Saturday, November 16, 2013

கொமன்வெல்த் மாநாடும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருன், அவர்களின் கண்டனமும்.‏

இங்கிலாந்து பிரதமர் நேற்றய தினம் யாழ்ப்பாணம் சென்று திரும்பிய நிகழ்வானது,   ஆர்வத்தின் நிமித்தம் உள்ளூர் செய்திகளில் சொல்லிக்கொள்வது போல ஈழத் தமிழர்களின் வரலாற்றில் பெரிய திருப்பத்தை உண்டுபண்ணி விடும் என நம்பிவிட முடியவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட  ஈழத்து தமிழ் மக்களை,  பிரித்தானிய பிரதமர்,  சந்தித்து ஈழ மக்களின் கொலனித்துவ கால மற்றும் வரலாற்று சூழல் அடிப்படையை மனதில் நிறுத்தி  நேர்மையுடன் நீதியான முறையில் பிரித்தானிய அரசாங்கத்தின் ஆதரவை பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நல்குவார் என்றும்,   போர்க்குற்றம் தொடர்பாக பாரபட்சமில்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்‌ஷவிடம் முறையான கேள்வி எழுப்பி,  ""இனப்படுகொலை"" (சர்வதேச அரசியல்த் தலைவர்கள் சொல்லிக்கொள்வதுபோல)  யுத்தக்குற்றம் சம்பந்தமாக விசாரணை நடத்தப்படவேண்டும் என்று அழுத்தம் கொடுப்பார் என்று செய்திகள் வந்தாலும்,  இதயபூர்வமாக நம்புமளவுக்கு எந்த நம்பிக்கையும் வெளிப்படவில்லை.

யாழ்ப்பாணம் சென்ற பிரித்தானிய பிரதமர் கெமருன் அவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சுமந்திரனின் வழிகாட்டுதலில் ஒரு சில நலன்புரி நிலையங்களுக்கு சென்றதாகவும்,  குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்து  தமிழர்களின் அரசியல் முன்னேற்றம் சம்பந்தமாகவும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிகிறது. http://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/david-cameron-with-tna%201.jpg
அவை தவிர,

இதுபோன்ற சர்வதேச தலையீடுகள் உண்டாகும் தருணங்களில்  மக்களிடையே உண்டாகும் பொதுவான எதிர்பார்ப்பும்,  ஏதாவது மாற்றம் நிகழாதா என்ற மக்களின் அதீத ஆதங்கமும் அவற்றை குலைக்கவேண்டாமே என்ற உள்ளூர் ஊடகங்களின் செய்திகளும் ஒரு மாயமான தோற்ப்பாட்டை உண்டுபண்ணி முடிந்திருக்கிறது என்பதே உணரக்கிடைக்கிறது.

இன்று 16 ,11 2013 சனிக்கிழமை தனது உரையை முடித்துக்கொண்டு பிரித்தானிய பிரதமர் நாடு திரும்பிவிட்டார்.  அவர் நாளைய நிகட்சிகளில் கலந்து கொள்ளாமல் அவசரமாக புறப்பட்டதும் கூட சர்வதேச அரங்கில் இலங்கைக்கு  சொல்லப்பட்ட ஒரு செய்தியாகவே சித்தரிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் பிரதமர் டேவிட் கெமருன் யாழ் மண்ணில் இருக்கும்போதே ஶ்ரீலங்கா இராணுவ புலனாய்வு படையினர் பொலிஸ் படை உதவியுடன் பகிரங்கமாக அத்துமீறி தெருவில் திரண்டிருந்த பொதுமக்களை தாக்கி உருக்குலைத்து அலைக்கழித்திருக்கின்றனர். அப்பேர்ப்பட்ட மனநிலையை அந்த அரசாங்கம் பொலிஸாருக்கும் இராணுவ புலனாய்வு படையினருக்கும் கருத்து தெரிவிக்க வல்ல அமைச்சர்களுக்கும் வழங்கியிருக்கிறது.

இருந்தும் அந்த மக்களுக்கு இப்படியான தருணங்களில் தங்கள் மனதிலுள்ள ஆதங்கங்களை வெளிப்படுத்தி போராடுவது தவிர வேறு ஆதாரமும் இல்லை வழியிமில்லை.

முன்னதாக யாழ்ப்பாணம் செல்லவிருந்த சனல் 4, குழுவினரை  யாழ்ப்பாணம் செல்ல விடாமல் சிங்கள காடையர்கள் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர். இந்த ஆற்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் எல்லாம் தயாரிக்கப்பட்ட ஶ்ரீலங்காவின் அரசு தரப்பின் இராணுவப் புலனாய்வு படையினர் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்திருக்கிறது.  அனுரதபுர மாகாணசபை உறுப்பினர்களும் இன்னும் ராஜபக்‌ஷவின் பரிவாரங்களும் அனுரதபுரம்,   வவுனியா ஆகிய இடங்களில் எந்த இடைஞ்சலும் இல்லாமல்  மிகச் சாதாரணமாக ஆற்பாட்டத்தில் ஈடுபட்டு துணிச்சலுடன் இங்கிலாந்தின் சனல்4, குழுவை திருப்பி அனுப்பியிருக்கின்றனர்,

டேவிட் கெமருன் யாழ் விஜயத்தின் பின்,  இரண்டாவது முறையாக முயற்சித்து யாழ் சென்ற சனல்4,  தொலைக்காட்சி,  இலங்கை மிகப் பெரிய மயான பூமி என நேற்றிரவு பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இந்த மயான பூமியில் விடுமுறையை கழிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு அந்த தொலைக்காட்சி தனது நாட்டு மக்களுக்கும் சர்வதேச சுற்றுப்பயணிகளுக்கும் கோரிக்கை விடுத்துள்ளது. என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது. http://eeladhesam.com/images/eelam/news01.08/01.11/channel4injaffna%2017.jpg
ஒருநாள் சுற்றுப்பயணத்தை இலங்கையில் சுதந்திரமாக நடத்தமுடியாது என்ற உண்மையை பகிரங்கமாக வெளிப்படுத்திய சனல்4,   தொலைக்காட்சி இயக்குனரை மனதார பாராட்டிக்கொள்ளலாம்.

ஐக்கிய இராய்ச்சியத்தின் பிரதமருக்கும்,  அங்கிருந்து வந்த பிரசித்தி பெற்ற ஊடகங்களான சனல்4,  மற்றும் பிபிசி,  போன்ற பாரம்பரிய   ஊடகங்களுக்கு ஒரு நாளை சுதந்திரமாக இலங்கையில்  காலம் கடத்த முடியவில்லை என்றால்,  ஈழத்தமிழினம் எவ்வளவு அனீதிகளை கொள்வனவு செய்து ஜீரணிக்க முடியாமல் அந்த மண்ணில் வாழ்க்கையை கழித்திருக்கும் என்பதை பிரித்தானிய பிரதமர் கெமருன் அவர்களை நேரடியாக சந்தித்து பேசிய வடக்கு மாகாணசபை முதலமைச்சர் புரிய வைத்திருக்க வேண்டும்.

ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் தனது மேதாவிலாசத்தை பிரதிபலித்து வேறு எவரையும் உள்வாங்காமல் சம்பந்தன் போன்ற குறிப்பிட்ட ஒரு சிலருடன் பிரித்தானிய பிரதமருடன் அழாவழாவியதாகவே தெரிகிறது. http://www.eeladhesam.com/images/eelam/news01.08/01.11/david-cameron-with-tna%201.jpeg

வடக்கு மாகாணசபையின் அதிக விருப்பு வாக்குக்களை பெற்று தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையின் உறுப்பினரான அனந்தி,  களத்தில் மக்களோடு மக்களாக போராடி தெருவில் நின்று கெமருன் அவர்களுக்கு மகஜர் கையளித்திருக்கிறார்,  மக்கள் போராட்டத்தில் பங்குபற்றிய அனந்தி,  பொலிஸாரின் தாக்குதலுக்கும்  உள்ளாகியிருக்கிறார்,  வடக்கு மாகாணசபையின் உறுப்பினரான அனந்தியின் சிறப்புரிமைக்கு அரச படையினர் எந்த மரியாதையையும் கொடுக்கவில்லை. 

பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமருனைச் சந்திக்க முனைந்த மக்கள் மீது இலங்கை அரச உளவுப்படைகள் வழமைபோல தாக்குதல் நடத்தியுள்ளன. காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு பதாகைகளுடன் நடந்த அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை பாசிச அரசின் உளவுப்படைகள் தாக்குதல் நடத்தின. பின்னதாக டேவிட் கெமருன் பயணம் செய்த வாகனத் தொடரணியை மக்கள் சூழ்ந்துகொண்டு அவலக் குரலில் கண்ணீர்வடித்தனர். இத்தகவலை பிரித்தானியப் பத்திரிகைகள் அனைத்தும் பதிவு செய்துள்ளன.

இவை அனைத்தையும் பார்த்தபின்னர் டேவிட் கமரன், "பயங்கரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது", சண்டை முடிந்து விட்டது, போர் நிறைவடைந்து விட்டது ஆக நாடு வெற்றிப்பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. நாட்டை ஒற்றுமைப்படுத்த இலங்கை அரசு பெருந்தன்மையுடன் செயற்பட வேண்டும்” என்று ராஜபக்‌ஷ குறிப்பிடுவதைப்போலவே குறிப்பிட்டிருக்கிறார்.

பெண்கள் பெரியோர் குழந்தைகள் என்று சாரிசாரியாகப் மனிதர்கள் புதைக்கப்பட்ட மண்ணிலிருந்துகொண்டு,  இலங்கை அரசு பெருந்தன்மையோடு நாட்டை ஒற்றுமைப்படுத்தும் என்றுகூறும் கெமருன் அவர்களின் செய்தி சாதாரண மனித மனதில் பெருத்த பய உணர்வையும் நம்பிக்கையீனத்தையுமே தோற்றுவிக்கிறது.

இனப்படுகொலை களமான இலங்கையில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டுக்கு பிரித்தானிய பிரதமர் செல்லாமல் புறக்கணிக்க வேண்டும் என்று புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் போராட்டம் நடாத்தி  முன்னர் கோரிக்கை வைத்திருந்தன,  அந்த கோரிக்கைக்கு இசைவாக டேவிட் கெமருன் கொமன்வெல்த் மாநாட்டுக்கு சென்று ராஜபக்‌ஷவிடம் போர்க்குற்றம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்புவேன் என்றும் அதற்காக தான் கொமன்வெல்த்  மாநாட்டில் பங்குபற்ற வேண்டும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார்.

பிரித்தானிய தமிழ் அமைப்புக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைய மாநாட்டு நிகழ்வின்போது இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் குறி்த்து,  உடனடியாக வெளிப்படையான விசாரணை நடத்த இலங்கை அரசு முன் வர வேண்டும். இதை வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடக்கவிருக்கும் மனித உரிமை அமர்வுகளுக்கு முன் செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால், பிரிட்டன் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிடும். இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கு இங்கிலாந்து ஏற்பாடு செய்யும். நியாயமான விசாரணை நடக்க வேண்டும் என பிரிட்டன் எதிர்பார்க்கிறது. இங்கு பத்திரிகை சுதந்திரம் காக்கப்பட வேண்டும் என்றும் உரை நிகழ்த்தியிருந்தார். 
 
அதே கருத்தை உலக  மகா வல்லரசான அமெரிக்காவும் இலங்கை அரசுக்கு எதிராக இரண்டுமுறை ஜெனீவா அரங்கத்தில் தீர்மானமாக கொண்டுவந்திருக்கிறது என்பதும் அதை பிச்சைக்கார நாடான இந்தியா,  லாவகமாக நீர்த்துப்போகச்செய்திருந்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவை.

சோர்ந்துபோனாலும்,  போரின் வடுக்களை மறக்கமுடியாத ஈழத்தமிழர்கள் ஒவ்வொரு சர்வ தேச தலைவர்கள் இலங்கைக்கு செல்லும்போதும் சோர்வில்லாமல்  தமது உரிமைக்கான போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு பின்புலமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியும்,  மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி, மற்றும் சிவாஜி லிங்கம் போன்றவர்களும், புலம்பெயர் தேசங்களில் இருக்கும் சில அமைப்புக்களும்  இருக்கின்றார்கள் என்ற திருப்தி  ஒன்று மட்டுமே ராஜபக்‌ஷவை சர்வதேச தீர்ப்பாயத்தின் முன் நிறுத்த  நிச்சியம் வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடன் இழையோடுகிறது.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

No comments: