Friday, August 20, 2010

கவிதை

வன்னியில் பூர்வீகம் கேட்டாலோ புண்படுவீர் நெஞ்செல்லாம்.

2010-08-09 06:01:52
வன்னியில் பூர்வீகம் கேட்டாலோ
புண்படுவீர் நெஞ்செல்லாம்,
-------------------------------------------
அந்தோ போறானே மதிபிசகி ஓர்மனிதன்
கொஞ்சம் பொறுத்திடுவீர் கேளும் இவன் கதையை,
பந்தம் பசமெல்லாம் பற்றறுக்கப்பட்ட இவன்
பாற்போர் கண்ணுக்கு பரிகாசமாகின்றான்,
பூர்வீகம் கேட்டாலோ
புண்படுவீர் நெஞ்செல்லாம்,

காலக்கயமைகளால் கட்டறுக்கப்பட்ட இவன்
சீறும் பெருமூச்சு சிறிய புயல்க்காற்று,
சென்ற ஆண்டினிலே சித்திரைக்கு முந்திய நாள்
சிறப்பாக இருந்த வன்னி சுடுகளமாய் மாறியது,
கொட்டியது குண்டு மழை கூவியது வானவெளி
சற்றுச்சிந்தித்தான் தடுமாற்றம் கொண்டிருந்தான்,

வெட்டி வைத்திருந்த வேளாமை நெல்லுடனே
பட்டி நிறைந்திருந்த பால்மாடும் வெள்ளாடும்,
சட்டி பானையுடன் பெட்டி குட்டானும்,
சுட்டெரிந்து போனதற்கு வீரமுள்ள இம்மனிதன்
சற்றும் இளகவில்லை தன்னிலையை இழக்கவில்லை,

முற்றியது போர் மேகம் முழு நிலமும் நடுங்கியது,
பற்றியெரிந்தெல்லாம் படுகளமாய் தோன்றியது,
வெட்டினான் பதுங்கு குழி விறுவிறுப்பாய் அரணமைத்தான்,
கட்டிய மனையாளும் கண்ணான குழந்தைகளும்
அச்சம் அடையாமல் அரணாக நின்றிருந்தான்,

உச்சி இரவினிலே உணவில்லா ஒரு பொழுதில்
பச்சை இலை பிடுங்கி பிள்ளை பசிதீர்க்க எண்ணியிவன்,
எட்டியொரு தொலைவில் இரை தேடி திரும்புகயில் ,
மனையாளும் குழந்தைகளும் மறைந்திருந்த பதுங்கு குழி
எரிகுண்டுக்கிரையாகி இருந்த இடம் அழிந்ததுகாண்,

சீற்றம் தாங்காமல் சிதறியது இவன் மனது,
சித்தம் கலங்கியிவன் சிரிப்போடு பழிப்போடும்
அந்தோ போறானே மதிபிசகி ஓர்மனிதன் ,
கொஞ்சம் பொறுத்தொருகால் கேட்டீர் இவன் கதையை,

வஞ்சத்தின் வலை விரிப்பால் ,
வலிகொண்டு தனை மறந்து
இன்றும் அலைகின்றான் ஏதுமறியாமல்,
இங்கே காண்கின்றீர் இவன் தான் அம்மனிதன்,

கனகதரன்.

nanry;http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2278

No comments: