Tuesday, November 5, 2013

மன்மோகன் கொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்றினால் ராஜபக்‌ஷவுக்கு யோகம் பங்குபற்றவில்லையென்றால் கருணாநிதிக்கு யோகம்.‏

  
ஒப்பீட்டளவில்,  கடந்த நான்கு ஆண்டுகளாக ராஜபக்‌ஷவின் ஶ்ரீலங்கா சிங்கள அரசு இனப்படுகொலை தொடர்பாகவும், மனித உரிமை மீறல் குற்றம் சம்பந்தமாகவும் தொடர்ந்து பல சர்வதேச நெருக்கடிகளை சந்தித்து வருகிறது,
ஒவ்வொரு நெருக்கடிக் காலத்திலும் ராஜபக்‌ஷ சர்வதேச சட்ட நெருக்கடிக்குள் சிக்கிக்கொள்ளும் சந்தற்பம் ஏற்படும்போதெல்லாம் சீனா பாக்கிஸ்தான் ராஜபக்‌ஷவுக்கு உதவுகிறதோ இல்லையோ மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு ஆபத்தாந்தவனாக களத்தில் இறங்கி சர்வதேச நெருக்கடியிலிருந்து இனப்படுகொலையாளி ராஜபக்‌ஷவை தோள் கொடுத்து காப்பாற்றி வந்திருக்கிறது.

ஒருமுறை இரண்டு முறையல்ல 2009 ம் ஆண்டிலிருந்து 2013 வரை ஐந்துக்கு மேற்ப்பட்ட சர்வதேச இறுக்கங்களின்போது  இந்தியா தலையிட்டு விதிகளை மாற்றி ராஜபக்‌ஷவுக்கு காப்பரணாக நின்று வந்திருக்கிறது.

அந்த வரிசையில் ஒட்டுமொத்த உலக தமிழினத்தின் எதிர்ப்பையும் கணக்கிலெடுக்காமல் ஶ்ரீலங்காவில் நடைபெறவிருக்கும் கொமன்வெல்த் மாநாட்டிலும் பங்குபற்றி ராஜபக்‌ஷவை காப்பாற்றும் முயற்சியில் மன்மோகன் சிங்கின் அரசு குறியாக நிற்கிறது. அதன் முன்னோட்டமாக தமிழ்நாடு அரசு இந்தியா கொமன்வெல்த் மாநாட்டில் பங்குபற்றக்கூடாது என்று சட்டசபையில் தீர்மானம் கொண்டுவந்தபோதும், தமிழகத்தின் உணர்வை கவனத்திலெடுக்காமல்  டில்லியில் காங்கிரஸ் உயர்மட்டக் குழு சோனியா தலமையில் கூடி மன்மோகன் சிங் கொமன்வெல்த் கூட்டத்தில் கலந்து சிறப்பிக்கவேண்டும் என்று தமிழ்நாட்டின் தீர்மானத்துக்கு போட்டியாக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது

இந்தியாவின் இந்த கீழ்த்தரமான செயற்பாடுகள் அகற்றப்பட்டிருக்குமாயின் போர் முடிந்த நான்கு வருடத்தின் பின்னான இன்றைய காலகட்டத்திலாவது எஞ்சிய தமிழர்களின் அரசியல்ப் பிரச்சினையாவது மிக இலகுவாக சர்வதேச சட்ட அனுமானங்கள் மூலம்  தீர்க்கப்பட்டிருக்கும். அதற்கான mechanism மூலோபாயங்கள் சர்வதேச சட்டதிட்டங்களுக்கமைய, கொமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொதுவான நீதி நிர்வாக அமைப்புகிளிடையே நிறையவே இருக்கின்றன. இந்தியாவின் குறுக்கிடு இல்லாவிட்டால் சர்வதேச தீர்ப்பாயத்துக்கு செல்லுவதற்கான வழியும் இலகுவாக்கப்பட்டிருக்கும்.

இந்தியாவின் வன்மத்துடன் கூடிய தேவையற்ற தலையீடு ஒரு இனத்தை வேரோடு அழிக்கும் வெலைத்திட்டமாகவே தொடர்கிறது,  இதற்கான மாற்று வழியை தேடாதவரை அந்த இழுக்கு தொடரவே செய்யும்.

இந்திய ஆட்சியாளர்கள் தமது இயலாமையை சரிக்கட்டி பதவிக்கான ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளுவதற்காக, ஆட்சி அதிகாரமற்ற வல்லமை குறைந்த தரப்பான ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் தொடர்ச்சியான வினையாகி நேர்மையற்ற முறையில் தலையீடு செய்து இல்லாத பல காரணங்களை நியாயப்படுத்தி தமிழர்களுக்கான தேசிய உரிமையை கிடைக்காமல் செய்யும் வகையில் தன்னிச்சையாக குறுக்கே நின்று அராஜகம் செய்து வருகிறனர்.

போர் முடிந்து நான்கு வருடங்களானபோதும், இந்தியா பின்னணியில் இருந்து இலங்கை அரசுக்கு தேவையற்ற விதமாக முட்டுக் கொடுத்துக்கொண்டிருப்பதால் ஶ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கான ஆகக்குறைந்த அடிப்படை தனிமனித பாதுகாப்பு தேவைகளைக்கூட உறுதிப்படுத்த முயற்சிக்கவில்லை.  உதாசீனப்படுத்தப்பட்டே வருகிறது. சர்வதேசம் அந்த பிரச்சினைகளில் தலையிடும்போதெல்லாம் இந்தியா தனது பிராந்திய மேலாண்மை என்ற மாயையை காரணங்காட்டி தலையீடு செய்து வருவதால் சர்வதேசத்தின் தலையீடு தவிர்க்கப்பட்டு வாக்குறுதிகளும் வாய்தாக்களுமே தமிழர்களின் அரசியலாக மாற்றங் கண்டிருக்கிறது.

அந்த இழிநிலைக்கு ஒரு வழியில் 2009 க்குப் பின் சம்பந்தன் தலைமையினாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தம்மால் இயன்றவரை உதவி வருகின்றதென்பதும் எவரும் மறுப்பதற்கில்லை.

தமிழர் பிரச்சினைகளில் ஈடுபாட்டுடன் சர்வதேசம் தலையிடும்போதெல்லாம் இந்தியாவின் அறிவுறுத்தலுக்கொப்ப நிறைவேற்றுவதில்லை என்ற நிலையிலும் ஜனநாயகம் என்ற புலுடாவை கவசமாக்கி தந்தரமாக பொய் வாக்குறுதிகளை ஐநா அரங்கிலும் சர்வதேசத்தின் முன்னிலையிலும் ஒப்புக்கொடுத்து உணர்வுமயப்பட்டது போன்ற மிகப்பெரிய பொய் உரைகளை நிகழ்த்தி கால அவகாசத்தை கச்சிதமாகப் பெற்று அடுத்த நிலைக்கு சென்று ஶ்ரீலங்கா தப்பித்து வருகிறது

எதிர்வரும் 2014 மார்ச் ஜெனீவா மனித உரிமை அமர்வுகளின்போது  சர்வதேச அரங்கில் ஏற்கெனவே  ஒப்புக்கொண்டு வாக்குறுதியளிக்கப்பட்ட பல வேலைத்திட்டங்களுக்கான பெறுபேறுகளை ஒப்படைக்கவேண்டிய தவணைக்காலம். ஆனால் மாறாக ஈழத்தமிழர்கள் வாழ்ந்த பூர்வீக மண்ணில் குடியிருப்புக்கள் உடைத்து தரைமட்டமாக்குதலும் சிங்கள குடியேற்ற நிறுவல்களும் புத்தர் சிலைகளும் அதற்காக சில தெருக்கள் செப்பனிடப்பட்ட வேலைத்திட்டங்கள் தவிர தமிழ் மக்களுக்கான அடிப்படை எதுவும் ராஜபக்ஷ அரசால் அங்கு நிறுவப்பட்டிருக்கவில்லை. தினச்செய்திகளில் அவை அப்பட்டமாக வெளிவந்தவண்ணம் இருக்கின்றன. 

சர்வதேசத்தின் முன் பெருத்த ஒரு எடுத்துக்காட்டாக வடக்கு மாகாணசபை தேர்தல் நடத்திய பெறுபேற்றை காட்டி முதலமைச்சர் விக்கினேஸ்வரனை கொமன்வெல்த் கூட்டத்தில் பேச வைப்பதன் மூலம் 2014 மார்ச் ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் அமர்வில் தமிழர்களுக்கான ஆட்சி அதிகாரம் வழங்கப்பட்டுவிட்டது அனைத்தும் மாகாணசபையிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது தமிழர்களுக்கான வேலைத்திட்டங்கள் அனைத்தும்  படிப்படியாக நடைபெறும் எல்லோரும் மகிழ்ச்சியுடன் பொறுத்தருளவேண்டும் என்று கூறி தப்பித்துவிடலாம் என்பது இந்திய+ராஜபக்‌ஷ=சம்பந்த திட்டமாக இருந்தது.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை கொமன்வெல்த் கூட்டத்தில் பேச வைப்பதன் மூலம் தமிழர்களின் பிரச்சினை எல்லாம் தீர்க்கப்பட்டுவிட்டதாக காட்டிக்கொள்ளும் திட்டத்தின் முதல் வேலைத்திட்டம்தான் வடக்கு மாகாணத்துக்கான தேர்தல். இந்த தேர்தலை நடத்தி முடித்த சக்திகள் 1, இந்தியா, 2, ஶ்ரீலங்கா ஜனாதிபதி ராஜபக்‌ஷ, 3, தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சப்பந்தன், ஆனால் துரதிர்ஷ்ட வசமாக கூட்டமைப்பினுள் எழுந்த கூட்டுக்கட்சிகளின் பிரிவினை விக்கினேஸ்வரன் கொமன்வெல்த் கூட்டத்தில் உரையாற்ற தடைவிதிக்குமளவுக்கு போய் ராஜபக்‌ஷவை திகைப்பிலாழ்த்தியிருக்கிறது.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் எதேச்சதிகாரத்தால் கூட்டமைப்புக்குள் விரிசல் தோற்றுவிக்கப்பட்டது. அந்த விரிசல் விக்கினேஸ்வரனை  மாநாட்டில் சமூகமளிக்க தடை உத்தரவாகி சிங்கள அரசுக்கு எதிர்பாராத பின்னடைவை தோற்றுவித்தது. அது ஒன்று மட்டும் இன்றைக்கு தமிழர்களுக்கு ஓரளவு திருப்தியளிக்கும் ஒரே ஒரு அனுகூலமாக காணலாம்.

2014 மார்ச் நடக்கவிருக்கும் மனித உரிமை அமர்வில் எழவிருக்கும் நெருக்கடிகளை மந்தமாக்கும் பொருட்டு,  இந்திய ஆலோசனையின் பேரில் ஒரு சில அபிவிருத்திக்கான ஒப்பீடுகளை முன்னோட்டமாக  பொதுநலவாய மாநாட்டில் வேலைத் திட்டமாக முன் மொழிந்து விக்னேஸ்வரனையும் விருந்தினராக்கி பல நாட்டுத்தலைவர்களை கவர்ந்து திருப்திப்படுத்தி  2014 நடக்கவிருக்கும் ஜெனீவா மனித உரிமை பேரவயின் கடுமையை குறைத்துக்கொள்ள ராஜபக்ஷ  மன்மோகன் கூட்டாளிகள்  மிகப்பெரிய இராசதந்திர களமாக பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்த இடம் கொமன்வெல்த் மாநாடு அரங்கம்

இந்த மாநாட்டில் ஶ்ரீலங்காவின் கூட்டாளி இந்தியா கலந்து கொள்ளவில்லையென்றால் ராஜபக்‌ஷ சர்வதேச பொறிக்குள் இழுக்கப்படுவதன் ஆரம்பம் உறுதிப்படுத்தப்பட்டதாகிவிடும். அதாவது கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொண்டு ராஜபக்‌ஷவுக்கு முண்டுகொடுக்கவில்லையென்றால் அதன் எதிர்த் தாக்கம் மார்ச் 2014 ஜெனீவா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடர் ஶ்ரீலங்காவுக்கு எதிரான கடுமையான கட்டளைகளை பதிவுசெய்யும் என்பது தவிர்க்கமுடியாமலிருக்கும்.

அந்தநிலை ஏற்படக்கூடாது என்பதே இன்றைக்கு காங்கிரஸ் தலைவி சோனியா, மன்மோகன் சிங் மற்றும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் கவுரவக் கவலை. 

இந்திய அரசியலில் இன்றைக்கு பாராளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாட்டுக்காலம் என்பதால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்,  கட்சிகள் அவரவர் தமது தேர்தல் வியூகத்தின் அடிப்படையில் கொமன்வெல்த் மாநாட்டை கவசமாக்கி  கருத்துக்களை விதைத்துக்கொண்டிருக்கின்றனர். தேர்தல் காலம் இல்லாமல் இருக்குமானால் மன்மோகனுக்கு இவ்வளவு சிக்கல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டிலிருந்து ஈழ இனப்படுகொலைக்கு  முழு முதற் பொருளான திமுக தலைவர் கருணாநிதி,, கருணாநிதியின் அடிவருடி திருமாவளவன்,  அதே கொள்கை கொண்ட மருத்துவர் இராமதாஸ், ஆரம்பத்தில் தமிழ் ஈழம் கண்டுதான் பிறந்தநாள் கொண்டாடுவேன் என்று கதை விட்டு அரசியலுக்கு வந்து பேசாமடந்தையாக இருந்த விஜயகாந்த்,  அவர்களுடன் தமிழக காங்கிரசின் ஒரு பிரிவான வாசன் ஆகியோர் தமது அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவேண்டும் என்பதற்காகவும், தமிழக மக்களின் வக்கு வேட்டையை கணக்கில்க் கொண்டும்,  தமக்கான தேர்தல் ஆதாயத்தின் பிரகாரம் கொமன்வெல்த் மாநாட்டுக்கு மன்மோகன் சிங் செல்லக்கூடாது என்று அரசியல் ஆதாயத்திற்காக பிடிவாதமாக எதிராக நிற்கின்றனர்.  

காங்கிரஸும் வீழ்ச்சியின் விளிம்பில் இருப்பதால் திடமாக இவற்றை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறது.  இதை ஒரு தேர்தல் காலத்துக்கான அரசியல் அலை என்று கொள்வது தவிர ஈடுபாட்டுடன் தமிழக அரசியல்வாதிகள் எதிர்க்கின்றனர் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

இங்கு ஒருவிடயத்தை அரசியல்வாதிகள் தவிர்ந்த தமிழகத் தமிழர்கள், மற்றும் ஈழத்தமிழர்கள் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளனர்,. தமிழக மக்கள் சார்ந்த வாழ்வாதார  பிரச்சினையானாலும்சரி ஈழத் தமிழர்களின் தேசிய பிரச்சினையானாலும்சரி,  தமிழகத்தின் சக்திவாய்ந்த அரசியற் கட்சிகளின் உள்ளுடன்களை நிதானமாக ஆழ நீளம் பார்க்காமல் இந்தியாவை ஆட்சிசெய்யும் எந்த ஒரு மத்திய அரசும் ஒரு முடிவுக்கு வந்துவிடுவதில்லை., தமிழகத்தின் சாதக பாதகங்களை தமக்கு சாதகமான கட்சிகளுடன் பேசி உடன்பாட்டை ஏற்படுத்திய பின்,  அவற்றை ஒருபுறம் வைத்துக்கொண்டு  அவற்றையும் தாண்டி உளவுத்துறை  மற்றும் கொள்கைவகுப்பாளர்கள் மூலம் பகுப்பாய்ந்து பிரச்சினையின் சாதக பாதகங்களை கணக்கிட்டு அதன்பின்னரே ஒரு முடிவான கொள்கைக்கு வருவார்கள் என்பது மிக சாதாரணமான விடயம்.

இந்திய மத்திய அரசு ஈழத்தமிழர்களின் அரசியலில் தீர்வுக்கான வேலைத்திட்டம் சம்பந்தமாக தலையிடுவதென்று ஒரு முடிவுக்கு வந்து களத்தில் இறங்கி நிற்கிறது என்றால்,  ஒன்று தமிழ்நாட்டின் பெரிய அரசியற் கட்சிகளான திமுக அல்லது அதிமுக இரண்டில் ஒரு கட்சி மத்திய அரசுக்கு ஒத்திசைவாக இருக்கிறதென்றே அர்த்தப்படும். 2009ல் கருணாநிதியின் திமுக அப்படி ஒரு ஒப்பந்த அடிப்படையில் இருந்ததால்த்தான் தமிழகத்தின் எழுச்சியை மிகக்கவனமாக கட்டுக்குள் வைத்துக்கொண்டு மிகப்பெரிய இனப்படுகொலையை மூன்று நான்கு மாதங்களுக்குள் நடத்தி முடிக்கப்பட்டது.  

அந்த நேரங்களில் மக்கள் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்காக கருணாநிதி பறந்தடிப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டாலும் மத்திய அரசுக்கு எதிராக ஒரு அசைவாக்கத்தையும்  பகிரங்கமாக வெளியிட்டு தனது எதிர்ப்பை காட்டிக்கொள்ளவில்லை,   காலதாமதத்தை உண்டாக்கக்கூடிய கதாப்பிரசங்கங்களையே அவர் 2009 மே மாதம் முடிந்த பிறகும் தொடர்ந்தார். போர் நிறுத்தப்பட்டு விட்டது தூவானம் நிற்க சில தினங்கள் எடுக்கும் என்றும் அவர் கூறிய வாசகங்கள் காலத்தால் மறக்க முடியாதவை.

ஜெனீவாவில் அமெரிக்க தீர்மானத்தின்போதும்  மாணவர்களின் போராட்ட வீச்சை எதிர்கொள்ள முடியாத கருணாநிதி காங்கிரஸின்  ஒப்புதலுடன் இரகசிய உடன்பாட்டுடனேயே கூட்டணியிலிருந்து வெளியேறியதாக அறிவித்தார் என்பதையும் அவர் வெளியேறியபின் மத்திய அரசு சம்பந்தமாக வெளிவந்த அவரது கபடத்தனமான அறிக்கைகள் பறைசாற்றி நின்றன.

இன்றைக்கு  தமிழகத்தில் தீண்டுவார் அற்ற கட்சிகள் என்ற நிலை காங்கிரஸுக்கும் திமுகவுக்கும்  ஏற்பட்டு விட்டதால் கருணாநிதி காங்கிரஸை கழற்றி விட வழி தேடுகிறார். அதேபோல  காங்கிரஸ் தன்னை புதிய ஒரு அணியுடன் இணைத்து பலப்படுத்திக்கொள்ள

கருணாநிதியை கழற்றிவிட்டு விஜயகாந்தை இணைத்துக்கொள்ள சோனியாவின் மைந்தன் ராகுல் ஆர்வம் காட்டி வருகிறார் என்பதும் பகிரங்கமாக பத்திரிகை ஊடகங்கள் அறிவிக்கின்றன.

ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலையால்  திமுகவும் காங்கிரஸும் தமிழகத்தில் தனிமைப்பட்டிருப்பது  ஓரளவு உறுதியாகியிருக்கிறது.   இருந்தும் காங்கிரஸை குற்றவாளியாக்கிவிட்டு தப்பிப்பதற்கே கருணாநிதி மிக பிரயத்தனப்படுகிறார்.  அதன் வெளிப்பாடுகள்தான் டெசோ, தமிழீழம் கொமன்வெல்த் எதிர்ப்பு கோசம் இருந்தும் கருணாநிதி மக்கள் மன்றத்தில் தப்பிப்பது அவ்வளவு சுலபமான விடயமுமல்ல என்பது காங்கிரஸுக்கும் தெரியாததுமல்ல.

எனவே கருணாநிதியின் சலசலப்பு தமிழ் நாட்டில் ஒருவேளை எடுபடலாம் டில்லியில் சோனியா மட்டத்தில் எடுபடாது.  அனேகமாக மன்மோகன் சிங் கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்கக்கூடும்  அப்படி பங்கேற்றால் அது கருணாநிதியின் பிற்போக்கான சந்தற்பவாத அரசியலினால் ஏற்பட்ட விளைவு என்பதை உலக தமிழினம் புரிந்துகொள்ளும்.

ஈழதேசம் செய்திகளுக்காக.

கனகதரன்.

No comments: