ஊர்கூடி தேர் இழுத்து உலகமே அதிரும்வண்ணம்
போராடி சலிப்புக்கொண்ட பைந்தமிழ் நங்கை நல்லாள்
நேர்கொண்ட துயரம் மேவ நிமிர்ந்தனள் உறவு காக்க
ஓர் நொடி சிந்திக்காமல் உதறினாள் உகந்த வாழ்வை
பார் புகழ் தமிழர் நெஞ்சம் பற்றியே எரிந்ததுகாண்.
கோவிலாள் "செங்கொடி" தன் கொள்கையால் தனலாயானாள்.


பாரதம் மட்டுமல்ல பார் வெட்கும் சேதியாச்சு
வாழ்வொரு சில நாட்காலம் வசந்தமாம் இளமை நாளில்
சீற்றமும் சினமும் கொண்டு "செங்கொடி" தீயாய் ஆனாள்
நேற்றவள் பிறந்தபோது நீடிய சிறையில் மாண்ட
மூத்தவர் மூவர் மீழ முடிந்தது குருத்தின் மூச்சு
ஆண்டொரு இருபத்தொன்று ஆறுமோ எவரின் நெஞ்சம்.

செங்கொடி பிறந்தபோது சிறையினில் வாழ்வை கொண்டு
துஞ்சிய மூவர் வாழ்வு துலங்கிட கனவு கண்டாள்
வஞ்சகர் சூழ்ந்த நாட்டில் வழி தேடி நல்லாள் இன்று
பிஞ்சிலே தீயில் மாண்டு பெரும் சோகம் சுமந்தோம் நாங்கள்
செங்கொடி மாண்ட செய்தி திறக்குமோ மனிதநேயம்-முத்து
குமாரனின் முடிவைபோல மறையுமோ மண்ணுள் மண்ணாய்.

கற்றவள் செங்கொடிக்கு கண்ணீர்தான் முடியும் அம்மா-உன்
பெற்றவர் வயிற்றெரிவு புதியதோர் வழியைக்காட்டும்
மற்றவர் எவராய் ஆயின் வேண்டாமே இந்த வேகம்
நித்தியமாக நீங்கள் போராட மறுப்பே இல்லை
துச்சமாய் உயிரை எண்ணி துறந்திட வேண்டாம் காணீர்
நிச்சியம் ஒருநாள் உங்கள் நினைவுகள் நனவாய் ஆகும்.

பத்தினி உன்னை நாங்கள் பாரத தாயாய் கண்டோம்
எத்தனை காலம் சென்றும் இருப்பாய் நீ தமிழர் நெஞ்சில்
நிச்சியம் இனிமேல் யாரும் திக்கிரையாக வேண்டாம்
வற்றாத வீரத்தோடு வாழ்வுடன் போராடுவோம்
உணர்வுற்றவர் நீங்கள் மாண்டால் உலகினில் மீதி என்ன
பற்றுடன் உந்தன் பாதம் பணிகின்றோம் அம்மா தாயே.

செங்கொடி என்றுனக்கு சீரிய பெயரையிட்டு-பெற்றோர்
நெஞ்சினில் உணர்வைக்கூட்டி நேர்மையாய் வளர வைத்தார்
தங்கை நீ துடிப்பு கூடி சாவினை அணைத்தாய் தப்பு
நெஞ்செல்லாம் நெருப்பாயாகி நிலை தடுமாறிவிட்டோம்
அன்னையும் நீ, தங்கையும் நீ, ஆலயம் வாழ் அம்மனும் நீ,
கோவிலாய் ஆகிவிட்டாய் கும்பிட்டோம் பணிந்தோம் அம்மா,

ஊர்க்குருவி.
ஈழதேசம் இணையம்,
http://www.eeladhesam.com/images/eeladhesam/senkodi%201.jpg