Monday, July 19, 2010

புதுவை அண்ணா எங்கே,

ஈழத்து கவிஞர் புதுவை இரத்தினதுரை எங்கே?

இந்தக் கேள்வியை கடந்த ஒரு வருடமாக எனக்குத் தெரிந்தவர்கள் எல்லாரிடமும் கேட்கிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொல்கிறார்கள். ஆனால் கவிஞர் எங்கே இருக்கிறார் என்று திட்டமாக எவரும் சொல்கிறார்களில்லை.

கவிஞரை நான் இறுதியாக சமாதான நேரத்தில் 2006 இல் பொற்பதியில் சந்தித்தேன். நீண்ட நேரமாக என்னோடு கதைத்துக்கொண்டு இருந்தார்.

அவரின் பேச்சில் தமிழர் சிங்களவர் மத்தியில் வேலை செய்யவேண்டிய புரிந்துணர்வு பற்றியதாகவே அநேக விடயங்கள் இருந்தன. தனக்கு இருக்கும் சீனி வியாதிபற்றியும் பேசினார். என்னோடு மிகவும் அன்பாகவே இருந்தார். தொடர்ந்து நாங்கள் கதைக்கவேண்டும் என்றும் சொன்னார். என்னோடு பேசிய அன்று புலிகள் தொடர்பாக எதுவுமே பேசவில்லை. ‘வெளிச்சம்’ சஞ்சிகைக்கு கவிதை அனுப்பச் சொன்னார். இரண்டு கவிதைகள் அனுப்பினேன். இரண்டும் பிரசுரமாகியிருந்தன.

யுத்தத்தின் இறுதிக் காலத்தில் வெளிச்சம் 100 வது இதழில் பிரசுரிப்பதற்கு ஒரு சிறுகதை தரும்படி இங்கே லண்டனில் உள்ள நண்பர் ஒருவரூடாக கேட்டிருந்தார். நான் ‘புளியங்குளம்’ கதையைக் கொடுத்திருந்தேன். அது பிரசுரமாகியிருந்தது. ஆனால் வெளிச்சம் 100வது சஞ்சிகை யுத்தத்தில் அகப்பட்டு அது வன்னியைவிட்டு வெளியில் வரவில்லை என்பதுதான் சோகம். புதுவையின் ‘பூவரசம் வேலிகளும் புலுனிக் குஞ்சுகளும்’ கவிதைத் தொகுப்பைப் புரட்டும்போது மனது பாரமாகிக் கிடக்கிறது.

இந்த யுத்தத்தில் ஒரு நல்ல தமிழ்க் கவிஞனை இழந்துவிட்டோமோ என்ற கவலை மனதை அழுத்துகிறது. புதுக்கவிதைகள் போர்க்காலக் கவிதைகள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. புதுவையின் கவிதைகள் போராட்டத்தை முன் உந்தித் தள்ளியது. அது மக்கள் மத்தியில் பெரும் பெரும் தாக்கத்தை மன உத்வேகத்தை அளித்தது.

ஆனால் அந்த நல்ல தமிழ்க் கவிஞன் எங்கே இருக்கிறான், உயிருடனோ அல்லது இறந்துவிட்டானோ என்று தெரியாமல் இருப்பதுதான் பெரும் கவலை. புலிகளின் பெரும் புள்ளிகளே அரசின் அரவணைப்பில் இருக்கும்போது ஒரு கவிஞனை காணாமல் ஆக்கியிருப்பது பெரும் கொடுமைதான்.

‘இத்தனைக்குப் பின்னும்
கொழும்பும் எமதென்றே
குறிப்பெழுதி
இடையிருந்த எல்லைதகர்த்து
வந்தோம் உங்கள் வாசல்
ஆணியறைந்த காலத்துயர்
மீண்டும் கையிணையும் மகிழ்வில்
அந்தப் பெரும்தெரு ஏறிவந்தோம்
துருப்பிடித்திருந்த கபாடம் திறந்து
தூசி படிந்த தெரு கழுவி
புன்னகை சுமந்தோராய்
ஊறிய நினைவில் வந்தோம் தலைவாசல்
சகோதர உறவுகளுடன்
முகிழ்த்து மலர்வோம் என
நீங்களனுப்பிய அழைப்பிருந்தது நெஞ்சில்
அச்சமில்லையெனும் நம்பிக்கையும்
உலகு உறவுகளால் நிரம்பியதென்ற உணர்வும்
அந்த வாசகத்தின் மேலே ஒளிர்ந்தது.
வரும் வழியெல்லாம் வாகனம் நிறுத்தி
வெள்ளையப்பம், கிரிபத், மாசிச்சம்பல்,
கித்துள்பாணி என
பல காலமுண்ணாப் பலகாரமுண்டோம்.
அனுராதபுரத்தில்
மேலிருந்திறங்கித் தகுமெனச் சொல்லி
அதுவே தருணமென்றுரைத்து
எல்லாள மகாராசனும்
கெமுனு இளவரசனும்
ஒன்றாக நின்று வாழ்த்தியனுப்பினர் வழி
இருளழித்து ஒளி தூவி வந்தன எம் தேர்கள்
பாதி வழி வந்து எதிர்கொண்டன
உம் பல்லக்குகள்,……..

என்று தொடரும் புதுவையின் இந்தக் கவிதையை 2003 ஆம் ஆண்டிலி இருந்து எனது பையில் வைத்துக்கொண்டு இன்றுவரை திரிந்துகொண்டிருக்கிறேன் நான். இதுவரை எவரும் ‘இத்தனைக்குப் பின்னும்’ என்ற புதுவையின் கவிதையைப் போல எழுதவே இல்லை. 2003 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 29 ஆம் திகதி ‘ஹிரு’ அமைப்பினர் தமிழ்க் கலைக்கூடல் என்ற நிகழ்வை கொழும்பில் புதிய நகரசபை மண்டபத்தில் நிகழ்த்தியிருந்தனர். வன்னியிலிருந்து கலைஞர்கள், கவிஞர்கள் வந்திருந்தனர். இரண்டு நாள் நடந்த இந்த நிகழ்வை ‘ஹெல உறுமய’ உறுப்பினர்கள் குழப்ப முயன்றனர், முடியவில்லை. இந்த ஒன்றுகூடல் தொடர்பான புதுவையின் பதிவு இந்தக் கவிதை மிகவும் அற்புதமாக வந்திருக்கிறது.

உண்மையில் இந்த கொடூர யுத்தம் முடிவடைந்து ஒருவருடம் முடிவடைந்த பின்னரும் திரும்பும் இடமெல்லாம் வெறுமையாகவே எல்லாம் இருக்கின்றன.

யுத்தத்தின்போது கொல்லப்பட்ட, காணாமல் செய்யப்பட்ட சித்திரவதைக்குட்பட்ட ஆயுதம் இல்லாத அப்பாவிகள்மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கு யாரும் பதில் சொல்லத் தேவையில்லை என்ற உணர்வு மட்டுமே சனாதிபதி மற்றும் அவரது பாதுகாப்புச் செயலர் போன்றோருக்கு இருக்கிறது. இலங்கை மிகவும் அபாயகரமானதோர் நிலமைக்கும் சர்வாதிகாரத்துள்ளும் போகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்படுகிறது. தொடர்மாடி வீடுகள், பிச்சைக்காரர்கள், நகர அபிவிருத்தி என எல்லாமே பாதுகாப்பு செயலர் கோதபாய ராஜபக்சவுக்கு கீழே போவது எதிர்காலத்தில் ஒரு தனிமனித சர்வாதிகார இராணுவ பின்புலத்திற்குள் இலங்கை முழுமையாக தள்ளப்படப்போகிறதோ என்ற ஒரு பயக்கெடுதி வருகிறது.

ஒவ்வொருவரையும் ஒரு மறைமுகமான இராணுவத்தின் கண் பின் தொடரப் போகிறதா?

இடி அமீன் அப்படித்தான் செய்தார். உகண்டாவை முழு ஊழலுக்கும் அவருடன் சேர்ந்த இராணுவத்தினர் அனுபவித்து மகிழவும் ஆக்கினார். ஒரு கூட்டத்திற்குப் போனால் அங்கு அவரின் கண்ணில்படும் பெரும் பணக்காரர்களை அடுத்தநாள் ஏழையாக்கிவிடுவார். அவரின் சொத்துக்கள் எல்லாம் பறிக்கப்பட்டு விடும். அந்தக் கூட்டத்தில் அழகான பெண்கள் இருந்தால் அன்று இரவு இடி அமீன் படுக்கை அறையில் அந்தப் பெண் இருக்கவேண்டும். இவை எல்லாவற்றுக்கும் அவருடன் இருந்த இராணுவத்தினர் முழு ஒத்தாசை வழங்கினர். அதனால் இராணுவத்தினரும் சுகபோகமாக வாழ்ந்தனர். பிறகு நாடே நலிந்து நாசமாகிப் போய்விட்டது.

நாட்டின் அபிவிருத்தி என்று நாட்டு மக்கள் சந்தோசப்படும்படி அமையவேண்டும். மக்கள் பயந்து பயந்து செத்துக் கொண்டிருக்கும்படி ஆகக்கூடாது.

வன்னிப் பெரு நிலப்பரப்பு எங்கும் மக்கள் சிதறிப்போய் இருக்கின்றனர். வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச ஐ.நா. சபையை எதிர்க்கும் சக்தியில் ஒரு கொஞ்சத்தையேனும் வன்னி மக்களின் பக்கம் திருப்புவாரேயானால் அங்கு வீடில்லாதவர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கலாம். வன்னிப் பெருநிலம் காடுபத்திப்போய் கிடக்கிறது. மக்கள் இல்லா மயான வெளியாக இருக்கும் பூமிபற்றி யோசிக்கும்போது 1996 ஆம் ஆண்டு வெளிச்சம் சஞ்சிகையில் புதுவை எழுதிய கவிதைதான் எனது நினைவுக்கு வருகிறது.

‘நிலவு நேராக தலைக்குமேல் நிற்க
ஓ வென்று இரைகிறது காற்று
தூரத்தே
இரணைமடுக்காடு பனியில் நனைகிறது
பழைய முருகண்டித் தனியன் யானையாய்
அருகில் ஒருவரின்றி நான்
சுற்றமிழந்து எத்தனை நாளாச்சு?
அயல் வீட்டில் குடியிருந்த அவர்களை
எங்கு தேடுவேன்?
சிதறி ஓடியது தெரியும்
பிறகு என்னானார்கள் அவர்கள்?
வாய்க்கால் நீராய்ப் பெருகி வழிந்து
வந்தடைந்தது ஓரிடமல்லவே
திக்கொன்றாய் சிலும்பிப்போனோம்.
மீண்டும் ஊர் புகும் நாளில்
எவரெவர் கூடி உள்நுழைவோமோ?
உயிரோடிணைந்த உறவுகளே!
என் அயலிருந்தோரே!
எங்கே போய்விட்டீர்?
காண ஆசை மிகுதி ஓடி வருக!
இரணைமடுக்காடு அதிரக் கத்தவேண்டும்போல
உள்ளே ஒரு வேட்கை
இன்று பங்குனித் திங்கள்
பொங்கலுக்கென்றே பிறக்கும் நாள்.
உச்சி வெயில் உருக்கிலும்
தார் உருகும் தெருவில் நடப்போம்
காலிற் செருப்பும் இருக்காது.
காவடியும் பாற்செம்பும் சுமந்து
ஊரின் ஓரிருவர் நடப்பர்
உறவெல்லாம் முன்னும் பின்னும் அணிவகுத்து
கோயில் புக மணிச்சத்தம் வரவேற்கும்.
இன்றெங்கே அந்த ரத்தங்கள்?
ஒரு முகத்தையாவது காணும்வரை
இந்தக் குளக்கரையில் குந்தியிருப்பேன்’

வன்னி இடப்பெயர்வு தொடர்பான மிக துல்லியமான புதுவையின் பதிவு இது. பங்குனி மாதம் வன்னி எங்கும் பெரும் குதூகலமாகத்தான் இருக்கும். எங்கள் வாழ்வில் அனுபவித்த நாட்கள் இன்னும் மனதுக்குள் அப்படியே கிடக்கிறது.

முள்ளியவளைக்குப் போனால் எங்களுக்கெல்லாம் மனதுக்கு சந்தோசம் மட்டுமே கிடைக்கும்.

பங்குனி மாதத்தில் எங்கள் வன்னிக் காற்றில்கூட எத்தனை எத்தனை வாசனை. இலுப்பைப்பூ பூக்கும் அற்புதமான காலம். காற்று இலுப்பைப்பூ வாசனையை அள்ளிக்கொண்டு வந்து எங்கள் நாசியில் கொட்டும். இலுப்பைப்பூ மணத்தை உணர்ந்தவர்கள் வன்னி மக்கள். எத்தனை பேருக்கு அதன் வாசனை இன்னும் நாசிக்குள் கிடக்கும்.

பங்குனி மாதத்தில்தான் பனம்பழம் பழுத்து சொரியும். காட்டு ஈச்சம்பழம் பழுத்துக்கிடக்கும். நாவல்பழம், வீரப்பழம், கூழாம்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம் என்று எங்கள் முள்ளியவளை முழுக்க காற்றில் வாசனை வாசனையாகவே இருக்கும். மாம்பழம் பழுத்துச் சொரியும் காலமிது. எங்கள் பாதைகளில் கால்கள் மணலில் புதைய நடந்த நாட்கள் இன்னும் மனதில் பசுமையாக இருக்கிறது.

பங்குனித் திங்கள் காலத்தை முழுமையாக அனுபவித்தவர்கள் என்றால் முல்லைத்தீவு, வற்றாப்பளை, முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருக்கு பகுதி மக்கள்தான். வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோவில் ஒவ்வொரு பங்குனித் திங்களிலும் களைகட்டும். அப்படியே பங்குனி முடிந்தால் வைகாசிப் பொங்கல் முழுக்க எங்களுக்குக் கொண்டாட்டம்தான். எல்லாம் அழிந்துபோய்விட்டது. எல்லாவற்றையும் அழித்துவிட்டு ஒன்றும் நடக்காததுபோல இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். அதுதான் கொடுமை.

தெற்கைப்போல வடக்கையும் கிழக்கையும் பாருங்கள் என்றுதான் சொல்கிறோம். நாங்களும் மனிதர்கள்தானே என்றுதான் சொல்கிறோம்.

புதுவை சொன்னதுபோல,
‘..இன்றெங்கே அந்த ரத்தங்கள்?
ஒரு முகத்தையாவது காணும்வரை
இந்தக் குளக்கரையில் குந்தியிருப்பேன்’

இரணைமடுக் குளக்கரையில் தனியே புதுவை மட்டும்தான் குந்தியிருந்து உறவுகளைத் தேடுவதுபோல் தெரிகிறது. ஆனால் புதுவையை நாங்கள் தேடுகிறோம். கவிஞனே நீ எங்கு இருக்கிறாய்? உயிருடன் இருக்கிறாயா அல்லது இறந்துவிட்டாயா? அல்லது எங்காவது சிறையிலா? அல்லது தனிப்பட்ட முகாமிலா? தெரியவில்லை. ஒரு கவிஞனாக இருந்து புதுவை சாதித்தது அளப்பரியது. புதுவை இயமனுக்கு எழுதிய கவிதை இது.

‘காலனே!
கயிறு என்மேலெறிய
கணக்கெடுக்கின்றாயா நாட்களை?
விரைவில் முடியாதென் கணக்கு.
சாக்குறிக்கும் ஜாதகமே பொய்யென
உணர்த்துவேன் உனக்கு.
மரண பயமில்லை எனக்கு.
இறுதி நாளைச் சொல்லவரும் உன் தூதுவனைக்கூட
முகம் மலர்த்தி வரவேற்பேன்.
மேதியுர்தி ஏறிவரும் உன்னையும்
பாயருகே அமர்த்தி
பத்து வருடங்கள் கழித்து வாவெனச் செப்பும்
பலமெனக்குண்டு.
என் ‘அப்பு’ எனக்களித்த வரமிது.
சாவு ஒரு நாள் என்னைத் தழுவும்
என் ஒப்புதலுடன்
போதும் என் ஜீவிதமெனும் நிறைவுடன்
நானாக உன்னைக் கூவியழைத்து
கூட்டிப்போ என்பேன்
அதுவரை உனக்கு
என் முகவரி எதற்கு?
காலா!
சென்று வேறெவனும்
இழிச்ச வாயன் இருப்பான்
எடுத்துச் செல்.
என்னைத் தான் வேண்டுமெனில்
நானாக உன்னை அழைப்பேன்
அப்போது வா தோழா.’

உண்மையில் புதுவையின் உயிர் மீதான துணிச்சல் இப்படி இருந்திருக்கிறது. இறப்பது என்பது வேறு. காணாமல் போவதென்பது பெருங்கொடுமை. புதுவை உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதற்கு விடை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் சொல்லவேண்டும். ‘விரைவில் முடியாதென் கணக்கு’ என்று புதுவை சொன்னது மட்டும் தான் எங்களுக்குத் தென்பாக இருக்கிறது.

ஒரு நல்ல தமிழ்க் கவிஞனை அவ்வளவு சீக்கிரம் இழப்பதற்கு எனது மனது தயாராகுதில்லை. ஏனெனில் வன்னியில் நாங்கள் இழந்தது கோடி.

Tags:

No comments: