அமைதித்தீர்வு முயற்சிகள்
குறித்து இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துகளைத் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு வரவேற்றிருக்கும் அதேசமயம், புதுடில்லியின் இந்த வலியுறுத்தலை
இலங்கை அரசு சாதகமான முறையில் பரிசீலிக்க வேண்டுமெனவும்
சுட்டிக்காட்டியிருக்கிறது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை
வெளிவந்தபின்னர் இந்தியா வெளியிட்டிருக்கும் கருத்துகள் தொடர்பில் நேற்று
உதயனிடம் கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன், இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் இந்தியாவின் கருத்துகள்
உள்வாங்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:
இந்திய வெளிவிவகார அமைச்சின்
பேச்சாளரால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையை நாம் வரவேற்கிறோம். அதில் சில
முக்கியமானவிடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதலாவதாக, மனித உரிமை மீறல்கள்
தொடர்பில் நம்பகத்தன்மையான வெளிப்படையான விசாரணைகள் தேவையென அவர்கள்
கூறியிருக்கின்றனர். இது மிகவும் அவசியமானது. அதனை நாங்கள் வரவேற்கிறோம்.
இரண்டாவதாக, அர்த்தபுஷ்டியான அரசியல்
அதிகாரப்பகிர்வு நடைபெறவேண்டுமெனக் கூறியுள்ளது. அவ்விதமான சாத்தியப்பாடான
அதிகாரப்பகிர்வு இடம்பெறும்போதே நிதர்சனமான ஒரு நல்லிணக்கம் ஏற்படும்.
அதையும் நாம் வரவேற்கிறோம்.மூன்றாவதாக, இலங்கை அரசின் வாக்குறுதிகள்
குறிப்பாக, இடம்பெயர்ந்த மக்களின் வாழ்வில் இயல்புநிலை திரும்புவதற்கும்,
யுத்தமற்ற சூழலில் அவற்றை நிறைவேற்ற அளித்த வாக்குறுதிகள் இலங்கை அரசால்
நிறைவேற்றப்படவேண்டும். இதனையும் நாங்கள் வரவேற்கின்றோம்.
இந்தியாவின் இந்த அறிக்கையைப்
பொறுத்தளவில் தமிழ் மக்களின் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமான தேவைகள்
உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தியா எமது விடயத்தில் நீண்டகாலமாக முக்கிய பங்கு
வகிக்கும் ஒரு தரப்பாகும். தீர்வு முயற்சியில் இந்தியாவின் ஒத்துழைப்பு,
அரசுக்கும் தமிழர்களுக்கும் தேவை. அந்த முயற்சியினூடாக நியாயமான
விசுவாசமான ஒரு தீர்வையே நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்தியாவின் இந்தக்
கருத்தைச் சாதாரண ஒரு விடயமாக எடுத்துக்கொள்ளாமல் இலங்கை அரசு சாதகமாகப்
பரிசீலிக்கவேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வை எட்டும் முயற்சிகளுக்கு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு நிச்சயம் கிடைக்கும்.என்று
குறிப்பிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.
No comments:
Post a Comment