மக்கள் புரட்சி ஒன்றின் ஆரம்பம், ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் வாயிலாக, இந்திய அரசியலை மையம் கொண்டு தாக்கி வருவதாக தெரிகிறது.
இந்தியாவுக்குள் புரையோடிப்போய் கிடக்கும் ஊழல் பூதத்திற்கு எதிராக கிளம்பியிருக்கும் மக்கள் கிளர்ச்சி, அன்னா ஹசாரே என்ற காந்தியவாதியின் தலைமையில், பெருநெருப்பாக பற்றி எரியத்தொடங்கியிருக்கிறது.
காலாகாலமாக இந்தியாவில் ஊறிப்போயிருந்த ஊழலுக்கு எதிரான போராட்டம், இவ்வளவு நெருக்கடியை இந்திய அரசுக்கு ஏற்படுத்தும் என்று காங்கிரசு அரசும் அதன் கூட்டாளிகளும் நினைத்திருக்கவில்லை.
நாட்டுக்குள் உருவான இந்த ஜனநாயக கிளர்ச்சி போராட்டம். இந்திய ஆட்சியாளர்களால் இலகுவில் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கும் இத்தருணத்தில்,ஈழத்தமிழர் பற்றிய உணர்வான கொதிநிலையும் தமிழ்நாட்டிலிருந்து அரசியல் ரீதியாகவும் அமைப்புகள் ரீதியாகவும் எழுந்து இந்திய மத்திய அரசுக்கு மிகப்பெரிய சங்கடத்தை தோற்றுவித்திருக்கிறது.
கொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷவையும் மற்றும் கொலை கூட்டாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கவேண்டும் என்று, தமிழ்நாடு முதலமைச்சரும், முதலமைச்சர் அவர்களை தலைமையாகக் கொண்ட தமிழக அனைத்து தமிழ்மக்களும், பிற பல அமைப்புக்களும் புள்ளி வேறுபாடு இல்லாமல் ராஜபக்க்ஷவை எதிர்த்து இறுக்கமாக நிற்கின்றன.
அத்துடன் ராஜீவ் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியமூவரின் தூக்குத்தண்டனைக்கான கருணை மனுவும் காங்கிரஸ் அரசியல்வாதிகளால் திட்டமிட்டவகையில் நிராகரிக்கப்பட்டிருக்கும் எதிர்வினை. தமிழக மக்களிடையே இனரீதியான கசப்பை அரசியல் ரீதியாகவும் மனிதாபிமான கோரிக்கைகள் மூலமாகவும், இந்திய காங்கிரஸ் அரசுக்கு உண்டாக்கக்கூடும்.
இந்திய அரசியல் மட்டத்தில் உருவாகும் பல்வேறுபட்ட, ஒவ்வொரு சம்பவமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்து இந்திய அரசியலில் ஒரு அசாதாரண நிலையை தோற்றுவிப்பதற்கான சூழ்நிலையை வெளிப்படுத்தும் என்றே தெரிகிறது.
இந் நெருக்கடிகளிலிருந்து இலேசுவில் தப்பித்து வெளிவரமுடியாத இந்திய அரசு, பிரச்சினையை திசை திருப்பி தப்பிக்கும் நோக்கத்தோடு அடுத்த காய் நகர்த்தலுக்கு அச்சாரம் போட்டிருக்கிறது. இது வழமையான தந்தரம் போன்றதல்லாமல் சற்று கடினமானதாகவே இந்திய அரசு காலப்போக்கில் உணரக்கூடும்.
காந்தியவாதி என்று சொல்லப்படும் அன்னா ஹசாரே, தலைமையில் உருவெடுத்திருக்கும் போராட்டம். 'லோக்பால்' மசோதா என்கிற தளத்திலிருந்து விரிவடைந்து ஜன் லோக்பால், என்கிற தளத்திற்கு பிருமாண்டமாக உருவெடுத்திருக்கிறது. இந்தக்கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் நிறைய வரவேற்பும் இருக்கிறது
இந்த மசோதா அமூலுக்கு வருமாகவிருந்தால், இந்தியாவின் உச்ச பதவிவகிக்கும் நாட்டின் பிரதமர், வரை பாகுபாடில்லாமல் விசாரணைக்குட்படுத்தும் வகையில் நிலமை உருவாகும் சாத்தியம் உள்ளது. என்று நம்பப்படுகிறது.
ஜன் லோக்பால் மசோதா மூலம்,100% ஊழல்வாதிகளை களையெடுக்க முடியாவிட்டாலும், உயர்மட்ட அரசியல் முதலாளிகளை தட்டிக்கேட்கக்கூடிய தளம் ஒன்று சட்டரீதியாக உருவாகும் சாத்தியம் உண்டாகும் என்று, போராட்டத்திற்கான ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர். எனவே இது ஒரு நல்ல ஆரம்பம் என்பதுதான் அதிகமான மக்களின் கருத்தாகவும் காணப்படுகிறது.
இந்தநிலையில் பாரதநாட்டின் பரிசுத்தம் என்று கூறப்படும் பிரதமர் மன்மோஹன் சிங், வழமைபோல சிரித்து மழுங்கடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். தடையில்லாமல் அன்னா ஹசாரேயின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும், கொஞ்சம் காலதாமதமாகும் என்றும் காய் வெட்டி தப்பிக்க முனைந்தாலும் கிளர்ச்சிக்காரர்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்குவதாகத் தெரியவில்லை.
அரசதரப்பிலிருந்து போராட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தாலும், வயோதிபரான அன்னா ஹசாரே, நீண்டநாட்கள் உண்ணாவிரதத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் போராட்டம் தொய்வுறும் சந்தற்பத்தில், சம்பிரதாயத்திற்கு சில வாக்குறுதிகளை கொடுத்து போராட்டத்தை பிசுபிசுக்க செய்வதே மத்திய காங்கிரசு அரசின் கபடமாக இருக்கும்.
அதே நேரத்தில் இலங்கை தமிழர் படுகொலை விசாரணை நடத்தப்படவேண்டுமென்றும், தமிழ்நாட்டின் ஆறரைகோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மத்திய அரசு கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டுமென்றும், தனது அரசு இருக்கும்போது ஈழத்தமிழர்கள் பிரச்சினையை தான் கைவிடப்போவதில்லையென்றும் தமிழக முதல்வர், இடைவிடாது மிக இறுக்கமாக குரல்கொடுத்து வருகிறார்.
அழுக்கன் கருணாநிதியின் திமுகவும் தனது எதிர்காலத்தை கருத்தில்க்கொண்டு, தமிழக அரசின் அதே கருத்தை மத்திய அரசிடம் தமது பங்குக்கு தனியாக வைத்திருக்கிறது. கருணாநிதியிடம் நிச்சியம் உள்நோக்கம் இருக்கும் என்று நம்பினாலும், ஒப்புக்கேனும் இலங்கை தமிழர் சார்பாக சாதகமான கருத்தை வெளியிடாவிட்டால், திமுக சிதைவடைந்திருக்கும் இன்றைய நிலையில் தப்பிப்பிழைப்பதற்கு வேறு வழியில்லை என்பதையும் கருணா நன்கு உணர்ந்து காய் நகர்த்துகிறார்.
திமுகவும் சரி, தெருமாவின் வி சி. மற்றும் ராமதசுவின் பாமக. போன்ற கட்சிகளுக்கும் வேறு பிடிகொம்பு எதுவும் இல்லாமல் நிர்வாணமாகவே நிற்கின்றன, ஈழப்பிரச்சினையையும் புறந்தள்ளினால் அரசியல் பாலைவனத்தில் மூழ்கி அடிச்சுவடும் இல்லாமல் போய்விடுவோம், என்பதை அவர்கள் உணர்ந்து நாளொருவண்ணம் கூவிக்கொண்டிருக்கின்றனர்.
ஈழப்பிரச்சினையை உதாசீனம் செய்து அரசியல் நடத்தினால், மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டுவிடுவோம் என்பதை காங்கிரசு தவிர்ந்த ஏனைய கட்சிகள் நன்கு உணர்ந்தே இருக்கின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் தனது மாற்றுத்திட்டமாக இலங்கையில் உள்ள தமிழ்க்கட்சிகளை ஒன்றிணைத்து ஒற்றுமை பற்றி அறியும் ஒப்பரேசனுக்கு அழைப்பு விடுத்து ஆழம் பார்க்க முயற்சிக்கிறது. முடிவு என்ன என்பதை பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் இந்திய நேரடித் தலையீடுகள் ஏற்படத் தொடங்கி உள்ளன என்றும் இதன் முதற்கட்டமாகத் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது என்றும், இலங்கை அரசுடன் ஒரு தீர்வை? எட்டுவதற்கு முன்பாக தமிழ்க் கட்சிகளிடம் ஒருங்கிணைந்த கருத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னையின் அரசியல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி சிலநாட்களுக்கு முன்பு ஒரு செய்தி வந்திருந்தது.
தமிழக அரசின் நெருக்கடியின் அழுத்தத்தை குறைப்பதற்கு, இந்திய மத்திய அரசு தொடங்கியிருக்கும் ஒரு நாடகம் என்றே இதை நம்பினாலும், இலங்கை தமிழர்களின் நம்பிக்கைக்குரிய தமிழர் தேசியக்கூட்டமைப்பின் மதி நுட்பத்தைப்பொறுத்தே இந்திய அரசின் கபடத்தை அம்பலப்படுத்தமுடியும்.
தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர் ஆதரவை சரியாகப்பயன்படுத்தி இந்திய அரசின் ஏமாற்று பொறியில் விழுந்து காலத்தை இழுத்தடிக்க துணைபோகாமல், வெட்டொண்டு துண்டு இரண்டாக பேச்சை முடிக்கவேண்டிய பொறுப்பு தேசியக்கூட்டமைப்புக்கு இருக்கிறது.
ஆரம்பமாக தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் தீர்வு தொடர்பான கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்த புதுடில்லி விரும்புகிறது. அதற்காகவே தமிழ்க் கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் "தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் வருமாறு இந்தியா அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பிலான அழைப்பை அனுப்பி உள்ளார்'' என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் கட்சியின் தமிழ்மானில அளவில் உள்ள ஒரு சிற்றூழியர், காங்கிரஸ் மேலிடம் எதை செய்யச்சொல்லுகிறதோ தன்னை தக்கவைத்துக்கொள்ளுவதற்காக அதை அட்சரசுத்தமாக செய்யவேண்டிய பணியாளராகவே இருக்கிறார்.
இலங்கை தமிழ்க்கட்சிகள் தொடர்பான கருத்தொற்றுமை இந்தியாவுக்கு தேவையற்ற ஒன்று என்றே கருதலாம். தீர்வுத்திட்டத்திற்கும் தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமைக்கும் முடிச்சு போடவேண்டிய தேவை இல்லை என்றே கருதலாம். தமிழ்க்கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் ஈழத்தமிழர்களின் விருப்பு வெறுப்புகளை பிரதிபலிக்கக்கூடிய பிரதிநிதுத்துவம் கொண்ட ஒரே ஒரு கட்சி தேசிய கூட்டமைப்பு ஒன்று மட்டுமே.
தவிர, தமிழர் நலனில் அக்கறை கொண்ட கட்சிகள் என்று பார்த்தாலும் சிவாஜிலிங்கம் தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ். இரண்டுகட்சிகளும் தேசியக்கூட்டமைப்பு எடுக்கும் காத்திரமான தீர்வு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை.
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தமிழ்க் கட்சிகள் யாவும் ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய அமைப்பு என்று நம்பிக்கை வைத்து இந்த மக்கள் ஆணையைத் தந்துள்ளார்கள். இந்த ஆணையை ஏற்று தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும்.என்று தெரிவித்திருந்தார்.
மற்றுமொரு தமிழ் கட்சித்தலைவர் என்று சொல்லப்படும் டக்கிளஸ் தேவானந்தாவின் இராணுவ ஒட்டுக்கட்சியான ஈபிடிபி எந்தவகையிலும் தமிழர்களுக்கான நலன் பேணும் கட்சியல்ல, இது இந்தியா மட்டுமல்ல சர்வதேசமும் அறிந்தவிடயமும் ஆகும். அத்துடன் டக்கிளஸ் தேவானந்தா இந்தியாவில் தேடப்படும் கொலைக்குற்றவாளியாக இருந்துவருகிறார். எனவே டக்கிளச் இந்தியாவின் இந்தக்கலந்துரையாடலில் இணையும் சந்தற்பமும் கிடையாது.
தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி. அவர்களும் தேசியக்கூட்டமைப்புடன் இணைந்து செய்ற்படவே விரும்புகிறார். அப்படி இருக்கும்போது சுதர்சன நாச்சியப்பன் தமிழ்க்கட்சிகளை இந்தியாவுக்கு அழைத்து என்ன கருத்தொற்றுமையை கண்டுவிடப்போகிறார்.
சுதர்சன நாச்சியப்பன் அங்கம்வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டிலேயே காங்கிரஸு 30 மேற்பட்ட கோஸ்டிகளாக அவர்களுடைய கருத்தொற்றுமை புல்லரிக்கும் வண்ணம் இருக்கிறது.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால் இந்தியாதான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடிய ஒரே சக்தி என்பதை காட்டி எந்த ஒரு சக்தியையும் உள் நுழையவிடாமல் தடையை ஏற்படுத்திக்கொண்டு, போர்க்குற்றவாளியை காப்பாற்றி ,எதையும் முடிவுக்கு வந்துவிடாமல் இழுத்தடித்து கால விரையத்தை நீட்ட முயற்சிக்கின்றனரே தவிர ஈழப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்கிற மேலான எண்ணம் இருப்பதாகத்தெரியவில்லை.
திமுக, கருணாநிதி கூறுவதுபோல 1956 ஆண்டிலிருந்து இலங்கை தமிழருக்காக குரல்கொடுத்து வருகிறேன் பதவியை ராஜினாமா செய்யவும் முன்வந்தேன். சாகாமலிருக்கும்வரை 1/2 நாள் உண்ணவிரதமிருந்தேன். என்று கூறுவதுபோல, காங்கிரஸ் கட்சியும் இந்திரா காந்தி காலத்தில் தொடங்கி, ராஜீவ் வழியாக தொடர்ந்து, சோனியா மன்மோஹன் சிங்கம் வரை ஈழப்பிரச்சினை தீராமல் இருப்பதற்கு பேச்சுவார்த்தை தொடர்ந்துகொண்டே இருக்கின்றனர்.
அடிப்படையில் இலங்கையில் என்ன நடக்கிறது தமிழர்களின் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பது தெரிந்தும். அதை புறந்தள்ளி விட்டுவிட்டு புதிது புதிதாக ஏதேதோ தேடிக்கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவின் நோக்கமெல்லாம் நண்பன் ராஜபக்க்ஷ, போர்குற்றவாளி என்று சட்டபூர்வமாக சர்வதேசத்தில் இனங்காணப்பட்டுவிடக்கூடாது, ராஜபக்க்ஷ குற்றவாளியாக காணப்பட்டால் நெருக்கடி காங்கிரஸ் கட்சிக்கும் உண்டு, அதை தடுப்பதற்கு இப்போ தேவைப்படுவது தமிழ்க்கட்சிகளின் கருத்தொற்றுமை பற்றிய விசமமான ஒரு உப்புச்சப்பற்ற ஒப்பறேஷன் கலந்துரையாடல்.
இதை முதலாவதாக உணர்ந்து கொள்ளவேண்டியவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர்.
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆட்சிக்காலமான எண்பதுகளிலிருந்து, 2009 வரை குறிப்பாக யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டால் ஒழுக்கம், கல்வி, உழைப்பு, ஆகியவற்றில் முன்னுதாரணமாக திகழ்ந்த ஒரு பூமி. வன்னிப்பகுதி சில கல்விக்கான கட்டமைப்புக்கள் குறைந்திருந்தாலும் எந்த விதத்திலும் வன்னியும் குறைந்து போகவில்லை.
2009 யுத்தம் முடிவுக்கு வந்ததாகக்கூறப்படும் இரண்டு வுருடங்களில், யாழ் மாவட்ட கலாச்சார தரவுகள் அனைத்தும் தலை கீழாக ஆக்கப்பட்டிருக்கின்றன.
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் (2011) ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையான 5 மாதங்களுக்குள் பதினெட்டு வயதுக்குட்பட்ட 75 பிள்ளைகள் திருமணமாகாமலே கர்ப்பம் தரித்துள்ளதாக யாழ் பிராந்திய சுகாதாரத் திணைகள வைத்திய அதிகாரி திருமதி திருமகள் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களில் பாடசாலை மாணவிகளே அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இவர்கள் இவ்வாறான தவறான வழிக்குச் செல்வதற்கு பெற்றோர்களும், ஆசிரியர்களுமே காரணம் எனவும், அவர் குற்றம் சுமத்தியிருக்கிறார்,
இதை வெறும் செய்தியாக பார்ப்பவர்களுக்கு 10 நிமிடங்களில் மறக்கப்பட்டுவிடும் செய்தி மட்டுமே, இந்திய அரசியல்வாதிகளுக்கு இது ஒரு சிறிய விவாதத்துக்குரிய புள்ளிவிபரம். ஆனால் ஈழத்தமிழனுக்கு வாழ்க்கைப்பிரச்சினை. விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களுக்கு அவரால் கற்பனை பண்ணிப்பார்க்காத அழுக்காறு. இவற்றை மனதில்க்கொண்டு தமிழ் அரசியல் தலைமைகள் சிந்திக்க தலைப்படவேண்டும்
நீண்ட நெடுங்காலமாக கலாச்சார பிறழ்வுகள் நெருங்காத யாழ் மண்ணில், இவ்வளவு கலாச்சார சீர்கேடுகள் நடக்கிறதென்றால் அங்கு நடைமுறையில் இருக்கும் நிர்வாகத்தில் சந்தேகப்படாமல், ஆயுதமுனையில் அடங்கிக்கிடக்கும் பெற்றோர் ஆசிரியர்களை குற்றம் காணுவது எந்தவிதத்தில் நியாயம்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் புள்ளிவிபரம் யாழ் பிராந்தியத்தில் பாடசாலை மட்டத்திலிருந்து மட்டும் பெறப்பட்டுள்ளது. பாடசாலை தவிர்ந்த வெளிக்கள விபரம் எதுவும் வெளிவருவதற்கான சாத்தியம் கிடையாது. மக்கள் நலன்சார்ந்து உதவும் நிர்வாக அமைப்புக்கள் தமிழ்பிரதேசங்களில் துண்டற இல்லை. அப்படித்தான் ஏதாவது வசதி இருந்தாலும், தமது பிள்ளைகளுக்கு தோற்றுவிக்கும் அவலங்களை வெளிப்படுத்தும் மனநிலையில் பெற்றோர் தாய்மார், மக்கள் இல்லை.
பாடசாலை மட்டங்களில் இருந்துகூட, சரியான கணக்கு சேகரிக்கப் பட்டிருக்கும் என்று சொல்லுவதற்கான பொதுநல சுகாதார அமைப்புக்களோ நிர்வாக சுதந்திரமோ வடக்கு கிழக்கு பகுதிகளில் இல்லை.
மக்கள் தமது சொந்த மண்ணில் ஒவ்வொரு பொழுதையும் கழித்து, உயிர் வாழ்வதற்கான பிரச்சினைகள் ஆயிரம் தலைக்குமேல் இருக்கின்றன.
இப்படி ஏற்படும் சக்திக்கு மிஞ்சிய கலாச்சாரகேடுகளை வேறுவழியின்றி கௌரவப்பிரச்சினை சார்ந்து, வீட்டோடு தீர்த்து சமாளித்துவிடுவதற்கு தமிழ்ச்சமூகம் நினைக்குமே தவிர அம்பலத்துக்கு கொண்டுவர ஒருபோதும் அம்மக்கள் விரும்பமாட்டார்கள்.
அப்படியல்லாமல் இப்படிப்பட்ட பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருவதால் நியாயம் எதுவும் அவர்களுக்கு கிடைத்துவிடவும் போவதில்லை. பணவிரையமும் மிரட்டல்களும் அவமானங்களும் சுற்றிப்படருமேதவிர, நிவாரணம் கிடைக்கப்போவதில்லை.
யாழ் பிராந்தியம் தவிர, வன்னி பெருநிலப்பரப்பு, வடமராட்சி, தென்மராட்சி, கிழக்கு மாகாணம். ஆகிய இராணுவ ஆதிக்கம் அதிகமாகவுள்ள கிறிஸ்பூதங்கள் கோலோச்சும் பின்தங்கிய பகுதிகளிலிருந்து புள்ளிவிபரங்கள் இடப்படவில்லை.
குறிப்பாக யாழ்மாவட்டத்தில் கல்விசார்ந்த கட்டமைப்புக்கள் இப்போது அதி செயல்த்திறன் இல்லாது சிதைக்கப்பட்டிருந்தாலும், நிர்வாக மார்க்கத்தில் அடிப்படை அமைப்புக்கள் தொடர்ச்சியாக கொஞ்சமாவது இருந்து வருகின்றன.
வன்னி மற்றும் பிற்படுத்தப்பட்ட கிழக்கு பகுதிகளில் கல்வி சார்ந்த கட்டமைப்பு நீண்ட நெடுங்காலமாகிறது சிதைக்கப்பட்டிருக்கிறது. .
விடுதலைப்புலிகளின் ஆட்சிக்காலத்தில் கல்விக்கட்டமைப்புக்களை பரவலாக நிறுவி நடத்திவந்தனர். கிழக்கு வீழ்ச்சிக்குப்பின் அப்பகுதியிலும் வன்னி வீழ்ச்சிக்குப்பின் வன்னி பெருநிலப்பரப்பிலும், கல்வி மற்றும் கல்விசார்ந்த கட்டமைப்புக்கள் கட்டடங்களுடன் அழிக்கப்பட்டு காணாமல் போயிருக்கின்றன. அங்கு வாழும் மக்களின் சிதைவுகள் சீர்கேடுகள் வெளிவராமலே அமுக்கப்பட்டுக்கிடக்கின்றன.
இப்படி சிறுகச்சிறுக ஒரு இனம் அழிவுநிலைக்கு செலுத்தப்பட்டிருக்கும்போது, இந்தியா போன்ற கயமைவாதிகளின் உளசுத்தியற்ற திட்டம், செயல்த்திறன் ஏதுமில்லாமல் ஏமாற்றும் நோக்கோடு காலவிரையத்தையே நீடிக்கவே வழி செய்யும்.
இப்படியே காலவிரையத்தை நீட்டுவதை விடுத்து, தமிழக முதலமைச்சர் போகும் வழியை பின்பற்றி ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக கூண்டில் ஏற்ற முயற்சி செய்வதே மரணித்துப்போன மாவீரர்களுக்கும் ஊனமாகி ஊசலாடும் தமிழ்ச்சாதிக்கும் பிராயச்சித்தமாகும் என்றே எண்ணத்தோன்றுகிறது, இதை ஈழத்து அரசியல் தலைமைகள் கொஞ்சமேனும் சிந்தித்தால் சிங்களவன் அடங்கிப்போவதற்கு நிறையச்சந்தற்பம் இருக்கிறது.
கோத்தபாய வின் சமீபத்திய பேச்சுக்களை பார்த்தால் இலங்கை அரசும் அதன் கூட்டாளிகளான இந்திய அரசும் போர்க்குற்றம் ஒன்றிற்கு மட்டுமே அச்சப்படுவது தெரிகிறது.
சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் பற்றி புலம்பிய கோத்தபாய, உண்மையிலேயே ஈழத் தமிழர்கள் நலனில் அக்கறை இருந்தால் அவர்களின் மறுவாழ்வு பற்றி பேசுங்கள். அதை விட்டுவிட்டு போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றியெல்லாம் பேசக்கூடாது என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோத்தபயா ராஜபக்சே அறிவுரை கூறியுள்ளார்.
ஜெயலலிதா அரசியல் ஆதரவைப் பெருக்கும் நோக்கத்தில் தான் தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளார். அவை எல்லாம் அர்த்தமற்ற தீர்மானங்கள் என்றும் தனது காழ்ப்புணற்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், கிட்டத்தட்ட ஏழு கோடி தமிழர்களுக்கு தலைமை வகிப்பவர், ஈழத்தமிழர்கள் பற்றி ஜெயலலிதா அவர்கள் பேசாமல் பிரணாப் முகர்ஜியை வைத்தா தமிழர் பிரச்சினையை உணர்வு ரீதியாக பேசி தீர்வுகாண முடியும்?
இலங்கை நிலவரத்தை நாங்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டும். தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்த வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். அதையெல்லாம் விட்டுவிட்டு போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றி அவர் பேசக் கூடாது. இலங்கையின் கொலைக்களங்கள் என்று சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணங்கள் போலியானவை. அந்த தொலைக்காட்சியின் நடவடிக்கை நேர்மையானதன்று என்றும் கோத்தபாய நியாயப்படுத்தியிருந்தார்.
இலங்கை ஒன்றும் சர்வாதிகார நாடல்ல, ஜனநாயகம் தான். பன்னாட்டு விசாரணைக்கு ஒரு போதும் ஒப்புக்கொள்ள முடியாது. நாங்கள் ஒரு இறையாண்மை????? உள்ள நாடு. எனவே, நாங்கள் கூறுவதை பன்னாட்டுச் சமூகம் நம்ப வேண்டும். எந்த ஒரு இறையாண்மை உள்ள நாடும் பன்னாட்டு விசாரணைக் குழுவை அனுமதிக்காது என்று அவர் பேசியுள்ளார்.
இந்தியாவிலுள்ள ஒரு மானிலத்தின் ,தமிழக சட்டசபையை அவமானப்படுத்தியும், தமிழக முதல்வரை விமர்சித்தும், மரியாதைக்குறைவாக பேசியுள்ள கோத்தபாயவை இதுவரை மத்திய அரசும், வெளியுறவுத்துறையும் கண்டித்து ஒரு வார்த்தை பேசவில்லை, இதிலிருந்து இந்தியாவின் குள்ளநரி தந்திரத்தை கூட்டமைப்பு புரிந்துகொண்டுருக்கும்.
முதல்வர் ஜெயலலிதா அவர்களை அவர் ஒரு மானிலத்தின் முதல்வர் என்றும், அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை ஸ்ரீலங்கவுக்கு இல்லை என்று ஒரு சமையத்தில் கூறிய கோத்தபாய,முதல்வர் ஜெயலலிதா அவர்களின் இறுக்கமான நடவடிக்கையை கண்ட பின், இலங்கை நிலவரத்தை நாங்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்க வேண்டும். தமிழர்களை அவர்கள் வாழ்ந்த இடங்களிலேயே மீள் குடியமர்த்த வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும் என்பது தான் முக்கியம். ஜெயலலிதா அதை வந்து கண்காணிக்கவேண்டும் , அதையெல்லாம் விட்டுவிட்டு போர்க்குற்றம், பன்னாட்டு விசாரணை பற்றி அவர் பேசக் கூடாது. என்று தொப்பியை புரட்டி தப்பிக்க முயன்றிருக்கிறார்.
ஆகவே ஒரு சுற்றுப்பயண குதூகலத்துடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் டில்லிக்கு சென்று வர வாழ்த்துக்கள்.வழங்கும் நேரத்தில் இந்திய காங்கிரஸுன் பேச்சுவார்த்தை பழைய குருடி கதவைத்திறவடி என்றே அமையக்கூடும் என்பதே சாமானியனின் நோக்கு.
ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்,
நன்றி ஈழதேசம் இணையம்.
No comments:
Post a Comment