Tuesday, December 27, 2011

மஹிந்தரின் தற்பெருமைக்கு சங்கரி வைத்த ஆப்பு!


13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்காவிட்டால் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு காண முடியாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
முதலாவதாக நாட்டை ஒரு கொடியின் கீழ் ஒற்றுமைப்படுத்தியுள்ளேன் எனக் கூறுவதை விட்டுவிடுமாறு வேண்டுகிறேன். ஏனென்றால் அதில் உண்மையில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சில பகுதிகளிலும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களிலும் விடுதலைப்புலிகளின் பிரசன்னமும் அவர்களின் அழுத்தமும் இருந்தபோது இந்த நாட்டின் சகல மாவட்டங்களிலும் அன்றும் இன்றும் அரசால் நியமிக்கப்பட்ட அவ்வப்பகுதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்களின் நிர்வாகத்திலேயே இருந்து வந்துள்ளது. நாடு என்றும் இணைந்து இருந்தது.
மேலும் இந்த அரசு இன்னுமொரு நாட்டுடன் யுத்தம் புரியவில்லை. ஒரு நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய போராட்டத்தை அடக்கியது மட்டுமே. பெருமளவில் உயிர்ச் சேதமும், சொத்தழிவும் ஏற்பட்டன.
ஆனால், வடக்குக் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் முற்றாகவும் ஏனைய மாவட்டங்களின் சில பகுதிகள் மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகின என்பதை ஒத்துக் கொள்வீர்கள் என நம்புகின்றேன்.
மூன்று அல்லது நான்கு இலட்சம் மக்கள் சமைக்கவோ, இரவுநேரங்களில் தங்குவதற்கோ போதிய வசதியில்லாத சிறு பிரதேத்திற்குள் நெருக்கி வைக்கப்பட்டமையால் ஏற்பட்ட துன்பங்கள் சொல்ல முடியாதவையாகும்.
இந்த நிலைமை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் நீடித்தன. தமது பல்வேறு தேவைகளை மேற்கொள்ள இவர்கள் எவ்வளவுதூரம் கஷ்டப்பட்டிருப்பார்கள் என்பதை கற்பனை பண்ணி பார்க்க முடியாது.
அவர்களின் கதைகளைக் கேட்டால் கல்நெஞ்சக் காரர்களையும் கண்ணீர்விட வைக்கும். மேலும் கண்ணீர் விடுவதற்கு கண்ணீரில்லை.
அவர்கள் தங்கள் பிரியமானவர்களை இழந்தனர். சிலர் தமது குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் இழந்தனர். அவர்களுடைய வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.
ஒரு வீட்டிலாவது கூரையில்லை. மீள்குடியேற்றப்பட்ட இரண்டு, மூன்று ஆண்டுகளான பின்பு ஒரு விருந்தினரையோ, ஒரு உறவினரையோ வீட்டில் தங்கவைக்க வசதிகள் ஏதும் இல்லை.
அநேகர் வறுமையில் பசியுடன் போராடுகின்றனர். அவர்களுக்கு எந்தவித வருமானமும் இல்லை. அநேகமான வீடுகளில் பெண்கள் குடும்பத் தலைவியாக செயற்படுகின்றனர்.
வயது வந்த பெண் பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் பயத்துடனும், பீதியுடனும் வாழ்கின்றார்கள். வடக்குக் கிழக்கில் 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவைகள், ஆயிரக்கணக்கான அநாதை பிள்ளைகள் வாழ்கின்றனர்.
நிலைமையில் பெரியளவு மாற்றங்கள் ஏற்படவில்லை. போரில் இறந்த ஒவ்வொருவருக்கும் கல்லறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவர்களில் ஆயிரக்கணக்கானோர் பல இடங்களில் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இன்று அவற்றில் ஒரு கல்லறைக்கூட இல்லை. நீங்கள் ஒரு தந்தை என்ற முறையில் இறந்த ஒரு மகனின் கல்லறையை இராணுவத்தினர் சிதைத்திருந்தால் அம் மகனின் பெற்றார் என்ற வகையில் மன உணர்வுகளை அறியக்கூடியதாக இருந்திருக்கும்.
தற்போது சண்டை நின்றுவிட்டது. துப்பாக்கிகள் அமைதியாகிவிட்டன. நீங்கள் வெற்றிகரமாக ஒரு புரட்சியை அடக்கிவிட்டீர்கள். அப்புரட்சி மீண்டும் வெடிப்பதற்கான வாய்ப்பு அறவே இல்லை.
இலங்கை இராணுவத்தினர் யுத்தத்தில் வெற்றிபெறுவதற்கான உதவிகள் பல்வேறு நாடுகளிடமிருந்து கிடைத்தன. பல வகையிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நாடுகளுக்கும் வெற்றியில் பங்குண்டு.
அவர்களுடைய புத்திமதிகளை நீங்கள் கேட்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கக்கூடாதா? அயல்நாடான இந்தியா உதவாமல் இருந்திருந்தால் எமது படைகள் அழிக்கப்பட்டு புரட்சிக்காரர்கள் வெற்றி பெற்றிருப்பர்.
ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு உதவுவது போல் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் யுத்தத்தை வெல்வதற்கான உதவிகளை வழங்கின.
அத்துடன் அவை அப்பணியை நிறுத்த வேண்டும். வடக்கில் பல இராணுவ முகாம்கள் அமைத்து இராணுவ தளபாடங்கள் வழங்குவதற்கு எதுவித உரிமையும் கிடையாது.
இச் செயல் பிற்காலத்தில் தங்களுடைய அரசையே கழற்றியடிக்கின்ற வாய்ப்புகளுக்கு வழி கோலும். சீனா, ரஷ்யா போன்ற நாடுகளைப் போல் இலங்கைக்கு உதவிய ஏனைய நாடுகளுக்கு நமது நாட்டின் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண்பதற்கு உதவ தார்மீக கடமை உண்டு.
ஆனால் அவர்களுக்கு இலங்கையிலுள்ள ஒரு குறிப்பிட்ட இனத்தை அரசு அடக்குமுறையின் கீழ் கொண்டுவர உதவக்கூடாது. தற்போது தங்களுடைய முதற்கடமை தமிழ் மக்களின் உள்ளங்களை வென்றெடுப்பதே ஆகும்.
வன்னி மக்கள் தங்களை மீட்டெடுப்பதற்கு அரச படைகளுக்கு நிறையவே உதவியுள்ளனர் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. ஆயுதங்கள் மீதான வெறுப்பே இதற்குரிய காரணமாகும்.
வடக்குக் கிழக்கு மக்கள் துப்பாக்கியில்லாத சூழலை உருவாக்கி அமைதியாக, சமாதானமாக வாழ விரும்புகின்றார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தற்போது நடைபெறுகின்ற பேச்சு சம்பந்தமாக சில கருத்துக்களைக் கூற விரும்புகின்றேன்.
13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் காணி, பொலிஸ் அதிகாரப்பகிர்வு புதிய விடயமல்ல. பல தடவைகள் மீண்டும் மீண்டும் பேசப்பட்ட விடயமாகும்.
பதினைந்து சுற்றுப் பேச்சு நடந்து முடிந்தபின் இந்த விடயத்திற்கொரு முடிவு காணாதது ஆச்சரியத்துக்குரிய விடயமாகும். இவ்விரு விடயத்திலும் வடக்குக் கிழக்கில் இராணுவத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற விடயத்திலும் விட்டுக் கொடுப்புடன் நடந்தால் நீங்கள் உங்கள் கிராமத்துக்கு போக முடியாது என்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையை நான் படித்தேன்.
தாங்கள் தயக்கம் காட்டுவதற்கு வேறு விசேட காரணங்கள் இருப்பின் நீங்கள் கொள்கையளவில் இவற்றை ஏற்றுக்கொண்டு தாங்கள் காட்டும் தயக்கத்துக்குரிய காரணங்களையும் கவனத்தில் எடுத்து இரு சாராரும் திருப்தியடையக்கூடிய ஒரு முடிவுக்கு வரலாம்.
மேலும் யுத்தம் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தவேளை 13 ஆவது திருத்தச்சட்டமும் அதற்கு மேலாகவும் தீர்வை வைக்க முன்வந்தனர்.
ஆனால், இன்று யுத்தம் முடிவடைந்த பின் சொன்னவற்றிலிருந்து பின்வாங்கினால் நாடு தன் நன்மதிப்பை இழக்க வாய்ப்பும் ஏற்படும். இந்த அடிப்படையில் ஒரு இறுதியான தீர்வு காண்பதை நியாயமாக சிந்திக்கின்ற எந்தவொரு சிங்கள மகனும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டான் என நம்புகின்றேன்.
ஒன்றை மட்டும் உறுதியாக தெரிவிக்கிறேன். இவ்விரு அதிகாரங்களும் வழங்கப்படாவிட்டால் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத்தீர்வு காண முடியாது.

நன்றி: தமிழ் சி என் என்.

No comments: