Sunday, January 29, 2012

ஜெனீவாவில் அரசைக் காக்க 15 பேர் கொண்ட உயர்மட்ட குழு விரைவு.


news
ஜெனீவாவில் பெப்ரவரி மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படாமல் தடுப்பதில் இலங்கை அரசு தீவிரமாக உள்ளது. இந்தப் பணிகளுக்காக அமைச்சர்கள் பலரை உள்ளடக்கிய 15 பேர் கொண்ட குழு பல்வேறு நாடுகளுக்கும் விரையவுள்ளது. நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தக் குழு கொழும்பில் இருந்து புறப்படவுள்ளது.

இலங்கையின் இறுதிப் போரில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காகச் சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்படவேண்டும் என்று மேற்கு நாடுகள் வலியுறுத்துகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மார்ச் மாதக் கூட்டத் தொடரில் இலங்கை மனித உரிமைகள் நிலைமை குறித்துப் பகிரங்க விசாரணை கோரும் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது என்ற தகவல் அரசுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விவாதத்தை நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அரசு கேட்கப்பட்டுள்ளது. ஆனால்,அத்தகைய விவாதம் ஒன்று தேவையற்றது; அதனைத் தான் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

இருப்பினும் ஜெனீவாவில் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்கென அமைச்சர்கள் உயர் அதிகாரிகளை உள்ளடக்கிய 15 பேர் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது. இந்தக் குழுவில் அமைச்சர்கள் பீரிஸ், மஹிந்த சமரசிங்க, கெஹலிய, ஜோன் செனவிரட்ன, டிலான் பெரேரா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

நாளை திங்கட்கிழமை இந்தக் குழுவினர் கொழும்பில்கூடி ஆராயவுள்ளனர். இலங்கை விவகாரம் குறித்த பகிரங்க விசாரணை கோரும் பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டால் அதனை முறியடிப்பதற்கான ஆதரவைத் திரட்டுவதே இந்தக் குழுவின் நோக்கம்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உறுப்புரிமை பெற்றுள்ள லத்தீன் அமெரிக்க  நாடுகள், அரபுலக  நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்குச் சென்று இலங்கையின் நிலையைத் தெளிவுபடுத்த உள்ளன.

இதேவேளை, இந்தக் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழர் தரப்பு நியாயத்தை எடுத்து விளக்கும் வகையில் அவர் கூட்டத்தொடரில் கலந்துகொள்வார் என்று ஆங்கிலப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றொரு நகர்வாக உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர்களைத் திரட்டி பெப்ரவரி 27ஆம் திகதி ஜெனீவாவில், போர்க் குற்றச்சாட்டை விசாரிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு நாடு கடந்த தமிழீழ அரசும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

நன்றி உதயன்.

No comments: