செந்தமிழனும் சாயாக்கிரகங்களும்
தென் கோடி கடற்கரையில்
ஒரு புள்ளியாய் கருக்கொண்ட மேகம்
மெல்ல மெல்ல பெரிதாகி
அடிக்கடி உதயத்தை மறைத்து
மழைக்கான அறிகுறி தென்பட்டுக்கொண்டிருக்கிறது,
பொங்கிய முகிலின் கூட்டத்தை நோக்கி
பரந்து கிடந்த வானத்தின்
மேகத்திரட்டுக்கள் நகர்ந்து
மலைக்கூட்டம்போல
யானைக்கூட்டங்கள் போல
எதையோ மிரட்டி கும்பி கும்பியாக
ஒன்றிணையத்தொடங்கிவிட்டன,.
வானிலை ஆராய்ச்சி நிபுணர்கள்
மாறுபட்ட கருத்தைக்கூறினாலும்.
திருப்திக்காக,
தீ மூட்டினால் கட்டுக்குள் வருமென்று
தீயை மூட்டி
மேகத்தின் அடர்த்தியை
அதிகரித்துவிட்டனர், .
வானம் இருண்டு
அடிக்கடி மின்னலடிப்பதால்
ஒரு பிரளயத்திற்கான அறிகுறி - அல்லது
வறண்டு பச்சையமின்றி
ஏமாந்து ஏங்கிக்கிடக்கும் பூமிக்கு
குளித்தியாக மழை பெய்யப்போகிறது
இரண்டில் ஒன்று நிச்சியம்.
குடுகுடுப்பைக்காரன் சொல்லிக்கொண்டு போகிறான்,
கிராமத்து கிழவனும் கிழவியும்
மண் மணக்கத்தொடங்கிவிட்டதால்
மழைக்கான அறிகுறிதானென்று
அடித்துக்கூறுகின்றனர்.
மப்பும் மந்தாரமுமாக
மேகம் மூடிக்கொண்டுவருவதால்
வெய்யிலின் வேகம் தணிந்து
தொட்டிலில் குழந்தை ஆழ்ந்து உறங்குகிறது.
ஆடுகளும் மாடுகளும்
ஏனோ துள்ளிக்குதிக்கின்றன.
மின்னலின் தாக்கத்தால்
தொலைக்காட்சியொன்று மட்டும்
சுத்தமாக வேலை செய்ய மறுக்கிறது,.
சாயாக்கிரகங்களான
ராகுவும், கேதுவும், செயலிழந்து
இல்லாத உருவத்தை
மாற்றி மாற்றி பெரிதாகக்காட்டி
கையில் கிடைத்தவற்றால்
ஒன்றுக்கொன்று தூசித்து
ஆகங்காரம்கொண்டு ஆராத்தியெடுக்கின்றன,
வானம் முன்னயைப்போலில்லை
குவிந்து குமுறி முழங்கி மின்னித்தணிகிறது,
குருவும் வினைப்பயனறிந்து
திரும்பி உட்கார்ந்து கொள்கிறார்.
குருவின் மஞ்சள் துண்டு மட்டும்
காற்றில் படபடத்துக்கொண்டிருக்கிறது,
தமிழ் நாட்டின் குருவியொன்று
தன் பாடலில்,
கல்லெறிதூரத்தில்
கக்கிய நஞ்சும்,
நாச நாக பாணங்களும்,
இருப்பிடம் நோக்கி திரும்ப
தயாராகிக்கொண்டிருக்கின்றன
பாடி சிறகடித்து பறக்கிறது,
வானிலையாராச்சி நிலையமும்
சாயாக்கிரகங்களும்
வானத்தை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கின்றன,
ஈழதேசம் இணையத்திற்காக
கனகதரன்,
No comments:
Post a Comment