[ சனிக்கிழமை, 11 ஏப்ரல் 2009, 03:40.22 PM GMT +05:30 ] |
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்' இழப்புக்களையும் கொடுரங்களையும் இந்தக்கலியுகத்தில் நாம் அனுபவித்து விட்டோம். வகைப்படுத்தவோ உதாரணத்திற்கோ எதையும் இங்கே நிகரிட முடியாது. என்று தொடருகின்றார் அவலப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு ஈழத்தமிழன். அவரது கோரிக்கையின் முழுவடிவம், |
'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மம் வெல்லும்' இது பகவத்கீதையில் மிகமுக்கியமான இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வாக்கியம். நடைமுறை யதார்த்தமும் இவ்வாறே காணப்படுகின்றது. ஆனாலும் அளவுக்கதிகமான இழப்புக்களையும் கொடுரங்களையும் இழப்புக்களையும் இந்தக்கலியுகத்தில் நாம் அனுபவித்து விட்டோம். வகைப்படுத்தவோ உதாரணத்திற்கோ எதையும் இங்கே நிகரிட முடியாது. வீரத்தையும் உறுதியையும் தான் இங்கு குறிப்பிடுகின்றேன். மரங்களுக்கும் மண்புழுவுக்கும் ஆராய்ச்சிக்கட்டுரையும் வாழ்வியல் வரலாறும் பாதுகாப்பும் கேட்டுப் போராடிக் கொண்டிருக்கும் இந்த உலகம் எங்கள் அவலத்தை, அழிவைக் கண்டுகொள்ளாமல் விட்டதுதான் இன்றைய நவீன நாகரீக உலகத்தின் மீது எனது மனக்கவலையெல்லாம். இருந்தும் ஈழத்தமிழனின் தலைமையின் உறுதியும், வைராக்கியமும் சர்வதேசத்தின் மெளனத்தையும், மனச்சாட்சியையும் சம்மட்டியால்த் தாக்கியிருக்கிறது. உண்மை நிலையை உலகு நீக்கமற ஏற்றுக்கொண்டிருக்கிறது. இதுதான் இன்று இந்திய வல்லாதிக்கத்திற்கும் சிங்கள ஏகாதிபத்தியத்திற்கும் பெருத்த தலைவலியாக உருவெடுத்திருக்கும் இக்கட்டான நிலை. இந்தியாவின் சதியும் திட்டமிடலும் தான் இலங்கை சிங்கள அரசிற்கு தனது தகுதிக்கு மீறிய சண்டித்தனத்தை அழித்தொழிப்பை கண்மூடிச் செயல்பட வைத்தது. இந்தியா தனது கொள்கை வகுப்பாளர்களையும் தமிழ்ப் பாரம்பரியத்திலுள்ள அரசியல்வாதிகளான கலைஞர் கருணாநிதி, சிதம்பரம் போன்றவர்களின் ஆலோசனையுடன் மிக மிக கமுக்கமாக காய் நகர்த்தி நல்லது செய்வது போல உலகுக்கும் மக்களுக்கும் பாவனை காட்டி, பல நாடகங்களை தமிழக அரசு மூலம் நிகழ்த்தி காலத்தை இழுத்தடித்து, புலியழிப்பு என்ற பெயரில் சிங்கள அரசை உச்சாடனப்படுத்தியிருந்தனர். இங்கு தமிழனென்றால் புலி! புலியென்றால் தமிழன்! பிரித்துப் பார்ப்பதற்கு எதுவுமில்லை இதுதான் யாதர்த்தமுமாகும். ஜனவரி இரண்டாம் நாள் கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது! இன்னும் ஜந்து தினங்களில் எல்லாம் முடிந்து விடும். நடைபெற்ற நாடகங்களெல்லாம் மறக்கடிக்கப்பட்டுவிடும் அதன் பின் ஒப்புக்குச் சப்பாணியாக கருணாவையோ, டக்ளஸ் தேவானந்தாவையோ உட்கார வைத்து விட்டு பழைய ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்திற்கும் குறைவான சோனியா – ராஜபக்ஷே ஒப்பந்தம் என்று ஒன்றை ஒப்புக்குச்செய்து உலகுக்குகாட்டி ஈழமக்களை ஓரங்கட்டிவிட்டு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலைச் சந்தித்து வெற்றிவாகை சூடலாம் என்பதே சோனியா – மன்மோகன்சிங்- கருணாநிதி ஆகியோரின் கனவுத்திட்டம். இந்தக் கனவெல்லாம் எந்தளவுக்கு நனவாகுமோ சாத்தியப்படுமோ தெரியவில்லை. வட இந்திய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், ஒரிசா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலக் கட்சிகள் காங்கிரசுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலைச் சந்திக்க அறவே விரும்பவில்லை. கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் மாநிலக்கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு முன்றாவது அணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்ற வெளிப்படையாககச் செயல்படுகின்றன. தமிழ்நாட்டிலும் சொல்லும்படியான பலம் காங்கிரசுக்கோ திமுகவுக்கோ கிடைக்கப் போவதில்லை பாமக, மதிமக, இடதுசாரிக்கட்சிகள், அஇஅதிமுக வுடன் தேர்தல் கூட்டுச்சேர்ந்து விட்டனர். திமுக ஒன்று தான் கைவிடாமல் காங்கிரஸைப் பிடித்து வைத்திருக்கிறது. கருணாநிதி தனது தலைமையிலான மாநில ஆட்சிக்கு பங்கம் ஏற்படாமல் தக்கவைத்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் தனது தந்திரவலையில் காங்கிரஸ் கோஷ்டிகளை மிகுந்த சிரமத்துடன் வெளியேறி விடாமல் பிடித்து வைத்திருக்கிறார். மத்தியில் காங்கிரஸின் ஆட்சி இருப்பதால் திமுக வின் ஆதரவு மத்திய அரசுக்கு தேவைப்பட்டது. இனிவரும் தேர்தலில காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் பட்சத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கோஷ்டிகளை கருணாநிதியால் மட்டுமல்ல எவராலும் கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசும் கேள்விக்குறியாகும் என்பது திண்ணம். கருணாநிதியின் கவலையெல்லாம் எவர் செத்தாலென்ன வாழ்ந்தாலென்ன தனது அதிகாரத்துக்கும் (குடும்பம்) பிள்ளை குட்டிகளின் பதவிக்கும் எந்த பங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே! தமிழ்நாட்டில் தொடர்ந்து திமுக ஆட்சியிலிருக்கக் கூடியதான சூழ்நிலையும் குடும்ப உறுப்பினர்களின் பதவி அதிகாரத்துக்கு இடரில்லாத எந்தக் கூட்டணியையும் அவர் வரவேற்கத் தயார்! கொள்கை கோட்பாடு பற்றி எவர் கேட்டாலும் ஜந்து கருத்துப்பட பதிலளித்து வெளியேறக்கூடிய தந்திரம் அவரது கைவந்த கலை. எதையும் வெட்டியாடும் வல்லமையும் அவரிடமுண்டு. பதவிக்காக அவரால் எதுவும் செய்ய முடியும். பதவிப்போதை (வெறி)யில் அப்பா இருக்கிறார் என்று அவரது முதல்தார மகன் மு.க.முத்து சமீபத்தில் ஒரு பத்திகைப்பேட்டியின் போது கூறியிருந்தார் அவரது தொண்ணூறாவது வயதிலும் அவரது (இராஜ)தந்திரம் எவராலும் எளிதில் எடைபோட முடியாதது. அவர் இருக்கும் வரை தலைமைப் பொறுப்பை எவரிடமும் அவர் கொடுக்கப் போவதுமில்லை. அவரது குடும்பத்தைத் தவிர வேறு எவரும் திமுகவில் வளர அவர் அனுமதிக்கப் போவதுமில்லை. மக்களால் மட்டும்தான் அவரை வெல்ல முடியும். பெப்ரவரி மாதம் புலிகள் பின்வாங்கிக் கொண்டிருந்த நேரம் (எதிரிக்கு ஜாதகம் சரியில்லாத நேரம் 'படுபட்சி' பார்த்து பில்லி, சூனியம் ஏவுவது மந்தரவாதிகளின் தந்திரம் )இச்சந்தர்ப்பத்தைக் கணக்கில் கொண்டு தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு தமிழ்நாடு வழியாக தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து பல இராணுவத் தாங்கிகளை (TANK)யும், இராணுவத் தளபாடங்களையும், இராணுவத்தையும் ஈழத்தமிழினத்தை அழிப்பதற்காக அனுப்பி வைத்திருந்ததை அறிந்திருப்பீர்கள். புலிகளின் தாக்குதலில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் பல இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இன்னும் இராணுவத்தினர் காயப்பட்டு திக்குமுக்காடிய போது ஈழமக்களுக்கு மருத்துவம் செய்யப் போகின்றோம். எனக்கூறிய இந்திய அரசு ஜம்பத்தியிரண்டு மருத்துவர்களையும், மூன்று கோடி இந்திய ரூபாய்க்கான மருந்துகளையும் ஒரு விமானம் முலம் திருகோணமலை மாவட்டத்திலுள்ள புல்மோட்டை என்ற இடத்திற்கு அனுப்பிவைத்து பூச்சாண்டி காட்டினார்கள். ஆனால் அந்த விமானத்தில் வந்தவர்கள் வைத்தியர்கள் அல்லவென்றும், அவர்கள் அனைவரும் இந்திய புலனாய்வுத்துறையான 'றோ'வின் உளவாளிகள் என்றும், அதில் ஒருசிலர் இராணுவ மருத்துவர்களென்றும், முல்லைத்தீவில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு உரிய சிகிச்சையளிக்க வந்தவர்களென்றும் பல்வேறு செய்திகள் தெரிவிக்கின்றன. அழித்தொழிப்புக்கு ஆயுதங்களையும், ஆளணிகளையும், பணம், பொருள் என எல்லாவற்றையும் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்துக்கொண்டே அபிவிருத்தி செய்கிறோம் என உலகுக்கு பாசாங்கு காட்டி நிற்கிறது இந்தியா. ஏப்ரல் பதின்நான்குக்கு முன் புலிகளையும் தமிழர்களையும் பூண்டோடு அழித்து விடுங்கள் என்ன தேவையோ பெற்றுக் கொள்ளுங்கள் என்று புதுடில்லி அரசு ராஜபக்ஸவுக்கு கட்டளையிட்டுள்ளது. அதன் எதிரொலிதான் தினமும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என நூற்றுக்கு மேற்பட்ட மரணங்கள், படுகொலைகள். வெளிநாட்டு தொண்டு நிறுவனங்களையும் வெளியேற்றிவிட்டு நடத்தப்படும் இப்படுகொலைகள் காலத்தால் ஒருபோதும் மறக்கப்படமாட்டாது. இப்படுகொலைகளுக்கு இலங்கை அரசை உச்சாடனப்படுத்தியது இந்தியாவின் புலனாய்வுத்துறையான 'றோ'வும், சோனியா அரசுமென்பதை தயவு செய்து எவரும் மறந்துவிடவேண்டாம். ஜரோப்பிய யூனியன், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற அந்நிய நாடுகளும் ஐ.நா. போன்ற அமைப்புக்களும் சண்டையை நிறுத்தச்சொல்லியும் கண்டனங்கள், எதிர்ப்புக்கள் தெரிவித்தும் இந்தியா எதையும் சட்டை செய்யவில்லை. ஏப்ரல் முதலாம் திகதிக்கு முந்திய நாட்களில் இந்திய இராணுவத்தினர் இருநூறுக்கு மேற்பட்டவர்களும் சிங்கள இராணுவத்தினர் நான்காயிரத்தக்கு மேற்பட்டோரும் புலிகளின் தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்திய இராணுவத்தினரின் உடல்கள் 'புனே'என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. பாராளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பது இந்தியாவை சிந்திக்க வைத்திருக்கிறது. ஈழப்பிரச்சினையே தேர்தலில் படுதோல்விக்கு வித்திடப்போகின்றதென்பதை கருணாநிதியே சோனியாவின் கவனத்திற்கு கொண்டு போயிருக்கிறார். இருபத்தியொன்பது ஏப்ரல் பாமக, அஇஅதிமுக வுடன் தேர்தல் கூட்டணி அமைத்துக் கொண்டது. கருணாநிதி இப்படி நடக்குமென்று எதிர்பார்த்திருக்கவில்லை. இந்நிகழ்வை அவரால் ஜீரணிக்கவும் முடியவில்லை. விஜயகாந்தாவது தனக்கோ காங்கிரசுக்கோ கை கொடுப்பார் என எதிர்பார்த்து நூல்விட்டுக் கொண்டிருந்தார். விஜயகாந்தும் அது தோல்விக் கூட்டணியென்தை அறிந்து இவர்களை உதாசீனப்படுத்திவிட்டு தனியே தேர்தலைச் சந்திப்பேன் என்று போய்விட்டார். தமிழீழ ஆதரவு அலை, திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு அலையாக உருவெடுத்து விட்டது. நாஞ்சில் சம்பத், இயக்குனர் சீமான் ஆகியோரின் சிறையும் நீதிமன்றத்தில் பொலிஸாரின் அத்துமீறலும் இன்றைய ஆட்சியாளர்களின் மீது நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இவையெல்லாவற்றிற்கும் யார் காரணம்? ஏனிந்த கொந்தளிப்பு! இதை சோனியா, மன்மோகன் சிங் ஆகியோரை விட கருணாநிதியே நன்கறிவார். தமிழ்நாட்டின் முதன் முதல் உயிராயுதமாகிய தூத்துக்குடி முத்துக்குமரன் ஆளுனர் மாளிகை வாசலில் தமிழீழ விடிவுக்காக தன்னை அக்கினிக்கு இரையாக்கியதும் அதன் தொடர்ச்சியாக பதினொரு மண்ணின் மைந்தர்கள் தங்களைத் தீப்பிளம்பாக்கிக் கொண்டார்கள். அவர்களின் விலை மதிக்கமுடியாத உயிர்களின் பெறுமதியை இழப்பை கருணாநிதியின் செழித்த குடும்பமோ, சோனியாவின் செல்வக்குடும்பமோ ஈடுசெய்யுமா? தொடர்ந்து இன்றுவரை ஆயிரமாயிரம் அமைப்புக்களும் மக்களும் மாணவர்களும் வழக்கறிஞர்களும் பெண்கள் அமைப்புக்களும் கட்சிகளும் உண்ணாநோன்பு பேரணி வேலை நிறுத்தம் என இலட்சோப லட்சம் மக்கள் அணி திரண்டு விட்டனர். கடுகளவு கூட அசையாமல் கொஞ்சம் கூட இரக்கமில்லாமல் இருக்கும் இவர்களை தயவு செய்து இனங்கண்டு கொள்ளுங்கள். தேர்தல் திருவிழாவை ஈழப்பிரச்சினை என்ன எதிர் விளைவுகளைத் தருமென்று அவர்கள் அனுமானித்திருக்கவில்லை. புலிகளை ஜனவரி முப்பதுக்குள் அழித்துவிடலாம் மே மாதம் தானே தேர்தல் சாவகாசமாகப் பிரச்சாரம் செய்யலாம் என்ற கணக்கு ஈழத்தலைவனின் உறுதியாலும் தமிழர்களின் வீரத்தாலும் தவிடுபொடியாகிவிட்டது. இன்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர்.தமிழ்நாட்டின் மைந்தர்கள் நெருப்பில் எரியும் போது முதுகு வலி, நோவு என்று குளிர்சாதன ஜந்து நட்சத்திர மருத்துவமனையில் ஒழிந்து ஓய்வெடுத்தவர்கள் காலங்கடந்து இன்று புலம்புகின்றனர் நான் கருணாநிதியை நிறைய விமர்சிக்கத் தேவையில்லை காரணம் அவரைச்சுற்றி இப்போது நெடுமாறன் ஐயா, வைகோ, மருத்துவர் ராமதாஸ், ஜெயலலிதா போதாக்குறைக்கு விஜயகாந்தும் சேர்ந்து தினமும் ஜந்து முனையில் ரவுண்ட் கட்டி கேள்விக்கணை தொடுத்துக் கொண்டிருக்கின்றனர். கருணாநிதியுமோ சளைக்காமல் உறக்கமின்றி கேள்வி பதில் கடிதம் ஆகியவற்றால் திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார். அவரது வயதுக்கு இந்த நெருக்கடி தேவைதானா என்று என் மனம் இரங்கல் தெரிவிக்கிறது. கடைசியாக ஏப்ரல் முதலாம் திகதி (முட்டாள் தினத்தன்று) சோனியா தனக்கொரு கடிதம் அனுப்பியதாகவும் ஈழத்தமிழர்கள் தாம் விரும்பிய ஒரு தனி ஆட்சியை பெறுவதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சிக்கும் என்றும் சன் ரிவி மூலம் தெரிவிக்கப்பட்டது. யாரை நம்ப வைக்க இந்த நாடகங்கள் !! சகல கபட நாடகங்களையும் நாம் கண்டு களித்து விட்டோம். திரும்பிப் பார்ப்பதற்கு சிலவற்றை இங்கு தருகிறேன். • ஓட்டு மொத்த எம்.பிக்கள் இராஜினாமா! • இந்த ஆட்சி இனியும் தேவை தானா! • இந்த உயிர் தேவையா! • அனைத்துக்கட்சிகளின் கூட்டு தீர்மானம்! • மனிதச் சங்கிலி;! • அனைத்துக் கட்சித் தலைவர்கள் டில்லி பயணம், பிரதமர் சோனியா சந்திப்பு! • உண்ணாவிரதமிருப்பேன்! • யுத்தநிறுத்தம் செய்யப்படும்! • சோனியாவும் மன்மோகனும் ஒப்புக்கொண்டனர்! • பிரணாப் முகர்ஜி இலங்கை பயணம்! • இறையாண்மை தடைபோடுகிறது! • அது வேறு நாட்டு உள்விவகாரம் இன்னும் பல அவற்றில் எனது அறிவுக்குப் புலப்படாத அண்ணா காலத்துக் கதைகள், நேரு காலத்து உதாரணங்கள், இராஜராஜ சோழன், குலோத்துங்கன் பற்றிய பரிமாணங்கள் என்று புலம்புகிறாரே தவிர தமிழருக்கு என்று ஆக்கபூர்வமாக உருப்படியாக ஒன்றை செய்தாரா? ஏதாவது ஒன்றை அவர் கூறினாலும் அவரைத்தவிர வேறு எவருக்கும் அது புரிவதில்லை அல்லது புரியக்கூடாதவை! அல்லது அந்த அர்த்தத்தில் நான் பேசியிருக்கவில்லையென்பார். எல்லாம் அவருக்குத்தான் வெளிச்சம். என் இனிய சகோதர சகோதரிகளே தாய்மார்களே எங்கள் துயரை நீங்கள் நன்கு அறிவீர்கள் தினமும் உணவின்றி உறக்கமின்றி வீடு, வாசல், உடைமை இழந்து வருடங்களாகிப் போய்விட்டது. நல்ல குடிநீர் கூட கிடையாத எமக்கு இப்போது உள்ளது இருக்கும் வரை இந்த உயிர் மட்டும்தான்!! அதைக்காக்க நீங்கள் செய்த, செய்கின்ற தியாகங்கள், போராட்டங்கள் நிகரில்லாதவை! அதற்கு நன்றியொன்று கூறி உங்களை எங்களிடமிருந்து பிரித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. நீங்கள் இருக்கும்வரை நாங்களும் இருக்க விரும்புகின்றோம். எனவே எவர் எங்களின் இந்த நிலைமைக்கு காரணமாயிருந்தாரோ அவர்களுக்கு தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டுங்கள். இனியும் தீக்குளித்து உங்கள் உயிரை அழித்துக் கொள்ளாதீர்கள்! சாவது நாங்களாகவே இருக்கட்டும். நீங்கள் தீர்மானிக்கும் சக்தியாகவே இருங்கள். பத்துக்கும் மேற்பட்ட உங்கள் உறவுகள் தங்கள் உயிரை தீயில் மாய்த்துக்கொண்டபோதும் உங்கள் அரசு உங்களுக்கென்ன மரியாதை செய்து நடவடிக்கை எடுத்தது. எனவே எங்களுக்காவும் வாழுங்கள்! அவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டிய இந்த நேரத்தைச் சரியாக பயன்படுத்துங்கள். சுயநல அரசியல் முதலைகளை சாமானியராக்குங்கள். இப்போ சந்தர்ப்பம் உங்கள் கையிலுள்ளது. உங்கள் தெரிவு எங்களுக்கொரு தீர்வை விரைவில் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம்........................... மீண்டும் சந்திப்போம்! ஒரு ஈழத்தமிழன் |
Tuesday, July 6, 2010
சுயநல அரசியல்வாதிகளை வீட்டிற்கு அனுப்பி எமக்கு வாழ்வு கொடுங்கள்: தமிழக உடன் பிறப்புகளுக்கு ஈழத்தமிழனின் கோரிக்கை!
Labels:
கட்டுரைகள்,
தமிழ்நாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment