சென்றவாரம் தமிழ்நாட்டிலிருந்து ஒளிபரப்பாகும் விஜய் தொலைக்காட்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்தின்போது அந் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் கோபிநாத்.

இந்தியா என்றால் உலக அரங்கில் அதன் பிம்பம் எப்படி ஒப்புவிக்கப்படுகின்றதென்பதை அழகாக வர்ணித்துக்கூறினார்.

இந்தியா என்றால் பாம்பாட்டிகளும், சுவாமிகளும், மகாராசாக்களும், மறக்க முடியாத அளவுக்கு மனக்கண்ணுள் நிழலாடும் என்று கூறியிருந்தார். 100% உலகத்தில் எவராலும் மறுக்க முடியாத நிதர்சனமான உவமை அது.

பாம்பாட்டிகள் தவிர, சுவாமிகள் என்று கோபிநாத் குறிப்பிட்டது, ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமானுஜர், விவேகானந்தர், போன்றோரை அடையாளப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் இன்றைய இந்தியாவில் (சுவாமிகள் என்பது, ஆச்சிரமம், நித்தியானந்தா, அம்மாசுவாமி, வகையறாக்களையும், மகாராசாக்கள் என்போர்,, கருணாநிதி குடும்பம், மருத்துவர் ராமதாஸ் குடும்பம், சோனியா குடும்பம், போன்ற அரசியல் முதலாளிகளின் குடும்பங்களையும். குறிக்கமுடியும்)

இன்னும் ஒரு சந்தற்பத்தில் இந்தியாவுக்கான அடையாளங்களை முன்பு ஒரு நிகழ்ச்சியில் யாரோ கூறிய ஞாபகம் இருக்கிறது. இந்தியா என்றால் பிச்சைக்காரர்கள், கோவில்கள், யானைகள், குப்பை. விதிமுறையற்ற வாகனப்போக்குவரத்து. சினிமா. கட்டப்பஞ்சாயத்து சத்தம்போட்டு பேசுவது. போன்ற அடையாளங்களும் உண்டு என்கிற பதிவும் இருக்கிறது.

இந்திய மேல்த்தட்டு, மற்றும் நடுத்தர மக்களை எடுத்துக்கொண்டால் அவர்களது பேச்சின்போது வார்த்தைக்கு வார்த்தை வருவது அமெரிக்கா என்ற ஒரு நாகரீகமான சொல்லாடல். உலகத்தில் எத்தனையோ நாடுகள் இருந்தாலும் இந்தியர்கள் தூக்கி முன்னிறுத்தும் ஒரே ஒரு நாடு அமெரிக்கா மட்டுமே. ஆனால் நடைமுறையில் மட்டும் அமெரிக்காவை விட்டு விட்டு இந்தியாவை பின்பற்றுவது அவர்களது வழக்கம்.

சினிமாவில் பார்த்தால் கிராமத்து பண்ணையாரின் மகள் கதாநாயகி, அமெரிக்காவில் படித்துவிட்டு வருவார். தாய் மாமன் குடுமி வைத்தை ஒன்றும் தெரியாத புள்ளைப்பூச்சியாக இருப்பார். (மாமனுக்கு வயது 30 ஆகி கலியாணம் நடந்தாலும் முதலிரவு ஏனென்று அவருக்கு தெரியாதாம்) இப்படியான சினிமாக்கள் இன்றைக்கும் வந்துகொண்டுதானிருக்கின்றன. இவையெல்லாம் அம் மக்களின் குற்றம் என்று கூறமுடியாது ஆட்சியாளர்களின் சுய நலனால் உருவான கூற்றங்கள்,.

இப்படியான இந்தியாவில் நல்ல மனிதர்கள் இல்லையென்று கூறவரவில்லை. அப்பளுக்கற்ற அருமையான மனிதர்கள் அன்றும் இன்றும் வாழும் அந்த பழம்பெரும் பாரத பூமியில், அந்நாட்டின் அரசியல்வாதிகள் நாட்டை சாக்கடையாக்கி இந்தக்கேவலத்தில் கொண்டுவந்து வைத்திருக்கின்றனர் என்பதே குற்றச்சாட்டு.

  • இந்தியாவில் கிரமமாக நடைபெறும் சில சம்பவங்கள் என்று பின்வருமாறு சமீபத்து செய்திகள் சொல்லுகின்றன:

1,திருவனந்தபுரம்: கேரளாவில் மது அருந்த பணம் இல்லாததால் தனது மனைவியை ரூ. 15 ஆயிரத்திற்கு விற்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

2, மத்திய பிரதேசத்தில் தன் உடல் திடகாத்திரமாக இருப்பதற்காக மனைவியின் ரத்தத்தை குடித்து வந்த கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

3,புதுச்சேரி: சங்கரராமன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிரடியாக கூறியுள்ளார் காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர்.

4,பெங்களூர்: சாட்சிகள் உள்ள ஊர்களுக்குப் போகக் கூடாது. அமெரிக்காவுக்குப் போகக் கூடாது. சாட்சிகளை கலைக்க முயலக் கூடாது என்று பல்வேறு தடைகளை கர்நாடக உயர்நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு விதித்துள்ளது. பெங்களூர் அருகே ராமநகர் மாவட்டம் பிடாதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வருகிறார் நித்தியானந்தா. அங்கு நடிகை ரஞ்சிதாவுடன் அவர் அந்தரங்க கோலத்தில் இருப்பது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

5,கோவை: தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

6, மதுரை; மூன்று வயது ஆண் குழந்தையை கடத்திச்சென்று நரபலி கொடுத்த பூசாரி

மேற்குறிப்பிடப்பட்ட அவை ஒரு சிறிய உதாரணம் மட்டுமே, இந்தியாவில் நடைபெறும் பெருவாரியான சமூகச்சிதைவுக்கு அரசியல்வாதிகளே முழுக்காரணம்.112 கோடி சனத்தொகை கொண்ட இந்தியாவில் 46% மக்கள் ஒருநேர உணவுக்கு வழிதெரியாதவர்கள். 12% மக்கள் பழங்குடிகள். டில்லி, பம்பாய்,பெங்களூர், ஹைதராபாத், சென்னை, கோவா, போன்ற நகரங்களில் வசிக்கும் சிலவீதம்பேர் மட்டும் கல்வியறிவு பெற்று ஓரளவு தன்னிறைவு கொண்டு இந்தியாவை சர்வதேசத்தில் இனங்காட்டுவதற்கு உதவுகிறது.

வளர்ச்சி பெற்ற இந்த 21ம் நூற்றாண்டிலும் உலகின் இரண்டாவது அதிக சனத்தொகையை கொண்டு சகல வளமும் கொண்டுள்ள இந்தியாவில் மாற்றமுடியாத தொழு நோயாக இந்திய அரசியல்வாதிகளின் அழுக்கு புழுத்து சிதம்பி நாறுகிறது.

நல்ல மனிதர்கள் சிலர் இருப்பதால்த்தான் இன்று பல மோசடி ஊழல்கள் ஓரளவேனும் வெளிவந்து சில மாற்றங்களை இந்திய தேசம் காணத்தலைப்பட்டிருக்கிறது.

குறுகிய இரண்டு வாரங்களில் நிகழ்ந்த ஒருசில நிகழ்வுகளை மட்டும் தொகுத்து மக்களுக்கு கொடுக்க விழைவதே இப்பதிவின் நோக்கம்.

பலவருடங்களாக இந்தியாவை பங்குபோட்டு குறு மன்னர்கள்போல் வாழ்ந்துவந்த மகா மோசமான திருட்டு அரசியல்த்தலைமைகள் மக்களால் இனங்காணப்பட்டிருக்கின்றன.

2 G ஸ்பெக்ரம் ஊழல் மூலம் கருணாநிதி குடும்பம் தற்போதைக்கு கப்பலேற்றப்பட்டிருப்பதுடன், அதிலிருந்து பாடம் படித்து திருந்திக்கொள்ளாமல் கருணாநிதியும் அவரது மகன்களும் கட்சி அடிப்பொடிகளும் செய்வதறியாது எதைப்பிடித்தால் பித்தம் தெளியும் என்று மூலிகை தேடி பலகோணத்தில் பரிதவித்து, விட்டதை பிடிப்பதற்கு, அல்லது சிறைக்காவது போகாமல் தப்புவதற்கு உறக்கமில்லாமல் அலைகின்றனர்.

திமுக வின் பெரும் தலைகள் அனைத்தும், பாமரர்களை ஏய்த்து ஏமாற்றிய நில அபகரிப்பு மோசடியில் சிக்கி, கிட்டத்தட்ட சிறைக்குள் இருக்கும் இந்த நிலையில் கருணாநிதியின் மகன் ஸ்ராலின் சம்பவத்தை திசை திருப்பும் விதமாக சிறை நிரப்பும் போராட்டம் ஒன்றுக்கு அறிவித்து மூக்குடைபட்டிருக்கிறார்.

வீரபாண்டி ஆறுமுகம் தொடங்கி தினமும் பலர் கைதாகிவருகின்றனர். கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி தினகரன் அலுவலக ஊழியர்களின் கொலைக்குற்றச்சாட்டு, மற்றும் த கிருஷ்ணன் படுகொலை குற்றச்சாட்டுக்களில் இன்றோ நாளையோ கைதாகும் நிலையில் இருக்கிறார். கருணாநிதியின் பேரன் தயாநிதி ஸ்பெக்ரம் மோசடி மூலம் திஹார் சிறைக்கு போவதற்கான ஆயுத்தங்களையும் சிபிஐ செய்துகொண்டிருக்கிறது. திமுக வின் அனைத்து தரப்பும் சிறை நிரம்பிக்கொண்டிருக்கும் தருணத்தில் ஸ்ராலின் சிறை நிரப்பு போராட்டம் அறிவித்து ஆளில்லாமல் எதைக்கொண்டு சிறை நிரப்பப்போகிறார். என்று தமிழ்நாடு பத்திரிகைகள் சிரிக்கின்றன.

திருச்சியில் 30 பேர் கொடுத்த ஒரு புகார் மூலம் கருணாநிதியின் துணைவி ராசாத்தியின் கணக்குப்பிள்ளை கைதாகி அடைக்கப்பட்டிருக்கிறார். அடுத்து ராசாத்தியும் கைதாகக்கூடும்.

அடுத்த குற்றச்சாட்டாக சென்னையில் உள்ள தர்மதோப்பு என்ற அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 200 கோடி நிலத்தை முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உதவியாளர் போலி பட்டா மூலம் அபகரித்து திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினின் பினாமி நிறுவனத்திற்கு மாற்றி விட்டதாகவும், இந்த மோசடியில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியும் உடந்தை என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளதால் இதனால் கருணாநிதி மீது வழக்கு தொடரப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திமுகவின் கையில் மக்களை ஏமாற்ற இப்போதைக்கு இருந்த ஒரே ஒரு துருப்புச்சீட்டு சமச்சீர் கல்வி பற்றியகிளர்ச்சி ஒன்றுதவிர வேறெதுவுமில்லை. அதுகூட நீர்த்துப்போய்விட்டதாக தெரிகிறது.

மு.க.அழகிரியின் மனைவி காந்தி அழகிரி மீதும் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் உள்ள நாகநாதர் கோயிலுக்கு சொந்தமான 17 ஏக்கர் நிலம். இந்த நிலத்தையும் கருணாநிதியின் குடும்பம் விட்டுவைக்கவில்லை. காந்தி அழகிரி தன் பெயருக்கு பதிவு செய்து கொண்டார் என்றும், இந்த இடம் 1500 வருடங்களுக்கு முன்பு நாகநாதர் ஆலயத்திற்கு சொந்தமான இடம் என்றும், அந்த கோயிலின் டிரஸ்டி சார்பில் மதுரை எஸ்.பியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. விசாரணையின் முடிவில், இந்த குற்றச்சாட்டு புகார் மீது அடிப்படை முகாந்திரம் உள்ளது என்று கூறி அழகிரியின் மனைவி காந்தி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் காந்தி அழகிரி கைது செய்யப்படலாம் என்ற செய்தி கடைசியாக வந்திருக்கிறது.

ஸ்பெக்ரத்தின் ஊழல் அலைவரிசை ஊழல் ராசா, கனிமொழி, கல்மாடியுடன், அடங்கிப்போய்விடவில்லை அனுமன் வால்போல் கிண்டக்கிண்ட அடி முடி காணாமல் நீண்டுபோய் இந்தியாவின் உச்ச அதிகார மையமான ஆட்சி அதிகார பிரதமரையே குற்றவாளி கூண்டில் ஏற்றுமளவுக்கு ஆட்டங்காண வைத்திருக்கிறது. பசி எனப்படும் முன்னாள் நிதி மந்திரி சிதம்பரம் ஸ்பெக்ரம் குற்றச்சாட்டில் விசாரணைக்குட்படுத்தப்படும் சாத்தியம் இறுகி வருகிறது. இதற்கான ஆதாரங்களை சு சுவாமி எடுத்துக்கொடுக்க ஸ்பெக்ரம் குற்றவாளி ஆ ராசா சாட்சியமாகியிருக்கிறார்.

அடுத்த மானிலமான கர்நாடகாவின் முதலமைச்சர் எடியூரப்பா ஊழல் காரணமாக ராஜினாமா செய்ய வைக்கப்பட்டிருக்கிறார்.

எதிர்க்கட்சியாக இருக்கும் பாஜாக வும் கம்யூனிஸ்டுக்களும் ஊழல் குற்றச்சாட்டுக்களில் பிரதமரையும் விசாரிக்க வேண்டுமென்று நெருக்கடி கொடுக்குமளவுக்கு வந்தபோது தனது தலைவி சோனியா சொல்லுவதற்கு தலையாட்டி வாய் மூடி ஊமையாக இருந்து வந்த பிரதமர் எதிர்க்கட்சிகளிடம் விறைப்பாக பாய்ந்திருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் எந்தப் பிரச்சினை குறித்தும், எந்தவிதமான விவாதத்தையும் சந்திக்க நாங்கள் தயார். எதிர்க்கட்சிகள் ஊழல் புகார்களை எழுப்பினால் மட்டும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். பதிலடியாக அவர்களது கடந்தகால ஊழல்களை நாங்கள் எழுப்புவோம். அவர்கள் மட்டும் என்ன ஊழல் செய்யாத யோக்கியர்களா, என்று குழந்தைத்தனமாக கருணாநிதியின் புள்ளிவிபரப்பாணியில் பிரதமர் மன்மோகன் பேசியுள்ளார்.

வழக்கமாக பூனைபோல மென்மையாக பட்டும் படாமல், புரியாதது போல பேசுவதுதான் மன்மோகன் சிங்கின் வழக்கம். ஆனால் தற்போது எதிர்க்கட்சிகளின் அதிரடி வியூகத்திற்கு பதிலளிக்க முடியாத நிலையில் நாய்போல குலைத்து தனது இயலாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

2009 ஈழ இன அழிப்பு நடந்தபோது வாரிசுகளின் பதவிப்பங்கீடு பற்றி பேச தள்ளுவண்டியில் டில்லி சென்று வந்த கிழவன் கருணாநிதி, மெரினா அண்ணா சமாதி அருகில் இரண்டு மணி நேரம் உண்ணா நோன்பு இருந்த சாதனை உலகம் அறிந்தது. அதன்பின் ஒரே நாளில் 40,000 உயிர்கள் அழிக்கப்பட்டது. அதுபற்றி மலேசிய பினாங்கு துணை முதலமைச்சர் பழனியப்பன் இராமசாமி அவர்கள். கருணாநிதி ஒரு போர்க்குற்றவாளி என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்திற்கு புகார் அனுப்பியதாக சொல்லப்பட்டது.

இன்று பதவி இழந்த நிலையில் குடும்பம் எல்லாம் சிறை நோக்கிச்செல்லும் இடர்கண்டு தப்பிக்க வழிதேடி அதே பழைய நஞ்சுப்பல்லவியை கருணாநிதி கையில் எடுத்து பாடத்தொடங்கியிருக்கிறார்.( கருணாநிதியை எந்த விலங்குடன் ஒப்பிடுவதென்று தெரியாத நிலைக்கு இன்று நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.)

இலங்கையில் நடைபெற்ற போரில் அப்பாவித் தமிழர்கள் 40,000 பேர் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டது குறித்து விதி எண் 193 ன் கீழ் மக்களவையில் விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி மக்களவைத் தலைவர் மீரா குமாரிடம் திமுக நாடாளுமன்றத் தலைவர் டி.ஆர். பாலு மூலம் கருணாநிதி நோட்டீஸ் கொடுத்து அனுப்பியுள்ளார்.

இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது இந்தியா ஸ்ரீலங்கா கூட்டுச்சதி மூலம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, கருணாநிதி உண்ணாவிரத நாடகம் ஆடினார், மனித சங்கிலி என்றார். இந்தப் போருக்கு வேண்டிய ஆயுதங்களை இந்தியா தான் அனுப்பி ஊக்குவித்தது இந்த உண்மை கருணாநிதியின் ஒப்புதலுடனேயே நடந்தது என்று அப்போதே பலர் குற்றம் சாட்டினர். ஆனால் கருணாநிதி ஈழத்தமிழர்கள் அழிக்கப்படும்வரை நாளொரு நாடகம் என்ற கணக்கில் நானும் கூட என்று போட்ட நாடகங்கள் வடிகட்டிய வஞ்சகம் தமிழினம் என்றும் மறக்க முடியாத துரோகம்.

காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ராகுல் காந்தியும் திருப்தி படவேண்டும் என்பதற்காகவும், கூட்டணியில் சிக்கல் வந்துவிடக்கூடாது குடும்ப பதவிகளுக்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்ற பச்சை சுயநலம் இவ்வளவு கேவலமாக கருணாநிதியை நில மட்டத்தில் இறக்கி விட்டிருந்தது.

இப்போது தேர்தலில் தோற்று, மகள் கனிமொழி சிறைக்கைதியாகி கூட்டணியிலிருந்து திமுகவை கழற்றிவிட காங்கிரசு தயாராகி வரும் நிலையில், இலங்கையில் நடந்த போர் குறித்தும், அப்பாவித் தமிழர்கள் பலியானது குறித்தும் திடீரென கருணாவுக்கு சுடலை ஞானம் பிறந்துவிட்டது. காங்கிரசில் பழியைபோட்டு தப்பிக்கமாட்டோமா என்று வற்றிய குளத்தில் மீன் பிடிக்க முயற்சிக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கித் சிறைவாசம் அனுபவிக்கும் மகளை விடுதலை செய்வதற்காக கருணா, ஈழப்பிரச்சினையை கையிலெடுத்து திசை திருப்பி காங்கிரசில் பழிபோட்டு மிரட்டி காரியம் ஏதாவது பெற்றுவிடலாமோ என்று குறுக்கு சந்தில் விடை தேடுகிறார்.

நேற்று மக்களவைத் தலைவரிடம் டி.ஆர்.பாலு மூலம் கருணா நோட்டீஸ் கொடுத்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி ஆகியோரை நேரில் சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சனை குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அப்பட்டமான பச்சோந்தியான கருணாவின் கோரிக்கையை பாலு சமர்ப்பித்துள்ளார்.

அடுத்த நிகழ்வாக இந்திய பாராளுமன்றத்தில் நடந்த செயல்ப்பாடு தமிழினத்தை மட்டுமல்ல உலகிலுள்ள மனிதாபிமான அரசுகளையும் மோசமாக கேவலப்படுத்தியுள்ளது. சென்ற மாதம் இலங்கை அரசுபற்றி இங்கிலாந்து அமெரிக்க பாராளுமன்றங்களில் விசனப்பட்டு அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களையும் நாடாளுமன்ற அவைத்தலைவரான சமல் ராஜபக்க்ஷவையும் இந்திய ஆட்சியாளர்கள் இருகரம் கூப்பி வரவேற்று கௌரவித்திருக்கின்றனர்.

உலகமே ஒன்று சேர்ந்து கொலை குற்றவாளி நாடென்று ஸ்ரீலங்காவை ஒதுக்கினாலும், கூட்டாளி நடான இந்தியா சம்பிரதாயத்திற்குக்கூட ஸ்ரீலங்காவை ஒதுக்கிவைக்க விரும்பவில்லை. ஒக1 திங்கள் அன்று, கொலைக்குற்றவாளி ராஜபக்க்ஷவின் மூத்த சகோதரரும் ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தின் சபாநாயகருமான சமல் ராஜபக்க்ஷ, மற்றும் சில எம்பி க்கள் குழுவினரை மிகுந்த இராச மரியாதையுடன் வரவேற்று இந்திய பாராளுமன்றத்தில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்திய அரசின் இந்த செய்கையானது தமிழினத்தை அவமதிப்பதற்க்கென்றே மறைமுகமாக நடத்தப்பட்டதாக கருதலாம்.


இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் எம்.பிக்கள் ஆகியோர் அடங்கிய குழு இப்படியான நெருக்கடி நிலையிலும் இந்திய அரசின் ஏற்பாட்டின் பிரகாரம் இந்தியாவுக்கு வருகை தந்திருந்தனர். அவர்களை ஒவ்வொருவரின் பெயரையும் மிகப்பணிவுடன் தனித் தனியாக சொல்லி சபாநாயகர் மீரா குமார் வரவேற்று பாராளுமன்ற பார்வையாளர் மாடத்தில் அமரவைத்தார்.

இந் நிகழ்வானது தமிழினத்தை அவமானப்படுத்துவது ஒரு புறம் இருக்க உலக நாடுகள் ஸ்ரீலங்காவை ஒதுக்கிவிடாமல் தடுக்கும் முற்கூட்டிய தந்திரமாகவே இதை கருத இடமிருக்கிறது.

இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். அதிமுக எம்பி தம்பித்துரை போர்க்குற்றச்சாட்டுக்கு ஆளான நாட்டின் சபாநாயகர் மற்றும் எம்.பிக்களை இந்தியா அழைத்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக மதிமுக, இடதுசாரி எம்.பிக்களும் எழுந்து குரல் கொடுத்தனர். அவர்களை அமைதிப்படுத்த முயன்றார் சபாநாயகர் மீரா குமார். ஆனால் அவர்கள் அமரவில்லை. இதனால் கோபமடைந்த மீரா குமார், விருந்தினர்களை வரவேற்றுத்தான் நமது நாட்டுக்குப் பழக்கம் என்று தமது பழம் பெருமைகளை காட்டமாக எடுத்துக் கூறினார்.

இறுதியில் இலங்கை நாடாளுமன்றக் குழுவினருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பியதற்கு சபாநாயகர் மீரா குமார் இலங்கை குழுவினரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக மக்களவைச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், மக்களவையில் நிகழ்ந்த சம்பவத்தால், இந்தியா நொந்து நூலாகி விட்டதாகவும் மிகவும் வெட்கப்பட்டு வேதனையடைந்ததாகவும் இதற்காக இலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சியாளர்கள் அறிமுகப்படுத்திய ஊழல் மோசடி இந்தியாவுடன் மட்டும் நின்றுவிடவில்லை. இந்தியர்கள் பிழைப்புக்கு சென்றடைந்த அமெரிக்கவரை ஊழல் அகலக்கால் வைத்து பரந்து விரிந்திருக்கிறது.

அமெரிக்காவில் மருத்துவ துறையிலுள்ள இந்திய பூர்வீகத்தைக்கொண்ட மோசடிப்பேர்வளிகள் மாபெரும் மருத்துவ காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டதாக 19 இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய பர்மூலாவை பின்பற்றி அமெரிக்கா முழுவதும் பல பினாமி பெயர்களில் 26 மருந்துக் கடைகளை நடத்தி வரும் படேல் என்பவர், ஏராளமான மருத்துவமனைகள், மருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுத்து, மருந்துகளை கட்டாயமாக தனது கடைகளில் வாங்கச் செய்துள்ளார், மேலும் நோயாளிகளுக்கு தாங்களே மருந்துகளைத் தரும் சில மருத்துவமனைகள் அதற்கான பில்களை இவரது மருந்துக் கடைகளின் பெயரில் உருவாக்கியுள்ளன. இதன்மூலமும் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் பணத்தை சுருட்டி வந்துள்ளார்.

மிச்சிகன் மாகாணத்தில் தான் இந்த மோசடி பெருமளவில் நடந்துள்ளது. மேலும் மன அழுத்தத்தைப் போக்கும் மருந்துகள் உள்ளிட்ட சில கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளையும் உரிய மருத்துவ பரிந்துரை இல்லாமல் படேலின் மருந்துக் கடைகள் வினியோகித்துள்ளன .இதற்காக பல முக்கிய மருத்துவமனைகள், மருத்துவர்கள், மன நல நிபுணர்களுக்கு ஏராளமான பணத்தை லஞ்சமாகத் தந்துள்ளார். இந்த மோசடியில் இதுவரை 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 19 பேர் இந்தியர்கள் ஆவர்.

இத்துடன் கருணாநிதி, சோனியா, டக்கிளஸ், ராஜபக்க்ஷவின், ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியான தோல் திருமாவளவர், இலங்கைத்தமிழர்கள் இப்போ தனக்கு மதிப்பளிப்பதில்லை என்று குறைப்பட்டிருக்கிறார். முன்னதாக சென்னையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், இலங்கைத் தமிழர்களுக்காக நான் 25 ஆண்டுகளாக குரல் கொடுத்து வருகிறேன்.???? ஆனால், நான் திமுக கூட்டணியில் உள்ள ஒரே காரணத்தால் இலங்கைத் தமிழர்கள் என்னை நம்புவது இல்லை என்று புலம்பியிருக்கிறார்.

இந்தியதேசம் பாகுபாடற்ற இறுக்கமான சட்டங்களை இயற்றவேண்டும், மேற்குலக நாடுகள்போல் இருக்கும் சட்டங்களை மதித்து நடக்கக்கூடிய அரசியல் தலைமை உருவாகும்வரை, குறுநில மன்னர்களாகிய அரசியல் ஆடுகள் வேலியையும் மேய்ந்து தோட்டத்தையும் தின்று தீர்த்து அதற்கான நியாயத்தை கற்பித்துக்கொண்டேயிருக்கும். எவரும் கேள்வி கேட்டுவிடக்கூடாது என்பதற்காக மக்கள் மந்தை கூட்டமாக இருப்பதை சீர்செய்ய இந்த அரசியல் ஆடுகள் ஒருபோதும் விரும்பமாட்டா. எனவே இந்தியத்துணைக்கண்டம் ஒருநாள் சோவியத்து ஒன்றியம் உடைந்து சிதறியதுபோல் சிதறி சுதந்திர மொழிவழி மானிலங்கள் உருவாகும் சாத்தியம் உண்டாகும்.

112 கோடி மக்கள் உள்ள ஒரு தேசத்தில் இந்தியர் ஒருவர் தலைமை வகிக்க முடியாத அளவுக்கு குடும்ப வாரிசு ஆதிக்கம் இத்தாலிய அந்தோனியோ மொய்னோவிடம் மண்டியிட்டு முன்னிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூல காரணம் மக்களின் அறியாமை படிப்பறிவின்மை குடும்ப அரசியல்வாதிகளின் பணபலம் என்பனவற்றை சொல்லமுடியும். இந்த நிலை மாறும்வரை இந்தியா பாம்பாட்டிகளையும் பிச்சைக்காரர்களையும் சுவாமிகளையும் அரசியல் மகாராசாக்களையும் பிரசவித்துக்கொண்டேயிருக்கும்.

ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்.

நன்றி ஈழதேசம் இணையம்,