ஐநாவின் தயாரிப்பில் வெளிவந்த நிபுணர்குழுவின் அறிக்கைக்கு போட்டியாக, ஸ்ரீலங்கா சிங்களத் தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்டு வெளிவந்த "ராஜபக்க்ஷ நல்லிணக்க ஆணைக்குழு"வின் தும்மல் அறிக்கை, டிச 16 அன்று ஸ்ரீலங்காவின் பாராளுமன்றத்தில் அதன் இயக்குனர்களால் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டிருக்கிறது.
சில நாட்களின் பின் அறிக்கையின் பிரதி உத்தியோகபூர்வமாக நண்பன் இந்தியாவிலும் சர்வதேச அரங்கின் சில இடங்களிலும், பெருமையுடன் வெளியிடப்படும் என நம்பப்படுகிறது.

போர்க்காலங்களில் களத்தில் அரசபடையினர் அத்துமீறிய ஒரு  நிகழ்வையாவது  அறிக்கை வெளிக்காட்ட விரும்பவில்லை. முற்றுமுழுதாக ஜனாதிபதி நலன் காக்கும் கவசமாக, நியாயப்படுத்தல் வாக்குமூலமாக அறிக்கை வரையப்பட்டிருக்கிறது. போரின்போது தவறிழைத்தவர்களை இனங்காணமுயலும் ஆராய்வாக எந்த அம்ஷமும் அறிக்கையில் காணப்படவில்லை.

போரின்போது மரபுமீறி இராணுவம் போர்க்குற்றம் புரிந்திருக்கிறது என்றும், மனித உரிமையை மீறும்வண்ணம் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பாவிக்கப்பட்டிருக்கின்றன என்பதையும், ஐநாவின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஒப்புக்கொள்ளுகிறது. போரின்போது பாதிப்புக்குள்ளான தனிமனிதர்கள். அமெரிக்காவிலும், அவுஸ்த்திரேலியாவிலும், இங்கிலாந்திலும் வேறு பல தேசங்களிலும் ராஜபக்க்ஷமீதும் இராணுவத்தினர்மீதும் வழக்குக்கள் தாக்கல் செய்திருக்கின்றனர். அந்நாட்டு நீதிமன்றங்களும் அவைகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

ஸ்ரீலங்காவின் இனப்படுகொலையாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாக நிறுத்தக்கூடிய முகாந்திரம் இல்லாததனால், குற்றஞ்சாட்டப்பட்ட தரப்பினர்மீது ஐநாவின் கண்காணிப்பில் உள்ளூரிலேயே நீதிவிசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும்படி ஐநா. ஸ்ரீலங்காவுக்கு அறிவுறுத்தியிருந்தது. அந்தப்பின்னணியில் அவசரமாக் பிறந்தது ஜனாதிபதியின் நல்லிணக்க ஆணைக்குழு. 

ஜனாதிபதி ராஜபக்க்ஷவின் தனிப்பட்ட நல்வாழ்வுக்காக, சர்வதேசத்தை ஏமாற்ற அமைக்கப்பட்ட அக்குழு, தமிழினம் எதிர்பார்த்தவண்ணம் எந்தச்சந்தர்ப்பத்திலும் போர்மரபுகளை இராணுவத்தினர் மீறியிருக்கவில்லை. இராணுவம் குற்றமற்றது என்று திட்டவட்டமாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

ஸ்ரீலங்கா நாட்டின் முப்படைகளின் தளபதியான ராஜபக்க்ஷவை காப்பாற்ற தயாரிக்கப்பட்டிருக்கும் அவ்வறிக்கையின் காட்சிகள் அனைத்தும், ராஜபக்க்ஷவை காப்பாற்றுவதற்காக முற்று முழுதாக உண்மைக்கு புறம்பாக புனையப்பட்டு, அரசாங்கத்தின் மனநிலையை அப்பட்டமாக நியாயப்படுத்தும் ஒருதலைப்பட்ட பரிந்துரையாக எழுதப்பட்டிருக்கிறது. தவிர, நிலவரத்தை பகுப்பாய்வு செய்து பாகுபாடற்ற வெளிப்படையான உண்மைத்தன்மை கொண்ட விசாரணை அறிக்கையாக அது இல்லை.

பாதிக்கப்பட்ட தமிழர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு முறையான பதில் எதுவும் எந்த பந்தியிலும் காணப்படவில்லை. அனைத்து எதிர் முறைப்பாடுகளுக்கும் ஒருதலைப்பட்ஷ நியாயப்படுத்தல்கள் மூலம் அரசாங்கத்தின் அவலத்தை தூக்கி நிறுத்த அறிக்கை பிரயத்தனப்பட்டிருக்கிறது.

இலங்கை இராணுவத்தினால் புரியப்பட்ட மோசமான போர்க்குற்றங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கு முன்னேற்றமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 பக்க அறிக்கையினால் நியாயபூர்வமாக எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை. என நியுயோர்க்கை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

போரின்போது போராளிகளின்மீது மரபுமீறி நச்சு ஆயுதங்களை பாவித்ததை ஒருபுறம் தள்ளிவைத்தாலும், பொதுமக்களின்மீது இராணுவம் புரிந்த அத்துமீறல்கள். சரணடைந்த போராளிகள்மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான சித்திரவதை படுகொலைகள். வீடியோ காட்சிகளும்  இராணுவத்தினரின் கைபேசிகளில் பிடிக்கப்பட்ட நிழல்ப்படங்களும்  தொகுக்கப்பட்டு சனல்4 தொலைக்காட்சி ஆவணப்படமாக உலகம் முழுவதும் தரிசிக்கும் வண்ணம் பகிரங்கமாக போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியது.

அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுக்குட்படுத்தி அவை உண்மையானவை தான் என்று ஐநாவும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் ராஜபக்க்ஷவின் ஆணைக்குழு அவை நம்பகத்தன்மையில்லாதவை என வழமைபோல் நிராகரித்திருக்கிறது.

நிராகரிப்பதற்கு எதிர்த்தரப்புக்கு பூரண உரிமையிருந்தாலும், அவை வாய்ச்சொல்லாகவோ எழுத்துமூலமாகவோ விதண்டா வாதமாக எதிர்ப்பதை விடுத்து அறிவியல் ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டிய பொறுப்பும் அந்தத்தரப்பினருக்கு இருக்கிறது.

சர்வதேசமயப்பட்டிருக்கும் ஒரு இனப்படுகொலை விடயத்தை இலேசுவில் நீர்த்துப்போகச்செய்யலாம் என குற்றவாளிகள் மட்டமாக நினைத்து ஏமாற்றுவேலைகளில் ஈடுபடுவது ஒருகட்டத்தில் சர்வதேசத்தின் எரிச்சலுக்கு இட்டுச்செல்லும். ராஜபக்க்ஷ தரப்பினரின் இந்த உத்தி ஒரு இடைவெளியையும் காலதாமதத்தையும் பெற்றுக்கொடுக்க உதவலாமே தவிர ஒருபோதும் வெற்றியளிக்கப்போவதில்லை. சர்வதேசமும் இதற்கு ஒத்துப்போகும் என நம்பமுடியாது.

குற்றவாளியிடமே குற்றத்தை விசாரணை செய்யும்படி பணித்தால் குற்றத்தை நியாயப்படுத்துவதற்கே குற்றவாளி முயலுவான் என்பதுதான் யதார்த்தமான உண்மை. இருந்தும் சர்வதேசம் குற்றவாளியிடம் குற்றத்தை விசாரிக்க ஒப்புக்கொடுத்திருந்தது. இருந்தும் சில சங்கடங்களை கடப்பதற்கான தந்தரமாகவே சர்வதேசம் இந்த பொறிமுறையை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முன் விரித்திருப்பதாகவும் எண்ணுவதற்கான நியாயங்களும் புறக்கணிப்பதற்கில்லை.

இராணுவத்திலுள்ள "ஒருசிலரின் தவறான செயற்பாட்டினால் இராணுவத்தின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட இடமளிக்கலாகாது" என்று, நல்ல இலக்கிய வசன நடையுடன் ஒப்புக்கு ஒரு பதம் அறிக்கையில் இணைக்கப்பட்டிருக்கிறது. இந்த  வஞ்சகமான வசனத்திலிருந்து,   தந்திரமாக சில இராணுவத்தினரை தப்புச்செய்தவர்கள் என தெரிவுசெய்து, தண்டனைக்குட்படுத்துவதுபோல் காட்டி போர்க்குற்றத்திலிருந்து ராஜபக்க்ஷ தரப்பு தப்பிப்பதற்கு உபாயம் தேடுவது தெரிகிறது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தி அதில் எவராவது குற்றம் இழைத்துள்ளார்கள் என்று நிரூபிக்கப்பட்டால்  அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து தண்டனை வழங்குவது அரசின் கடமை என்று நீதிதவறாத வேத வசனத்தையும் ஆணைக்குழுவின் மூலம்  உலகத்தை ஏமாற்ற கையாளப்பட்டிருக்கிறது

தான் தப்பிப்பதற்காக இந்த தந்திரத்தின் மூலம் சில பல இராணுவத்தினரை காவுகொடுக்கவும் முப்படைத்தளபதியான ராஜபக்க்ஷ பின்னிற்க மாட்டார் என்பதும் மறுப்பதற்கில்லை. அத்துடன் சில இராணுவ சிப்பாய்களை குற்றவாளிகளாக்கி நீதிமன்றத்தில் நிறுத்தி வழக்கை முடிக்காமல் தொடர்வதன் மூலம் பலவருடங்களை கடந்துவிடலாம் என்பதும் சிங்கள அரசின் தந்தர உத்தியாக நம்பலாம்.

போர் நடந்துகொண்டிருந்த காலத்திலும் சரி, முடிவுக்கு வந்தபின்னும் சரி, இராணுவத்தரப்பும் அதே தரப்பைக்கொண்ட அரசாங்கமும் போர்க்குற்றம் எதுவும் இலங்கையில் இடம்பெறவில்லையென்றே சாதித்து வந்திருந்தது. சர்வதேச இறுக்கம் அதிகரிக்க அதிகரிக்க மெல்ல மெல்ல காட்சிகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ராஜபக்க்ஷ நலன் காக்கும் அறிக்கையை உலகம் எப்படி எடுத்துக்கொள்ளுகிறது என்பதைப்பொறுத்து அடுத்த காட்சி மாற்றத்தை சர்வாதிகாரி ராஜபக்க்ஷ ஈடேற்றுவார்.

போர் மரபுகளை மீறி ஒருபோதும் தாக்குதல் நடத்தியிருக்கவில்லையென நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பயன்படுத்தி  திடமாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அக்கருத்தின்படி நோக்கினால் இறந்தவர்கள் அனைவரும் தாமாகவே எரிகுண்டுகளை இயக்கி அதற்குள் குடும்பம் குடும்பமாக விழுந்து இறந்திருக்கவேண்டும் என்றமுடிவுக்கு மட்டுமே எவராலும் வரமுடியும்.

விடுதலைப்புலிகள் வேறு, மக்கள் வேறு என்று சொல்லிவந்த அரசாங்கம் பலநாடுகளின் கூட்டத்தை ஒன்றாக்கி போரை நடத்தியது. வல்லமை இருந்திருந்தால் அந்தளவுக்கு ஆள் அம்புகளை சேகரித்து போர் புரிந்த அரச இராணுவம் விடுதலைப்புலிகளை இனங்கண்டு மக்களை பாதிப்புக்குள்ளாக்காமல் போரில் விடுதலைப்புலிகளை வென்றிருக்கவேண்டும்.

ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டால் விதி மீறப்படவில்லை என சாதிப்பவர்கள். இறுதிப்போரில் பத்தாயிரம் போராளிகள் கொல்லப்பட்டிருந்தால், இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் எப்படி கொல்லப்பட்டனர் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கவேண்டும். போருக்கு ஆதரவு தெரிவித்த சர்வதேசம் ஒருபோதும் மக்களை அழிக்கும்படி சொல்லியிருக்கவில்லை. போரின்போது ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவாக நின்ற சர்வதேசம் இன்று மரபு மீறிய படுகொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று விசாரணை செய்ய தொடர்ந்து வலியுறுத்துகிறது.

ஸ்ரீலங்கா அரசின் கோரிக்கைக்கு சம்மதித்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்த இந்தியா, தவிர்ந்த ஏனைய நாடுகள், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான தமிழர்களின் நடவடிக்கைகளை ஒருசந்தற்ப்பத்திலும் தடைசெய்யவில்லை. தேசியக்கொடியான புலிக்கொடியை பிடித்து அனைத்துநாடுகளிலும் மக்கள் போராட்டம் நடத்தினர்.

அப்படிப்பார்க்கும்போது விடுதலைப்புலிகள் ஆயுதம் தூக்கி போராடியதை மட்டுமே ஏதோ காரணத்திற்காக சர்வதேச நாடுகள் அவ்வளவாக விரும்பவில்லை என்பது தெரிகிறது. தேசியக்கொடியை கையில் ஏந்திய மக்கள், இரவு பகலாக மேற்குநாடுகளின் வீதிகளில் ஆயுதம் தூக்காத விடுதலைப்போராட்டமாக விடுதலைப்புலிகளின் போராட்டத்தை ஆதரித்து நின்றதை எந்தநாடும் தடுக்கவில்லை.

அந்த நேரங்களில் அந்தந்த நாட்டு பொலிசார் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்ட மக்களுக்கு பாதுகாவலாக  நின்றிருக்கின்றனரே தவிர எவரையும் கைதுசெய்திருக்கவில்லை.அப்படியென்றால் விடுதலைப்புலிகளின் முத்திரை இலச்சினை பொறித்த கொடியும் விடுதலைப்போராட்டமும் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது என்பதுதானே நிதர்சனம்.

விடுதலைப்புலிகளின் மதியுரைஞர் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தொடர்ந்து இங்கிலாந்தில் வசிக்க பிரித்தானிய அரசு எந்தத்தடையும் பிரயோகிக்கவில்லை. அரசியற்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும்பலர் பேச்சுவார்த்தைக்கு உலக நாடுகளுக்கு சென்றபோது எவரையும் இக்கட்டாக்கும் நெருக்கடிகளை சர்வதேசம் செய்திருக்கவுமில்லை.

இன்றுகூட போராட்டத்தை தாங்கி நிற்பவர்கள் அனேகர் இலங்கைக்குள் இல்லை. போர்க்குற்றவாளி ராஜபக்க்ஷ கூட்டத்தை பிடித்துக்கொடுப்பதற்கு கையில் சுருக்கு கயிற்றுடன் திரிபவர்கள் அனைவரும் நாட்டுக்கு வெளியில் மேற்குநாடுகளில் பகிரங்கமாகவே நின்றுகொண்டிருக்கின்றனர். இணையத்தளங்கள், பதிப்பு மற்றும் காட்சி வானொலி ஊடகங்கள் அனைத்தும் புலம்பெயர் நாடுகளில் சட்டத்துக்குட்பட்டு போராட்டத்தை ஆதரித்து இயங்கிவருகின்றன. இதையும்  சர்வதேசம் தெரிந்துகொண்டே அனுமதித்திருக்கிறது.

சிங்களவர்கள் 1980 கள் முடிவதற்குள் முழுத் தமிழினத்தை அழித்திருக்கவேண்டும். இன்று மிக மிக காலதாமதமாகிவிட்டது. ஈழத்தின் வேர் ஈழத்தில் மட்டுமல்லாது சகல தேசத்திலும் பரவிவிட்டது. இனி   இனப்படுகொலை சூத்திரதாரிகளை சர்வதேசமும் சர்வதேசத்திலுள்ள ஈழத்தின் வேர்களும் விட்டுவிடப்போவதில்லை.

ராஜபக்க்ஷ ஆணைக்குழுவின் அதிகார வரம்பு மற்றும் இதன் பயன் குறித்து எழுந்த ஐயப்பாடுகள் காரணமாக அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல், ஹியூமன் ரைட்ஸ் வாட்ச், உள்ளிட்ட மனித உரிமை அமைப்புக்கள் இந்த ஆணைக்குழுவின் அமர்வில் பங்கு கொள்ள மறுத்துவிட்டன. மனித உரிமை கண்காணிப்பகம் சிபார்பு செய்வதுபோல சுதந்திரமான அனைத்துலக விசாரணைக்குழுவின் தேவையை இது உணர்த்துவதாக உள்ளது.

உலகநாடுகள், அனைத்துலக விசாரணை தேவை என்ற நிலையெடுப்பதற்கு  ராஜபக்க்ஷ தரப்பால் புனையப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் ஒரு அசைவாக்கத்தை நிச்சியம் உண்டுபண்ணும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.