Sunday, December 11, 2011

மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக அரசு மீது பகிரங்க விசாரணை தேவை; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்.நகரில் வலியுறுத்து

news
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக இந்த அரசை ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று யாழ். நகரில் இதனை வலியுறுத்தினார் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா.

"மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளமைக்காக இலங்கை அரசை ஐ.நா. விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணைகள் பகிரங்கமாக இடம்பெற வேண்டும். அதன் மூலம் எமது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டும்" என்றார் மாவை சேனாதிராசா.

காணாமற்போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ். நகரில் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

போர் முடிந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும்கூட இலங்கை அரசால் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை முன்வைக்க முடியவில்லை என்று அங்கு சுட்டிக்காட்டினார் சோசலி ஸக் கட்சியின் பிரதிநிதி மஹிந்த தேவா.

"சர்வதேச மனித உரிமைகள் தினத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக மக்களது ஜனநாயகப் போராட்டம் அடக்கப்படுகிறது. போராட்டத்துக்கு வந்த மக்கள் தாக்கப்படுகிறார்கள். இவ்வாறான அடக்குமுறை மூலம் எவ்வாறு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தப்போகிறீர்கள்? காணாமற் போனவர்களது கண்ணீருக்குப் பதில் சொல்ல வேண்டும்" என்று தனது உரையில் குறிப்பிட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்.

இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது என்று தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வந்தபோதும் அவற்றை அது தொடர்ந்து நிராகரித்தே வந்துள்ளது. மிக அண்மையில் இராணுவத்தைச் சேர்ந்த எவராவது அத்தகைய மீறல்களில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். ஆனால், அதற்காக, மனித உரிமை மீறல்களுக்கு அரசு பொறுப்பாளி அல்ல என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

நன்றி உதயன்.

No comments: