என் தலைவனே,
நேற்றுவரை உன்னுடன்
உன் நிழலில் நின்ற நானும் அவர்களும்
உன் வரவுக்காக உன் கட்டளைக்காக
காத்திருக்கிறோம்.
நேற்றுவரை நீ நம்பியவர்கள்
உன்னை நம்ப வைத்தவர்கள்
உன் நிழலில் ஒளிந்து
ஓங்காரம் என்று ஒத்தூதியவர்கள்
சாத்தானின் கொட்டகையில்
தனித்தனியேயும் கூட்டாகவும்
எங்கள் எலும்புகளையும்
கபால ஒடுகளையும்
கயமையுடன்
காசாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
கண்ணெதிரே கைக்கெட்டிய தூரத்தில்
நீ கொண்டுவந்து நிறுத்தியிருந்த
கற்பனையல்லாத நனவு தேசம்
கள்வர்களின் கயமையால்
புத்தனின் புலம்பெயர் தேசமாகிறது.
பரந்தனிலும்,கிளிநொச்சியிலும்
உன் தூங்கா இரவுகளில்,
கொழும்பிலும் சீமையிலும்
உன் பெயரால் சுகமாக உறங்கியவர்கள்,
நீ மௌனமான குறுகிய பொழுதுகளில்
புதிய அறம் பாடுகின்றனர்.
நேற்றும் இன்றும் நாளையும்
நீ இல்லாவிட்டால் இந்தமண்
புத்தனின் நவீன நகரகமாகி
நடத்தை கெட்ட நரகமாகிவிடும்,
நாளடைவில்
என் வீட்டுக்கும் கோவில்களுக்கும்
நிரந்தரமாக திரை விழுந்து
காணாமல் போய்விடுவோம்
கனக்கிறது நெஞ்சு.
சொந்தங்களெல்லாம்
உன் மௌனத்தால்
கை கட்டி வாய் பொத்தி
உன் வரவை ஒவ்வொரு பொழுதும்
ஊடுருவியபடி,
ஏனென்றால்
நீதான் எல்லாமாகிவிட்டாய்
நீ மறுத்தாலும் அது மறுக்க முடியாதது.
----------
ஆரணி.
நன்றி ஈழதேசம் இணையம்,
No comments:
Post a Comment