Friday, November 18, 2011

பொன்சேகாவுக்கு 3 வருடச் சிறை.



வெள்ளைக்கொடி விவகார வழக்கு அறியப்பட்ட, விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளர் நடேசன் மற்றும் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோர் உள்ளிட்ட சரணடைந்த புலி உறுப்பினர்களைச் சுட்டுக்கொன்றார்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியதற்கு எதிராக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் பொன்சேகா பொய் கூறினார் என தீர்ப்பளித்த மேல் நீதிமன்றம் அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதித்தது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. நீதிபதி தீபாலி விஜயசுந்தர, பொன்சேகா குற்றவாளி என்ற தீர்ப்பை வாசித்தார். "ட்ரயல் அட்பார்" முறையில் மூன்று நீதிபதிகள் முன்னிலையில் சுமார் ஒன்றரை வருட காலமாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் பொன்சேகா மீது 3 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. நீதிபதிகள் குழுவில் ஒருவரான வராவௌ அனைத்துக் குற்றச்சாட்டுகளில் இருந்தும் பொன்சேகாவை விடுதலை செய்தார். எனினும் ஏனைய இரு நீதிபதிகளும் பொன்சேகாவை இரு குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்த போதும் ஒரு குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தனர்.

இறுதிக்கட்ட போரின்போது சரணடையவரும் விடுதலைப்புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என "சண்டே லீடர்" பத்திரிகையில் வழங்கிய செவ்வியின்போது சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இது பொய்யானது எனக் கூறி சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

2010ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், பாதுகாப்புச் செயலாளரால் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகப் பொய் கூறியிருந்தமை, அரசுக்கு எதிராக சூழ்ச்சி செய்தமை மற்றும் பொதுமக்களிடையே கருத்து முரண்பாடு, கலகம் என்பவற்றை ஏற்படுத்தியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன.

நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, வராவௌ மற்றும் சர்பிக் ரஷிக் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தீர்ப்பு அளிக்கப்படுவதற்கு முன்னர் நீதியரசர்களான தீபாலி விஜேசுந்தரவும், சர்பிக் ரஷீக்கும் சரத் பொன்சேகாவுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள முதலாவது குற்றச்சாட்டைத் தவிர, மற்றைய இரண்டு குற்றச்சாட்டுகளை நிராகரிப்பதாக அறிவித்தனர். இருந்தபோதிலும், நீதிபதி வராவௌ, சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து அவரை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
தொடர்ந்து நீதிபதிகள் குழுவின் தலைவர் தீபாலி விஜேசுந்தர மேற்படி தீர்ப்பை அறிவித்தார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட செய்தி நீதிமன்றத்துக்கு வெளியில் கூடியிருந்த பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு தெரிய வந்ததும் அவர்கள் பெரும் அமளிதுமளியில் ஈடுபட்டனர். அரசுக்குச் சொந்தமான இரண்டு வாகனங்கள் அடித்துநொருக்கப்பட்டன. பொலிஸார் அங்கு கூடியிருந்தவர்களை விரட்டி கலைத்தனர்.

இந்நிலையில், சரத் பொன்சேகா நீதிமன்ற பின்வாசல் வழியாக வெலிக்கடை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நன்றி உதயன் இணையம்.

No comments: