Sunday, January 1, 2012

வரும் ஆனால் வராது. இந்தியாவுடன் இணைந்து காலம் கடத்த அடுத்த தந்தரம்.

தரமுடியாது என்று அறிவித்தாலும் காணி அதிகாரங்கள் குறித்தே பேச்சு; கூட்டமைப்புக்கு சமிக்ஞை காட்டியது மஹிந்த அரசு
news
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்று ஜனாதிபதியும் அமைச்சர்களும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்து வந்த போதும், கூட்டமைப்புடனான அடுத்த சந்திப்பின் போது காணி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது குறித்தே விரிவாக ஆராயப்படும் என்று தெரிகின்றது. 

அரசு கூட்டமைப்பு இடையிலான அடுத்த கட்டப் பேச்சு எதிர்வரும் 17,18,19ஆம் திகதிகளில் நடை பெற உள்ளது. இதன்போது காணி அதிகாரங்கள் குறித்தே பேசுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இரு தரப்பினரும் உறுதியாகத் தெரிவித்தனர். மாகாண சபைகளுக்கு காணி அதிகாரங்களைத் தருமாறு கூட்டமைப்பு பேச்சின் போது அதிக அழுத்தங்களைக் கொடுக்கும் என்றும் அதன் தலைமை தெரிவித்தது. 
 
அதேவேளை, காணி அதிகாரங்களைப் பகிர முடியாது என்று அரச தரப்பினர் வெளியே பேசிக் கொண்டாலும் அது குறித்துத் தொடர்ந்து பேசி ஓர் இணக்கப்பாட்டுக்கு வரலாம் என்ற நெகிழ்வுப் போக்குக்கான சமிக்ஞைகளை அரச பேச்சுக் குழுவின் தலைவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூட்டமைப்பினருக்குக் காட்டியிருக்கிறார் என்று அரச வட்டாரங்கள் தெரிவித்தன. 
 
இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும் அதே காலப் பகுதியில் இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.எம்.கிருஷ்ணா கொழும்பு வருகிறார். இனப் பிரச்சினைக்கான தீர்வு இழுபட்டுப் போவது குறித்து இரு தரப்பினருடனும் கலந்தாலோசிப்பதே அவரது இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்று புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. 
 
இத்தகைய ஒரு சூழலில் காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தரமுடியாது என்று பேச்சு மேசையில் ராஜபக்ஷ அரசு விடாப்பிடியாக இருப்பது சாத்தியமற்றது என்று கொழும்பில் உள்ள மேற்குலக ராஜதந்திரிகள் சிலர் சுட்டிக்காட்டினர். 
 
இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அடிப்படையாக ஜனாதிபதி அடிக்கடி குறிப்பிடும், அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த மத்திய அரசுகளால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. 
நன்றி உதயன்.

No comments: