http://eeladhesam.com/images/stories/cartoon/kaddurai/apdul%20kalaam.gif

திர்வரும் 2012 ஆண்டை, மும்மொழி ஆண்டாக பிரகடனப்படுத்தி, சிங்கள கட்டாய திணிப்பை சட்டமூலமாக்குவதற்கு ஸ்ரீலங்கா அரசுத்தலைவர் மஹிந்த ராஜபக்க்ஷ அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக தெரிகிறது.

அதன் தொடக்க விழாவுக்கு இந்தியாவின் முன்னைநாள் குட்டியரசுத்தலைவர் அப்துல் கலாம் அவர்கள் பிரதம விருந்தினராக பங்குபற்றி செயல்த்திட்டத்தை தொடக்கி வைக்கப்போவதாகவும், ஸ்ரீலங்காவின் வெளிநாட்டு தொடர்புகள் மந்திரி ஜி எல் பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.

இத்திட்டத்தால் இலங்கையில் இருந்துவரும் இன பிரிவினைக்கு முடிவுரை எழுதி, நல்லிணக்கத்தை விஞ்ஞான தமிழரான அப்துல் கலாம் அவர்களால், கொண்டுவரமுடியுமாக இருந்தால் வருங்கால வரலாற்றில் அப்துல் கலாம் அவர்களின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு, அனைத்து ஈழத்தமிழர் வீடுகளின் முகப்பில் மகாத்மா காந்திக்கு சமமாக, அப்துல் கலாம் அவர்களின் படம் அலங்கரித்து காலா காலத்துக்கும் கலாம் அவர்களின் புகழ் ஈழத்தில் நின்று நிலைக்கும்.

மாறாக, ராஜபக்க்ஷ உள் நோக்கம் நிறைவேற்றப்பட்டு, தமிழினத்திற்கு குழி வெட்டும் தந்தரத்தை நிறுவ முயற்சித்து, இத் திட்டத்தால் ஈழத்தமிழினத்திற்கு மேலும் தேவையற்ற வகையில் சிறுமை விளையுமாயின். கலாம் அவர்களின், பங்களிப்பும் களங்கத்தில் முடிந்து கசப்பான உணர்வை ஈழத்தமிழர்களிடம் தோற்றுவித்துவிடும்.

கடந்தகால வரலாற்று அனுபவத்தில், சிங்களவனிடமிருந்து பல பாடங்களை தமிழினம் பட்டுணர்ந்திருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த நிகழ்வும் தமிழர்கள் மத்தியில் ஐயத்தையே தோற்றுவித்திருக்கிறது. காரணம் தமிழர்களுக்கான அடிப்படை வாழ்வியல்பற்றி கருத்திலெடுப்பதற்கே  வெறுப்பைக்காட்டி  தட்டிக்கழிக்கும் சிங்கள மேலாதிக்கவாதிகள் தமிழ் மொழியின் ஆளுமையை அடிபடச்செய்யும் "தரப்படுத்தலின்" ஒரு அங்கமாகவே ராஜபக்க்ஷவின், மும்மொழி ஆண்டு திட்டம், கபட நோக்கத்தை கொண்டிருக்கலாம் என்றே பரவலாக அஞ்சப்படுகிறது. 

இந்திய அரசும், ஸ்ரீலங்கா அரசும், இணைந்து இலங்கையில் இருந்துவரும் தமிழ் சிங்கள இனங்களுக்கான முறுகல் நிலையை சுமூகமாக்க மேற்கொள்ளும் ஒரு முயற்சியென்று உலக அரங்கில் வெளிக்காட்டி நியாயப்படுத்திக்கொள்ள, இலங்கை கடும்போக்காளர்களுக்கு இத்திட்டம் தற்காலிகமாக உதவுமே தவிர. அடிப்படையில் அங்கு வாழும் இனங்களுக்கிடையில் மண்டியிட்டுக்கிடக்கும் சிக்கல்களுக்கு முடிவுகாண விளையப்போவதில்லை. 

"இலங்கை மக்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம், என மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். அது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டில் அரசு அமுலாக்கவுள்ளது. என ஸ்ரீலங்கா அரசுதரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது":.

அதன் உள்ளார்ந்த அர்த்தம் அனைத்து தமிழர்களும் கட்டாயம் சிங்களம் படிக்கவேண்டும், சிங்களம் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே, வேலை வாய்ப்பை பெறமுடியும் என, சட்டப்படி நிறுவ இத்திட்டம் பரிந்துரைக்கப்போகிறது. பாடசாலைகளிலும் சிங்களம் முதல்த்தரமான கல்வி மொழியாக அறிமுகப்படுத்தும் திட்டத்தின் சூழ்ச்சியாகவும் அரசுக்கு இத்திட்டம் உதவும்.

தமிழர்கள் வலுவிழந்திருக்கும் இந்த காலத்தை பயன்படுத்தி 70களில் இருந்த கடும்போக்கு மனநிலையை திரும்பக்கொண்டுவந்து கட்டாய சிங்களம் சட்டமாக்க முழு முயற்சி நடைபெறுகிறது,70 களுக்கு முன்னய மொழித் தரப்படுத்தல். நாட்டில் இன முறுகல் நிலையை தோற்றுவித்து தமிழினம் யுத்தத்தம் புரிய காரணமாக இருந்தது. இன்று தமிழினத்தின் அனைத்து சக்திகளும்  முடங்கிய பலவீன நிலையை சாதகமாக்கி, சிங்களத்திற்கு அனுகூலமான ஒரு காலத்தில் கட்டாய சிங்களச்சட்டம் திணிப்பு தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து இழுபறி நிலையில் இருந்துவரும் பேச்சுவார்த்தையை அடிபட்டு போகச்செய்யக்கூடிய மூலக்கூறுகள் இத்திட்டத்தில் மறைந்தும் மறையாமலும் இருக்கின்றன. சிங்களவருக்கு மட்டும் இத்திட்டம் பக்க பலமாக அமையும் என்பதிலும் சந்தேகமில்லை.

கலாமின் மூலம் மறைமுகமாக இந்தியாவின் அங்கீகாரத்தையும் பெற்றதாக இந்த மும்மொழி ஆண்டு மாநாடு பரிந்துரைக்கப்போகிறது. இதனால் இனங்களுக்கிடையே தொடர்ச்சியாக இருந்துவரும் எரிச்சலும், பகமை உணர்வும், அதிகரிக்குமே தவிர ஒருபோதும் இன அமைதிக்கு வழி வகுத்துவிடப்போவதில்லை.
அத்துடன் தமிழர்களின் அரச வேலைவாய்ப்பையும் கபளீகரம் செய்து இல்லாமல்ச்செய்யும் ஒரு கபடத்தனமான உத்தியென்றே இந்த மொழித்திட்டத்தை வருங்காலங்களில் தமிழர்கள் உணரமுடியும்.

இலங்கை மக்கள் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியமாகும். என பொருமலாக சொல்லப்பட்டாலும், சிங்களவர் மத்தியில் இந்த கபடத்திட்டம் ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தப்போவதில்லை. சிங்களவர்கள் எவரும் தமிழை படிக்கப்போவதுமில்லை. அதற்கு சிங்கள கடும்போக்கு கட்சியான ஜேவீபி, மற்றும் ஜாதிக எல உறுமய, அடுத்த சிங்கள பேரினவாதக்கட்சியான யூஎன்பி, போன்றவை ஒருகாலமும் ஒத்துக்கொள்ளப்போவதுமில்லை.

கேட்பதற்கு ஆளில்லாத தமிழர்களின் ஒரே கட்சியான,  தமிழர் தேசியக்கூட்டமைப்பு இந்த விடயத்தில் எந்த எதிர்ப்பை காட்டினாலும் எடுபடாமல் போவதற்கு கலாம் அவர்களின் பிரசன்மம் உதவி புரியலாம்.

இலங்கையில் வாழும் மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் புரிதலுடன் வாழ்வதற்காக, இதய சுத்தியுடன் இத்திட்டம் அறிமுகப்படுத்துவதாக ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டாலும் அதற்கு இது சரியான தருணமுமில்லை. அத்துடன் இத்திட்டம்பற்றி இலங்கையின் பூர்வீக தமிழர் தரப்பினருடன் கலந்து நல்ல புரிதலுடன் கலந்துரையாடலை நடத்திய பின் இறுதி கண்டிருக்கவேண்டும்.

அப்துல் கலாம் அவர்கள், தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும், 2002ல் இருந்து 2007 வரை அவர் இந்திய ஜனாதிபதியாக கடமையாற்றிய காலத்தில், ஈழத்தமிழர்களின் நெருக்கடிகளை அவர் முகங்கொடுத்து தரிசித்திருக்கிறார். ஆனாலும் அப்போ கலாம் அவர்கள் எதையும் அறிந்துகொண்டதுபோல் அசைவையாவது காட்டிய தருணங்கள் எதுவும் வரலாற்றில் காணப்படவில்லை.

பதவியிலிருந்து விடுபட்ட, 2008, 2009 களில் மிக மூர்க்கமான ஈழ படுகொலை தருணங்களிலும் தனிமனிதனாக மனிதாபிமான நோக்கத்துடனும் அவர் எந்தவிதமான அதிர்வையோ அசைவையோ காட்டவில்லை.

ஈழத்தமிழர்களின் தரப்பினருடன் முன் ஆலோசனை எதுவுமின்றி, ஒருமுக நோக்கோடு தன்னிச்சையாக ஜனாதிபதி இப்படி ஒரு திட்டத்தை வரையறுத்திருப்பது கட்டாய சிங்களச்சட்டம் அமூலுக்கு வருகிறது அனைத்து தமிழரும் ஏற்றுக்கள்ளுங்கள் என்ற சவாதிகாரமாகவே பார்க்கப்படும். இந்த அடிப்படையை  கலாம் அவர்கள் அறிந்திருக்காமல் இருக்க முடியும். இனியாவது புரிந்துகொள்வார் என நம்பலாம்.

1970 களில் ஆரம்பித்த சிங்களவரின் இந்த வக்கிர தரப்படுத்தல் மனநிலதான் விடுதலைப்புலிகள், மற்றும் பலவிடுதலை இயக்கங்களை, இலங்கையில் பிரசவித்திருந்தது.

ஜனாதிபதி ராஜபக்க்ஷவின் இந்தத்திட்டத்தை தமிழினம் கருத்தில் எடுத்துக்கொள்ளுமா என்பதையும் சம்பந்தப்படுபவர்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர். நிலமை இப்படியே தொடருமானால் இன்னுமொரு பத்து வருடங்களில் மீண்டும் ஒரு ஆயுதப்போராட்டம் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகும் அபாயத்தை இலங்கை சந்திக்கும்.

ஏற்கெனவே இலங்கையில் மும்மொழியும் படித்திருக்கவேண்டுமென அரச சார்பில் கட்டாயப்படுத்தப்படிருந்தது. ஆனால் அது நடைமுறை சாத்தியமாகவில்லை. பொதுமொழியான ஆங்கிலம் இணைப்புமொழியாக இருந்து வருவதுதான் காலகாலமாக வழக்கத்தில் இருந்து வருகிறது. தேவை கருதி சில தமிழர்கள், பிரதேசசூழல் சார்ந்து சிங்களம் படித்தறிந்திருக்கின்றனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. அதேபோல மிகக்குறைவான ஒருசில சிங்களவர்களும் தமது நலன்சார்ந்து தமிழ் கற்றறிந்திருக்கலாம்.

இன்று இனங்கள் உடைந்து காணப்படும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் தமிழருக்கான ஒரு தீர்வுத்திட்டத்தை அமூல்ப்படுத்திய பின், ஆற அமர சிந்தித்து பல புரிதல்களின் பின் கைவைக்கவேண்டிய செயல்த்திட்டமான ஒரு செயல்த்திட்டத்தை அவசரப்பட்டு சிங்கள அரசு செயல்ப்படுத்த முனைவதன் பின்னணியும் பலரையும் சிந்திக்க தூண்டும் ஒன்றாகவே இருக்கிறது.

வீடுவாசல் குடியிருப்பு, மீள் குடியமர்வு, கல்விநிலையங்கள் சரிவர இயங்காத சூழல் வாழ்வாதாரம் ஆகிய முன்னணி பிரச்சினைகள் சீர்செய்யப்படவில்லை. மாறாக தமிழர்கள் மத்தியில்  சிங்கள குடியேற்றங்களையும் மொழி விதைப்பையும், முதல்த்தரமாக்கி நடைமுறைப்படுத்த இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. இந்த மொழி விதைப்பின் மூலம் சிங்கள ஆசிரியர்கள் தமிழ்க்கிராமங்கள் அனைத்திலும் விதைக்கப்படவுள்ளனர்.

சான்றாக 26.11,2011 அன்று பாராளுமன்றத்தில் கிளி/ பாஉ சிறிதரன் அவர்கள், தீர்வுத்திட்டத்தின் பின்னணி பற்றி அரசாங்கத்தின் சதிகள் பற்றியவிரிவான ஒரு உரையை நிகழ்த்தினார், 2009 மே,க்கு பின்னரான நடப்பு அரசியல் எத்திசையை நோக்கி நகர்கிறது என்பதை அந்த உரையின் மூலம் அம்பலப்படுத்தியிருந்தார், தமிழ் புரியாத சிங்கள எம்பிக்கள் பாராளுமன்றச்சபையில் இருந்தபோதும் தொடர் குறுக்கீடுகளிற்கிடையில் அந்த உயிரோட்டமான உரை நிதானமாக நிகழ்த்தப்பட்டிருந்தது.

சிங்கள எம்பிக்களுக்கு தமிழ் தெரியாவிட்டாலும் சில தமிழ்பேசும் கறுப்பு ஆடுகள் சிறிதரன் அவர்களின் உரையின்போது இடைமறித்து ஆட்சேபணை தெரிவித்து சிங்களவனுக்கு வக்காளத்து வாங்கி, உரையை மொழிபெயர்த்து சிங்களவனுக்கு காட்டியதையும் காண முடிந்தது.

இலங்கையின் நடப்பு அரசியல் நிலைவரம் இவ்வாறு இருக்கும்போது மும்மொழி ஆண்டு,, சிங்கள பிரகடன வைபவத்தில் கலாம் அவர்கள் கலந்துகொள்ளுவதன் மூலம் அடிபட்டுக்கிடக்கும் தமிழினத்தின் மனதையும் வாழ்வியலையும் இளக்காரம் செய்து புண்படுத்துவது தவிர வேறு எதையும் செய்துவிட முடியாது.

கலாம் அவர்கள் 2002 ஆண்டு முதல் ஐந்து வருடங்கள் இந்தியாவின் ஜனாதிபதியாக உச்ச நிலையில் இருந்திருக்கிறார். அடிப்படையில் கலாம், தமிழை தாய் மொழியாகக்கொண்டவர் என்ற வகையிலும் இலங்கையில் வாழும் சிறுபான்மை தமிழர்கள் சிங்களவர்களின் கொடுமைகளில் எவ்வளவு துயரத்தை அனுபவித்திருக்கிறார்கள் என்பது பற்றியும், தமிழர்களுக்கான அரசியல் பொருளாதார மொழி சம்பந்தப்பட்ட நிலை எப்படிக் கையாளப்பட்டது, என்ற அனைத்து நிலைவரங்களும் அவர் அறிந்தவராகவே இருப்பார்.

2009ல் தமிழர்களை கொன்றுகுவிக்க காங்கிரஸுக்கு உதவிய கையுடன் தன்னை விளம்பரப்படுத்தி கொலைப்பழியை மூடி மறைக்க கோவையில் பல நூறு கோடிகளை கொட்டி 2010 ஜூன் செம்மொழி மாநாடு நடத்தி வக்கிரத்தை வெளிப்படுத்தினார். கருணாநிதி, அதே பாணியை பின்பற்றி சிங்களவர் மத்தியில் மும்மொழி மாநாடு என்ற பெயரில் தரப்படுத்தல் மாநாடு ஒன்றை நிறுவ ராஜபக்க்ஷ முனைப்புடன் நிற்கிறார்.

ஏமாற்று நோக்கமில்லாமல் நேர்மையோடு திட்டமிடப்பட்ட அரசியல் ரீதியான தீர்மான முன்மொழிவுடன், தலையீடு ஒன்றை இந்தியா தனது ஆளுமையை பிரயோகித்து இலங்கைக்குள் மாற்றம் காண செய்யமுடியுமே தவிர, ராஜபக்க்ஷவுடன் பேசுகிறோம் வலியுறுத்துகிறோம் என்பதெல்லாம் கண்துடைப்பு என்பது வெட்ட வெளிச்சமாக தமிழர்கள் மட்டுமல்லாது உலக அரங்கிலும் அறியப்பட்டுவிட்டது,

இறுதிப்போரை முன்னின்று நடத்த இலங்கைக்கு உதவிய இந்தியா, தமிழர்களுக்கு சார்பாக எதையும் செய்ய இயலாத சிக்கலில் இருப்பதும் சர்வ லோகமும் அறிந்த உலகப்பரகசியம்.

போராட்டத்தின்போதும் சரி, போராட்டம் முடிவுக்கு வந்தபின்னும் சரி, இனப்பிரச்சினை சம்பந்தமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எவராவது தூது சென்று எந்தவித இடையூறுமில்லாமல்  திரும்பியிருந்தால் அது ஈழத்தமிழினத்திற்கு அள்ளிவைத்த பயணமாகவே இருந்திருக்கிறது.

பிரணாப் முகர்ஜி, நிருபாமா ராவ், சிவ் சங்கர்மேனன், எஸ் எம் கிருஷ்ணா, திமுக காங்கிரஸ் எம்பிக்கள் குழுவினரான கனிமொழி, டி ஆர் பாலு, திருமாவளவன். நடிகை அசின், ரஞ்சன் மத்தாய்,  இறுதியாக காங்கிரஸ் எம்பி சுதர்சன நாச்சியப்பன், இவர்கள் இலங்கைக்கு சமாதான தூதுவர்களாகச்சென்று  திரும்பியவர்கள்,இவர்கள் உலகத்தை ஏமாற்ற இராசதந்திரிகளாக போய்வந்தனரே தவிர, தமிழர்களுக்கிடையில் கிடந்த ஒரு துரும்பையும் தூக்கி அகற்றிவிடவில்லை, மாறாக ராஜபக்க்ஷவின் கருத்தை முன்மொழிந்து தமிழினத்தை காட்டிக்கொடுத்து, ராஜபக்க்ஷவிடம் விருந்துண்டு பரிசும் வாங்கி மகிழ்ந்திருக்கின்றனர்.

இந்த உருப்படிகள் இலங்கைக்கு சென்றுவந்ததால் தமிழினம் செத்து சிறுமைப்பட்டதே தவிர மகிழ்ச்சியை அடையவில்லை. இன்றைக்கும் இந்தியாவிலிருந்து அரச அனுசரணையுடன் தமிழருக்காக தூது செல்வதாக எவர் புறப்பட்டாலும் தமிழினம் பதகளித்து அஞ்சுகிறது.

போரின்போது இந்தியாவிலிருந்து பல அரசியல் தூதுவர்கள் ஸ்ரீலங்காவுக்கு சென்று திரும்பியதும், பல ஆயிரக்கணக்கானவர்கள் ஸ்ரீலங்கா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சர்வதேச தலையீடுகூட இந்த இந்திய தூதுவர்களின் நயவஞ்சகத்தால் தடுக்கப்பட்டது.

அவை ஒருபுறமிருக்க சாதாரண சினிமா நடிகையான அசின், பொழுது போக்கி விடுமுறையை க(ளி)க்க இலங்கைக்கு சென்றிருந்தார், சென்றவர் அங்கு அமைதி தூதுவராக அவதாரம் எடுத்து தன்னிச்சையாக இந்தியாவிலிருந்து சில டொக்டர்களை அழைத்து, பாவப்பட்ட தமிழர்களுக்கு கண் சிகிச்சை செய்து திரும்பியதாக விளப்பரப்படுத்தினார். ஆனால் பல ஏழை தாய்மார்களின் கண்பார்வை பறிபோனதாக பின்னர் உறுதியானது. ஆனால் எவராலும் எந்த நடவடிக்கையும் எடுத்து நடிகை அசினை தண்டிக்க முடியவில்லை.

ஆனால் ஸ்ரீலங்கா இந்திய அரச விருந்தினர் அல்லாமல், நிலவரத்தை பார்த்து அறிந்துவரச்சென்ற உணர்வாளரான தமிழகத்தின் வழக்கறிஞர் கயல் என்கிற அங்கயற்கண்ணி, ஸ்ரீலங்கா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 4ம் மாடிக்கு கொண்டு செல்லப்பட்டு மிகவும் தொல்லைக்கப்பட்டார். நேர்மையானவர்கள் எனக்கருதப்படும் தமிழின ஆர்வலர்கள் எவரும் இலங்கைக்குள் செல்ல முடியவில்லை.

தமிழ் உணர்வு காரணமாக ஆரம்பகாலங்களில் சுயமாக கடல்வழி பயணம் செய்து தேசியத்தலைவரை சந்தித்த வைகோ அவர்களை திமுக தலைவர் கருணாநிதி, கொலை குற்றமும் சாட்டி கட்சியிலிருந்து வெளியேற்றினார். பின் ஒரு சந்தர்ப்பத்தில் தமிழீழம் சென்று தலைவர் பிரபாகரன் அவர்களை சந்தித்து திரும்பிவந்த சீமானை, முன்னாள் முதல்வன் கருணாநிதி,  5முறை கைது செய்து இறுதியாக தேசிய பாதுகாப்புச்சட்டத்தை பாவித்து சிறையில் அடைத்தார்.

இவைதான் நடைமுறை, எவர் இராச மரியாதையுடன் இலங்கை பயணம் மேற்கொண்டாலும் அதனால் ஸ்ரீலங்கா அரசுக்கு ஏதாவது இலாபமூட்டும் நோக்கமாகவே இருக்கும். தூது செல்பவர்களின் பயணம் தமிழர்களுக்கு ஒரு பின்னடைவையே பெற்றுத்தந்திருக்கிறது. நல்ல மனிதர் என பெயர் எடுத்த அனுபவ முதியவரான அப்துல் கலாம் அவர்கள் சற்று சிந்தித்து செயற்படுவார் என்றே நம்பலாம்.

இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியா தலையிட்டபோது தமிழகத்தை மனதில் நிறுத்தி, ஈழமக்கள் மனம் மகிழ்ந்ததுண்டு. ஆனால் அனைத்தும் ஏமாற்றமாகிவிட்டது. ஸ்ரீலங்கா அரசுக்கு ஆதரவான இந்தியாவின் தலையீடு,, தூதுவர்களின் பயணம்,, பல இலட்சம்பேர் அழியக்காரணமாக இருந்தது.

தற்போது யுத்தம் முடிவடைந்து சர்வதேச பார்வை பட்டிருக்கும் நேரத்தில் மீண்டும் இந்தியாவின் வலிந்த தலையீடு எஞ்சியிருக்கும் மக்களின் மொழி மற்றும் வாழ்வாதாரத்தையும் தகர்த்துவிடுமோ என நிகழ்வுகள் அச்சப்படுத்துகின்றன. இது பட்டுணர்ந்த பயமாகவும் இருக்கக்கூடும். இந்தத்தொடரில் அப்துல் கலாம் அவர்களின் பயணமும் தமிழர்களின் மொழி மூலத்தையே அழித்துவிடுமோ என்ற அபாய சமிக்ஞை உள்ளூர அனைத்து தமிழர் இதயத்திலும் ஒலிக்கிறது.


ஈழதேசம் இணையத்திற்காக.
கனகதரன்.
நன்றி ஈழதேசம் இணையம்.