வல்லமையுள்ளதால் அமெரிக்கா, ஈரான் மீது மேலும் பல பொருளாதார தடைகளையும், பாகிஸ்தான் நாட்டுக்கு  நிதியுதவியை குறைக்கக் கூடிய பாதுகாப்பு மசோதாவிலும்,  அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.

உள்நாட்டு தொழில்நுட்பம் மூலம் குறுகிய தூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணையை, ஈரான் வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது என்ற குற்றத்திற்காகவும். அணுமின் நிலையங்களுக்கான யுரேனிய எரிபொருளையும் தயாரித்துள்ளது என்பதற்காகவும். அமெரிக்கா தனது வல் வல்லமையை பாவித்து தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த தடை உத்தரவை சிரத்தையுடன் உலகிலுள்ள பலநாடுகள் பின்பற்றும் என நம்பலாம்.

இலங்கையில் மனிதர்கள் கொலைசெய்யப்பட்டு, உரிமை மீறப்பட்டு இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதற்காக சென்ற ஆண்டு இதேபோன்ற ஒரு தடையுத்தரவை அமெரிக்க காங்கிரஸ் பரிந்துரை செய்திருந்தும், வல்லமை இல்லாத தமிழினம் என்பதால் இந்தியா போன்ற அநீதிக்கு துணை நிற்கும் நாடுகளின் தலையீட்டால் அதிபர் ஒபாமாவின் மேசைவரை அந்தக்கோப்பு சென்றடையவில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வந்ததால் பேச்சுவார்த்தையில் விரிசல் விழுந்து சர்வதேச விசாரணை நோக்கி தள்ளப்பட்டு விடுவோமோ என்ற பயம், கூட்டமைப்புடனான அடுத்த சந்திப்பின் போது மட்டுப்படுத்தப்பட்ட காணி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றி ஆராயப்படும் என்று அரசாங்கம் தூண்டில் போட்டிருக்கிறது.

அழிக்கப்பட்டதாக அரசால் அறிவிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் தொடர்பில் அரச தரப்பு தொடர்ந்தும் குற்றஞ்சாட்டி கொண்டு வருகின்றது. இதேவேளை இலங்கையில் உண்மையான நல்லிணக்கம் வேண்டுமானால், போரின் போது ஏற்பட்ட பொதுமக்களின் உயிரிழப்புகளுக்கு அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும். இல்லையேல் நாட்டில் ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

2012 ஜன, நடுப்பகுதியில் இந்தியத்துணைக்கண்டத்தின் வெளி விவகாரங்களுக்கான மந்திரி எஸ் எம் கிருஷ்ணா அழையா விருந்தாளியாக, இனப்பிரச்சினையை தீர்த்து வைத்துவிட்டு திரும்புவதற்காக இலங்கை வரவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் எவ்வளவு களவும் கபடமும் நிறைந்திருக்கிறது என்பதை 2012ம் ஆண்டு முடிவதற்குள் உலகம் அறிந்துகொள்ளும்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நிலைகொண்டிருக்கும் இராணுவத்தை எக்காரணம் கொண்டும் அகற்ற இடமளிக்கப்போவதில்லை என்றும். தமிழர் தேசியக்கூட்டமைப்பு கோருவதுபோல பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் காணி நிர்வாகம் மாகாண சபைகளுக்கு கொடுக்க முடியாது என்றும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ கறாராக தெரிவித்திருக்கிறார்.

ஐநா நிபுணர்கள் குழுவின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் வெளிவந்த ஸ்ரீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை, இராணுவத்தின் செயலையும் அரசாங்கத்தின் படுகொலை குற்றச்சாட்டுக்களையும் முற்று முழுதாக மறுத்து தன்னிலை நியாயத்தை விதந்துரைத்திருக்கிறது. அதுபற்றி ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூன் எந்த எதிர்வு கூறலையும் உத்தியோகபூர்வமாக இன்னும் வெளியிடவில்லை. அத்துடன் சிங்களம் தனக்கு சார்பாக தயாரித்த அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளையே நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்கு அரசுக்குள்ளேயே உள்ளூர விமர்சனங்கள் எழுந்திருப்பதாக தெரிகிறது.

தமிழகத்தின் மக்களின் கொந்தளிப்பும், ஈழ ஆதரவு அரசியல்வாதிகளின் நெருக்கடிகள் காரணமாக ஸ்ரீலங்கா அரசுக்கு பொருளாதாரத்தடையை பெற்றுத்தருவேன் அதிபர் ராஜபக்க்ஷவை போர்க்குற்றவாளியாக இந்தியா அறிவிக்க வேண்டுமென உணர்ச்சிவசப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதுபற்றி மறந்து வேறு வேலைத்திட்டங்களில் தனது கவனத்தை திருப்பியிருக்கிறார்.

தமிழர் தேசிய கூட்டமைப்பு சென்ற ஆண்டு அமெரிக்க அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காவுக்கும், ஐரோப்பா, கனடா போன்ற தேசங்களுக்கு அரசியல் சுற்றுப்பயணம் செய்து திரும்பி வந்ததும். உலகத்தின் பலதரப்பிற்கும் ஒவ்வாமையை உண்டுபண்ணிய ஸ்ரீலங்கா அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வரவேற்ற இந்தியாவின் அனுக்கிரகத்துக்காக தவநிலையில் நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருக்கிறது.

ராஜபக்க்ஷ அரசின் சிங்கள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை  human right watch, மற்றும்  amnesty international,போன்ற, மனித உரிமையை மதித்துபேணும் பக்கச்சார்பற்ற சர்வதேச, அமைப்புக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து நிராகரித்திருக்கின்றன. உலக அரங்கில் அரசியல் சார்புக்கு அப்பாற்பட்ட மனிதநேய நோக்கங்கொண்ட அமைப்புக்கள் இவை என்பதையும் நினைவில் கொள்ளலாம். இலங்கை அரசினால் வெளியிடப்பட்டுள்ள அவ் அறிக்கை போரில் கொல்லப்பட்டும், பாதிக்கப்பட்டு ஊனமுற்றிருக்கும், மக்களுக்கு எந்த விதத்திலும் உதவாத ஒரு காகிதக்கட்டு என வர்ணித்து புறக்கணித்திருக்கின்றன.

அடுத்ததாக நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியான பின் சர்வதேச நெருக்கடிக் குழு, வடக்குக்கிழக்கில் வாழும் தமிழ்ப் பெண்களின் பாதுகாப்பின்மை குறித்து ஆதாரங்களுடன் மிகவிரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. Sri Lanka: Women’s Insecurity In The North and East : International Crisis Group Report : 20 December 2011 ; Page II. வடக்குக் கிழக்குப் பெண்களின் மீதான பாலுறவு அத்துமீறல் குறித்த இலங்கை அரசின் வழமையான எதிர்வினை, அதனை முற்றிலுமாக நிராகரிப்பதுதான் என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

சிறீலங்கா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் போது சிறிலங்கா படையினரால் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதுமானளவு விசாரணைகள் நடத்தப்படவில்லை.  உலக நாடுகளில் இடம்பெறும் மனித குலத்திற்கெதிரான செயற்பாடுகள் குறித்து எமது நாடு வாய்மூடி மௌனிகளாக இருக்கப் போவதில்லை யாரோ ஒருவர் இந்த உண்மைகளை வெளிக் கொண்டு வரவேண்டும். இது மிகவும் முக்கியமானதென்று நான் நினைக்கிறேன். என கனடா நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் மிகக்கடுமையான தொனியில் தெரிவித்திருக்கிறார்.

மேற்கண்ட அனைத்தும்  நிதர்சனமான உண்மையென்பதும், சிங்கள அரசு ஒருதலைப்பட்ஷமாக நியாயப்படுத்தல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுவிட்டதால் எல்லாம் சரியென்று ஆகிவிடுமா என்பதும். கொல்லப்பட்ட கொடுமைப்படுத்தப்பட்ட மக்களின் எதிர்காலம் என்ன என்பதும், அறிக்கையின் பின்னான காலத்தில் தமிழர் வாழ்வு எந்த நம்பிக்கையை நோக்கி நகரப்போகிறது என்பதும், அறிக்கைபற்றிய தேசியக்கூட்டமைப்பினரின் எதிர்வினை என்ன என்பதும், அடுத்து பீதியை கிளப்பும் விதமாக 2012 ஜன, அவசரமாக ஸ்ரீலங்காவுக்கு வரவிருக்கும் இந்தியத்துணைக்கண்டத்தின் வெளிவிவகார மந்திரி கிருஷ்ணரின் வரவின் சூழ்ச்சுமம் என்ன என்பதும் பல மில்லியன் டொலர் கேள்வியாக எழுந்து நிற்கிறது.

எத்தனை ஆயிரம் கேள்வி எழுந்தாலும் நியாயமான நீதி கிடைக்காதவரை தமிழனுக்கான தீர்வு ஒன்று வரையறுக்காதவரை ஒரு அமைதியான நிலைக்கு இலங்கை திரும்பிவிடப்போவதுமில்லை. என்பதும் வெள்ளிடை மலையாக தெரிகிறது. எவர் தலைகீழாக நின்று மண் சுமந்தாலும் இலங்கைத்தீவின் அமைதி சாதாரணமாக செப்பனிட முடியாத அளவிற்கு மனுதர்மம் ஆழமான துவேஷத்திற்குள் மூழ்கிவிட்டது.

பூமியில் உள்ள நாடுகளில், இந்தியா என்ற ஒருநாடு தவிர்ந்த, அனைத்து சர்வதேச நாடுகளும், சர்வதேச தொண்டர் அமைப்புக்களும், இலங்கை அரசின் குதர்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து நிற்கின்றன. மனு தர்மத்தை குழி தோண்டி புதைக்கும் ஒருதலைப்பட்ஷ நிலையெடுப்புக்குப் பின்னான  தமிழர் அரசியல்த்தரப்பின் விருப்பு வெறுப்பு பற்றிய எதிர்வுகூறல்களும் நிச்சியம் உலகத்தால் கூர்ந்து கவனிக்கப்படும்.

கிடைத்திருக்கும் அனைத்து உலக ஆதரவையும் ஒருங்கிணைத்து குற்றவாளியை தண்டனைக்குட்படுத்துவது அரசியல் தீர்வுக்கான முகாந்திரங்களை கையாள்வது அனைத்தும்,களத்தில் நின்றுகொண்டிருக்கும் தமிழர்களின் வாதத்தரப்பின் பிரதிநிதிகளான தமிழர் தேசிய கூட்டமைப்பின்  மதிநுட்பத்தைப்பொறுத்து காட்சிகள் அரங்கேறலாம்.

சிங்கள ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்து பலதரப்பினருக்கும் ஒவ்வாமையை உண்டுபண்ணிவிட்டது என்பதை எமது தமிழ் அரசியல் சாணக்கியர்கள் உணராவிட்டாலும் சிங்கள ராஜபக்க்ஷ நன்கு உணர்ந்திருக்கிறார்.

தமிழ்க் கூட்டமைப்பினரின்  கோரிக்கைகளான வடக்கு, கிழக்கு இணைப்பு, பொலிஸ் மற்றும் காணி அதிகாரப்பகிர்வு என்பன நடைமுறைச் சாத்தியமற்றவை. இந்த அதிகாரங்களை வழங்குவதன் மூலம் அவர்கள் என்னைக் கைதுசெய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?  மேற்கு நாடுகளில் எஞ்சியுள்ள புலிகள் தான், இலங்கைக்கு எதிராக அடிப்படையற்ற விவகாரங்கள் குறித்து, அங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். மேற்குலகம் என்னைத் தங்களின் அடிமையாக வைத்திருக்கப் பார்க்கிறது. அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை. என நிகழ இருக்கும் அபாயத்தை உச்சக்கட்ட குளப்பத்தில இந்தியாவிலிருந்து வெளிவரும் Deccan Chronicle (டெக்கன் கிறொனிக்ள்) ஆங்கில நாளிதழுக்கு (இந்தியா சீக்கிரம் புரிந்துகொள்ளட்டும் என்பதற்காக) ராஜபக்க்ஷ செவ்வியாக புலம்பியிருக்கிறார்.

ராஜபக்க்ஷவின் பயத்திலும், அச்சம் குறித்து அவர் கூறிய விடயங்களிலும் 100% நடைமுறைச்சாத்தியமான உண்மை ஒளிந்திருக்கின்றது என்பது ராஜபக்க்ஷ மூலமே தெரிய வந்திருக்கிறது. தான் தப்பிப்பதற்காக எந்த குளப்பைகளையும் செய்ய அவர் தயாராகவே இருப்பதும் தெரிகிறது. அந்தவகையில் தமிழர்களின் அரசியல் ஆடுகளத்திலிருந்துவரும் தமிழர் தேசியக்கூட்டமைப்பு, அறிக்கைபற்றி மற்றவர்களை விடவும் ஆழமாக பொறுப்புடன் வரையறுக்குமிடத்தில் இருக்கின்றது. ஆனாலும் கூட்டமைப்பினரின் போக்கு நிறைவு தருவதாக புரியப்படவில்லை.

தொடர்ந்து வரவிருக்கும் அரசியல் நகர்வுகளுக்கு அரசாங்கத்தால் வரையப்பட்டிருக்கும் அறிக்கையின் சாரம் எதை தொட்டு நிற்கிறது, அதிகாரப்பகிர்வு பற்றிய பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொண்டுசெல்ல அறிக்கையில் ஏதாவது குறியீடு காணப்படுகிறதா? என்பதை ஆராய்ந்து அறிந்துகொண்டு அவற்றை நாசுக்காகவாவது மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கடமையும் இன்றய நிலையில் தமிழர் தேசியக்கூட்டமைப்புக்கு மட்டுமே உண்டு.

ஐநாவின் நிபுணர்கள் குழு பரிந்துரைத்த குற்றவாளிகளை இனங்காணுதல், நீதி விசாரணைக்குட்படுத்துதல், போன்ற முக்கியமமன விடயங்களை உள்வாங்கி அதற்கான வேலைத்திட்டங்களுக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வழி கண்டிருக்கிறதா, இவையெல்லாம் பாதிக்கப்பட்டு திக்கெட்டும் சிதறி நிற்கும் தமிழனின் எதிர்பார்ப்புக்களாக இருக்கும்.  ஏற்கெனவே தேசியம், தன்னாட்சி, என்ற நிலையில் நின்றுகொண்டிருக்கும் தமிழினத்தின் எதிர்பார்ப்புக்கு சமனீடு செய்ய பேச்சுவார்த்தை என்ன வைத்திருக்கிறது. இவை அனைத்தையும் கருத்தில்க்கொண்டு பேச்சுவார்த்தை மேசையை பாவிக்கவேண்டிய நுணுக்கமும் இராசதந்திரமும் தேசியக்கூட்டமைப்பிடம் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அறிக்கைபற்றியும், அரசாங்கத்துடனான தீர்வு பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடு பொறுத்தும் வெவ்வேறு கருத்துக்களை வெளிவருகின்றன.

பொலிஸ், மற்றும் காணி அதிகாரங்களை வடக்குகிழக்கு மாகாணங்களுக்கு வழங்கமுடியாது என்று கூறிக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சுக்கு அழைத்துக்கொண்டிருக்கிறது.  சர்வதேசத்தை ஏமாற்ற முனையும் இலங்கை அரசின் நடவடிக்கையே இது என்று மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசுடன் பேச்சுக்குச் சென்றுள்ளதன் அடிப்படையே வடக்கு கிழக்குக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் என்பதற்கேயாகும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் தமிழ் மக்களுக்கு எவ்வாறு அரசியல் தீர்வை அரசு வழங்கப்போகின்றது என்பது கேள்விக்குறியே. என்ற நியாயமான சந்தேகத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொண்டு வருவதற்கே பேச்சு என்ற நாடகத்தை ராஜபக்க்ஷ அரசு ஏற்ப்படுத்துகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இணைத்து சர்வதேச நெருக்கடியிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தி உள்வாங்க முனைகின்றது. இதற்குத் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் அடிபணியாது என கருத்து தெரிவித்திருந்தார். அதே ஒத்த கருத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களும் சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

ஈழ அரசியலில் தமிழர்களின் நாடித்துடிப்பை சரியாக மதிக்காததால் தனித்து நிற்க தள்ளப்பட்ட அனுபவசாலியான ஐயா ஆனந்த சங்கரி அவர்களும் தமிழர்களின் தீர்வுக்கான புள்ளியை ஓரளவு சுட்டிக்காட்டி 13வது திருத்த சட்டமூலத்தில் உள்ள சரத்தை தவிர்த்து ராஜபக்க்ஷ செல்லும் பாதை தீர்வை சென்றடையப்போவதில்லை என்ற யதார்த்தத்தை தன்பங்குக்கு கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களின் சிந்தனை வேறுவிதமாக கணப்படுகிறது. அறிக்கைபற்றி இந்தியா சார்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் என்ற தரத்திலுள்ள ஒருவரின் கருத்தை மேற்கோள் கொண்டதாக பயணிக்கவேண்டுமென தெரிவித்திருக்கிறார். சிங்கள அரசாங்கத்தின் போக்குக்கு விட்டுக்கொடுத்து தொடர்ந்து இந்தியவை தொங்கித்தான் பேச்சுவார்த்தையை வென்றெடுக்க முடியும் என இல்லாத ஊருக்கு பாதை தேடிக்கொண்டிருக்கும் விதமாக தனது எண்ணத்தை பத்திரிகைகளுக்கு தெரிவித்திருக்கிறார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தபின்னர் இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துகள் தொடர்பில்  கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் இந்தியாவின் கருத்துகள் உள்வாங்கப்படவேண்டியதன் அவசியத்தை பத்திரிகை அறிக்கை மூலம் வலியுறுத்தியிருக்கிறார்.

புதுடில்லியின் வலியுறுத்தலை இலங்கை அரசு சாதகமான முறையில் பரிசீலிக்க வேண்டுமெனவும் இந்தியா சுட்டிக்காட்டியிருப்பதாகவும் எவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும் சம்பந்தன் ஐயா அவற்றை நம்பி ஏற்று நிற்பதாகவும் தெரிகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளரால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை "நாம் வரவேற்கிறோம்".  அதில் சில முக்கியமானவிடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகத்தன்மையான  வெளிப்படையான விசாரணைகள் தேவையென அவர்கள் கூறியிருக்கின்றனர். இது மிகவும் அவசியமானது. "அதனை நாங்கள் வரவேற்கிறோம்".

இரண்டாவதாக, அர்த்தபுஷ்டியான அரசியல் அதிகாரப்பகிர்வு நடைபெறவேண்டுமெனக் கூறியுள்ளது. அவ்விதமான சாத்தியப்பாடான அதிகாரப்பகிர்வு இடம்பெறும்போதே நிதர்சனமான ஒரு நல்லிணக்கம் ஏற்படும். "அதையும் நாம் வரவேற்கிறோம்".

மூன்றாவதாக, இலங்கை அரசின் வாக்குறுதிகள் குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வில் இயல்புநிலை திரும்புவதற்கும், யுத்தமற்ற சூழலில் அவற்றை நிறைவேற்ற அளித்த வாக்குறுதிகள் இலங்கை அரசால் நிறைவேற்றப்படவேண்டும். "இதனையும் நாங்கள் வரவேற்கின்றோம்".

இந்தியாவின் இந்த அறிக்கையைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமான தேவைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன(?!).

இந்தியா எமது விடயத்தில் நீண்டகாலமாக முக்கிய பங்கு வகிக்கும் ஒரு தரப்பாகும்(!?). தீர்வு முயற்சியில் இந்தியாவின் ஒத்துழைப்பு, அரசுக்கும் தமிழர்களுக்கும் தேவை!!. அந்த முயற்சியினூடாக நியாயமான  விசுவாசமான ஒரு தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம்?. இந்தியாவின் இந்தக் கருத்தைச் சாதாரண ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளாமல்!  இலங்கை அரசு சாதகமாகப் பரிசீலிக்கவேண்டும்???. நிரந்தரமான அரசியல் தீர்வை எட்டும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும். என்று குறிப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார்.

தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஐயா சம்பந்தன் அவர்களின் ஆசையும் விருப்பமும் அனைத்து தமிழருக்கும் உள்ள ஒன்றுதான். இருந்தும் சம்பந்தர் அவர்களின் நம்பிக்கை ஈடேற அந்த புத்தபிரானும், அம்ரித்ஸர் பொற்கோவிலில் வீற்றிருக்கும் குரு நானக் சுவாமிகளும் துணை புரியவேண்டும்.

இந்திய, ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் வாக்குறுதி மற்றும் நம்பிக்கை அடிப்படையில், இதுவரை உள்ளதை விட்டது தவிர பெற்றுக்கொண்டதற்கான  வரலாறு எந்தப்பதிவிலுமில்லை. சம்பந்தன் ஐயா அவர்களின் இந்த நம்பிக்கை எங்கு போய் முடியும் என்பது அரசியல் தெரியாத சாதாரணமானவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இதன் எதிர்வினை ஒரு சூனிய அரசியல் புதைகுழியை நோக்கி நகர்த்தும் ஒன்றாகவே அனுபவங்கள் உணர்த்துகின்றன.

சிங்கள அரசு உலகத்தை ஏமாற்ற எடுக்கும் அனைத்து நாடகங்களுக்கும் ஏதோ ஒருவிதத்தில் இந்தியாவும், தமிழனும் உடந்தையாகி காவடி எடுத்து ஆடுவது நிறுத்தப்படும்வரை சிங்கள ஏமாற்று தொடர்ந்துகொண்டேயிருக்கும். வலியை உண்டாக்கும் இந்தியாவின் வலியுறுத்தல் இன்று நேற்று தொடங்கிய ஏமாற்று நாடகமுமல்ல. உதவி போர்க்குற்றவாளியான இந்தியா பிரதான போர்க்குற்றவாளியை என்றைக்கும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை. விட்டுக்கொடுக்கப்போவதுமில்லை.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எந்தச்சந்தற்பத்திலும் யுத்தத்தின்போது இராணுவம் தெரிந்தோ தெரியாமலோ  தமிழர்களுக்கு தீங்கு இளைத்திருப்பதை சுட்டி ஒரு வசனமும் இணைக்கப்படவில்லை. மாறாக இராணுவம் மனித உரிமையுடன் போர் புரிந்ததாக புனையப்பட்டிருந்தது. அறிக்கையை தமிழர் கூட்டமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டாலும், இழப்புக்களை நேரடியாக கொள்முதல் செய்துகொண்ட தமிழர் தரப்பு ஏற்றுக்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

எந்த இடத்திலும் எவராலும் மதிக்கப்படாத இந்த அறிக்கையை ஒருபுறம் தள்ளிவைத்துவிட்டு தீர்வு பற்றிய புள்ளிக்கு வந்தாலும் தீர்வின் முக்கிய அம்ஷங்களான கல்வி. காணி. சிவில்பாதுகாப்பு.(பொலிஸ் அதிகாரம்) இவை இல்லாமல் தமிழர்களுக்கு எந்த நன்மையும் நிகழ்ந்துவிடப்போவதுமில்லை . எல்லாவற்றிற்கும் மேலாக "வடக்கு கிழக்கு தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் திரும்பப்பெறப்படவேண்டும்". இராணுவம் திரும்ப பெறப்படாத ஒரு நிலையில் தமிழர்களின் வாழ்வியலின் சீரழிவை எந்தச்சக்தியும் சமன் செய்துவிடவும் முடியாது.

இராணுவத்தை எக்காரணம் கொண்டும் அப்புறப்படுத்த முடியாது என்றும் பொலீஸ் அதிகாரம் வழங்கமுடியாது என்றும் ராஜபக்க்ஷ கறாராக தனது நிலைப்பாட்டை பலமுறை தெரிவித்திருக்கிறார் அதை கூட்டமைப்பினருக்கும் அழுத்தியுரைத்திருக்கிறார். இதற்குள் என்ன பேச்சுவார்த்தையை கூட்டமைப்பு பேசித்தீர்க்கப்போகிறதென்பதும் சம்பந்தன் ஐயா அவர்களை தவிர வேறு எவருக்கும் புரியவுமில்லை.

பேசித்தான் தீர்க்கப்படவேண்டிய விடயம் என்பதையும் எவரும் மறுக்கவில்லை.  முப்பது நாற்பது வருடங்களாக பல நூறு சுற்று பேச்சுவார்த்தைகள் பேசி முடிந்துவிட்டன. புதிது புதிதாக பேச்சுவார்த்தைக்கு அமர்வதை விடுத்து, இதுவரை நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் இனி எதுபற்றி பேசப்போகிறோம் எது அடிப்படை என்பதை வரையறுத்து தெரியப்படுத்தவேண்டிய தேவை தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுக்கு மட்டும்தான் உண்டு.

கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் சிங்கள அரசியல்வாதிகளின் ஏமாற்றை புத்தகங்களில் படித்தறிந்த சிறியவர்கள் அளவுக்குக்கூட பல ஆண்டுகளாக அரசியலில் முனைப்புடன் முன்னிற்கும் கூட்டமைப்பின் தலைமை அறிந்து கொள்ளவில்லையானால் இனி எதைப்புரிந்துகொள்ளப்போகின்றனர்.

2011செப் ஜெனீவாவில் இடம்பெற இருந்த மனித உரிமை ஆணைக்குழுவின் 18 வது  கூட்டத்தொடரை ராஜபக்க்ஷ தரப்பு இடையூறு இன்றி சந்திக்கவேண்டும் என்பதற்காக, கூட்டத்தொடர் முடிந்தபின்  அரசாங்கம் 13வது சரத்துக்கு மேலே போயும் அனைத்தையும் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் என சம்பந்தருக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்து வைத்து வாக்குறுதியளித்திருந்ததும். சம்பந்தர் ஏற்றுக்கொண்டு மகிழ்வுடன் விருந்துண்டு வந்ததையும் நினைவு கூரவேண்டிய ஒன்றாகும்.

அதன்பின் சம்பந்தன் அவர்கள் கனடாவில் சுற்றுலாவின்போது "நாங்கள் வடக்கு கிழக்கை எங்களுக்கு சொந்தமானதென்று சொல்லவில்லை" என்று கூறி ராஜபக்க்ஷவை குளிர்வித்ததையும் மறந்துவிடமுடியாது.

இந்தியா சொல்லுவதை வரவேற்கிறோம், வரவேற்கிறோம், வரவேற்கிறோம்,. என்று யாரை சம்பந்தர் திருப்திப்படுத்துகிறார் என்பதும் அவரைத்தவிர வேறு எவருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. இது தனிப்பட்ட ஒருசில அரசியல்வாதிகளின் விருப்பு வெறுப்புக்குட்பட்ட தனிப்பட்ட பிரச்சினையும் அல்ல. பின்னணியில் உள்ள பல ஆயிரம் உயிர் அர்ப்பணிப்பு தியாகம் சம்பந்தப்பட்ட உயிரோட்டமான நீண்டகால உரிமைப்பிரச்சினை.

தமிழினத்துக்கு எதிரான கொள்கையுடைய இந்திய மத்திய காங்கிரஸ் அரசு 2009ல் ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து இன அழிப்பு செய்ததை மறந்துபோவதா. தமிழகத்து தமிழனின் முல்லை பெரியாறு நீர் உரிமையை நீதிமன்றத்தின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த காங்கிரஸ் அரசு தடையாக நின்றுகொண்டிருக்கிறது. கடலில் ஸ்ரீலங்கா படையினரால் கொல்லப்படும் மீனவன் தமிழன் என்பதால் ஸ்ரீலங்கா அரசுக்கு சார்பாக விஷமம் பண்ணுகிறது. சொந்த நாட்டில் வாழும் மக்கள் தமிழர்கள் என்பதால் வஞ்சகம் செய்யும் காங்கிரஸ் அரசு நண்பன் ராஜபக்க்ஷவை சிக்கலுக்குள்ளாக்கும் வகையில் கடல்கடந்து தனது நிர்வாகத்துக்குட்படாத ஈழத்தமிழனுக்கு உதவிவிடுமா என்பதை மனதிலிருத்தி இந்தியாவை நம்ப முயலவேண்டும்.

கேரளாக்காரன் நடை உடை உணவு வழக்கத்தில் சிங்களவனைப்போல இருப்பதால் முல்லை பெரியாறு நீரை தமிழகத்துக்கு கொடுக்கக்கூடாது என்பதில் மத்திய காங்கிரஸ் அரசு மலையளவு உறுதியுடன் மலயாளிக்கு சாதகமாக துணை நிற்கிறது. கன்னடக்காரனின் எழுத்துரு சிங்களத்தை ஒத்திருப்பதால் காவிரி நீரை தமிழனுக்கு வழங்கத்தேவையில்லையென காங்கிரஸ் அரசு தமிழனை அலைக்கழிக்கிறது.

இந்திய துணைக்கண்டத்தில் ஒரு அங்கமாக இருக்கும் தமிழகத்து தமிழனே பிரிந்து போகுமளவுக்கு ஆவேசப்பட்டு உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறான் நிலமை அப்படியிருக்கும்போது சூதுவாது அறியாத சம்பந்தர் ஐயா அவர்கள் இந்தியா அனைத்தையும் பெற்றுத்தரும் இதனை பெற்றுத்தரும் அதை வரவேற்கிறோம் என தன்னையும் ஏமாற்றி தமிழனையும் ஏமாற்றும் கொள்கையை திரும்பப்பெற்று மறு ஆய்வுக்குள் செல்லவேண்டுமென சுட்டிக்காட்ட ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உரிமை உண்டு.

செப், ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடருக்கு முன்னதாக அமெரிக்கா தெரிவித்த கருத்தையும் தமிழர் அரசியல் சக்திகள் நினைவு கூரத்தக்கது. "சிங்கள அரசிடம் இருந்து தீர்வைப் பெற போர்க்குற்றத்தைப் பாவியுங்கள் கூட்டமைப்புக்கு அமெரிக்கா ஆலோசனை கூறியிருந்தது. அந்த அறிவுரையை பின்பற்றினால் ஆகக்குறைந்தது குற்றவாளிகளையாவது தண்டனைக்குட்படுத்த உலகத்தின் ஆதரவு கிடைக்க வழியிருக்கிறது.

2012 ஜன, வரவிருக்கும் அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா சில மாதங்களுக்கு முன் ஐ.நா.சபையில் உரையாற்றிய போது, தூக்கக்கலக்கத்தில் இந்தியாவின் அறிக்கையை படிப்பதற்கு பதிலாக வேறொரு நாட்டின் அறிக்கையை எடுத்து வாசித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

ஒரு பாராளுமன்ற கூட்டத்தின்போது, பாகிஸ்தானை சேர்ந்த டாக்டர் முகமது காலில் சிஸ்டி(80), உடல்நிலை பாதித்திருந்த தனது தாயாரை பார்ப்பதற்காக  1992ல் இந்தியா வந்தபோது, கொலை வழக்கில் சிக்கினார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர், ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அந்தக்கைதிக்கு கருணை காட்டும்படி இந்திய உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது

‘80 வயது சிஸ்டியின் பிரச்னையை பாகிஸ்தான் அரசு கருணையுடன் பரிசீலித்து நல்ல முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன். அவரை விடுவிப்பது பற்றி தூதரக மட்டத்தில் பேசுவோம் என ஞாபக மறதியில் முரண்பட்ட விதமாக பாராளுமன்றத்தில் புலம்பியவர்தான் கிறுஷ்ணா.   அவர் ஈழத்தமிழர்கள் பற்றி எந்தளவு புரிந்து வைத்திருக்கிறார் என்பதும் எவ்வளவு பொறுப்புள்ளவர் என்பதற்கும் அவ் இரண்டு சம்பவங்களும் நல்ல சான்று.

மீண்டும் ஒருமுறை தமிழனின் நினைவுக்கு: அமெரிக்கா கூறியதுபோல "சிங்கள அரசிடம் இருந்து தீர்வைப் பெற போர்க்குற்றத்தைப் பாவியுங்கள்" திரும்பத்திரும்ப அந்த வாக்கியம் நினைவுக்கு வந்தால் நல்லது. அதில் உண்மையும் இருப்பதாகவே படுகிறது.

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்.
நன்றி ஈழதேசம் இணையம்.