Tuesday, July 27, 2010

ஈழத்தமிழர்கள் வாழ்வு செய்தியாகவே முடியவேண்டாம்
--------------------------------------------------------------------------
[ சனிக்கிழமை, 05 யூன் 2010, 10:15.41 AM GMT +05:30 ]
ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரம் எப்படி ஆகிக்கொண்டிருக்கிறது. என்பது பற்றிய செய்தி. எவ்வளவு இருக்கிறதோ, அதை விட பலமடங்கு ஈழத்தைப் பற்றிய அதிர்ச்சி செய்திகள் உலகம் முழுவதும் சென்று, செய்தியாகவே முடிந்துகொண்டிருக்கிறது.

கிளிநொச்சி, கணேசபுரத்தில் அடுத்தடுத்து மனித புதைகுழிகள் தோண்டப்படுகின்றன, அதன் மூலத்தை அறிந்து உண்மையை வெளிக்கொண்டுவர எவராலும் எந்த நாட்டாலும் முடியவில்லை, எந்த விடயத்தை தொட்டு செய்தி வந்ததோ அந்த விடயத்தை அப்படியே விட்டுவிட்டு, செய்தியை மட்டும் செய்தியாகவே உலகம் கை கழுவிக்கொண்டிருக்கிறது. தமிழனின் இன்றைய செய்தி நாளை மறக்கப்படுகிறது, அல்லது மறக்கடிக்கப்படுகிறது. நாளை வேறு ஒரு செய்தி பெரிதாகி முந்தய செய்தி அதற்குள் புதைந்து மறைந்து விடுகிறது, இதுதான் ஈழத்தமிழனின் யதார்த்த வாழ்க்கை நிலை,

இந்த நிலை தொடருமானால் பாழாய்ப்போன தமிழனின் செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும், இதற்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டுமாயின் உலகம் காரணத்தை ஆராய்ந்து மனிதாபிமானமான நீதியான தீர்வின் மூலம் ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்கள் சாதகமாக வந்தாலும் எவரும் ஒற்றுமையுடன் அதை தீர்த்து வைப்பதற்கான முனைப்பை இதுவரை காட்டி நிற்கவில்லை, ஈழப்பிரச்சினையை எவராவது தீர்த்து வைக்காத பட்சத்தில் அது விபரீதமான ஒரு முடிவை நோக்கிச்சென்று தானாக ஒரு நாள் முடிவுக்கு வரும்
என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இனப்பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவரவேண்டுமென ஓரளவேனும் ஈடுபாடு காட்டும் மேற்குலகம் அன்றைக்கு தமிழர் தரப்பிற்கு மெளனமாக வேனும் வழிமொழிந்து யதார்த்தத்தை புரிந்துகொள்ளும், இலங்கையில் வாழும் இரு இனங்களும் என்றைக்காவது தாமாக பிரச்சினையை தீர்வுக்கு கொண்டுவந்து, சுமுகமாக ஒரு சமத்துவத்தை ஏற்படுத்தி ஒன்றாக வாழும் என்பது எவரும் கனவிலும் நினைத்துப்பார்க்க முடியாத கற்பனை, பிரிவினை ஒன்றைத்தவிர இலங்கைத்தீவில் சுமுகத்தை ஏற்படுத்த கடவுளாலும் முடியப்போவதில்லை. விதி எப்போதோ கிறுக்கிவைத்திருக்கும் பதிவு அது,

இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தவேண்டிய தார்மீகப் பொறுப்பு, (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா,போன்ற வல்லரசு நாடுகளையும் விட) பிரித்தானிய இராச்சியத்திற்கே உண்டு, 1948, பெப், 02ம் நாள் பிரித்தானியா சிங்களவனிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தபோது பிரித்தானியரால் வரையப்பட்ட யாப்பில் இலங்கையின் தேசிய இனமான தமிழர்கள் சம அந்தஸ்துடன் தமது பாரம்பரிய பிரதேசங்களில் வாழ உரித்துடையவர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழமுடியாத சந்தர்ப்பத்தில் பிரிந்துபோவதற்கும் தகுதியுடையவர்கள் என குறிக்கப்பட்டிருக்கிறது. எனவே தமிழர்களின் மீது திணிக்கப்படும் படுமோசமான படுகொலை அரசியலையும், தமிழர்களின் பிரிவினை கோரும் காரணங்களையும் ஆராய்ந்து, நியாயமான காரணங்களுடன் அவர்களின் விருப்பையும் அறிந்து பிரச்சினையை தீர்க்கவேண்டிய கடமை ஆங்கிலேயர்களுக்கே உண்டு.

இந்தியாவுக்கு தார்மீகப் பொறுப்பு என்று எதுவும் கிடையாது, ஆனால் தமிழகத்து தமிழர்களின் தொன்றுதொட்ட தொப்புள்கொடி உறவுத் தொடர்புகள் இருப்பதனால் தமிழகத்து மக்களின் உணர்வுகளை மதித்து நடக்கவேண்டிய பொறுப்பும் இந்திய ஹிந்தி அரசாங்கத்துக்கு நிறையவே உண்டு, துரதிஷ்டவசமாக தமிழகத்தில் தமிழர்களுக்கான அரசு ஒன்று இன்னும் உருவாக்கப்படாததால், ஈழத்து அழிவை பொறுக்க முடியாது தமிழர்கள் நெருப்பில் கருகியபோதும், ஹிந்தி அரசாங்கம் கணக்கிலெடுக்காமல் ஈழத்தமிழர்களை எரித்துச் சாம்பலாக்க இலங்கைக்கு நேரடியாக உதவியது.

2009 வைகாசி, ஈழம் எரிந்து போனதை பார்த்த தமிழகத் தமிழர்கள், பொங்கியெழுந்து தங்களுக்கான ஒரு தமிழ் அரசியல்தலைமை தேவை என்பதை உணர்ந்து, தோற்றுவித்திருக்கும் தமிழ் கட்சி "நாம் தமிழர்" என்ற அரசியல்கட்சி, குறுகிய காலத்தில் அக்கட்சி பல அரிய சாதனைகளை புரிந்திருக்கிறது, இம்மாதம் 3,4,5,திகதிகளில் கொழும்பில் நடைபெறும் ஐஃபா என்ற திரைப்பட விருது வழங்கும் மிக பிரமாண்டமான விழாவுக்கு முக்கியமாக கலந்துகொள்ள இருந்த உலகப் பிரசித்திபெற்ற திரைப்பட நட்சகத்திரங்களை முழு இந்திய அளவில் இந்தக்கட்சி தடுத்து நிறுத்தியிருக்கிறது, இக்கட்சி ஏற்கெனவே தோன்றியிருந்தால் தமிழீழம் எரியாமல் தடுக்கப்பட்டிருக்கும்,என்பதை காலங்கடந்து தமிழ்நாட்டுத் தமிழன் யோசித்திருக்கிறான், கருணாநிதி என்கிற கோழை நடிகனும், ஜெயலலிதா என்கிற மூழி நடிகையும், தமிழ்நாட்டை விட்டு கரை கடத்தப்படவேண்டிய நச்சுப்புயல்கள் என்பதையும் தமிழன் இப்போதான் நன்கு உணர்ந்திருக்கிறான்,

வன்னியில் தமிழரின் இராணுவச் சமநிலை உடைந்து, சிங்கள இராணுவ மேலாதிக்கம் ஏற்பட்ட நாள் தொடக்கம், எந்த எதிர்ப்பும் இல்லாத அந்த மயானபூமியில், மீதமுள்ள அப்பாவி மக்களையும் நிம்மதியாக வாழவிடாமல், இலங்கை அரசு இராணுவ மயப்படுத்தி அச்சுறுத்தும் ஒவ்வொரு நடவடிக்கையும், அங்கே ஏதோ பூதாகரமான எதிர்ப்பை இராணுவம் இன்னும் நோக்கியிருப்பது போன்ற மாயையை, சிங்கள அரசு உலகத்திற்கு வெளிப்படுத்தி நிற்கிறது, இச்சூழ்ச்சியின் பின்னணியில் சிங்களக் குடியேற்றங்கள் ஈடேற்றப்படுகின்றன, சிங்களக்குடியேற்றங்கள் பூர்த்தியடைந்தபின் இராணுவம் வாபஸ் பெறக்கூடும்?,,, இந்த நிலை நீடிக்குமானால் பொறுமையிழக்கும் தமிழினம் மீண்டும் தற்காப்புக்காக எதையாவது கையில் தூக்கி அடிதடியில் இறங்க நிர்ப்பந்திக்கப்படும், இது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறலாம்,

நாளாந்தம் தமிழர் பகுதிகளில் கண்டமாத்திரத்தில் வெளிவரும் மரணப்படுகுழிகள், மீதமுள்ள ஒவ்வொரு தமிழன் மனதிலும் முன்னெச்சரிக்கை தற்காப்பை உருவாக்கி நிற்கும் என்பதை காலங்கடந்துதான் எவரும் உணரமுடியும், (தேடித்தேடி மரணபடுகுழிகளின் தடயங்கள் அழிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன,)

சர்வதேச மன்னிப்புச்சபை. Human right wach, மற்றும் லூயிஸ் ஆபர் அம்மையார் தலைமையிலான,போர்க்குற்றங்கள் தொடர்பாக ஆராயும் சர்வதேச நெருக்கடிகள் குழு, International crisis group, மற்றும் மிக மெதுவாக கண்துடைப்புக்கேனும் களத்தில் இறங்க எத்தனிக்கும் UN, அமைப்பு ஆகியவைகளை போர் குற்றம்பற்றி விசாரிக்க அனுமதிக்க முடியாது,என சர்வ வல்லமை படைத்த வல்லரசுபோல இலங்கை அரசு மல்லுக்கட்டி நிற்பது பலரையும் சிந்திக்க வைக்கிறது, இதன் பின்னணி நிச்சியம் பலமாகத்தான் இருக்க முடியும், இங்கு இலங்கையின் முரண்டு பிடித்தலை
பின்னணியிலிருந்து வழிமொழியும் சக்திகள் சர்வதேச பாமர மக்களுக்கு சொல்லும் செய்தி, எவரும் எதுவும் செய்யலாம் அது அவரவர் வல்லமையைப் பொறுத்தது என்பதுதான் பதிலாக இருக்கும், இது சர்வதேசத்தில் சாதாரண மக்களிடையே ஜனநாயக விரோத நிலையையும், தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படும் அச்ச உர்வையும், நியாயமாக ஆட்சி செய்பவர்களிடத்தில்கூட சந்தேகத்தை உண்டாக்கிவிடும்,

ஜி,எல் பீரிஸ் அவர்கள் ஒரு பேராசிரியராக இருந்தால், சட்டவல்லுனராக இருந்தால், மேற்கூறியவற்றின் தாக்கம் எப்படி இருக்குமென்பதை அவர் உணராமல் இருக்கமுடியாது, இலங்கை அரசு காட்டும் இறுக்கம், ஒரு தற்காலிகமான நிவாரணமாக அரசிற்கு இருக்குமே தவிர முற்றுமுழுதாக தப்பித்து விட வாய்ப்பில்லை, சற்றுமுன் வாய்திறந்திருக்கும் கோபி அனான் அவர்களும் இதை உறுதிப்படுத்தியிருக்கிறார்,

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்தி போர்க்குற்றவாளியாக தண்டனைக்குட்படுத்தலாம், என்பது இப்போதைக்கு உடனடியாக செய்யக்கூடிய விடயமல்ல, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெற்ற நாடுகளை மட்டுமே அந்த நீதிமன்றம் விசாரணைக்குட்படுத்த முடியும், அங்கத்துவம் அல்லாத நாடுகளின் குற்றச்செயல்களை ஐநா,அமைப்பு வழிமொழிந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் மட்டுமே விசாரணை செய்யமுடியும்,(இது பலரும் அறிந்த விடயமாக இருந்தாலும் ஒரு சிலரின் சந்தேகத்தை தீர்ப்பதற்காகவே தரப்படுகிறது)

ஐநா,பாதுகாப்புச் சபையில், (veto power of right to reject or negative a resolution or act vested legally in one) நிராகரிக்கும் அதிகாரம் இருக்கும் நாடுகள் மறுப்புத்தெரிவித்தால், இந்த நீதிமன்றத்தால் அந்த நாடுகளை விசாரணைக்குட்படுத்தமுடியாது, இலங்கைக்கு சாதகமாக சீனா இருப்பதாலும் அனுசரணையாக ரஷ்யா இருப்பதாலும் (இவை இரண்டும் நிராகரிக்கும் அதிகாரம் கொண்டவை) அமெரிக்கா, பிரன்சு, இங்கிலாந்து, நினைத்தாலும் குற்றவியல் நீதிமன்ற குற்றவாளிக்கூண்டில் இலங்கையை ஏற்ற முடியுமோ என்பது யோசிக்க வேண்டிய ஒன்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2002 அளவில்த்தான் நெதர்லாந்தில் நிறுவப்பட்டது, இதுவரைக்கும் உகண்டா,கொங்கோ, சூடான், போன்ற ஆபிரிக்க வறியநாடுகளைத்தான் விசாரணை செய்ததாகவும் அறியமுடிகிறது,

செல்வாக்கான நாடுகளை இந்த நீதிமன்றத்தின் குற்றவாளிக்கூண்டில் எளிதாக ஏற்றிவிட முடியாது, என்ன இருந்தாலும் சர்வதேச மன்னிபுச்சபை, மற்றும் சர்வதேச நெருக்கடிகளை அறியும்குழு, ஐநா, மற்றும் சர்வதேச நாடுகள் ஒன்றிரண்டு இலங்கையின் அத்துமீறலை, போர்க்குற்றத்தை, ஒப்புக்கொண்டு ஈழத்தமிழரின் கோரிக்கையை அங்கீகரித்தாலே இலங்கை அரசால் எதுவும்
செய்யமுடியாது தமிழீழம் தானாகவே உருவாகிவிடும், இதற்கு முட்டுக்கட்டையாக நிற்பது இந்தியா என்பதுதான் பல நாடுகளின் கருத்து,

எந்தச்சக்தி எதிர்த்தாலும் "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பதுபோல் தமிழர்களின் ஒற்றுமையே இங்கு முன்னணியில் நிலைநிறுத்தப்பட வேண்டிய ஒன்று, தேசியத்தலைவரின் வழிவந்த தமிழரை இலகுவில் எவராலும் உடைத்துவிட முடியாதென்றே கருதலாம், இருந்தும் புலத்தில் வெளிவரும் சில செய்திகள் மனதைக்குடைகின்றன, உடைவு அல்லது சிதைவு ஈழத்தில் வாழும் மக்களிடம் மனக்குமுறலையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தி அரசியல் ரீதியாகவும் பெருத்த பின்னடைவையும் அம்மக்களுக்கு தோற்றுவித்து, சிங்களவனின் ஆதிக்கம் அதிகரிக்கவும் வழிதிறந்துவிடும், நாளைடைவில் புலத்தின் அரசியல் நகர்வுகள் ஈழத்தால் ஒதுக்கப்பட்டுப் போவதற்கும் நியாயங்கள் நிறையவே உண்டு,

தமிழர்களிடையே பலதரப்பட்ட முற்போக்கான நோக்கங்கள் இருந்தாலும் சில இடங்களில் முரண்பட்டு நிற்பது, இந்த இடைப்பட்ட காலத்தில் தேசியத்தலைவருக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்காது,

ஈழத்தமிழருக்கும் தேசியத்தலைவருக்கும் உள்ள உறவும், பரமஹம்சர் விவேகானந்தர் உறவுக்கும் வேறுபாடு கிடையாது, அன்றையகாலத்திலும் புரியாமல் சில நாஸ்திகர்கள் பரமஹம்சரை தூற்றியதுபோல் இன்றும் இலங்கையிலும் புலத்திலும் ஒருசிலர் இருக்கக்காணலாம், தேசியத்தலைவர் தனது தேசியக்கொள்கையை ஓரிரண்டு வருட அனுபவத்தில் வகுத்துக்கொண்டவரல்ல, அண்ணளவாக அரை நூற்றாண்டு பட்ட அனுபவ அறிவு, சறுக்கல்களும் பின்னடைவுகளும் துரோகங்களும் இயல்பானவை, அவைகூட அவருக்கு அனுபவபாடம், அடுத்தகட்டத்தில் அவர் அவற்றை எப்படிக்கையாளுகிறார் என்பதை நடைமுறையின்போதுதான் காணமுடியும்,

இப்போ நாம் அனைவரும் குளித்துக்கொண்டிருப்பது அவரால் நிர்மாணிக்கப்பட்ட குளம், அவர் ஒருபோதும் குளத்திற்கு தனி உரிமை கொண்டாடியதில்லை, எவரும் நீராடலாம் நீந்தலாம் நீர்ப்பாசனத்தை வயலுக்கு பாய்ச்சலாம் தடுக்க எவரும் வரப்போவதில்லை, (பிறகு எதற்கு முட்டிமோதுவானே) நீர்ப்பாசனம் திசைதிருப்பப்படும்போது குளத்தில் எருமைகளும் பன்றிகளும் துவம்சம் செய்யமுற்படும்போது குளத்தை தனி நபர் எவரேனும் உரிமை கொண்டாட முயலும்போது முரண்பாடு வெடிக்கத்தான் செய்யும், தலைவரின் வழி வந்த தமிழன் எவனும் வேடிக்கை பார்க்கவும் மாட்டான், வேண்டுமானால் இப்போ இருக்கும் குளத்தைவிட பெரிதாக ஒன்றை நிர்மாணித்து எவர் எப்படிவேண்டுமானாலும் நீச்சலடிக்கலாம் எவரும் குறுக்கே நிற்கப்போவதில்லை, இப்போ நாங்கள் குளித்துக்கொண்டிருப்பது புனிதமான மிகப்பெரிய பொதுக்குளம்,

போராட்டத்தை நாசம்பண்ண சிங்களவன் தேவையில்லை தமிழனே போதும், இரண்டு நாள் முன்புவரை மானாட மயிலாட, சினிமா விருது, குடும்ப நலன், பதவிப் பேரம், டில்லி என முடித்து, அடுத்தகட்டம் செம்மொழி மாநாடு என்ற சுற்றில் வந்து நிற்கும் கருணாநிதி, திடீரென ஒரு அறிக்கை வெளியிட்டு அடுத்த நாடகத்திற்கு தயாராகி விட்டார், மத்திய (தி மு க)அரசு ஈழமக்களின்பால் காத்திரமான நடவடிக்கை எடுக்கத்தவறிவிட்டது, மீள்குடியேறிய மக்களை நிவாரணங்கள்? சென்றடையச் செய்யவேண்டும், 75 000 அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை அழிக்க(அளிக்க)வேண்டும், இப்போது மத்திய அரசு இலங்கை மக்கள் தொடர்பாக செய்யும் நன்மைகள் திருப்தியழித்தாலும்,,,,, திருப்தியளிக்கவில்லை, என தனக்கே புரியும் தமிழில் கடிதம் ஒன்றை வெளியிட்டு, தான் நடாத்த இருக்கும் வேடிக்கை வினோத களியாட்ட விழாவுக்கு தமிழர்களிடமிருந்து தடையில்லாச் சான்றிதழ் பெறுவதற்காக, வெட்கம் துறந்து வாழும் வள்ளுவன் நானே எனக்கூறி வஞ்சகவலை வீசி நிற்கிறார்,

இந்தியா ஒருபோதும் சிங்களவனுக்கு பாதகமாக நடந்துகொள்ளப்போவதில்லை, ஜூன் 08ம் திகதி மன்மோகன் - மஹிந்த ஒன்றுகூடல், நடக்க இருக்கிறது உலகத்தை ஏமாற்ற புதிய மேடையில் நடிக்கப்போகும் முதலாவது நாடகம், இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் பங்குபற்றக்கூடும், இந்த நாடகம் முடிவில் ஒரு கூட்டறிக்கை வெளிவரும், புதிய தீர்வுப்பொதி உருவாகும், இந்த நாடகம் இரண்டு மூன்று வருடத்தை எப்படியும் போர்த்து மூடி ஏமாற்றமே தொடரும், இந்த நேரத்தில் ராஜபக்ஷ கூறிய ஒரு விடயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும், விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இன்னும் அற்றுப்போய்விடவில்லை! அவர்களின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார், காலத்தை இழுத்தடிப்பதற்கும் உலகத்தை ஏமாற்றுவதற்கும் சிங்களக் குடியேற்றங்களை நிறுவி முடிப்பதற்கும் அவகாசம் தேடி அவர் எறிந்த முதற்கல், இதேநேரம் ஹெகலிய ரம்புக்வெல கூறுகிறார் இலங்கையில் புலிகளின் அச்சுறுத்தல் எதுவும் இல்லையென்று,

நோக்கத்தின் இலக்கும் ஒற்றுமையும் தவிர்ந்த பலம் வேறு எதுவும் கிடையாது, நேற்று பூத்த "நாம் தழிழர்" இயக்கம் இன்று புயலாக எதிரிகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது, பல கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட, மிகப்பெரிய பணபலமுள்ள, மத்திய அரசின் அரசியல் பின்னணியை கொண்ட இந்திய சுப்பர் ஸ்ரார் அமிதாப்பச்சனை சிறுத்தை "சீமானின்" மிகச்சிறிய நாம் தழிழர் இயக்கம் கட்டிப்போட்டிருக்கிறது, விசித்திரம் என்னவென்றால் Iifa,(ஐபா) அமைப்புக் கூட சிங்களவனுடையதல்ல இந்தியனுடைய பலமிக்க அமைப்பு, நாங்களே எங்களை
இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறோம்,

எந்தக்கஸ்டமுமில்லாமல் பெரிய ஒரு களமும் நல்ல வாழ்க்கைச்சூழலும் எங்களுக்கு கிடைத்துவிட்டது, மற்றநாய்கள் எங்கு கிடந்தால் எமக்கென்ன எரியிறவீட்டில் அள்ளும்வரை எங்களுக்கு இலாபந்தான், தேசியத்தலைவர் ஒரு கோவில் திருவிழாவுக்கு போகாமல் ஒரு சலூனில் போய் சுதந்திரமாக உட்கார்ந்து முடிவெட்டாமல், ஒருதியேட்டரில் போயிருந்து படம் பார்க்காமல், சயிக்கிளில் ஒழுங்கை சுற்றாமல்,கள்ளடிக்காமல், காட்டிலிருந்துகொண்டு பத்து இலட்சம் பேரை ஐரோப்பாவுக்கும் கனடாவுக்கும் அமெரிக்கா அவுஸ்திரேலியாவுக்கும் போய் வாழக்காரணமானது தப்புத்தான் தயவுசெய்து உணர்ந்து கொள்ளுவோம் ஒருவருடத்திற்குள்ளே இப்படியென்றால் எப்படி வெட்கப்படவேண்டாமா? காலங்கனியும் அதுவரை,

கனகதரன்,

நன்றி தமிழ் வின்

No comments: