Saturday, December 10, 2011

மனித உரிமைக்கு அர்த்தம் கொடுத்த மனித உரிமைகள் தினம்


   
  உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை.

ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைகளின் பொது நலனை விருத்தி செய்தல், சமூக நீதியை நிலைநிறுத்தல் என்பவற்றுக்கு மனித உரிமை என்பது அத்தியாவசியம் மிக்க ஒன்றாக இருக்கின்றது. ஆனால், ஜனநாயக நாடு என்று பெயரளவில் சொல்லிக் கொள்ளும் நாடுகளில் பெரும்பாலும் மனித உரிமைகள் மீறப்பட்டே வருகின்றன என்பதை ஊடகங்கள் வழியாக நாம் அறிகின்றோம்.

அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் 30 உறுப்புரைகளைக் கொண்டது. அதாவது சகல இன மக்களும் தத்தமது சாதனை இலக்கின் பொது நியமமாக கொள்ளத்தக்கதாக இந்த அனைத்துலக மனித உரிமைப் பிரகடனம் அமைந்துள்ளது.

சமூகத்தின் ஒவ்வொரு மனிதனும் இப்பிரகடனத்தைக் கற்றறிந்து கொள்வதோடு அந்த உரிமைகளை மனதிலிருத்தி சுதந்திரங்களுக்கான மதிப்பினை மேம்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாக உள்ளது.

உறுப்புரை - 01 இல் 'மனிதப் பிறவியினர் சுதந்திரமாகவே பிறக்கின்றனர். அவர்கள் மதிப்பிலும் உரிமைகளிலும் சமமானவர்கள். அவர்கள் நியாயத்தையும் மனச்சாட்சியையும் இயற்பண்பாகப் பெற்றவர்கள். அவர்கள் ஒருவரோடொருவர் சகோதர வாஞ்சையுடன் நடந்து கொள்ள வேண்டும்" என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் உறுப்புரையே மனித உரிமைக்கு பூரண அர்த்தத்தைக் கொடுக்கின்றதல்லவா?

ஒரு நாட்டின் அரசினால் இந்த உரிமை பாதுகாக்கப்படுமாயின் ஏனைய உரிமைகள் தாமாகவே அந்நாட்டு மக்களுக்குக் கிடைத்து விடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஒருவரோடொருவர் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நியதி ஒரு நாட்டில் இருக்குமானால் அந்நாட்டில் சகலரது உரிமைகளும் பாதுகாக்கப்படுவதோடு அனைவரும் உரிமைகளை அனுபவிக்கும் நிலையும் நிச்சயமாகத் தோன்றக் கூடும்.

இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில், ஆரம்ப கால அந்நியர் ஆட்சி முதல் இன்றைய ஜனநாயக ஆட்சி வரை மனித உரிமைகளுக்கு பூரண முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்ததா என்பது கேள்விக்குறியே.

இலங்கையில் பெரும்பான்மை ஆட்சியே அந்நாள் முதற்கொண்டு நடைபெற்று வருவதால், அந்நியர் ஆட்சியிலிருந்து இன்று வரை சிறுபான்மையினர் உரிமைகளை அனுப்பவிப்பதென்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்பது முழு உலகமுமே அறிந்த உண்மை.

அதாவது, 'சிறுபான்மையினருக்கு உரிமைகள்" என்பது ஆவண ரீதியில் காணப்பட்ட போதும் அவை நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருப்பதையும் காணக் கூடியதாகவே உள்ளது. இவர்களுக்கு மனித உரிமை என்பது ஏதோ ஒரு கட்டுபாட்டுக்குட்பட்டதாகவே அன்றும் இன்றும் காணப்படுகின்றது. 1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பின் போது பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் அடக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து தமிழ்த் தலைவர்களால் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து அக்காலப்பகுதியில் சிறுபான்மையினருக்கென பல விசேட ஷரத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதும் அவை ஏதோ ஓர் அதிகாரத்துக்கு உட்பட்டதாக காணப்பட்டதால் அதன் பூரண பயன்பாட்டை சிறுபான்மையினர் அனுபவிக்கவில்லை. இது போன்றே இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தவரையில் சிறுபான்மையினர் எனும் போதும் தமிழ், முஸ்லிம், பறங்கியர் அடங்குகின்றனர். இவர்களின் உரிமைகள் பெயரளவில் மாத்திரமே உள்ளன.

30 வருட கால போர்ச்சூழல் மறைந்து, நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் கூட, கொழும்பில் கடந்த ஒரு மாத காலப்பகுதியில் 10 பேர் காணாமல் போயுள்ளனர் என்றால் நம் நாட்டு மனித உரிமையை என்னென்பது?

இதே நிலையில் தான் நம் நாட்டில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அனைத்துலக மனித உரிமைப் பிரகடனத்தின் உறுப்புரை 13இல் கூறப்பட்டுள்ளது போன்று ஒவ்வொரு நாட்டினதும் எல்லைக்குள் சுதந்திரமாக பிரயாணஞ் செய்வதற்கும் வதிவதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.

ஆனால், நம் நாட்டில் நடப்பதென்ன?

அண்மைக் காலமாக நாட்டில் மீண்டும் உருவெடுத்துள்ள வெள்ளை வேன் கடத்தல், மர்ம மனிதத் தாக்குதல், மனித உயிர்கள் அநியாயமாகக் காவு கொள்ளப்படுதல், சித்திரவதைப்படுத்தல் போன்ற சம்பவங்கள் மேற்கூறப்பட்ட மனித உரிமைப் பிரகடனத்தையே கேலிக்குரியதாக்குகின்றனவே?

உரிமைகள் ஏட்டளவில் தான். நடைமுறையில் எதையும் காணோம். 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது" என்பதையே இத்தகைய சம்பவங்கள் தெளிவுபடுத்துவதாக உள்ளன.

இடத்துக்கிடம் சோதனைச் சாவடிகள், பொலிஸார் மற்றும் படையினரின் வீதி ரோந்து, சிவிலுடை தரித்த பாதுகாப்பு பிரிவினரின் கண்காணிப்பு என அதிஉயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதும் கொழும்பு மாநகரில் கூட இத்தகைய வெள்ளை வேன் ஆயுததாரிகளால் பல கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதைத் தடுக்க முடியாதிருக்கிறது.

இதன் மூலம் ஒரு பிரஜை நாட்டின் எல்லைக்குள் சுதந்திரமாக நடமாட முடியாதபடி அவனது உரிமை மீறப்படுகின்றது என்பதுதானே அர்த்தமாகின்றது?

மனிதப் படுகொலைகள், பாலியல் பலாத்காரம், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வினால் கொண்டுவரப்பட்டது. மனித உரிமைகள் தினத்தைக் கொண்டாடுவதை விட மனித உரிமைகள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் நமது உரிமைகளைப் பற்றி நாம் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். நிறைவாக, மனித உரிமைகள் மீறப்படும் போது இதைப்பற்றிச் சிந்திக்க வேண்டியவர்கள் இனிமேலாவது மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மனித உரிமைக்காக செயற்படுவார்களா? ___
நன்றி வீரகேசரி.

No comments: