Friday, October 15, 2010

சிங்கபாகுவின் கொள்ளுப்பேரனுக்கு ஓர் உவகை மடல் - சேரமான்


சிங்கத்தின் வழிவந்த சிங்கபாகுவின்
கொள்ளுப்பேரன்
bf'அம்பலாங்கொடை மண் ஈன்றெடுத்த பீற்றர் – பியவதி பொன்சேகா தம்பதிகளின் வழித்தோன்றல்.

ஈழமண்ணில் தமிழ்க்குடியை நாசம் செய்யப் பிறந்த சிங்களத்துச் சிங்கம்.

‘மகதா’ ஜெனரல் கார்டிஹேவ சரத் சந்திரலால் பொன்சேகா என்றழைத்த காலம்போய்...

‘தேசத்துரோகி...
தூக்கிலிடப்பட வேண்டிய குற்றவாளி...
சிங்களக் குடியை அழிக்கப் பிறந்த பேய், பிசாசு, முனி...’
என்றெல்லாம் துட்டகாமினியின் உறுகுணை இராச்சியத்தின் இரத்த வாரிசுகள் உம்மைத் தூற்றும் காலம் இது.

‘எனது வலது கை’ என்று உம்மை அன்று மகிந்தர் அழைத்தது உண்மைதான்.
‘இவர்தான் உலகிலேயே மிகச்சிறந்த படைத்தளபதி’ என்று உம்மை அன்று எம்.கே.நாராயணன் புகழ்ந்ததும் ஏதோ மெய்தான்.
‘புலிப்பயங்கரவாதத்தை’ அழிக்கப் புறப்பட்ட ஒரு பெருஞ்சிங்கம் எனப் பிக்குகளும், பொடிகாமினிகளும் உம்மைப் புகழ்ந்ததும் உண்மைதான்.

1970களில் சிங்களப் படையில் இணைந்து, அதிகாரியாய் உயர்ந்து, தளபதியாய் நிமிர்ந்து...
ரணவிக்கிரம பதக்கம், ரணசூரிய பதக்கம், விசிஸ்தசேவ விருது, விபூசணாய விருது, உத்தமசேவ பதக்கம் எனப் பல பட்டங்களைக் குவித்து, இறுதியில் ஜெனரல் என்ற படைய நிலையுடன் தேச புத்திர சம்மனாய என்ற அதியுயர் விருதைப்பெற்றவர் நீர்...

இன்று பதக்கம் இழந்து, பதவி இழந்து, பட்டம் இழந்து, இறுதியில் ஓய்வூதியமும் இழந்து, வெலிக்கடைச் சிறையின் கழிப்பறை வாயிலில் விழுந்துகிடக்கின்றீர்.
இதுகாலம் செய்த கோலமோ, அன்றி உம்வினை செய்த கோலமோ... ஏதாயினும் யாமறியோம்.

உமது நிலைகண்டு சிங்கபாகு சீற்றங்கொள்ளலாம். துட்டகாமினி துவண்டுபோகலாம். உமது மனையாளும், மக்காளும் மார்பில் அடித்து கதறியழலாம். உமக்காக உலக அரசுகள் அறிக்கைகளையும் வெளியிடலாம். உமது நிலையையிட்டு பான் கீ-மூன் கூட கரிசனை கொள்ளலாம்.

ஆனால், உம்மைப் பற்றி எமக்கு எள்ளளவும் கவலையில்லை.
உமக்காக ஒருதுளி கண்ணீர்கூட நாம் சிந்தப் போவதில்லை.
உம்நிலைகண்டு உலகத் தமிழினமே உவகை கொள்கின்றது.
உமக்கு நேர்ந்த கதிகண்டு மனிதவுரிமை ஆர்வலர்கள்கூட ஆனந்தக்கண்ணீர் வடிக்கின்றார்கள்.

எங்களை ராஜபக்சா கொல்லத் தொடங்கியது 2005ஆம் ஆண்டில் என்றால், நீர் எமது இனத்தைக் கருவறுக்கப் புறப்பட்டது 1970களில்.
எழுபதுகளில் தொடங்கிய உமது இனவெறி, எண்பதுகளில் கொலைவெறியாகி, தொண்ணூற்றாறில் செம்மணிப் புதைகுழியாகி, 2009இல் முள்ளிவாய்க்கால் நரபலி வேட்டையில் முடிந்தது.

உமது கைகளால் காவுகொள்ளப்பட்ட தமிழ் உயிர்கள் எண்ணிலடங்காதவை. முள்ளிவாய்க்காலில் உமது சிங்கங்களால் நரபலி வேட்டையாடப்பட்ட எங்கள் உறவுகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சம். அதற்கு முன்னர் நீவீர் காவுகொண்ட எங்கள் உடன்பிறப்புக்களின் எண்ணிக்கை இன்னுமொரு இலட்சம். எல்லாமாக இரண்டரை இலட்சம் தமிழ் உயிர்களை நரபலிகொண்ட இனவெறியன் நீர்.

சிங்களம் இழைத்த போர்க்குற்றங்களின் பாவம் ராஜபக்சவை மட்டும் சாரது. உம்மையும், ராஜபக்சவின் உடன்பிறப்புக்களையும், சந்திரிகா அம்மையாரையும், ஏன் ரணிலையும்கூடச் சாரும்.

தமிழ் உயிர்களை மட்டுமா நீர் வேட்டையாடினீர்? ஜே.வி.பியின் கிளர்ச்சியை முறியடிப்பதாகக்கூறி ஒன்றரை இலட்சம் அப்பாவிச் சிங்கள இளைஞர்களை ரணசிங்க பிரேமதாசா பலிகொண்ட பொழுது அதற்கு உடந்தையாக இருந்தவர் அல்லவா நீர்?

ஒட்டுமொத்தத்தில் தமிழ் - சிங்கள உயிர்கள் என உம்மைச் சுற்றி மூன்றரை இலட்சம் மனித உயிர்களின் பாவம் சூழ்ந்துகிடக்கின்றது.

ஐயா,
2006இல் கொழும்பு கொம்பனித் தெருவுக்கு அருகில் உம்மீது மனிதவெடிகுண்டு பாய்ந்த பொழுது உம்கதை முடிந்தது என்று சிங்களம் திகைத்தது ஏதோ உண்மைதான். ஆனால் அதன் பின் அடிபட்ட மிருகமாய் எழுந்து நீர் நரபலிவேட்டையாடிய பொழுது நாம் மட்டுமல்ல உலகமும் திக்குமுக்காடிப் போனது.

போரை நிறுத்துமாறு உதட்டளவில் உலகம் கோரிய பொழுது, ‘புலிகளை ஒழிக்கும் வரை ஓயமாட்டேன்’ என்று கர்ச்சித்தீர்.
தமிழருக்கு அரசியல் தீர்வை வழங்குமாறு அமெரிக்கா கூறிய பொழுது, ‘வந்தேறு குடிகளுக்கு எதற்கு அரசியல்தீர்வு?’ என்று எக்காளமிட்டீர்.
எமக்காக எம்தமிழகத் தொப்புள்கொடி உறவுகள் குரலெழுப்பிய பொழுது ‘இவர்கள் எல்லாம் அரசியல் கோமாளிகள்’ என்று எள்ளிநகையாடினீர்.

எல்லாம் முடிந்தபின் இப்போது உலகைத் துணைக்கு அழைக்கின்றீர். சர்வாதிகார ஆட்சியை நோக்கி உமது தேசத்தை ராஜபக்சா சீரழிக்க முற்படுவதாகக் குற்றம் சுமத்துகின்றீர்.
கருத்துச் சுதந்திரமில்லை, அரசியல் சுதந்திரமில்லை, ஊடகச் சுதந்திரமில்லை என்றெல்லாம் ஏதேதோ பிதற்றுகின்றீர்.

வெள்ளை சிற்றூர்திகளில் கடத்தல் நடக்கின்றது என்கின்றீர். நீதிக்குப் புறம்பான படுகொலை நிகழ்ந்தேறுகின்றது என்கின்றீர். வெள்ளைக் கொடியோடு வந்தவர்களும் குரூரமாகக் கொன்றொழிக்கப்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றீர்.
போதாக்குறைக்கு ‘என்னை ராஜபக்சாவின் தண்டனையில் இருந்து மீட்கும் சக்தி உலக நாடுகளுக்கே உண்டு’ என்றும் கூறுகின்றீர்.

ஐயனே,
‘ஐயகோ!’ என்று நீர் கதறியழுதாலும் உம்மை மீட்பதற்கு உலகம் வரப்போவதில்லை.
முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் எம்தமிழீழ உறவுகளை நீர் கொன்றுகுவித்த பொழுது திரும்பிப் பார்க்காத உலகம், உம் ஒருவனுக்காகவா ராஜபக்சா மீது படையெடுத்து வரப் போகின்றது?

அன்று தமிழகத் தலைவர்களை ‘கோமாளிகள்’ என்று நீர் அழைத்த பொழுது மனதுக்குள் கறுவிக்கொண்ட முத்துவேல் கருணாநிதி கூட, இன்று உமது நிலையறிந்து வாய்விட்டுச் சிரிப்பதாக அரசல்புரசலாக ஒரு தகவல் வருகின்றது.

சிங்கநடை பயின்று, சீருடை அணிந்து, இடுப்பின் ஒருபுறம் உடைவாளும், மறுபுறம் கைத்துப்பாக்கியும் தரித்து அன்று கர்சித்த சிங்களத்துச் சிங்கம் இன்று வெலிக்கடைச் சிறையில் பித்தளைத் தட்டுடன் ஒருவேளை உணவுக்காக நீள்வரிசையில் நிற்கும் கதைகேட்டு தாய்த்தமிழகம் உவகை கொள்கின்றது.
கழிப்பறைக் குழியுடன்கூடிய சிறைக்கூண்டுக்குள் காட்டாந்தரையில் அரைக்காற்சட்டையுடன் நீர் கூனிக்குறுகிப் படுத்துக் கிடக்கும் காட்சி ஏனோ எங்கள் இதயங்களில் பால்வார்க்கின்றது.

உம்மைப் போர்க்குற்றவாளியாக்கி, அனைத்துலகச் சிறையில் அடைக்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தோம். அதற்குள் ராஜபக்சா முந்திவிட்டார். நாமும், உலக மனிதவுரிமை ஆர்வலர்களும் செய்ய நினைத்ததை உமது அன்றைய அருமை நண்பர் சாதித்துவிட்டார்.

மூன்றாண்டு சிறைவாசம் கிட்டிய உம்மை மேலும் பல ஆண்டுகள் சிறையில் அடைப்பதற்கு ராஜபக்சா கங்கணம் கட்டியிருப்பதாக அறிகின்றோம்.
உம்மைத் தூக்கிலிட வேண்டும் என்று அண்ணன் மகிந்தனை தம்பி கோத்தபாய நச்சரிப்பதாகவும் கேள்வியுறுகின்றோம்.
எது நடந்தாலும் மன்னிப்புக் கோர மாட்டேன் என்று நீர் முழங்கியதாகவும் அறிகின்றோம்.

ஐயா,
தயைகூர்ந்து ராஜபக்சாவிடம் மண்டியிடாதீர்கள்!
நீங்கள் மண்டியிடுவதால் எமக்குத்தான் வேதனை.
உம்மை அனைத்துலகச் சிறையில்தான் அடைக்க முடியவில்லை, குறைந்தது வெலிக்கடைச் சிறையிலாவது அடைப்பட்டுக் கிடப்பதை காண முடிகின்றது என்ற மகிழ்ச்சியில் இருக்கும் எம் எண்ணத்தில் தூர்வாரிவிடாதீர்கள்!

கிட்லர் மடிந்தபொழுது யூதர்கள் உவகை கொண்டதும்...
மிலோசவிக் சிறையில் செத்துமடிந்த பொழுது அல்பேனியர்களும், பொஸ்னியர்களும் மகிழ்வுற்றதும்...
சதாம் உசேன் தூக்கில் தொங்கிய பொழுது குர்து இன மக்கள் களிப்புற்றதும்...
சாள்ஸ் ரெய்லர் சிறையுண்ட பொழுது லைபீரிய மக்கள் ஆசுவாசமுற்றதும்...
நீர் சிறைபுகுந்ததையிட்டு நாம் ஓரளவு மனச்சாந்தி கொள்வது ஏதோ நீதிக்குக் கிடைத்த சிறுசன்மானம்தான்.


நிற்க, வெலிக்கடைச் சிறைவாசம் எப்படியுள்ளது?
குட்டிமணியும், தங்கத்துரையும் உங்கள் கனவில் வந்து மிரட்டுகின்றார்களா?
சிறையிருக்கும் புலிகளைக் கண்டீர்களா?
கூடவே புலிப்பட்டம் கட்டி நீங்கள் சிறையில் அடைத்த அப்பாவி தமிழர்களைக் கண்டீர்களா?
அவர்களுடன் அளவளாவுதற்கு வாய்ப்பேதும் கிட்டியதா?

தயைகூர்ந்து இராஜவரோதயம் சம்பந்தரும், மனோ கணேசனும் உங்களை சந்திக்க வரும் பொழுது அவர்களிடம் பதில்கூறி அனுப்புக.

உங்கள் சிறைவாசம் ஆயுட்சிறைவாசமாக நீடிக்க இறைவனை வேண்டி இம்மடலை முடிக்கின்றேன்.

நன்றி: ஈழமுரசு (15/10/2010)

No comments: