உறவுகளின் படுகோலைகளால் மக்களுக்கு ஏற்பட்ட படுமோசமான எதிர்த்தாக்கம். உடல் உறுப்புக்களையிழந்து சுயமாக நடமாடமுடியாத சிறுமை. விடுதலைப்போராட்டத்தின் நினைத்துப்பார்க்கமுடியாத தோல்வி, பேரம்பேச அல்லது எதிர்த்து வாய் திறக்கமுடியாத நிலை. அடிமனதிலிருக்கும் வெப்பம் வேதனை. சிந்தனையற்று இழிந்து ஒற்றுமையில்லாத தமிழர்தரப்பு அரசியல்ப்பிரதிநிதிகள் காட்டிக்கொடுப்பும் சுயநலத்துடனும் ஒரு கூட்டம் இவைதான் எம்மிடம் இன்று எஞ்சியிருப்பவை, 2009ம் ஆண்டுவரை இருந்த நம்பிக்கை ஒளிக்கீற்று காணாமல்ப்போய். மீண்டும் வலிமையே வாழும் என்ற உண்மை நிதர்சனமாகியிருக்கிறது.

bfஎத்தகைய எதிர்ப்புக்கும் கட்டுப்படாமல் அத்துமீறி தமிழர்கிராமங்களை ஆக்கிரமித்து வளரத்தொடங்கியுள்ள சிங்களக்குடியிருப்புக்கள். புலிகளைக்கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் சிங்களக்குடியிருப்புக்களுக்கு காவலாக பாரிய இராணுவ நிலைகள். இவைகளை பாதுகாக்கும் காவலனாக தெருக்களிலும் சந்தியிலும் மைதானங்களிலும் புத்தபெருமான் படுத்தும் உட்கார்ந்தும் அத்துமீறியுள்ள இருப்பிடங்கள், இவைகள்தான் இன்றைய ஈழத்தின் புதிய பரிமாணம்.

வேட்டையாடும் சிங்கள விலங்குகளுக்கிடையே. மனைவி - பெண்குழந்தைகளை வைத்திருக்கும் குடும்பத்தலைவனின் நடுக்கம். உடல்வலுவிழந்து வசதியில்லாதவர் நாயிற்கடையராய் நடப்பது நடக்கட்டுமென்ற விரக்தியுடன். தாலியறுத்து தனியாக்கப்பட்ட தாய்கள் கடவுளே துணையென்று
தரப்பாள் கூடாரத்துள், கொஞ்சம் வலுவுள்ளவர்கள் வேறு தேசாந்திரம் தேடி கடலிலும் காற்றிலும் அபலைகளாக. என்னதான் முடிவு, யார்தான் முடிவெடுப்பது, இவைகளை முறையிடுவதற்கான அரங்குகள் சர்வதேசத்தில் இருப்பதாகத்தானே கூறுகின்றனர், ஆனால் அங்கு போவதற்கு எங்களிடம்
ஒற்றுமை வேண்டும் ஒரேகுரலாக முன்மொழியவேண்டும். அவற்றை யாரிடம் தேடுவது. இந்த ஓலம்தான் ஒவ்வொரு உண்மையான தமிழ் ஆன்மாவுள்ளும் உள்ளூர அழுதுகொண்டிருக்கும் ராகம்.

எதற்கும் இரண்டுபக்கம் உண்டு தமிழினத்திற்கான மறுபக்கத்தை தேட யாருமற்ற நிலையில் இன்று காலம் தீர்மானிக்கத் தொடங்கியிருப்பது போல் உலக அரங்கில் சில நியாயக்குரல்கள் கேட்கத்தான் செய்கின்றன. அதன் எதிரொலியாக பாசிச மகிந்த ராஜபக்க்ஷ் தனது மனகிடக்கையை உள்ளூரவுள்ள அச்சத்தின் வெளிப்பாடாக சிலநாட்களுக்குமுன் சிங்களமக்கள் மத்தியில் இப்படி உளறினார்.

சர்வதேச நீதிமன்றில் தம்மை ஆஜர்ப்படுத்துவதற்கு சில தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையின் கீழ் உள்நாட்டு சட்டங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட முடியாது என்ற காரணத்தினால். இவ்வாறான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தனது பயத்தை பூடகமாக வெளிப்படுத்தினார். மின்சார நாற்காலியில் அமர்த்தி தனக்கு தண்டனை வழங்குவதில் சிலர் அதிக அக்கறை காட்டி வருவதாகவும். நிதி மோசடி மேற்கொண்ட நபர் ஒருவருக்கு அதற்கான தண்டனை வழங்கப்பட வேண்டியது அவசியமானது எனவும். நாட்டில் சட்டம் ஒழுங்கு அனைவருக்கும் சமமானது எனவும். சரத்பொன்சேகா நிதிமோசடிக்குற்றவாளி என்பதையும் தான் புனிதன் என்பதுபோலும் சூசகமாக பொதுமக்களின் அனுதாபத்தை வேண்டி தனது செயற்பாட்டை நியாயப்படுத்துவதுபோல தெரிவித்துள்ளார். அவரது இக்கூற்றின்பிரகாரம் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தன்னை சர்வதேச விசாரணைகளில் காட்டிக்கொடுத்துவிடுவாரோ என்றபயம் அவரிடமிருப்பது துல்லியமாக தெரிந்தது.

நாட்டில் ஒழுக்கத்தை கட்டிக் காப்பது தொடர்பில் எந்தவிதமான நெகிழ்வுப் போக்கையும் தான் பின்பற்றத் தயாரில்லையென்று சர்வ அதிகாரத்தொனியில் தனது எதேச்சதிகாரத்தை நியாயப்படுத்தினார். போரை வெற்றிகொண்ட புனிதன் சரத்பொன்சேகா என்று சிங்கள மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் திரையை முற்றாக அழிக்கவேண்டுமென்பதன் முத்திரையாக அவரது பேச்சு அமைந்திருந்தது. இதேவேளை, பசில், நாமல்,போன்றோரின் நடத்தை, மனித உரிமைகள், மற்றும் ஊடக சுதந்திரம் போன்றவை தொடர்பில் பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கேள்வி எழுப்பி வருவதாகவும் தனது பயத்தை தன்னிலைமறந்து மக்கள் முன் இரைந்து கூறினார். அண்மையில் நியூயோர்க்கிற்கு விஜயம் செய்திருந்த போதும் இந்த விடயங்கள் குறித்து சில தரப்பினர் கேள்வி எழுப்பியதாகவும். பொது மக்களின் உதவியை நாடிநிற்பது போலவும் அவரது பேச்சு அமைந்திருந்தது.

bf''தமிழர்களை கூட்டுச்சேர்ந்து அழித்த கொடியபழி இன்று கண்முன்னே ராஜபக்க்ஷ, சரத்பொன்சேகா, கூட்டணியில் பிரிவை காலம் உருவாக்கியிருக்கிறது. காலத்தில் கோலமாக ஒருத்தரை ஒருத்தர் காட்டிக்கொடுத்து மோதி அழிவின் ஆரம்பப்புள்ளிக்கு அவர்களே வந்துவிட்டனர். முடிவையும் அவர்களே எழுதி முடிப்பர்''

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பலமூத்த உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ஆகியோரது கட்டளைக்கிணங்கவே சுட்டுக்கொன்றதாக சரத்பொன்சேகா தரப்பிலிருந்து பலமுறை பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன, ஆரம்பத்தில் கருத்துவேறுபாடு அரசியல் ஆசை போன்ற காரணங்களினால் பிரிந்துபோன சரத்பொன்சேகாவை. அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என ஜனாதிபதி போட்டதிட்டம். பிள்ளையார் பிடிக்க குரங்காக மாறிவிட்டது. ராஜபக்க்ஷக்கள் அதிகார மமதையுடன் ஏவிய அஸ்திரங்கள் பூமராங்,காக மாறி திருப்பி தம்மை தாக்கவருவதை ஜனாதிபதி தரப்பு இப்போ உள்ளூர உணருவது தெரிகிறது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளிலும் அரசாங்கத்தரப்பு எதிர்பார்த்த அடக்குமுறை (மக்களை அச்சுறுத்தி) உடைக்கப்பட்டு பல செய்திகள் வெளியாகிவிட்டன. விரக்தியிலுள்ள தமிழ்மக்கள் இராணுவ அச்சுறுத்தலுக்கு அடங்கி சாட்சியமளிக்காமல் விட்டுவிடவில்லை.

இந்த நேரத்தில் தமிழர்தரப்பும் சர்வதேச அமைப்புக்களும் எடுத்துவைத்திருக்கும் போர்க்குற்றம் மற்றும் மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு சரத்பொன்சேகாவும் சரத்பொன்சேகாவின் பின் நிற்கும் இராணுவத்தினரும் அரசாங்கத்திற்கு எதிராக் சாட்சியமளிக்கும் பட்சத்தில். ராஜபக்க்ஷ கொம்பனி குற்றவாளிகளாக காணப்படுவதற்கு சாத்தியம் நிறையவே உண்டு. ஒரு இடத்தில் ராஜபக்க்ஷ குற்றவாளிதான் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டால், உலகமும் சரி அவர் சார்ந்த கட்சிக்காரர்களும் சரி ராஜபக்க்ஷவின் பின்னால் நிற்கப்போவதில்லை. கைவிட்டுவிடுவர் என்பதுதான் இயல்பானதும் கூட. எனவே ராஜபக்க்ஷ தானும் தம்பிமாரும் தப்பிப்பதற்கு காலம் இடங்கொடுத்தால் இன்னும் பலவருடங்கள் போராடவேண்டியே இருக்கும். அமைதியற்றிருக்கும் ஒருவர் எடுக்கும் முடிவுகளும் பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதும் ராஜபக்க்ஷவின் பேச்சு பல இடங்களில் இனங்காணப்பட்டிருக்கிறது. இன்னும் நிறையவே உண்மைகள் போகப்போக இருதரப்பாலும் வெளிவரும் என்பது எவராலும் தடுக்கமுடியாது.

சிலதினங்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அவர்களின் நிர்வாகம் இலங்கை நிலவரம் குறித்த கருத்தில். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, உண்மையில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளி உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளது. பராக் ஒபாமா நிர்வாகத்தின் இந்த செய்தியை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கு பொறுப்பான உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளாக் ஊடாக இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, இதயசுத்தியுடன் தமது விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதனையே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாக குழு விரும்புவதாகவும் ரொபர்ட் பிளாக் தெரிவித்துள்ளார். இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் களையப்படுவதற்கு, ''முழுமையான விசாரணைகள் இடமளிக்கலாம்'' எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். என்பதையும் இங்கு கவனிக்கவேண்டும். இந்த நிலையில் ''இலங்கை தொடர்பிலான விசாரணை குழு ஒன்று அமைக்கப்படலாம்'' எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தளவு ஆழமாக அமெரிக்கா இதுவரையில் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் பற்றி சினத்துடன் கூறியதில்லை. அமெரிக்க அதிபர் நிர்வாகத்தின் இத்தகைய அழுத்தமான அறிவித்தல் சிந்திக்கக்கூடியதொன்றே. ஏதோ ஒரு ஆழமான பின்னணியுடன்தான் இந்தநிலை வெளிப்பட்டதாகவும் கருத இடமுண்டு. அமெரிக்காவைப்பொறுத்தளவில் சந்தற்பத்தைப்பொறுத்து வெட்டிவிடுவதோ ஒட்டிவைத்துக்கொள்ளுவதோ என்பதெல்லாம் சிறிய நாடுகள் விடயத்தில் தமது நலன் சார்ந்ததாகவே இருக்கும்.

ஸ்ரீலங்கா அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக உருவாகிக்கொண்டிருக்கும் இன்னுமொரு விடயம் அமெரிக்காவிலிருந்து கிடைக்கக்கூடிய ஜி எஸ் பி பிளஸ் வரிச்சலுகை. ஸ்ரீலங்கா அரசு உள்நாட்டு தொழிலாளர் சட்டங்களைச் சரியான முறையில் அமுல்படுத்தத் தவறினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடத்தைப்பின்பற்றி அமெரிக்காவிடமிருந்தும் ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை ஸ்ரீலங்கா இழக்க நேரிடும் என கடும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது, அமெரிக்காவின் இந்த உத்தரவு அமெரிக்க அரசால் மட்டும் பிறப்பிக்கப்பட்டதல்ல. அமெரிக்கத் தொழிலாளர் அமைப்புக்கள் மற்றும் சுதந்திர வர்த்தக வலயம் ஆகியன கூட்டாக இணைந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் சமர்ப்பித்துள்ள பத்து அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இலங்கைக்கான சலுகைத் திட்டம் ரத்து செய்யப்படலாம் எனக் கூறப்பபடுகிறது.

இலங்கையில் தொழிற்சட்டங்கள் தான்தோன்றித்தனமான நடைமுறையைக்கொண்டுள்ளன. அவை திருத்தியமைக்கப்பட்டு சரியான முறையில் பின்பற்றப்படவேண்டும் என அமெரிக்க நிறுவனமொன்று குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த முறைப்பாடுகள் குறித்து அமெரிக்காவில் அண்மையில் சட்ட நுணுக்கங்களுடன் ஆராயப்பட்டதாக தெரிகிறது. இலங்கைக்கான வரிச்சலுகைத் திட்டத்தை ரத்து செய்வது எங்கள் நோக்கமல்ல என்றும், தொழிலாளர் நலன்சார்ந்த சட்டங்களை நெறிப்படுத்துவதே தமது நோக்கம் எனவும் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர் ஒன்றியத் தலைவர் அன்டன் மார்கஸ், கூறியிருக்கிறார். ஸ்ரீலங்கா அரசு தொழிற்சட்டங்களைச் சரியான முறையில் நடைமுறைப்படுத்தத் தவறும்பட்சத்தில் ஐரோப்பியம் ஒன்றியம் ரத்துச் செய்தது போல ஜி.எஸ்.பி. சலுகையை அமெரிக்காவும் பின்பற்றி நிறுத்திக்கொள்ளுமென்று செய்திகள் கூறுகின்றன.

போர் நடந்து முடிந்தபின் ஸ்ரீலங்கா அரசாங்கம் பொதுமக்களின் நலனில் எவ்வளவு அக்கறையுடன் நடந்து கொண்டுள்ளதென்பதை உலகநாடுகள் உன்னிப்பாக கவனித்தே வந்திருக்கின்றன. சமீபகாலமாக பலநாடுகள் நடந்துகொள்ளும் விதங்களில் இவை வெளிச்சமாகத்தெரிகின்றன.
சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடரின்போது இலங்கையின் அரசியல் எவரையும் நயனமாக கவர்ந்திருக்கவில்லை என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது, முக்கிய தலைவர்கள் யாரும் ஆசனத்தில் இருக்கவில்லை என்றும் சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

பொதுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், உலகத் தலைவர்களை குளிர்வித்து தனக்கேயுண்டான தந்திர வலைவிரிப்பில் தலைவர்களை வீழ்த்தி காரியம்பெறும் நோக்குடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெருத்த விருந்து உபசாரம் ஒன்றை ஏற்பாடுசெய்திருந்தார் நிறுவப்பட்ட அந்த விருந்து உலகத்தலைவர்களின் வயிறுதடவும் நோக்கத்துடன் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது . இதற்கான ஆயத்தங்களை அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டிருந்தது. எனினும் இந்த நிகழ்வுக்கு எதிர்பார்த்தவர்கள் யாரும் வரவில்லை என கூறப்பகிறது.

அடுத்ததாக அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான தொடர் நிகழ்வுகள்அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான இரண்டு நாள் நிகழ்வுகள் நடைபெறுகிறது ஒக்டோபர் 06 ஒக்டோபர் 07 ஆகிய இரண்டுநாள் நடைபெறும் நிகழ்வுகளில் பிரதான பேச்சாளர்களாக Denis Halliday மற்றும் Mary Lawlor பங்கேற்கின்றனர் இந்த பேச்சாளர்கள் இந்த வருடம் ஜனவரி மாதம் டப்ளினில் நடைபெற்ற நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் (Permanent Peoples’ Tribunal) நடுவர்களாக இருந்தவர்கள். இரண்டு நிகழ்வுகளிலும் இலங்கையில் இறுதியாக நடைபெற்ற போரின் நிகழ்வுகள் ஒளிப்படமாக காண்பிக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியான நெருக்குவாரத்திலும் தலைவலியிலுமிருக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் அதன் அதிபதிகளுக்கும், உலகநாடுகள் கொடுக்கும் நெருக்கடி போதாதென்று சண்டே லீடர், பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜோன்ஸ், அவர்களும் தனது கணக்கிற்கு நீதிமன்றத்தில் கூண்டிலேறிச் சாட்சியமளித்திருக்கிறார். சரணடையும் புலிகள் இயக்க சந்தேக நபர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தாபாய தனக்கு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகாவை கடந்த டிசம்பர் 8ம் திகதி பேட்டி கண்டபோது அவர் தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

கோத்தபாய, பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவுக்கு தொலைபேசி மூலம் புலி சந்தேக நபர்கள் வெள்ளை கொடியுடன் சரணடைய வரும்போது அவர்களை கொல்லுமாறு உத்தரவிட்டதாக சரத் பொன்சேகா என்னிடம் கூறினார். அதனையடுத்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அவ்வாறு பிரிகேடியர் சவிந்திர டி சில்வாவிடம் கூறிய சம்பவத்தை தலைப்புச் செய்தியாக போடுவதற்கு தீர்மானித்தேன் என்று சாட்சியமளித்த போது பிரெட்ரிகா ஜான்ஸ் கூறினார்.

பல உலக நாடுகளும் தொண்டரமைப்புக்களும் ஸ்ரீலங்காவின் போர்க்குற்ற விசாரணை, மற்றும் மனித உரிமை, தமிழர்களின் அடையாளம், ஆகியவற்றைப்பேணுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளன. இவையெல்லாவற்றிற்கும் ஆதாரமாக இருப்பது தமிழர்களின் ஒற்றுமையும் மதிநுட்பமான சமயோசிதமான அரசியலுமே. அவை எம்மத்தியில் நிறைய இருந்தும் சுயநலமும் போட்டிமனப்பாண்மையும் பதவி மோகமும் அவற்றை குழிதோண்டிப்புதைத்துவிட இடமளித்துவிடலாகாது.

இலங்கையில் சிங்கள ஏகாதிபத்திய வாதிகளுடன் நேரடியாக அரசியல் செய்யும் தமிழர் தேசியக்கூட்டமைப்பு சிங்கள வல்லாதிக்கவாதிகளுடன் போட்டிபோடமுடியாமல் தவிப்பது தெரிகின்றது. அத்துடன் கட்சிக்குள்ளிருக்கும் ஒற்றுமையீனமும் தன்னிச்சையான சிலரது முடிவுகளும் எதைத்தின்றால் பித்தம் தீரும் என்று தடுமாறி அழிவுக்குக்காரணமான ஒன்றுக்குமுதவாத இந்தியாவை வீணாக நம்பிக்கொண்டிருக்கின்றனர். உலக அரங்கில் மாற்றங்கள் உருவாவதை கவனித்து அவற்றில் சாதகமானவற்றை பற்றிப்பிடித்து முன்னேறுவதே சாணக்கியமான அரசியலாகும். ஒருசிலரின் ஈகோவுக்கு மக்களையும் எதிர்காலத்தையும் பலியாக்கிவிட முடியாது

இக்கருத்தை வழிமொழிவதுபோலவே நாடுகடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி கருத்து தெரிவித்து உரையாற்றிய கனடா நாட்டைச்சேர்ந்த கலாநிதி ராம் சிவலிங்கம், அவர்கள் தனது தலைமை உரையில் முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பிறகு, நாம் என்னசெய்யப் போகிறோம்? எமது
அடுத்த நகர்வுகளை எப்படி முன்னெடுப்பது? என எண்ணிய வேளை, எம் தேவையை அறிந்தது தேடிவந்த கருத்தான் ''தேசியத் தலைவரின் சிந்தனையிலான'' இந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம். அக்கருவுக்கான செயல்ரூபத்தை எமது இரண்டாவது அமர்வில் வெற்றிகரமாகக் கொடுத்துவிட்டு இன்று உங்கள்முன் வந்துள்ளோம். அதை வளர்த்தெடுத்து, பலமான ஓர் சக்தியாக உருவாக்கி இறைமையும், சுதந்திரமும் கொண்ட ஓர் தனிநாட்டை அமைப்பதற்கு உங்கள் அன்பு நிறைந்த ஆசியையும், அளவில்லா ஆதரவையும் வேண்டி நிற்கிறோம். என்றார்.

தமிழினம் நம்பிக்கையுடன் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் அமைப்பாக நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை நம்பிக்கை விருப்பத்துடன் எதிர்பார்த்து நிற்கின்றனர் என்பதும் சர்வதேசத்தொடர்பாடல்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசே இன்றியமையாதது என்பதும் ஒட்டுமொத்த தமிழர்களின் ஏகோபித்த கருத்துமாகும்.

இந்த நிலையில் இரண்டாவது அமர்வு முடிந்தபின் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரித்தானிய பிரதிநிதிகளில் ஒருவராக தெரிவு செய்யப்பட்டவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஜெயானந்தமூர்த்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது பல சந்தேகங்களை குற்றச்சாட்டக முன்வைத்திருக்கிறார்.

புலம்பெயர் தமிழர்களால் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்குள் மிகவும் அதிகப்படியான வாக்குகளைப்பெற்றவர் இவர். ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசின் நகர்வுகள் திருப்தி தராமையால் இப்பிரதிநிதி பதவியில் இருந்து விலகும்
தீர்மானத்தை எடுக்கின்றமைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்று அறிவித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எஸ்.ஜெயானந்தமூர்த்தி அவர்கள் வெளியிட்டுள்ள இந்தக்கருத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று புறந்தள்ளிவிடவும் முடியாது. தனியொருவராக இப்போதைக்கு அவரது குரல் வெளிவருவதால் மக்கள் மத்தியில் மிகுந்த குளப்பம் உண்டாகச்சந்தற்பமிருக்கிறது. ஜெயானந்தமூர்த்தி நேர்மையானவர் என்ற நற்பெயரும் மதிப்பும் மக்கள் மத்தியில் உண்டு. இதை பிரதமராக பதவியேற்றிருக்கும் கௌரவ உருத்திரகுமாரன் தெளிவுபடுத்தவேண்டிய கடமையிலுள்ளார். அமைப்பின் ஆரம்பமே அவநம்பிக்கையுடன் தொடங்கப்பட்டால் நாடுகடந்த அரச நிர்வாகத்தின் நிமித்தம் பலாபலன் மக்களை எப்படி சென்றடையும் என்கிற கேள்வி ஒரு குருடனுக்கும் ஏற்படும் என்பதை தட்டிக்கழிக்க முடியாது. ஒன்றுக்குள் ஒன்றான எம்மால் இவ்வளவு இழப்புக்களின் பின்னும் தேசியத்தலைவர் காட்டிய வழியைப்பின்பற்றி ஏன் செல்ல முடியவில்லை. இந்தச்சம்பவம் தமிழ்ச்சமூகத்தில் மிகுந்த குளப்பத்தையும் ஸ்திரமற்றதன்மையையும் தோற்றுவித்திருக்கிறது என்பதுமட்டும் உண்மை.

எங்கள் ஒற்றுமையும் இறுக்கமும் புரிந்துணர்வுடனான விட்டுக்கொடுப்புக்களும்தான் சர்வதேச சமூகம் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக எடுக்கமுனையும் நடவடிக்கைகளுக்கு முடிவுரை எழுதி தீர்த்து வைக்க வழி கோலும். சிதறுண்டுபோவோமேயானால் ராஜபக்க்ஷவின் அராஜகத்திற்கு தமிழனின் அரசியல் அரிச்சுவடியின் அறியாமையே முளுக்காரணமுமாகி மண்கவ்வவேண்டிய நிலைக்கு தமிழினத்தை இட்டுச்செல்லும்.

பொது வெளியீடு கனகதரன்,

நன்றி ஈழதேசம்,

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=2595:2010-10-07-17-54-57&catid=34:2009-04-30-10-08-44&Itemid=29