Tuesday, July 27, 2010

தலைவனே உன் பாதம் பட்ட இடத்தில் நிற்கின்றேன்

தலைவனே உன் பாதம் பட்ட இடத்தில் நிற்கின்றேன்

[ பிரசுரித்த திகதி : 2010-05-15 11:21:40 AM GMT ]

செல்லரித்துப்போய் இருண்டு கிடக்கின்ற
என் வீட்டு முற்றத்தில்.
காட்டுப்பன்றிகளும் கரடிகளும்
இனந்தெரியாத வேறு பல விலங்குகளும்
மேச்சல் காடாக்கி
மலம் சலம் கழித்துக்கொண்டிருக்கின்றன,

என் உணவுக்கான ஆதாரங்கள்
அவைகளின் ஆக்கிரமிப்பால்
காலடிகளில் மிதிபட்டு
அழிந்து போகின்றன,

நேற்றுவரை
நீ எங்களோடு எங்களில் ஒருவனாக
பாதுகாவலனாக ஒன்றிக்கிடந்த தருணத்தில்
என் குழந்தைகள்
முற்றத்தில் விழையாடிக்கொண்டிருந்தபோது
ஒன்றிரண்டு காகங்கள் மட்டுமே
எச்சம் போட முடிந்தது,

அது கூட அவமானமென
அவ்வளவு கோபப்பட்ட நீ

இன்று
பருந்தும் கரிக்குருவி வல்லூறுக்கூட்டங்களும்
எங்கள் குடியிருப்பு மரங்களில்
கூடு கட்டிக்கொண்டிருக்கின்றன.

அவை குடியிருப்பதற்காகவோ
அல்லது
என் குஞ்சுகளை வேட்டையாட போடுகின்ற
கயமையோ,
சத்தமின்றி இதயம் படபடக்கிறது,

என் முட்டைகளும் இன்னும் சில நாட்களில்
பொரித்து குஞ்சாகிவிடும்,
வடலிகளும் பூச்செடிகளும்
எரிந்து கருகிவிட்டபடியால்
குஞ்சுகளுக்கு போக்கிடமில்லாமல்
பொருமிக்கொண்டிருக்கிறேன்,

சிலவேளைகளில்
உள் மனம் படபடத்து துடிக்கிறது
தூரத்தே குளிர் தேசத்திலிருக்கும்
என் உறவுக் குஞ்சுகள்
உதவிக்கு
ஓடிவரக்கூடுமெனவும்
மனம் அலைபாய்கிறது,

குளிர் தேசத்தில் அவைகள்
ஒன்றுக்கொன்று கோள் மூட்டி
கொத்தி
போர் முட்களை உடைத்துக்கொள்வதாக
காற்றிடையே கசிவது கேட்டு
நெஞ்சு கனக்கிறது,

தூரத்தே எங்கோ- நீ
ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருக்கிறாய் என்றும்,
இல்லை இல்லை!!!
ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாய் என்றும்,
பக்கத்து பட்ட மரத்தின் கீழ்
எங்கள் பட்சிகள் சில கீச்சுகீச்சுகின்றன,

என் குமுறலும் ஆதங்கமும்
எந்த நிலையிலும்
உன்னை சென்று சேர்ந்திருக்குமென்றே
உள் மனம் ஏங்கிக்கொண்டிருந்தாலும்,
ஏதோ ஒரு வெறுமை
என்னை துரத்திக்கொண்டிருக்கிறது,

பாதுகாப்பான இடம்
எதுவும் தென்படாததால்
நீ பாதம் பதித்த குழிகளில்த்தான்
நான் முட்டைகளை இட்டு
பாதுகாப்பாக மூடி வைத்திருக்கிறேன்,

முட்டைகள் இன்னும் சில நாட்களில்
பொரித்து குஞ்சாகிவிடும்,
நீயும் மெளனம் காத்து
குளிர் தேசக்குஞ்சுகளும் முட்டி மோதி
என்னையும் என் குஞ்சுகளையும்
கை விட்டுவிட்டால்?......

உன் பாதக்குழிக்குள் பொரித்த
என் குஞ்சுகளுக்கு
உன் மந்திரச்சிரிப்பையும்,
உன் கம்பீரமான
சீருடை அணிந்த மிடுக்கான நடையையும் காட்டி,
நீ வந்து சேரும் வரை
முற்றத்தில் காவலுக்கு நிறுத்துவேன்,

இந்த ஓராண்டை ரணத்துடன் கழிந்து
இன்னும் எத்தனை ஆண்டு வந்தாலும்
உன் பாதம் பதித்த குழிகளை
காப்பரணாக்கி
என் குஞ்சுகளை அங்கிருத்தி
முற்றத்தை காக்க முயலுவேன்


-கனகாம்பிகை கதிர்காமன்

நன்றி தமிழ் உலகம்.

No comments: