலம் நாங்கள் சிறையில் வாடிய பிறகும்கூட, எங்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது என்பது ஒரு குற்றத்துக்கு 2 தண்டனை அளிப்பதாகும். இவ்வாறு தண்டனை அளிப்பது சட்ட விரோதமானதாகும். மேலும், இது வாழ்வதற்குரிய சட்ட ரீதியிலான எங்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

கருணை மனுக்களின் மீது உடனடியாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கருணை மனுக்களின்
மீதான முடிவுகள் தாமதமானதால் ஏராளமான தூக்கு தண்டனை உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் ரத்து செய்துள்ளன.

இந்நிலையில், நாங்கள் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை அனுப்பிவிட்டு அதன் முடிவு தெரியாமல் 11 ஆண்டுகளுக்கும் மேலாகத் தவித்தோம்.

ஆகவே, 11 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் கருணை மனு மீது முடிவெடுக்காமல் காலதாமதம் செய்ததால், எங்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

#கூ கு: ஒன்றை கவனிக்கவேண்டும் தூக்கு தண்டனை தீர்க்கப்பட்ட கைதிகளுக்கு அவர்களது கருணைமனுவும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்படு தூக்குக்கான நாள் நிச்சயிக்கப்பட்ட பின்னும். சென்னை உயர்நீதிமன்றம் திரும்பவும் குறிப்பிட்ட மீழ் கோரிக்கையை ஏற்றிருக்கிறது, இடைக்கால தடையும் விதித்திருக்கிறது.
Senkodi
ஆட்சியாளர்கள் நம்பகத்தன்மையுடன் நடந்திருந்தால் இளங்குருத்து "செங்கொடியின்" உடல் தீயில் கருகி பெரும் சோகமாக முடிந்திருக்க இடமில்லாமல் போயிருக்கும்.

ஜனாதிபதியின் நிராகரிப்புடன் எல்லாம் முடிந்தது என்று விட்டிருந்தால் 9ம் திகதி மூன்று சவப்பெட்டிகள் சிறைச்சலையைவிட்டு சுடுகாடு சென்றிருக்கும்.

இதிலிருந்து குடியரசுத்தலைவரை உயர்நீதிமன்றம் நம்பவில்லை என்கிறது வெள்ளிடை மலையாக தெரிகிறது. இது நகைப்புக்குரியதா, வெட்கப்படவேண்டியதா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அத்துடன் மரணதண்டனையை சமூகம் எவ்வளவு வெறுக்கிறது என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

தூக்குத்தண்டனை கைதிகளானாலும் சரி, கழுவில் ஏற்றி கொல்லும் தண்டனையானாலும் சரி, சரியான நீதியோடு புள்ளி தவறு நிகழாமல் காலதாமதமில்லாமல் மனித நேயத்தோடு தண்டனையை நிறைவேற்றுவதுதான் மரபு.

தூக்குத்தண்டனைக்கைதிகளிடம் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்பதுகூட, மனிதநேயம் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை வெளிக்காட்டும்
தன்மையாகவே கருதப்படுகிறது.

இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பீற்றிக்கொள்ளும் ஆட்சியாளர்கள் குறிப்பிட்ட கைதிகளை தீர்ப்பு வழங்கப்பட்டு 20 வருடங்கள்
சிறைக்கைதியாக வைத்திருக்கின்றனர். மீழ் விசாரணை, கருணை மனுவென்று, கைதிகள் சட்டத்துக்குட்பட்டு தமது தரப்பு நியாயத்தை எடுத்து காலம்
கடந்தாலும். அனைத்தும் நிராகரிக்கப்பட்டு தண்டனை உறுதி செய்யப்பட்டபின். 26.04.2000 ம் ஆண்டு குடியரசுத்தலைவருக்கு பரிவுடன் கருணை மனு அனுப்பியிருக்கின்றனர்.

பிரதமருக்கு கருணைமனு அனுப்பியிருந்தால் அதை கவனிப்பதற்கு பிரதமருக்கு செலவழிக்க காலம் இருக்காது. ஊழல் விவகாரங்களை கவனிக்கவே இந்திய பிரதமர்களுக்கு நேரம் போதாமல் இருப்பது மறுப்பதற்கில்லை,

திருவாளர் பரிசுத்தம் என்று சொல்லிக்கொண்டு போபர்ஸ் பீரங்கி ஊழலில் தொடங்கி ஒவ்வொரு பிரதமர்களும் ஊழலில் பிதாமகர்களாகவே இருந்து வருகின்றனர்.

ஆளும் அரசியல்வாதிகளின் அவலடசணங்களை அங்கீகரிப்பதற்கென்று குடியரசுத்தலைவர் என்று ஒரு பொம்மை பதவியை ஒருவருக்கு கொடுத்து
ஜனாதிபதியாக்கி வைத்திருக்கின்றனர். ஆழும் கட்சிக்கு முரணாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி என்று எவரும் இதுவரை காணப்படவில்லை

ஏதாவது ஒரு மானிலம் ஆட்சி கலைக்கப்பட்டால் அது ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று சட்டப்படி சொல்லப்படுகிறது.
ஆனால் நாட்டை ஆளும் கட்சியின் தலைவர் என்ன நினைக்கிறாரோ அதுதான் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இன்றைய பிரதமர் பரிசுத்தம் மண்மோஹன் சிங்கம் காங்கிரஸ் தலைவி இத்தாலிய அந்தோனியோ மொய்னோ, என்ன சொல்லுகிறாரோ சிரம்தாழ்த்தி
அதை நிறைவேற்றும் நன்றியுள்ள பிராணியாக இருக்கிறார்.

1948 அளவில் அமெரிக்காவில் அன்றைய பொருளாதாரம் படித்த அவர். ஸ்பெக்ரம் ஊழலில் ஸ்வாகா செய்யப்பட்ட பணத்தின் எண்ணிக்கைக்கு
எத்தனை சைபர் என்பதை அறிந்திருப்பாரோ, என அவரது ஆளுமை புல்லரிக்க வைக்கிறது,

கிட்டத்தட்ட மூன்று ஜனாதிபதிகளின் சொகுசான வாழ்க்கைக்காலத்தில், மூன்று தூக்குத்தண்டனை கைதிகளின் கருணை மனுவை பரிசீலிக்க இந்திய ஜனாதிபதிகளுக்கு நேரம் இருக்கவில்லை.

ஒருமனிதனுக்கு வாழ்வில் எத்தனையோ ஆசாபாசங்கள் இருக்கும். அவை அனைத்தையும் அஸ்தமிக்கும் வண்ணம் ஒரு மனிதனின் கருணை கோரிக்கையை அவனது அரைவாசி வாழ்க்கைக்காலம்,, காலம் தாழ்த்தி நிராகரிக்கப்பட்டதாக அறிவிப்பது ஆறறிவு கொண்ட மனித இனம்
செய்யக்கூடிய ஒரு செயல்தானா.

மதிப்பு மிக்க அன்னா ஹசாரே, அவர்கள் ஆளும் வர்க்கத்தினரின் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்தார். கிட்டத்தட்ட 10 நாட்களில் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதாக பிரதமர் பணிந்துபோனது சில நாட்களின்முன் நடந்து முடிந்தது.

ஆளும் வர்க்கத்தின் சீர்கேடுகளை தட்டிக்கேட்க மக்கள் திரளும்போது ஆட்சியாளர்கள் துடிக்கும் துடிப்பும் அவசரமும் ஏன் கைதிகளின் நலனில்
காட்டமுடியவில்லை.

கருணை மனுவை கவனிப்பாரற்று போடப்பட்டதால் கைதிகள் மட்டுமல்லாமல் அவர்களின் பெற்றோர் உறவினர்களும், 20 வருடங்களாக தினமும் செத்துப் பிழைத்துக்கொண்டிருக்கின்றனர். மனிதத்தன்மையுடன் ஏன் இந்த ஆட்சியாளர்களால் மட்டும் இதை உணரமுடியவில்லை,

திட்டமிடல் இல்லாத இந்திய அரசியல் வண்டியில் எதை ஏற்றினாலும் எப்போ ஊர் போய் சேரும் என்பது தெரியாது. இதற்கு உதாரணம் இந்திய
குடியரசுத்தலைவருக்கு அனுப்பிய கருணை மனு மிகச்சிறந்த சான்று.

நன்றி மீண்டும் சந்திப்போம்.

No comments: