இந்திய அரசு சிங்கள அரசுடன் இணைந்து ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகத்தின் ஈரம் காயுமுன், மலயாள அரசியல்வாதிகளின் அப்பட்டமான பிடிவாதத்தை மறைமுகமாக வழிமொழிந்து தமிழகத் தமிழர்களுக்கு மீண்டுமொரு துரோகம் ஈடேற்ற துணை பொய்க்கொண்டிருக்கிறது.
 
தமிழகம், கேரளம், இரு மானிலங்களுக்குமிடையில் நீண்டகாலமாக இருந்துவந்த முல்லை பெரியாறு நீர் பங்கீட்டு பிரச்சினை விரிசல் விரிவடைந்து இரண்டு வெவ்வேறு நாடுகளுக்கிடையில் உண்டாகும் போருக்கான முஸ்தீபுகள் போல நிலைமை மாறியிருக்கிறது.

உடனடியாக தலையிட்டு போர்க்கால அடிப்படையில் நிலைமையை சீராக்கவேண்டிய பொறுப்பு நடுவண் அரசுக்கு உண்டு. ஆனால் இந்திய நடுவண் அரசு கையாலாகாத்தனமாக மலயாள தேசத்தை காப்பாற்ற மூன்றாவது தரப்பு மத்தியஸ்தர்போல செயற்படுகிறது.

ஒரு நாட்டுக்குள் உள்ள இரண்டு மானிலங்களுக்கிடையிலான இந்தப்பிரச்சினை மிக நுண்ணியமாக கையாளவேண்டிய ஒன்று என்பது மறுக்கமுடியாதது.

எது எப்படியிருந்தாலும் தமிழகத்தின் பாசன வசதிக்காக மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரிலிருந்து அரபிக்கடலுக்கு வீணாக சென்றுகொண்டிருந்த நீரை தடுத்து 1000 ஆண்டுகளுக்குமுன் ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. முல்லை பெரியாறு அணை.

அணை தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்திருப்பதால் அணைக்கு பங்கம் வருமாகவிருந்தால் பாதிப்புக்குள்ளாகப்போவது தமிழகம் என்பதே  நிதர்சனம். தாக்கம் அப்படி இருப்பதால் நியாயமான தீர்வு கிடைக்கும்வரை தெருவில் இறங்கவேண்டிய கட்டாயம் தமிழகத்து மக்களுக்கு கட்டாயமாகியிருக்கிறது.

தமிழக முதல்வர் அவர்கள் தமிழக மக்களை அத்து மீறவேண்டாம் என்றும் கேட்டிருக்கிறார். அதேநேரம்  ஏற்கெனவே நீதிமன்றம் பரிந்துரைத்த உண்மயின் அடிப்படையில் பிரச்சினையை திசைதிருப்பாமல் அமைதியான முறையில் நிரந்தரமாக பிரச்சினையை தீர்வுகாண மத்திய அரசை உடனடியாக தலையிட்டு தீர்த்து வைக்குமாறு கேட்டிருக்கிறார்.

ஆனால் மத்திய காங்கிரஸ் அரசு நீதிமன்ற தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு பிரச்சினையை அரசியலாக்கவே முனைப்பு காட்டி வருகிறது. கேரள அரசியல் கட்சிகளின் பொய் பிரச்சாரத்துக்கு வழிவிட்டு இரு மானிலங்களுக்குமிடையில் ஒரு மோதலை உருவாக்கி அதன்மூலம் கேரள அரசியல்வாதிகளின் திட்டத்துக்கு சாதகமாக முடிவை சாய்த்துவிடவே நடுவண் அரசு விரும்புவதாகத்தெரிகிறது.

ஒரு இந்தியா என்ற தாரக மந்திரத்தின்கீழ் இந்தியத்துணைக்கண்டம் இருந்துவருகிறது. அந்த அடிப்படையில் அருகாமையில் அமைந்திருக்கும் ஒரு மானிலத்தின் புவியியல் தன்மைசார்ந்து, ஒரு மானிலத்தின் இயற்கைவளம், மற்ற மானிலத்துக்கும் பரிவர்த்தனை செய்யவேண்டிய கடப்பாடு உண்டு. வளங்கள் பங்கிடுவதன் மூலமே ஒரே நாடு என்ற சுலோகம் உயிர்ப்புடன் இருப்பதற்கும்  நாடு வளமாவதற்கான மூலமும் ஆரம்பமாகிறது.

வெள்ளப்பெருக்கு ஏற்படுங்காலங்களில் தமிழ்நாட்டை நோக்கி வெள்ள நீரை கடத்தி சங்கடத்தை உண்டுபண்ணுவதும் வறட்சியான காலங்களில் நீரை தடைசெய்வதும் ஒரு மானிலத்தை அழிக்கும் செயலாகவே இருக்கும். இவற்றை உணர்ந்து பாகுபாடற்ற நெறிமுறைகளை அறிமுகப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கே உண்டு.

முடியாத பட்சத்தில் ஒவ்வொரு மானிலத்துக்கும் சுதந்திரப்பிரகடனம் செய்து அவரவர் போக்கில் விட்டுவிடவேண்டிய தர்மத்தை பின்பற்றவேண்டியவர்களாகின்றனர். தேர்தல் காலத்தில் கொள்கையற்ற கூட்டணி அமைக்கும் அரசியல்வாதிகள் தொட்டதற்கெல்லாம் கூட்டணி தர்மம் காக்கிறோம் என கூவுபவர்கள். கூட்டு மானிலங்களின் மக்களின் அடிப்படை வாழ்வாதார பிரச்சினையை கையாளமுடியாவிட்டால் அரசியல் சாசன விதிகளை மீறிய குற்றவாளிகளாகின்றனர்.

ஒவ்வொரு மானிலங்களும் நாட்டின் உயர் மையமான நீதித்துறையின் கட்டளைகளை கருத்திலெடுக்காமல் தாம் நினைப்பதை நிறைவேற்ற நினைப்பார்களாக இருந்தால் அந்த நாட்டின் இறையாண்மை வகிக்கும் பங்குதான் என்ன. எதையும் தனித்தனியாக கையாளும் பிடிவாதப்போக்கு  இருக்குமானால் அரசியல்ச்சாசனம் எதை செய்துவிடப்போகிறது.

1947க்கு முன் இந்திய தேசத்து மக்கள் ஆங்கிலேயருடன் போராடி மகாத்மா காந்தியின் தலைமையில் சுதந்திரத்தை ஒரு இரவுப்பொழுதில் பெற்றனர். ஆனாலும் அம்மக்கள் விடியலை இன்னும் தரிசிக்கவில்லை.  இங்கிலாந்திலிருந்து விடுபட்டபின்,  உருவான இந்திய தேசியக்காங்கிரஸ் இத்தாலியிடம் சிக்கியிருக்கிறது.

இந்தியாவின் இன்றய தலைவிதி,. பிரதமர், ஜனாதிபதி, நீதித்துறை சுயமாக செயற்படமுடியாமல் அடிமைப்பட்டு கிடக்கின்றன. இன்னுமொரு போராட்டத்தின் பின் ஒரு பகலில் இத்தாலியிடமிருந்து சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே மக்களுக்கு ஏதாவது விமோசனம் கிடைக்கக்கூடும்.

ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.
நன்றி ஈழதேசம் இணையம்.