Monday, October 11, 2010

கருணாநிதிக்கு உதவும் இலங்கை தமிழர்கள் (!)


மாதங்கள் உருண்டோடிக் கொண்டு இருக்கின்றன. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகப் போகின்றன. இலங்கையில் நம்முடைய தமிழ் சொந்தங்களின் கடைசி கதறல் நின்று. ஈரத் துணியைப் போட்டு கோழியை அமுக்கி கொல்லுவது போல, இலங்கைத் தமிழன் கருவறுக்கப்பட்டான். ஆம், உண்மையில் கரு(தான்)அறுக்கப்பட்டான். வயிற்றுக்குள் இருந்த சிசு கூட, எதிரியாகவே ராஜபக்சேவுக்கு தோற்றமளித்தது என்றால் என்னவென்று சொல்வது?
கோழியின் கடைசி கதறல் வெளியுலகுக்கு கேட்காதவண்ணம் ஈரத்துணியால் அழுத்துவது என்பது கிராமப்புற வழக்கம். அதே பாணியில், இலங்கை தமிழனும் அழித்தொழிக்கப்பட்டான். அவனுக்கு ஈரத் துணியாக வந்து சேர்ந்தது, ஒன்றல்ல, இரண்டல்ல. கணக்கற்றவை. இந்திய அரசு, தமிழ் ஈன தலைவன் கருணாநிதி, தமிழகத்தில் உள்ள ஊடகங்கள். அப்புறம் சீனா, பாகிஸ்தான் நாடுகள் இப்படி எண்ணிலடங்கா ஈரத் துணிகள், இலங்கை தமிழனின் கதறலை வெளியுலகுக்கு கேட்காத வண்ணம் கவனமாக பார்த்துக் கொண்டன.
ஒருவழியாக இலங்கை தமிழர்கள் ஒழிக்கப்பட்டு விட்டனர். ராஜபக்சே திட்டத்தின்படியே, தமிழனின் பூர்வீக பூமியான தமிழீழப் பகுதியில் சிங்கள குடியமர்த்தல் வேகமாக நடைபெறுகிறது. (ஆதாரம்: ஆனந்த விகடன் கட்டுரை) தமிழீழப் பகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினருக்கு அந்த பகுதியிலேயே குடும்பத்துடன் குடியேற நிலம் ஒதுக்கப்படுகிறது. தமிழீழப் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட சிங்களர்கள் விருப்பப்பட்டால் மீண்டும் அங்கே குடியேறலாம் என சிங்கள குடியேற்றத்துக்கு ராஜபக்சேவே அறைகூவல் விடுத்திருக்கிறார்.
ராஜராஜ சோழன், பண்டார வன்னியன் என தமிழர்களின் வீரத்துக்கு வரலாறாக விளங்கும் நம்முடைய பேரரசர்கள் முதல் இன்னமும் புறநானுற்று வீரத்துடன் தான் தமிழன் இருக்கிறான் என்பதற்கு ஒரே அடையாளமாக விளங்கும் தலைவர் பிரபாகரன் வரை கோலோச்சிய தமிழ் மண்ணில் சிங்களமும், சீனமும் ‘கை’கோர்த்து உலவுகின்றன. அவர்களுக்கு இந்தியாவும் உடந்தை. இவற்றை எல்லாம் முள்வேலிக்குள் இருந்தபடி, ரத்தக் கண்ணீருடன் பார்த்து பதைத்துக் கொண்டிருக்கிறது, எஞ்சி இருக்கும் தமிழ் சொந்தங்கள்.
இது தான், இலங்கைத் தமிழனின் இன்றைய நிலைமை. யாழ்ப்பாணத்துக்குள் ஐ.நா. குழுவையே அனுமதிக்க மறுக்கும் திமிர் தனத்துடன் இலங்கை அரசு நடந்து கொள்கிறது. போர் குற்றத்துக்கான தடயங்களை அழிப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது கடிதம், தந்தி, மனிதச் சங்கிலி, மதிய சாப்பாடு வரை உண்ணாவிரதம் என தமிழகத்தில் உள்ள சொரணை கெட்ட தமிழனை ஏமாற்றிக் கொண்டிருந்த ஒரு கூட்டம், இப்போதும் அதையே செய்து கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?

இலங்கை தமிழரின் மறுவாழ்வுக்காக கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கி இருப்பதாக இந்திய அரசு அறிவித்தது. அத்தோடு ஒத்து ‘ஊதிய‘ கருணாநிதி, தன் பங்குக்கும் 100 கோடியை அள்ளிக் கொடுப்பதாக அறிவித்தார். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சேகரித்து அனுப்பிய நிவாரணப் பொருட்களை கடலிலேயே வீணாக விட்டு விட்டு, தன்னுடைய கவிதாயினி மகள் மூலமாக நிவாரணப் பொருட்களை இலங்கை அரசுக்கு அனுப்பி வைத்து தமிழக பத்திரிகைகளில் வீண் விளம்பரத்தையும் தேடிக் கொண்டார், ஏதோ இலங்கைத் தமிழர்களுக்காக பெரிய சாதனையை செய்து விட்டதுபோல.
இது மட்டுமல்ல, இலங்கை தமிழர்களை மீண்டும் அவர்களுடைய இடத்திலேயே குடியமர்த்துவதற்கான பணிகள் சரியாக நடைபெறுகிறதா என பார்வையிட எம்.பி.க்கள் குழுவையும் அனுப்ப போராடி (!) அனுமதி பெற்றார், கருணாநிதி. அந்த குழுவிலும் அவருடைய கவிதாயினி மகள், மீசையை மட்டும் முறுக்கிக் கொண்டிருக்கும் சிறுத்த தலைவர் இப்படி சில அசிங்கங்கள் இடம் பெற்றன. அந்த குழுவினர் அனைவரும் யாழ்ப்பாணம் செல்வதற்கு பதிலாக கொழும்பு நட்சத்திர ஓட்டலிலேயே உண்டு உறங்கி, ராஜபக்சேயிடம் பரிசில்கள் பல பெற்று பல்லிழுத்துக் கொண்டு இந்தியா திரும்பினர்.
ராஜபக்சே சொன்ன ஒரு வார்த்தையை கேட்டு வெட்கமே இல்லாமல் இழித்துக் கொண்டிருந்தார், ஒருவர். அவர், தன்னை சேகுவாரா போலவும் இன்ன பிற புரட்சி வீரர்கள் போலவும் காட்டிக் கொண்டு திரிகிறார். ஒருவேளை, இலங்கைத் தமிழர்களை விட எம்.பி. பதவி, அதிகாரம் போன்ற வசதிகளே முக்கியம் என கருதினாரோ என்னவோ? சரி, அவர் எப்படியும் போகட்டும். அந்த நரியின் சாயம் வெளுத்துப் போய் விட்டது. இப்போது, அரியணையில் அமர்ந்துள்ள குள்ளநரியின் விஷயத்துக்கு வருவோம்.

இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருந்தபோது, அங்குள்ள நிலவரத்தை தமிழக தமிழர்கள் அறியாதவாறு தடுப்பதில் பத்திரிகைகள், டி.வி.க்கள் உள்ளிட்ட ஊடகங்களை எப்படி எல்லாம் உருட்டல், மிரட்டல், தாஜா என சாம, வேத தண்டங்களை கருணாநிதி பயன் படுத்தினாரோ--? இதே போன்ற செய்கைகளை இப்போது வேறு விதமாக பயன் படுத்தி வருகிறார்.
அதாவது, இலங்கை தமிழர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர இந்த இரக்க சிந்தனையாளர் பாடுபடுகிறாராம். அதற்காக, மாதத்துக்கு இரண்டு முறை (அரசியல் நிலவரத்துக்கு ஏற்ப கூடுதலாகவும்) மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி வருகிறார். கூட்டணியில் ஏதாவது உரசல் ஏற்பட்டு விட்டால் போதும், உடனடியாக இவருக்கு இலங்கைத் தமிழர்களின் நிலைமை மீது இரக்கம் அதிகரித்து விடும். கருணைக் கடலாக பொங்கி கடிதம் மற்றும் தந்தி வழியாக உருகி வழிந்து விடுகிறார்.
இதில் ஒரு விஷயம். இலங்கைத் தமிழருக்காக அவர் எழுதும் ஒவ்வொரு கடிதமும் அவருடைய ஒவ்வொரு அசைவும் பத்திரிகைகளில் பிரதான செய்தியாக இடம் பிடித்து விடும். (வரலாறு முக்கியம் அமைச்சரே & என்ற 23&ம் புலிகேசியின் அளப்பரிய சிந்தனை தான் நினைவுக்கு வருகிறது)
இப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு, ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் ராஜ்ஜியத்தின் ராஜா மீது நீதிமன்றங்கள் கடும் கண்டனக் கணைகளை தொடுத்தன. அதனால், மந்திரிசபையில் இருந்தே கழட்டி விடும் முடிவில் காங்கிரஸ் இருந்தது.
அது தொடர்பாக, கருணாநிதியிடம் தெரிவிக்க பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார். மேலும், சட்டசபை தேர்தல் கூட்டணி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் எதிர்பார்ப்பு குறித்தும் கருணாநிதியிடம் அவர் சில நிபந்தனைகளை தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், மறுநாள் பத்திரிகைகளில் வெளியான செய்தி என்ன தெரியுமா?
இலங்கையில் முள்வேலியில் சிக்கி தவிக்கும் தமிழர்களின் மறுவாழ்வு பணிகள் குறித்து கருணாநிதியுடம் மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார். & என பத்திரிகைகள் மற்றும் டி.வி.க்களில் வெளியாகின.

இப்போது, காங்கிரஸ்&தி.மு.க. கூட்டணி விவகார சிக்கல் உச்சகட்ட நிலையில் இருக்கிறது. பீகார் தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்க காங்கிரஸ் தீர்மானித்து இருக்கிறது. மேலும், தி.மு.க.வை கலக்கத்திலேயே வைத்திருந்தால் தான் தேர்தல் சமயத்தில் சரிபாதி தொகுதிகளை பெற்று கூட்டணி ஆட்சி அமைக்க வழி வகுக்கலாம் என்றும் திட்டமிட்டு இருக்கிறது.
இந்த காரணத்தினாலேயே, அக்டோபர் 9&ந் தேதி அன்று திருச்சிக்கும் புதுச்சேரிக்கும் சுற்றுப்பயணம் செய்த ‘தியாக திருவிளக்கு’, பயணத் திட்டத்தில் சென்னை கோபாலபுரம் இடம்பெறவே இல்லை. ஆனாலும், வீல்சேர் நாயகர் விடுவாரா- என்ன? அவருக்குத்தான் வெட்கம், மானம், ரோஷம் எதுவுமே கிடையாதே?
டெல்லியில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்து, உடனடியாக புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் செல்வது தான் தியாக திருவிளக்கின் திட்டம். விமானத்தில் இருந்து இறங்கி, ஹெலிகாப்டரில் ஏறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? இந்த இடைப்பட்ட நேரத்துக்குள் தியாகத் திருவிளக்கை சந்திப்பதற்காக, விமான நிலையத்துக்கே சென்று விட்டார், வீல்சேர் நாயகர்.
ஆட்சி, அதிகாரம், பதவி, பணம், குடும்ப வருமானம் இதுபோன்றவற்றுக்காக என்ன வேண்டுமானாலும் செய்பவர் தானே, இவர். இதைச் செய்ய மாட்டாரா? தன்னை சந்திக்காமல் தவிர்ப்பவரை, தானே வலிய சென்று சந்தித்தார், இந்த தன்மானத் தமிழர்(!). இதுபோன்று, போகும் வழியில் இறங்குவது ஜனாதிபதி அல்லது பிரதமராக இருந்தால் மட்டுமே முதல்வர் செல்வது அரசு நடைமுறை. சரி. அது அவருடைய விருப்பம். கேட்டால் கூட்டணி கட்சி தலைவர் என்பார். விமான நிலைய வரவேற்பு அறையில் அமர்ந்து தன்னுடன் பேச்சு நடத்துவார் என கருணாநிதி எதிர் பார்த்திருக்கலாம்.
ஆனால்,விமான நிலையத்தில் சோனியா இருந்ததே ஒரு சில நிமிடங்கள் தான். இந்த சந்திப்புக்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் பாருங்கள். அதுதான் யாராலும் சிந்திக்க முடியாத சிறப்பு அம்சம். ‘ இலங்கையில் முகாம்களில் வாடும் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்’ & என சோனியாவிடம் கடிதம் அளித்தாராம். இதுதான் பத்திரிகை மற்றும் டி.வி.க்களுக்கு அளிக்கப்பட்ட செய்தி அறிக்கை.
இலங்கைத் தமிழர்கள் மீது கருணாநிதிக்கு எவ்வளவு பாசம் பாருங்கள்-? கூட்டணியில் நெருக்கடி வந்து விட்டால், உடனடியாக இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் விடத் தொடங்கி விடுகிறார்.

இறுதியாக ஒரு வார்த்தை. இது எதிர்காலத்தில் நிகழக் கூடும்.

1) தி.மு.க&காங்கிரஸ் கூட்டணி முறிகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது கருணாநிதியிடம் இருந்து வரும் அறிக்கையின் சாரம்சம் இப்படித்தான் இருக்கும்.

‘உடன் பிறப்பே, இலங்கையில் முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்குமாறு மத்தியில் ஆளும் காங்கிரஸ் (இவர் கிடையாது பாருங்கள்) அரசிடம் பல முறை வலியுறுத்திக் கூறினோம். கடிதங்களை அனுப்பினேன். (இதற்கான ஆதாரங்களாக முன்னணி பத்திரிகை செய்திகளை காட்டுவார்). திருச்சி காங்கிரஸ் பொதுக் கூட்டத்துக்காக சென்னை விமான நிலையம் வந்த சோனியாவை, எனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் நேரில் சென்று சந்தித்து கடிதம் கொடுத்தேன். ஆனால், எந்த பலனும் இல்லை. இலங்கை தமிழர்களின் துயர் துடைப்பதற்காக நான் விடுத்த கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில், இன்னமும் மத்திய கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்ற சிந்தனை எழுகிறது’

ஒருவேளை கூட்டணி அப்படியே நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இப்போதைய நிலை அப்படியே தொடரும். அதாவது, இலங்கைத் தமிழர்களுக்காக கடிதம் எழுதிக் கொண்டே இருப்பார். கருணாநிதியின் கூட்டணி சிக்கலுக்காக இலங்கைத் தமிழர்கள் எப்படி எல்லாம் உதவியாக இருக்கிறார் பாருங்கள்.

நன்றி நமனை அஞ்சோம் ,

No comments: