Saturday, November 5, 2011

"ஊருக்குதானடி உபதேசம் உனக்கு பொருந்தாது".

>கூத்தாடி குசும்பன் 17,<

தசரதனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, பதின்நான்கு ஆண்டுகாலம் இராமன் வன்வாசம் சென்றதாக புராணகாலத்து கதைகள் சொல்லுகின்றன. ஊழல்
குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜெயலலிதா நீதிமன்றத்துக்கு டிமிக்கி கொடுத்து பதின்நான்கு ஆண்டுகள் வாய்தா வாங்கியதாக நவீனகால சரித்திரம்
பகர்கிறது.

செய்தி:,
ஊழல் செய்து சொத்துகுவித்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஜெயலலிதாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ரூ. 30 லட்சம் செலவானதாக பெங்களூர் நகர பொலிஸ் கமிஷனர் தெரிவித்திருக்கிறார்.

ஊழல் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஒக் 20, 21 ஆகிய தேதிகளில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். கர்நாடக போலீசார் 1500 பேரும், சென்னையில் இருந்து சென்ற 500 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த இரணடு நாட்களில் பாதுகாப்பு பணிகளுக்காக மட்டும் ரூ. 30 லட்சம் செலவானதாக பெங்களூர் நகர பொலிஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக ஊழல்மூலம் கொள்ளையடித்து சொத்து குவித்த வழக்கு விசாரணைக்காக ஜெயலலிதா பெங்களூருக்கு கடந்த ஒக் 20, 21 ஆகிய 2 நாட்கள் வந்தார். பெங்களூர் ஹெச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் அக்ரஹாராவில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்ற ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் அவருக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

பெங்களூர் போலீசார் 1000 பேரும், தமிழகத்தில் இருந்து வந்த 400 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்!!.

பாதுகாப்பிற்காக வந்திருந்த போலீசாருக்கு சாப்பாடு, சிறப்பு சம்பளம், போக்குவரத்து என கர்நாடக போலீசாருக்கு மட்டும் ரூ. 30 லட்சம் செலவானது என கூறப்படுகிறது.

இது கர்நாடக காவல்துறையின் கணக்கு. முதல்வர் ஜெயலலிதா வாடகைக்கு எடுத்த விமானத்துக்கான செலவு என்ன என்பது தெரியவில்லை.

இந்த நிலையில் மீண்டும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை ஜெயலலிதா தாக்கல் செய்தார்.

அதில் ``நான் கோர்ட்டு உத்தரவுபடி 2 நாட்கள் ஆஜராகி (போனால் போகுதென்று) விளக்கம் அளித்து இருக்கிறேன். "மீண்டும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்த கூடாது'' என்று கண்டிப்பாக குறிப்பிட்டு இருந்தார்.

தேவையென்றால் வீடியோ கொன்பரன்ஸ் மூலம் அல்லது நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு போயஸ் காடினில் உள்ள தனது வீட்டிலிருந்தவண்ணம் எழுத்துமூலம் பதிலளிக்க வசதி செய்யும்படி ஜெயலலிதா கேட்டிருக்கிறார். ( எப்படியிருக்கிறது நீதி நியாயம்? நாடு விளங்குமா)

அது அப்படி இருக்க சிக்கலில் மாட்டித்தவிக்கும் கனிமொழி ஒருபக்கம் புலம்பியிருக்கிறார். இரண்டு சம்பவங்களையும் எடுத்துப்பார்த்தால் நாட்டில் நீதி கொஞ்சம் இருப்பதுபோலவும் இல்லையென்பதுபோலவும் தெரிகிறது இடையில் ஏதோ ஒன்று ஆட்டிப்படைப்பதும் புலனாகிறது.

நான் ஒரு பெண்... எனக்கு சிறிய குழந்தை இருக்கிறான். எனவே (ஊழல் கொள்ளையை பெரிதுபடுத்தாமல் எனது தனிப்பட்ட நலனை மட்டும் கருத்தில்க்கொண்டு) எனக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்க வேண்டும், என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் கனிமொழி எம்பி. மனு தாக்கல் செய்துள்ளார்

2 ஜி முறைகேடு வழக்கில் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு, 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கனிமொழி. இதுவரை நான்கு முறை ஜாமீன் கேட்டு மறுக்கப்பட்டுவிட்டது. கடைசியாக இரு தினங்களுக்கு முன் சிபிஐ நீதிமன்றம் கனிமொழியை ஜாமீனில் விடுவிக்க மறுத்துவிட்டது.

பொதுமக்களின் சொத்துக்களை சூறையாடியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்றும், கனிமொழி செய்த தவறு சாதாரணமானதல்ல என்றும் நீதிபதி ஓபி ஷைனி குறிப்பிட்டிருந்தார். (அப்படியென்றால் ஜெயலலிதா சூறையாடியது யாருடைய சொத்து சசிகலாவின் சொத்துங்களா)

இந்த நிலையில் இன்று மீண்டும் 5 வது முறையாக தனது ஜாமீன் மனுவை கனிமொழி சமர்ப்பித்து. இந்த முறை டெல்லி உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளார் .(பணம் இருக்கிறது)


என்னை நம்பி 9 வயதேயான மகன் இருக்கிறான். கடந்த 6 மாதங்களாக என்னைப் பிரிந்து என் மகன் தவிக்கிறான். எனது அரவணைப்பு தேவைப்படும் காலகட்டத்தில் என்னை சிறையில் வைத்திருப்பது அவனை பாதித்துள்ளது. (இதற்காக 214 கோடி ஊழலை பெரிதுபடுத்தாமல் என்னை விடுவிக்க வேண்டும்)

இது கனிமொழியின் கோரிக்கை (எங்கே செல்லும் இந்தப்பாதை யாரோ யாரோ அறிவாரோ)

கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி, இந்தியாவின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினரானால் அவர் நாட்டை ஆளும் பிரதமர் ஆவதற்கான தகுதியையும் பெற்றுவிடுகிறார்,

ஜெயலலிதா இந்தியாவின் ஒரு மானிலத்தின் சட்டமன்ற உறுப்பினர். எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரும் முதலமைச்சர் ஆவதற்கான தகுதியுடையவரே.

இவைகள் அடிப்படை ஜனநாயகத்தின் தன்மை. மக்களின் விருப்பில் தெரிவு செய்யப்படும் ஒருவர் அத்தனை தகுதிகளையும் பெற்று விடுகிறார் என அரசியல் சாசனமும் சுட்டுகிறது,

கட்சிகள் ஒத்துக்கொண்டால் எம்பி யான கனிமொழி பிரதமரும் ஆகலாம், அதுபோல எம்எல்ஏ, வான ஜெயலலிதா கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி முதலமைச்சராகியிருக்கிறார், அவ்வளவே,,,

சிபிஐ கோர்ட் கனிமொழியை ஊழல் குற்றச்சாட்டுக்காக தடுத்து வைத்து விசாரணை செய்கிறது. தவிர இன்னும் கனிமொழி சந்தேக நபரே தவிர குற்றவாளி என்று அறுதியாக கோர்டில் தீர்ப்புக்கூறப்படவில்லை.(கனிமொழி உண்மையில் ஊழல்வாதி என்பது வேறு விடயம்)

ஜெயலலிதாவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஏதோ உறுதியான ஆதாரத்துடன் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நம்பகமான சந்தேக நபர், எனவே ஏன் கனிமொழி, ஜெயலலிதா, இருவருக்கும் நீதித்துறை பாகுபாடு காட்டவேண்டும். கர்நாடக மானில முதலமைச்சராக இருந்த எடியூரப்பா ஊழல் குற்றவாளி என சந்தேகிக்கப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இப்படி பல உதாரணங்கள் இருக்கின்றன.

ஜெயலலிதா பதின்நான்கு வருடங்களுக்கு மேலாக நீதிமன்றத்திற்கு ஒத்துழைத்து சமூகமளிக்க மறுப்புத்தெரிவிப்பதால். ஸ்பெக்ரம் ஊழலில் கனிமொழியை கைது செய்து தடுத்து சிறை கஸ்டடியில் அடைத்து வைத்து விசாரணை நடத்துவதுபோல, பாகுபாடு காட்டாமல் ஜெயலலிதாவையும் கைதுசெய்து விசாரணையை முடிக்கவேண்டியது நீதித்துறையின் பொறுப்பு.

வருடக்கணக்கில் வாய்தா கொடுப்பதே நீதித்துறையின் இயலாமையை அல்லது அரசியல் தலையீட்டை காட்டுகிறது. அல்லது நீதி சேடமிழுத்து கோமா நிலையில் சாகக்கிடக்கிறது என்பதுதான் உண்மை.

ஜெயலலிதா இல்லையென்றால் தமிழ்நாடு இன்றுடன் காற்றில் கரைந்து காணாமல் போய்விடப்போவதில்லை.

நீதிமன்ற விசாரணையின் பின் ஜெயலலிதா அப்பழுக்கற்ற சுற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினால் அவர் தொடர்ந்து முதலமைச்சராக தொடரட்டும்.

ஜெயலலிதா குற்றவாளியானால் ஜெயிலுக்கு போகவேண்டும் என்பதுதான் நியாயம் தர்மம்.

அதன் பிற்பாடு கட்சி அடுத்த நிலையில் இருக்கும் ஒருவரை கட்சி முதலமைச்சராக்கும். அல்லது குடியரசு தலைவர் பொறுப்பேற்பார். நிறைய நடைமுறைகள் அரசியல் சாசனத்தில் இருக்கின்றன.

திருடர் கையில் நாடு இருக்கக்கூடாது என்ற முன்னுதாரணம் நீதித்துறையிடம் இருக்கவேண்டும், குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அரசியல்வியாதிகளான இவர்களிடமும் நேர்மை இருந்தால், நீதிக்கு தலைவணங்கி புனிதராக வெளிவரவேண்டும் அதுவே. மற்றவர்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் எதிர்காலத்தில் வரவிருக்கும் அரசியல் வியாதிகளுக்கு பய பக்தியாகவும் இருக்கும்.

பல கோடி ரூபா ஊழல் கொள்ளைகளை, இந்த அரசியல்வியாதிகள் திருட்டுக்குற்றம் என ஏற்க மறுக்கின்றனர். மக்களின் சொத்தான பொதுநிதி
என்பது ஆட்சியாளர்கள் எப்படியும் கையாளலாம் என்பதுபோல் காண்பிக்கவே முயற்சிக்கின்றனர். இவை மன்னர் ஆட்சியின் மாண்பை நினைவுப்படுத்தி நிற்கிறது.

ஜெயலலிதா தான் முதலமைச்சராக இருப்பதற்காக விசாரணைக்கு சமூகமளிக்காமல் சட்டத்திற்கு தண்ணி காட்ட முயற்சித்து, வீடியோ கொண்பரன்ஸ் / எழுத்து முலம் பதிலளிக்கிறேன் என்பது எவ்வளவு அபத்தமான சர்வாதிகாரம் என்பதை மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.

அரசியல் சாசன சம்பிரதாயங்களுக்கு கட்டுப்படுகிறேன் என்று சத்தியப்பிரமாணம் செய்து பதவி பெற்றுக்கொள்ளும் அரசியல் வியாதிகள். பதவி பெற்றபின் அனைத்தையும் புறந்தள்ளி மன்னர்கள் போல் நடந்துகொள்ளுவதுதான், வழமையில் உள்ள நடைமுறையா.

இவற்றை பின்பற்றித்தானே திமுக விலுள்ள அனைத்து மந்திரி, எம்எல்ஏ, க்கள் அனைவரும் நில மோசடி, அரசு நிதியை சூறையாடுதல் போன்றவற்றை தலைமையின்ஆசீர்வாதத்துடன் எந்த குற்ற உணர்வுமில்லாமல் துணிச்சலுடன் செய்திருந்தனர்.

ஜெயலலிதாவுக்கு அது பொருந்துமென்றால் கபாலிக்கும், வீரபாண்டி ஆறுமுகத்துக்கும், ராமஜெயத்துக்கும், கருணாநிதிக்கும், சுப்பன், வப்பன், அனைவருக்கும் நியாயம் பொருத்தமானதே.

கோடிக்கணக்காக கொள்ளையடித்துவிட்டு ஜெயலலிதா வாய்தா வாங்கிக்கொண்டு நாட்டை ஆளலாம் என்றால், வயிற்று பிழைப்புக்கு வழியில்லாமல் ஐம்பது ரூபா திருடிய ஒருவவனை ஒருபோதும் கட்டாயப்படுத்தி கோர்ட்டுக்கு வரும்படி வற்புறுத்த முடியாது, வாய்தா கொடுத்து அவனது
வாழ்க்கை வளம்பெற அவற்றை நடைமுறை சட்டமாக்கினாலும் சிறப்பானதே.

குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளியென சந்தேகிக்கப்படும் ஒருவர், குற்றச்சாட்டை முறைப்படி சந்தித்து நீதிமன்றத்தை மதிக்கும் மனநிலை இல்லாத ஒருவர், எப்படி ஒரு மானிலத்தின் முதல்த்தரமான பதவியை தன்னகத்தே கொள்ள என்ன நியாயம் இருக்கிறது.

ஸ்பெக்ரம் ஊழல்க்கொள்ளை இன்றைய திகதியில் உலக வரலாற்றில் மனிதவர்க்கம் கண்டிருக்காத மிகப்பெரிய மோசடி.

ராசா, கனிமொழி, கல்மாடி போன்ற ஒரு சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இருந்தும் குறிப்பிட்ட ஊழலில், பிரதமர் மன்மோஹன் சிங், நிதி அமைச்சராக இருந்த பசி எனப்படும் சிதம்பரத்துக்கும், முன்னைய தொலைத்தொடர்பு மந்திரி தயாநிதி ஆகியோருக்கும் அளப்பரிய பங்கு இருப்பதாக எட்டுத்திசையில் இருந்தும் குற்றச்சாட்டுக்கள் குவிந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் பசி,யை. மற்றும் பிரதமரை, விசாரணைக்குட்படுத்தினால் இந்தியா தெய்வக்குற்றத்துக்கு ஆட்பட்டு, நிலத்துள் புதைந்து காணாமல் போய்விடும் என ஆளும் வர்க்கம் பிரதம குற்றவாளிகளை விசாரணைக்குட்படுத்த தடைவிதித்து வருகிறது.

இந்த மனநிலை உள்ள ஒரு நாட்டில், அதிகாரத்தில் உள்ள ஒருவர் எப்படி இன்னும் ஒரு குற்றவாளியை சிறைப்படுத்தி விசாரிக்க உத்தரவு போட முடியும். இப்படியானவர்களுக்கு நியாயம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.

ஊருக்குதானடி உபதேசம் உனக்கு பொருந்தாது. என்பதே இந்தியாவின் அரசியல் வியாதிகளின் தாரக மந்திரம்.

மீண்டும் சந்திப்போம்.

No comments: