Wednesday, July 28, 2010

கவிதை, வலியல்ல இது "வெம்மை"

கவிதை: வலியல்ல இது “வெம்மை” – உலகம் பலிகொண்ட தீயின் மாதம்

ஈரெட்டு திசை யிருந்தும்
எறி குண்டு சீறி வீழ.,- இரு
பத்து நாடு சுற்றி
எரி கொள்ளி நீட்டி நிற்க.
வெறி கொண்ட காந்தி தேசம்
விண் முட்ட சூழ்ச்சி செய்ய.
பரகதி யாச்சே ஈழம்
பாவியாய் எரிந்தே மாண்டோம்,

வீடுகள் எரிந்து சாம்பல்
விடலைகள் குண்டாய் ஆனர்.
தாயவர் வழியில் மாண்டர்
தந்தையர் சித்தம் போனர்.
குழந்தைகள் சகதியாக- கோவிலாய்
படு மரத்தின் கீழே
கொலைக் களமாகி மாந்தர்
கும்பியாய் மாண்டார் காணீர்,—–

கோவிலாய் இருந்த தேசம்
கொலைக் காடாய் ஆகக் கண்டீர்
சோலையாய் இருந்த பூமி
சுடுகாடாய் ஆகக் காணீர்
நாயினும் கடையன் நஞ்சன்
நாலைந்து தாரக்காரன்
பாவியாய் பிறந்தான்(பக்க)மண்ணில்
படு துயர் நாங்கள் கொண்டோம்,—–

குடித்திட நீருமில்லை
குழவிக்கு பாலுமில்லை
நோவுக்கு மருந்துமில்லை
நடுக்கமே வாழ்வாயானோம்
அதிகாலை இரவு மத்தி
அடை மழை போலக் குண்டு
சுருதியாய் மனித ஓலம்
தேற்றுவோர் எவருமில்லை,—–

கொடும் புகை மூட்டங்கொண்டு
கொட்டிடும் குண்டு போக
எத்திசை நோக்கினாலும்
கக்கிடும் ரவையாய் கண்டோம்
மண்ணொடு மண்ணாய் மக்கள்
மாண்டனர் மீண்டோர் சொற்பம்
செத்தவர் பொக மிச்சம்
செவிடொடு குருடாயாச்சு,—–

பறந்தங்கோர் ஈயுமில்லை
பார்த்திட எறும்புமில்லை
மலந்தின்ன நாயுமில்லை
மண் உண்ணும் புழுவுமில்லை
கலங்கியோர் கொடு நெஞ்சோடு
காத்திருந் தேமாந்தோமே -இஃது
மனுதொரு தர்மந்தானோ
மாற்றமாய் வருவோம் நாளை,—–

வானிடை விரைந்து வந்து
வாழ்த்துக்கள் ஷெல்லும் கூற
மானிடக் குடிகள் மீது
மழையெனக் குண்டும் பாய
மேனிகள் சிதறி இரத்த
வெள்ளமாய் சகதியாயின் -மீண்டும்
நாங்களே புலியாய் மாறி
நாட்டுவோம் கொடியை மண்ணில்,—–

வலியல்ல இது வெம்மை – உலகம்
பலிகொண்ட தீ யின் மாதம்
நிலையில்லை மாந்தர் வாழ்வு
நிச்சியம் வருவோம் நாளை
அதுவொரு பலி நாளென்போம்
பாவியர் அழிவர் அன்று
மலர்ந்திடும் தமிழர் ஈழம்
மாண்புடன் தலைவா வாழ்க!,—–

- கனகாம்பிகை கதிர்காமன், ஜனனி,

நன்றி நெருடல் இணையம்.


1 comment:

tm.vijayan said...
This comment has been removed by the author.