Sunday, August 1, 2010

சுமை கால் பணம்… சுமைக் கூலி முக்கால் பணம்!

Thursday, July 1, 2010 at 2:15 am | 907 views

சுமை கால் பணம்… சுமைக் கூலி முக்கால் பணம்!

கிராமங்களில் சொல்லப்படும் ஒரு வழக்குமொழி இது. முதல்வர் கருணாநிதியின் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு முற்று முழுதாகப் பொருந்தும் மொழியும் கூட.

இந்த மாநாட்டுக்கு ஆன செலவு அதிகாரப்பூர்வமாக ரூ 311.5 கோடி. கோவைக்கு புதிய சாலைகளும் பூங்காக்களும் கிடைத்தது உண்மைதான் என்றாலும், இதில் கால்வாசி பலனாவது தமிழுக்குக் கிடைத்திருக்குமா என்பதுதான் கேள்வியே.

ஆடம்பரமாக மாநாட்டு அரங்கங்களை அமைத்து, குடியரசுத் தலைவரின் கையால் திறக்கப்பட்டு, நான்கு நாள் பொழுதுபோக்குகளுக்குப் பிறகு கடந்த ஞாயிறன்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால் முடித்து வைக்கப்பட்டது. சற்று கூர்ந்து கவனித்தாலும், இந்த மாநாட்டில் பெரும் அபத்தங்கள் நிறைந்திருப்பதைக் காணலாம்.

செம்மொழி மாநாடு நடப்பதால், கோவையில் திமுக கொடி, பேனர், சின்னமே இல்லாமல் இருக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அதற்கு வட்டியும் முதலுமாக முதல்வர், துணை முதல்வர், கனிமொழி துதி பாடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தது, கவிஞர்கள், எழுத்தாளர்கள் குழு.

அதிலும் இந்த பட்டிமன்றம், கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சிகள் அபத்தத்தின் உச்சம். சன் டிவியில் வரும் பண்டிகை கால பட்டிமன்றமே மேல்.

சத்தியசீலன் நடத்திய பட்டிமன்றமாகட்டும், சாலமன் பாப்பையா தலைமையில் நடந்ததாகட்டும்… கருத்துச் செறிவோ, பொருள் செறிவோ இன்றி, வரைமுறையில்லாமல் பேசிக் கொண்டே இருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் 12 நிமிடம் பேச நேரம் ஒதுக்கினால், அதில் 10 நிமிடத்தை கருணாநிதி துதி பாடவே எடுத்துக் கொண்டார்கள். முதல்வருக்கு புகழ்ச்சி பிடிக்காது என்று கூறிக் கொண்ட புகழ்ந்தார்கள். அவரும் முன்வரிசையில் உட்கார்ந்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார்.

திண்டுக்கல் லியோனி, இது பட்டிமன்றம் என்பதை முற்றாக மறந்து மிமிக்ரி செய்தார். நக்கீரன் கோபால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். அங்கேயும் நித்யானந்தன் – ரஞ்சிதா விவகாரத்தை குறிப்பிட மறக்கவில்லை அவர். எஸ்வி சேகர் நகைச்சுவை என்ற பெயரில் உளறிக் கொட்டினார் (“பஸ்ஸிலே சீட் இருந்தும் அந்தம்மா ஏன் உட்காரலை..? அவர் பெயர் அமராவதியாம்”)

வாலி தலைமையில் வெறும் துதியரங்கமாக மா(நா)றியது கவியரங்கம். கருணாநிதியை புகழ்வதில் வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தமிழன்பனுக்கு பெரும் போட்டியே நடந்தது. வழக்கம் போல இங்கும் வாலிதான் ஜெயித்தார்!

கருத்தரங்கம் என்ற பெயரில் கடைசி நாளில் அடித்த கூத்துக்களுக்காகவே திருச்சி செல்வேந்திரன் போன்றவர்களின் நாக்கில் தமிழ்த் தாயின் எழுத்தாணி கொண்டு சூடிழுக்க வேண்டும்!

ஏதோ மன்னர் வீட்டு கல்யாணத்தில் நடந்த கலை நிகழ்ச்சிகள் மாதிரிதான் இவை அனைத்தும் காட்சி தந்தன.

வெளியில் தெரிந்த கூத்துக்கள் இவை என்றால், ஆய்வரங்கம் என்ற பெயரில் உள்ளே நடந்த அபத்தங்களுக்கு அளவே இல்லை.

தமிழ் மொழியின் பண்டைய – சமகால- எதிர்கால போக்குகள் பற்றி செறிவான கட்டுரைகள் சமர்ப்பிப்பார்கள் என்று பார்த்தால், பெரும்பாலானோர் முதல்வர் கருணாநிதியின் படைப்புகளை ஆய்வு செய்து எழுதிக் குவித்திருந்தார்கள். ‘கலைஞரின் பேசும் கலை வளர்ப்போம்’, ‘தொல்காப்பிய பூங்கா’, ‘கலைஞர் உரைத் திறன்’, ‘கலைஞரின் சிலப்பதிகாரத்தில் நாடகக் கூறுகள்’, ‘கருணாநிதி கடிதங்களில் இலக்கிய ஆளுமை’, ‘கருணாநிதியின் சிலப்பதிகார நாடகம்’…. இப்படி ஏதோ திமுக இலக்கிய மாநாட்டுக் கட்டுரைகள் ரேஞ்சுக்கு அடித்து விட்டிருந்தார்கள்.

இதைவிடக் கொடுமை, கனிமொழியின் கவிதைகள் குறித்தும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதப்பட்டிருந்ததுதான். அவர் எழுதிய கவிதைப் புத்தகங்கள் மொத்தமே மூன்றுதான் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

‘இந்த அபத்தக் கட்டுரைகளையெல்லாம் படித்துப் பார்த்து செம்மொழி மாநாட்டுக்குத் தகுதியானதுதான் என்று ஒப்பளித்த ‘பிரகஸ்பதிகள்’ யாரென்று எந்தத் தகவலுமில்லை…’, என மாநாட்டுக்கு வந்திருந்த விமர்சகர்கள் சலிப்புடன் வெளியேறியதும் நடந்திருக்கிறது.

இதற்கிடையே, கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களுக்கு எப்படியெல்லாம் முன்னுரிமை கொடுத்து முதல்வரிடம் நல்ல பெயர் வாங்குவது என்று அதிகாரிகளுக்கு இடையே போட்டி வேறு.

இறுதி நாளில் தமிழுக்கு தனி பட்ஜெட் உரை வாசித்தார் முதல்வர். அதில் எம்எஸ் சுவாமிநாதனுக்கு ஒரு பொறுப்பை வழங்கியிருந்தார். (இலங்கையின் வடக்கு வசந்தத்துக்கு அவர் உறுதுணையாக இருப்பதற்காக தமிழக அரசு தரும் பரிசா இது என்று தெரியவில்லை!)

இந்த மாநாட்டுக்கு இலங்கை தமிழ் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி வரவேண்டும்,. அவர் வாயால் “உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்” என்று தன்னை அழைக்க வேண்டுமென முதல்வர் விரும்பினார். அது நடந்துவிட்டது. அந்த வகையில் கருணாநிதியின் குற்றமுள்ள மனதுக்கு இது ஒரு குறுகிய கால ஆறுதலாக அமையக் கூடும். ஆனால்… காலமுள்ள அளவும் தமிழர் மனசைவிட்டு மறையாது அவர் நட்டாற்றில் கைவிட்ட துரோகம்.

ஈழத் தமிழர் நல்வாழ்வு குறித்து ஒப்புக்கு ஒரு அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார் முதல்வர். அது:

“இலங்கையில் போர் முடிவடைந்த பிறகும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் மறு குடியமர்வுக்கும், அந்த நாட்டுத் தமிழர்கள் தமது மொழி, இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் நீண்ட காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு இதுவரை காணப்படவில்லை.

மேலும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்..”

-நல்லா வலியுறுத்தினாங்க போங்க. கொலைகாரனின் கூட்டாளியிடம் வைக்கப்படும் கருணை மனுவுக்கு ஒப்பானது இது!

அடுத்து தமிழ் வளர்ச்சிக்கு பெரும் நிதி ஒதுக்குவதாகவும் அறிவித்தார் முதல்வர். அதாவது ரூ 100 கோடி. செம்மொழி மாநாட்டுக்கு செலவு ரூ 311.5 கோடியாம். ஆனால் தமிழ் வளர்ச்சிக்கு ரூ. 100 கோடி மட்டும்தானாம்!

இப்போது புரிகிறதா ‘சுமை கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம்’ என்றால் என்னவென்று!

நன்றி-என்வழி


No comments: