Thursday, August 12, 2010

வாழ்க செம்மொழி

வாழ்க செம்மொழி
===============
செத்துக்கொண்டிருந்த தமிழை
சினவெடுத்த தோள் கொண்டு
சிவக்கவைத்த செம்மல் நீங்கள்,

சிறப்பின்றி சிதையவிருந்த தொல்காப்பியத்தை
களை நீக்கி, பூங்காவனமாய்
திருத்தி எழுதிய நவயுகத்தின் சிற்பி நீங்கள்.
http://nanavuhal.wordpress.com/2010/02/02/ellai-karunanidhi/
அ,நக்கீரனாரால் ஆங்க்காங்கே
குற்றம் குத்திக்காட்டப்பட்டாலும்
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத குலக்கொழுந்து நீங்கள்,

தமிழ் எவரைக்கைவிட்டிருந்தாலும்
தமிழை உங்கள் காலடியில்
மண்டியிட வைத்த கல் நெஞ்சர் நீங்கள்,

பொல்லா உலகத்தில்
புகழுக்காக அலையாமல்
புகழையே பிடித்து போடாவில் போட்ட புலி நீங்கள்,

எப்பாடுபட்டாவது
ஈழ்த்தமிழர் வாழவேண்டுமென்பதற்காக
அதிகாலையில் ஐந்து மணிக்கு எவருமறியாமல்
தன்னந்தனியாக
தள்ளுவண்டி உதவியோடு
சாகும்வரை தண்ணீருடன் உணவொறுத்து
மத்திய அரசை மண்டியிட வைத்த
மரம் போன்ற உறுதி கொண்ட மாமணி நீங்கள்,

அனைத்துகட்சியையும் ஓரணியாக்கி
மனிதச்சங்கிலியாய் டில்லிக்கு இழுத்துச்சென்று
ஈழத்தமிழருக்காக
மன்மோகனையும்,சோனியாவையும்
மிரட்டிய இரும்பொறை நீங்கள்,

தமிழ் நாட்டுத்தமிழன் தமிழிலேயே பேசவேண்டுமென்பதற்காக
இறுமாப்போடு வேறு எவரையும் தெரிவுசெய்யாமல்
நீங்கள் பெற்ற பிள்ளையென்றுகூட பார்க்காமல்
ஆங்கிலம் தெரியாத அழகிரியை
ஆட்சியாளர் மத்தியில் அரசசபையில்
தமிழில் பேசவைத்த மனுநீதிச்சாணக்கியன் நீங்கள்,

சன் ரீ வீ தமிழுக்கு சதி செய்தபோது
தமிழன் கலை கண் மூடிவிடக்கூடாது என்பதற்காக
கட்டுக்கடங்கா காட்டாறாகி, கடலலையென எழுந்து
கலைஞர் ரீ வீ யை தோற்றி கலங்கரையாக்கி
மானாட மயிலாட மூலம்
தமிழ் மானங்காத்த எட்டாவது அதிசயம் நீங்கள்,

ஜெயலலிதாவின் ஈழ எதிர்ப்பை
தேர்தல் நேரத்திலாவது இல்லாதொழிக்க
உங்கள் குணத்துக்கு மாறாக தந்திரமாக
ஈழத்தமிழனுக்கு எதிரிபோல் நடித்து
பாசாங்கு செய்த பழந்தமிழ் பண்பாளன் நீங்கள்,

ஒருவனுக்கு ஒருத்தியென்றால்
அவன் பெண்ணை அடிமையாக்கிவிடுவான்
என்ற தூர நோக்கோடு துவண்டெழுந்து
பெண் விடுதலையின் பிம்பமாய்
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை தூரவீசி
மூன்றுக்கு மேற்பட்ட
மோகினிகளுக்கு வாழ்வளித்த முழுவேந்தன் நீங்கள்,

பெற்ற பிள்ளைகளை
பிணக்கின்றி சொகுசாக வாழ வைக்கும் உலகில்
பெற்றோரின் சுயநல வழக்கை உடைத்து
பெற்ற பிள்ளைகளனைத்தையும்
ஊருக்கு உழைக்க வைத்த உத்தமர் நீங்கள்,

கோவிலாக இருந்த கோபாலபுரம் வீட்டை
கொஞ்சம் கூட யோசிக்காமல்
ஹொஸ்பிற்றலுக்கு கொடையீந்த குபேரன் நீங்கள்,

முந்நூறென்ன மூவாயிரம் கோடி செலவானாலும்
முத்தமிழ் வளரவேண்டுமென்பதற்காக
சொத்து சுகங்களை மறந்து
செம்மொழி மாநாடு நடாத்தும்
துரியோதனன் போன்ற காரியவாதி நீங்கள்,

எவரை தமிழ் கைவிட்டிருந்தாலும்
உங்களை வாழவைத்த
செம்மொழி வாழ்க,

தமிழில் முக்குளிக்கும்
உங்களை மூதேவிகள் எவர் வைதாலும்,
வரலாறு வாழ்த்தத்தவறினாலும்,
தமிழ் உங்களை வாழவைக்கும்,
வாழவைத்துக்கொண்டிருக்கிறது,
வாழ்க தமிழ்த்தாய்,
வாழ்க தமிழ்த்தாய் நாடு,
நீடூழிவாழ்க என் தமிழ் உறவுகள்,ஈழத்து எதிலி
-------------------
நன்றி ஈழதேசம்

No comments: