NDTV
இறுதிப் போரின்போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்று நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்தால் அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. குற்றமிழைத்த யாரையும் தான் பாதுகாக்கமாட்டார் என்றும் அதற்கான தேவை தனக்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தெற்காசிய பிராந்திய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மாலைதீவு சென்றிருக்கும் ஜனாதிபதி அங்கு இந்தியத் தொலைக்காட்சியான என்.டி.ரி.விக்கு அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டியின் விவரம் வருமாறு:
என்.டி: தற்போதைய மீனவர் பிரச்சினை குறித்து...?
மஹி: மீனவர்கள் பிரச்சினை குறித்து உங்கள் பிரதமருக்கு எல்லாவற்றையும் விளக்கி இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக, இலங்கைக் கடலுக்குள் வந்து மீன்பிடிக்கும் 40,000 படகுகளுக்கு எதிராக நாங்கள் சண்டையிட்டு வருகிறோம். இதனால் எங்களுக்குத்தான் பிரச்சினை. ஆனால், உங்கள் பிரதமரின் வேண்டுகோளின் பேரில் மீனவர்கள் எவரையும் நாங்கள் கைது செய்வதில்லை. இப்போது நாங்கள் அவர்களை அனுமதிக்கிறோம். முன்னர் இந்த விடயத்தை கடற்படையினரே கையாண்டனர். ஆனால் அதனைக்கூட நிறுத்துமாறு இப்போது உத்தரவிட்டுவிட்டோம்.
என்.டி: இந்தப் பிரச்சினை இந்தியாவில் பெரும் அரசியல் சிக்கலாக இருக்கிறதே?
மஹி: ஆமாம்! யாழ்ப்பாணத் தமிழர்கள் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டார்களா? அவர்களுடைய வாழ்க்கை நிலைமை நன்றாக இருக்கிறதா அல்லது மோசமாக இருக்கிறா? நாங்கள் அவர்களுக்கு உதவலாமா என்றெல்லாம் அவர்கள் (தமிழ் நாட்டு அரசியல்வாதிகள்) என்னிடம் கேட்கிறார்கள். அவர்கள் ஏன் தமது மீனவர்களுக்கு உதவக்கூடாது? அவர்களே அவர்களுடைய உரிமைகளைப் பிடுங்கிக் கொண்டார்கள். இது ஏமாற்றம் தரும் விடயம்தான். இதனை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
என்.டி: ஆக...., இலங்கைத் தமிழ் மீனவர்கள்தான் அங்கு மீன்பிடிக்க வேண்டும் என்கிறீர்களா?
மஹி: இல்லை. கொடுத்து வாங்கும் கொள்கையை (give and take policy) கடைப்பிடியுங்கள் என்றுதான் சொல்கிறோம். அதைப் பற்றி நாங்கள் கலந்துரையாட வேண்டும். அத்தோடு இந்த விடயத்தில், எமது தமிழ் மீனவர்களோடு பேசுவதே சிறந்த விடயம் என்று நான் சொல்வேன். இலங்கையில் இருந்தும் இந்தியாவில் இருந்தும் மீனவர்களைத் தெரிவு செய்து அவர்களைப் பேச அனுமதித்தால் அவர்களே ஒரு தீர்வைக் காண முடியும். இந்தப் பிரச்சினையில் அரசுகள் நுழைவதை நான் விரும்பவில்லை.
என்.டி: நல்லிணக்க முயற்சிகள் எப்படி இருக்கின்றன. எல்லாமே மந்த கதியில் நகர்வதாகத் தெரிகிறதே?
மஹி: இல்லை, எல்லாமே மிக வேகமாக நகர்கின்றன. கடந்த இரண்டு வருடகாலங்களில் 95 சதவீதமான மக்களை நாங்கள் மீளக்குடியமர்த்தி இருக்கிறோம்.
என்.டி: நான் அரசியல் நல்லிணக்க முயற்சி பற்றிப் பேசுகிறேன்...
மஹி: அரசியல் ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்துள்ளோம். கடந்த ஒன்றரை மாதங்களாக அவர்கள் சரியான "பிஸி'. அமெரிக்கா, பிரிட்டன் என்று சுற்றித் திரிந்து தங்களுக்காகப் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இது ஓர் உள்ளக விவகாரம். அவர்கள் எதற்காக இப்படிப் பறந்து பறந்து பிரசாரம் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இறுதியில் இது அரசு சார்ந்த ஒரு விவகாரமா க மட்டுமே இருக்கும். எப்படியும் அவர்கள் எங்களுடன்தான் கலந்துரையாடியாக வேண்டும். ஏன் சொல்கிறேன் என்றால் பிரச்சினையைத் தீர்க்க குழு ஒன்றை நாங்கள் நியமித்திருந்த போதும் அவர்கள் இன்னும் அதற்கான தமது பிரதிநிதிகளை நியமிக்கவில்லை. ஆனால் ஊர் சுற்றுகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் 23 கட்சிகள் இருக்கின்றன. அதனால் நாடாளுமன்றத் தெரிவுக் குழு ஒன்றை நாம் நியமிக்க வேண்டியிருக்கிறது. அதுதான் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மிகச் சிறந்த இடம். அரசும் எதிர்க்கட்சிகளும் ஒரேயிடத்தில் அமர்ந்து பேச விட்டால் அவர்கள் எனக்குத் தீர்வு ஒன்றைத் தருவார்கள். பின்னர் அதனை நிச்சயம் நடைமுறைப்படுத்தலாம்.
என்.டி: 2009இல் போர் முடிந்ததில் இருந்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பலமாக எழுப்பப்படுகின்றனவே...
மஹி: அதற்கான எதிர்வினை என்ன என்று பார்த்திருக்கிறீர்களா?
என்.டி: ஆம்! பார்த்திருக்கிறேன். ஆனால், படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை எப்பொழுது வேண்டுமானாலும் உங்களிடம் கையளிக்கும் என்ற நிலை இருக்கிறது. அந்த அறிக்கையைப் பகிரங்கப்படுத்துவீர்களா?
மஹி: அடுத்த 19ஆம் திகதி அறிக்கை கையளிக்கப்படும். நான் அதனைப் பெற்று முதலில் படிக்க வேண்டும். அதன் பின்பே எல்லாம். அது ஒன்றும் பொதுமக்கள் ஆவணம் அல்ல. அதனைப் பகிரங்கப்படுத்த வேண்டுமானால் நான் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னரே அது பகிரங்க ஆவணமாகும்.
என்.டி: அந்த அறிக்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் பற்றி ஏதாவது சொல்லப்படும் என்று பயப்படுகிறீர்களா?
மஹி: அப்படி அவர்கள் குறிப்பிட்டால் அதனடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம். யாரையும் நான் பாதுகாக்கப் போவதில்லை. அந்தத் தேவையும் எனக்கில்லை.
என்.டி: அப்ப அது ஒரு மிக நீண்ட செயற்பாடாகவே இருக்கும் என்கிறீர்கள்..?
மஹி: ஆமாம்! போரின் கடைசி 10 நாள்கள் பற்றியே எல்லோரும் பேசுகிறார்கள். ஆனால் கடந்த 30 வருடங்கள் பற்றி யாரும் பேசுவதில்லை. எத்தனை மக்கள் கொல்லப்பட்டார்கள்? எத்தனை தமிழ்த் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்? உங்கள் பிரதமர்கூடக் கொல்லப்பட்டார். எனவே இந்த விடயங்கள் எல்லாம் வெறுமனே.... உங்களுக்குப் புரியும்தானே.
நன்றி, உதயன் இணையம்.
No comments:
Post a Comment