Wednesday, August 25, 2010

கருணாநிதியின் துரோகம் அழியாத ஒன்றாகிவிட்டது: வைகோ

vaikoதமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.

அந்த சிங்களவன் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது இந்திய அரசு. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா. உலகம் தடை செய்த ஆயுதங்களை சிங்களவனுக்கு வழங்கியதும் இந்திய அரசு. சீனா, பாகிஇதான், இஇரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் சிங்களவன் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் உதவி அளித்தனர். இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தது. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்சே. இன்றைக்கு மூன்று இலட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டதற்குக் காரணம் இந்திய அரசு.

ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவர், கோடானுகோடித் தமிழ் நெஞ்சங்கள் இதயத்தில் வைத்து வணங்குகின்ற, போற்றுகின்ற பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி, கொடும் பழி துலீற்றி, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது. இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.

பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவின் உளவு நிறுவனம், ரா (சுஹறு) திட்டம் வகுத்துக் கொடுத்து, துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தது. அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது.

ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.

இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார்.

அது மட்டும் அல்ல, ‘பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார்.

இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா? அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.

தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார். தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார். ரனில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலகீனப்படுத்துவது என்பதைத் தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரனிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை. ரனிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியது. இந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்.’

‘தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை’ அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. கருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரனில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார். அப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்’ என்று ரனில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.

கருணாநிதி ராஜீவ் காந்தியைப் பற்றி நீட்டி முழக்கி இருக்கிறார். இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் துலீதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நுலீலில் எழுதி இருக்கிறாரே? டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு? அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான். கருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.

காலம் நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது. தமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து நிலைய வித்துவான்களை வைத்துக்கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைதிருப்ப படாதபாடுபடுகிறார்.

தமிழர்களின் வரலாற்றில் வள்ளுவர் பெற்ற புகழை, இளங்கோ, கம்பன், கரிகாலன், இராஜராஜன் பெற்ற புகழை, எங்கள் மாவீரன் பிரபாகரன் பெற்று இருக்கிறார். உலகமெலாம் வாழுகின்ற தமிழர்களின் இதயக்கோயிலிலே அவர் வீற்று இருக்கிறார். அவரை கருணாநிதி கொச்சைப் படுத்தி விட முடியாது. ஆனால், உண்மைகளைத் தமிழர்கள் அறிவார்கள். ஒரு அரசை நிறுவி, முப்படைகளை உருவாக்கி, அரசுத்துறைகளை அமைத்து இயக்கி, தமிழ் ஈழ அரசை உலகம் ஏற்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்திய பிரபாகரன், போர்க்களத்திலும், ராஜதந்திரத்திலும் தன்னிகர் அற்ற தலைவராக விளங்குகிறார். ஒழுக்கத்தின் சிகரமாக, நேர்மைக்கும் சத்தியத்துக்கும் இலக்கணமாகத் திகழ்பவர். புரட்சிகளை நடத்திய தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவறுகள் உள்ளதை நான் படித்து இருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் தவறுகளும் இல்லாத தலைவனான – மாவீரர் திலகமான பிரபாகரனைக் கொச்சைப்படுத்த முயல்கிறார் கலைஞர் கருணாநிதி.

2009 ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மௌனத்தின் குதூகலம் யார் அறிவார்?

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலைபாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது.

‘தாயகம்’ வைகோ

பொதுச்செயலாளர்

மறுமலர்ச்சி தி.மு.க. 19.11.2009
Related posts

* முன்னர் செய்த ஒப்பந்தங்களின்படி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க கோருகிறார் கருணாநிதி! (0)
* தமிழர் தாயகத்தில் இராணுவ மயமாக்கல்: கருணாநிதியிடம் த.தே.கூட்டமைப்பு தெரிவிப்பு (3)
* மாவீரர் தினத்தில் பழ.நெடுமாறன், வைகோ, திருமா, சீமான் பல்வேறு நாடுகளில் உரை (4)
* தமிழீழம் மலருமென்றால் அதற்காக தான் ஆட்சியை இழக்கவும் தயாராக இருந்தவராம்: கருணாநிதி கூறுகிறார் (5)
* கருணாநிதியின் அறிக்கையும் தமிழின உணர்வாளர்களின் சுவர் ஒட்டியும் (8)
நன்றி;http://www.puthinamnews.com/

No comments: