அமெரிக்கா சென்று அதன் தொடர்ச்சியாக கனடா நாட்டுக்கு சென்றிருந்த தமிழர் தேசியக்கூட்டமைப்பினர் அங்கு ஒரு கலந்துரையாடலை நடாத்தியதாகவும் அப்போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வடகிழக்கு எமக்கு சொந்தமானதல்ல,

என்று கருத்து தெரிவித்ததாக யூ ரியூப் இணையத்தளத்தில் காணொளியாக வெளிவந்து பலரையும் திகைக்க வத்திருக்கிறது.



1970 களில் தொடங்கிய ஈழத்தின் வட கிழக்கு தாயக மண்மீட்பு உரிமைப்போராட்டம், மே 2009வரையான காலப்பகுதிவரை தொடர்ந்து, நாற்பது ஆயிரம் வரையிலான இளம் போராளிகளின் உயிர் கொடையுடன். பல இலட்சம் பொதுமக்களின் படுகொலை, பொருள் பண்டம் அனைத்தும் அழிக்கப்பட்டு வஞ்சகமாக தற்காலிகமாக தோற்கடிக்கப்பட்டது. இது சம்பந்தன் அவர்களும் அறிந்திருக்க முடியும்.

வரலாறு தெரியாமல் ஈழப்போராட்டம் தொடங்கப்படவுமில்லை, இன்னொருவரின் மண்ணை தமிழினம் வலுக்கட்டாயமாக சுவீகரிக்க பல இலட்சம் உயிர்கள் காவு கொடுத்து கறைபட்டுக்கொள்ளவுமில்லை.

பலதரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளும் ஆவணங்களும், மேலாக தமிழினம் அல்லாத வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்களும் தமிழீழம் தொடர்பாக தக்க சான்றுகளுடன் வரலாற்று உண்மையை நிரூபித்து இருக்கின்றனர்.

அத்துடனல்லாமல் பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தொன்மையான வரலாற்று ஆதாரங்களை காலக்குறிப்புடன் வரைபடங்களாகவும் திரிவுபடாமல் விளக்குகின்றன. பல சிங்கள வரலாற்று ஆய்வாளர்களும் இவற்றையே வழிமொழிகின்றனர்.

ஈழத்தமிழர்களின் தாயக பூமியான, இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழீழ மண்ணின் சகல உரிமைகளையும் சிங்கள தலையீடு இல்லாமல் தமிழர்களால் நிர்ணயம் செய்யப்படவேண்டும், தமிழர்களின் பூர்வீக தாயகம் சுதந்திர தமிழீழமாக தமிழனால் கையாளப்படவேண்டும். என்பதே தந்தை செல்வநாயகம் முதலாக, தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்கள், வரையிலான தீர்க்கதரிசினமான தலைமைகளின் நீங்கா நினைவு.

தமிழினத்தின் சகல அரசியல் - வாழ்வியல் சார்பான அனைத்து உரிமைகளையும். தீர்மானிக்கும் சக்தியாகவும் ஈழ விடுதலை+ அரசியல் ஆகியவற்றை கையாள உரிமைகொண்ட தகுதியானவர்களாயும். தந்தை செல்வநாயகம் அவர்களும், அதன்பின் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களுமே, நம்பிக்கையானவர்களாக அனைத்து தமிழராலும் இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.

தந்தை செல்லா அவர்களின், பின் தேசியத்தலைவர் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள்தான், தமிழீழத்திற்கான உறுதியான இறுதி தீர்வை நோக்கி அகில உலகத்தை நகர்த்தியிருக்கிறது.

கலகம் பிறந்தால் அதன்பின் நியாயம் பிறக்கும் என்பதற்கொப்ப, கலகத்தின் பின் இப்போ நியாயத்திற்கான விவாத அரங்கில் தமிழினம் நின்றுகொண்டிருக்கிறது. பூமிப்பந்தில் இலங்கை எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருந்த காலம் மாறி, தமிழனின் போராட்ட எழுச்சி ஈழதேசம் பற்றி ஒவ்வொரு நாளும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் விவாதிக்க வைத்திருக்கிறது.

"முக்கியமானவர்கள்" கலந்துகொள்ள முடியாத விவாத அரங்கில்,, போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்கள் இராசதந்திரிகளாகவும், மந்திரிகளாகவும், பெருமை பெற்றிருக்கின்றனர். காரியம் நடந்தேறவேண்டும் அதுதான் தமிழினத்தின் தற்போதய பொறிநிலை. தாற்பரீகத்தை சரியாக உணர்ந்துகொண்டு எவர்கள் செயற்பட்டாலும் யாரும் இடையில் குறுக்கிட தேவையுமில்லை.

மாறாக போராட்டத்திற்கு இழுக்குவரும்போது, தாய்மண்ணுக்கு அபகீர்த்தி ஒன்று வரும்போது, எவரும் பொறுத்துக்கொள்ள முடியாது, முக்கிய நேரங்களில் முன்நின்று முகம் கொடுத்தவனும், இழப்புக்களை அனுபவித்தவனும், உறவுகளை தொலைத்தவனும், பார்வையாளனாக மட்டும் இருக்க முடியாது, கருத்துச்சொல்ல அவனது உணர்வும் துடிக்கும் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.

தமிழர் தலைவனால் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட உயிரிலும் மேலான போராட்டத்தின் தாக்கம், உள்ளூரில் எவரும் அறியப்படாமலிருந்த தேசியக்கூட்டமைப்பினரை இன்றைக்கு உலக அரங்கில் கலந்துரையாடும் அளவுக்கு பெருமைபெற்ற இராசதந்திர அந்தஸ்து வழங்கியிருக்கிறது.

அவை தமிழினத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருந்தாலும், குறிப்பிட்ட பிரதிநிதிகள் பிரமாண்ட மண்டபங்களில் உள்ள இருக்கைகளில் அமரும் முன், வரலாற்றின் பின்னணியை சிரசில் இருத்தி சிந்தித்து ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பிரயோகிக்கும் கடப்பாடு உண்டு.

அவை அனைத்தையும் மறந்து பண்டிகைகால குதூகலத்துடன், இரவு வழிப்போக்கர்களான பரதேசிகள், தரிக்கும் இடங்களில் முகம் தெரியாத இருளில் மடம் கட்டிக்கொள்ள பேசிக்கொள்வதுபோல, சம்பந்தன் அவர்கள் கனடா நாட்டில் ஈழ வரலாற்றை திரிவுபடுத்தி வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கொதிநிலைக்கு வழிதேடியிருக்கிறது. சம்பந்தப்பட்ட வாக்குமூலம் இன்ரர் நெற்மூலம் உலகம் முழுவதும் சென்றடைந்துவிட்டது.

"வட கிழக்கு எமக்கு சொந்தமானது என்று நாங்கள் கூறவில்லை". என்று கனடாவில் நிலைகொண்டிருக்கும் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தனது புத்திக்குட்பட புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டு ஈழத்தமிழினத்தை திகைக்க வைத்திருக்கிறார்.

எந்த ஆதார அடிப்படையில் சம்பந்தன் இப்படி கூறினார் என்பது வேதனையையும், கூட கோபத்தையும் வெறுப்பையும் தமிழினத்திற்கு உண்டுபண்ணியிருக்கிறது. இது திரும்பப்பெறக்கூடிய ஒரு விடையமும் அல்ல. தாயகத்தில் இக்கருத்து வெளியிடப்பட்டிருந்தால் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் அரசியலுக்கு முடிவுரை எழுதியதாக அது அமைந்திருக்கும். ஆனால் கனடா மற்றும் மேற்குலகில் வாழும் இளம் சமுதாயத்தினர் மத்தியில் இக்கருத்தானது தாயக வரலாறு பற்றிய சந்தேகத்தை உண்டுபண்ணி ஒரு பிறழ்வை ஏற்படுத்தும் அபாயமும் தோற்றுவிக்கப்பட்டிருப்பது கவலையளிப்பதாகும்.

"தீதும் நன்றும் பிறர்தர வாரா" ஏதோவிதத்தில் நாமே அனைத்திற்கும் காரணியாக இருக்கிறோம்

டக்கிளஸ் தேவானந்தா போன்றோர் கூட இப்படியான கருத்தை வெளிப்படையாக பேசியது கிடையாது.

தமிழர் வரலாறு தெரியாமல்த்தான் சம்பந்தன் பேசினாரா, இல்லை தெரிந்துதான் விசமத்துக்கு பேசினாரா என்பது நிச்சியம் மக்கள் ஆராயாமல் விடப்போவதில்லை, ஈழ வரலாறு தெரிந்திருக்காவிட்டால் யாரிடமாவது விசாரித்து பேசியிருக்கவேண்டிய பொறுப்பு மூத்த அரசியல்வாதியான சம்பந்தனுக்கு உண்டு.

மக்களின் உணர்வுகளுக்கமைய உண்மைநிலையை பிரதிபலிக்கவேண்டிய ஒரு இடத்தில் இருக்கும் மூத்தவரான சம்பந்தன் வரலாறு தெரியாமல் எழுந்தமானத்தில் யாரையோ திருப்திப்படுத்த வெளியிட்டிருக்கும் கருத்து மிகுந்த கவலைக்கும் "கண்டனத்துக்குரியதாகும்"

ஈழதேசம் இணையத்திற்காக,
கனகதரன்,

நன்றி ஈழதேசம் இணையம்.